முனைவர். ப.பாண்டியராஜா
(மதுரை, உலகத்தமிழ்ச் சங்கம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் இணைந்து நடத்திய பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு – 18-05-2015 மற்றும் 19-05-2015 – இல் வாசிக்கப்பட்டது)
கொடுக்கப்பட்ட ஒரு பாடல் பகுதியில் சீர், தளை ஆகியவற்றைக் காண ஒரு கணினிநிரல் (Computer Program) இந்த ஆசிரியரால் எழுதப்பட்டது. வெண்பாவுக்குரிய சீர், தளை ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் இருப்பதனால், அந்த நிரல் வெண்பாவுக்கெனத் தனியாக மாற்றியமைக்கப்பட்டது. பலவிதத் தொடக்க நிலைச் சரிபார்ப்புச் சோதனைகளுக்குப் பின்னர், அந்த நிரல் திருக்குறளை ஆய்வதற்காக இயக்கப்பட்டபோது, பல இடங்களில் தவறான சீர் எனவும், தவறான தளை எனவும் திடுக்கிடும் செய்திகள் வந்தன. மீண்டும் பலவித சோதனைகள் செய்துபார்த்தபோது, நிரல் சரியாகவே வேலைசெய்வதாக உறுதிசெய்யப்பட்டது. எனவே தவறான சீர், தவறான தளை ஆகியவை காணப்படும் இடங்களைத் தனியே அச்சிட்டு, அவ்விடங்களை ஆய்ந்ததில், குறிப்பிட்ட இருவகையான இடங்களில் ‘தவறு’ இருப்பதாக அறியப்பட்டது. அவை, 1. குற்றியலிகரம் வருமிடங்கள், 2. ஆய்த எழுத்து வரும் சில இடங்கள்.
இவற்றுக்குரிய காரணங்கள் யாவை என்பதையும், அவற்றைக் கணினி நிரல் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் அவை எவ்வாறு சரியாக்கப்பட்டன என்பதையும் கூறுவதே இக் கட்டுரையின் நோக்கம்.
- குற்றியலிகரம் வருமிடங்கள்
முதலில் குற்றியலிகரங்கள் வருமிடங்களைப் பார்ப்போம். அவை:
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் – குறள் 18:8
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல் – குறள் 26:4
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல் – குறள் 30:1
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி – குறள் 33:4
கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று – குறள் 59:5
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற – குறள் 119:1
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி – குறள் 130:9
இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது – குறள் 105:1
குற்றியலிகரம் அலகுபெற்று வராது என்பது நமக்குத் தெரியுமாதலால் பாடலில் அவை வருமிடங்களில் நாம் சரியாகவே அலகிட்டுக்கொள்வோம். காட்டாக, செல்வத்திற் கியாதெனின்என்ற இடத்தில் இதனைத் தேமாங்காய் + நேர் நிரை எனக்கொள்வோம். அதாவது கியாஎன்பதை நேர் எனவே கொள்வோம். ஆனால் கணினி, கியா என்பதைக் குறில்+நெடில் எனக் கொண்டு, இதனை நிரை எனக் கொள்கிறது. காட்டாக,
வேண்டற்க வெஃகியா மாக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன் – குறள் 18:7
உயிருடம்பி னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர் – குறள் 33:10
யாதனின் யாதனி னீங்கியா னோத
னதனி னதனி னிலன் – குறள் 35:1
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல் – குறள் 16:8
ஆகிய இடங்களில் கியா, தியா ஆகியவை நிரை என்றே கொள்ளப்படுகின்றன. எனவே, மேற்கண்ட எட்டுக் குறள்களிலும் கியா, தியா, பியா ஆகியவை குற்றியலிகரங்கள் என்றும் ஏனைய இடங்களில் அவை குற்றியலிகரங்கள் அல்ல என்றும் கணினிக்குத் தெரிவிப்பது எப்படி?
இவ்வாறு சிந்திக்கும்போது இதனைத் தீர்ப்பதற்குத் தொல்காப்பியரே துணைநிற்கிறார் எனக் காணப்பட்டது.
ஒற்றெழுத்து இயற்றே குற்றியலிகரம் – பொருள். செய்யு:8/1
என்கிறது தொல்காப்பியம். எனவேதான் செய்யுளில் கு.இ. அலகு பெறாது என்கிறோம். இதனைக் கணினிக்கும் தெரிவித்துவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் அல்லவா? எனவே திருக்குறள் பாடப்பகுதியில், கு.இ. வரும் இடங்களிலெல்லாம் அவற்றை அடுத்து ஒரு புள்ளி இடப்பட்டது. மேலும் புள்ளியுடன் வரும் இகரம் அலகுபெறாது என்றும் நிரலின் கட்டளைகள் மாற்றியமைக்கப்பட்டன. காட்டாக,
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பி.யார்க் குரைக்கோ பிற – குறள் 119:1
துன்பத்திற் கி.யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி – குறள் 130:9
இப்போது சிக்கல் தீர்ந்து, கணினிநிரல் சரியாக வேலை செய்தது.
சார்பெழுத்துகளைச் சொல்லவந்த தொல்காப்பியர்,
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்தோரன்ன – தொல். எழுத். 2
என்று கூறுகிறார். முப்பாற்புள்ளியும் என்பது ஆய்தத்தின் உருவம் அல்ல என்றும். இந்த மூன்றுமே புள்ளிபெறும் என்றே தொல். கூறுகிறார் என்றும் வேங்கடராசுலு ரெட்டியார் போன்ற சில அறிஞர்கள் கூறுவர்1. அவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இத் தீர்வு அமைந்துள்ளது எனலாம்.
குற்றியலிகரத்தை வெளிப்படையாகத் தெரியும்படிசெய்ய, அதற்குப் புள்ளி இடவேண்டும் என்ற தொல்காப்பிய விதி எத்துணை நுட்பம் வாய்ந்தது என்றும் இதன்மூலம் தெரியவந்தது.
- ஆய்த எழுத்து வரும் சில இடங்கள்
அடுத்து, ஆய்தம் வரும் சில இடங்களில் ஏற்படும் சிக்கல்களைப் பார்ப்போம். திருக்குறளில் ஆய்தம் 48 பாக்களில் 52 இடங்களில் வருகிறது.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல் – குறள் 4:8
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று – குறள் 5:9
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை – குறள் 8:6
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோ டக்க துடைத்து – குறள் 22:10
போன்ற பாக்களில் வரும் ஆய்தத்தால் சிக்கல் இல்லை. ஆனால் கீழ்க்கண்ட ஆறு பாக்களில்தான் தளைதட்டுவதாகச் செய்தி வருகிறது. அவை:
அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி – குறள் 23:6
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில் – குறள் 37:3
கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை – குறள் 42:4
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதொப்ப தில் – குறள் 54:6
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு – குறள் 95:3
இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்
றுன்ப மதனிற் பெரிது – குறள் 117:6
காட்டாக, தீர்த்த லஃதொருவன் என்பதில் மா முன் நேர் வருகிறது. இதனைத் தீர்த்தலஃ தொருவன் எனக்கொண்டால் விளம் முன் நிரை வருகிறது. எப்படி நோக்கினும் இங்குத் தளைதட்டுவதைப் பார்க்கிறோம். இந்த ஆறு இடங்களிலும் வரும் ஆய்தம் அலகுபெற்று வரும் எனக் கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வாறு ஏன் கொள்ளவேண்டும் என்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தளை தட்டுவதால் அவ்வாறு கொள்ளவேண்டும் என்பதுவே விடையாக இருக்கிறது.
எனவே, ஆய்தம் என்பது சில இடங்களில் அலகுபெற்றும், சில இடங்களில் அலகுபெறாமலும் வரக்கூடியது எனத் தெரிகிறது. கு.உ, கு.இ ஆகியவை இடத்தையும் பொருளையும் பொருத்துத் தெரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்துள்ளன. ஆனால் ஆய்தம் அவ்வாறில்லை. மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில்,
நன்றாற்றி னஃதொருவன் (குறள் 4:8),
கேடெனி னஃதொருவன் (குறள் 22:10),
ஆகியவற்றில் வரும் அஃதொருவ என்ற சொல்லில் இருக்கும் ஆய்தம் அலகுபெறவில்லை. ஆனால்,
தீர்த்த லஃதொருவன் (குறள் 23:6),
கேட்க வஃதொருவற் (குறள் 42:4)
ஆகியவற்றில் வரும் அதே சொல்லில் இருக்கும் ஆய்தம் அலகுபெறுகிறது. இது முரண்பாடாக இல்லையா?
ஓரிடத்தில் ஆய்தம் அலகுபெற்று வருகிறதா அல்லது அலகு பெறாமல் வருகிறதா என்பதை முடிவுசெய்யும் உரிமை பாடலின் ஆசிரியருக்கு இருக்கிறது. சீட்டாட்டத்தில் துருப்புச்சீட்டு (Trump Card) போன்று இதனை ஆசிரியர் பயன்படுத்தலாம். ஆனால், ஆய்தம் ஓரிடத்தில் அலகுபெற்று அல்லது அலகுபெறாமல் வருகிறது என்பதைப் படிப்போருக்கு வெளிப்படையாகத் தெரியும்வண்ணம் குறியீட்டில் காட்டவேண்டியது அவசியம் அல்லவா? ஏறக்குறைய இது செய்யுளிசை நிறைக்க வந்த அளபெடை போன்றது. அவ்வாறான அளபெடைகளில் நீட்டல் குறியீடு உயிரெழுத்தாக வெளிப்படையாகக் குறிக்கப்படுகிறது. அதுபோன்று ஆய்தத்துக்கும் ஏதாவது குறியீடு இருந்திருக்கிறதா என ஆயும்போது ஆய்தம் பற்றிய தொல்காப்பியர் கூற்றுத்தான் நினைவுக்கு வந்தது. ஆய்தம் இயற்கையில் அலகுபெற்றுவரும் ஒலி என்றும் அலகு பெறாமல் வருமிடங்களில் அதனை ஒரு புள்ளியிட்டு உணர்த்தலாம் என்றும் தொல்காப்பியர் கொண்டிருக்கலாம் என்று நினைக்க இடமிருக்கிறது. எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஆய்தம் இரண்டு புள்ளிகளால் குறிக்கப்பட்டது என்றும், அது குறில் போல ஒரு மாத்திரை அளவுள்ளதாக இருந்திருக்கிறது என்றும், அலகுபெறாத இடங்களில் அது கூடுதலாக ஒரு புள்ளி பெற்று இன்றைய வடிவான அடுப்புக்கூட்டு போன்ற மூன்று புள்ளிகளைப் பெற்றிருக்கிறது என்றும் நம்ப இடமிருக்கிறது. திருவள்ளுவரும், இம்முறையைப் பயன்படுத்தி, இப்போது, தளைதட்டுமிடங்களில், அதாவது, ஆய்தம் அலகு பெறும் இடங்களில், ஆய்தத்தின் மூலக் குறியீடாகிய இரண்டு புள்ளிகளை எழுதியிருப்பார் என்றும், தளைதட்டா இடங்களில், அதாவது, ஆய்தம் அலகு பெறாத இடங்களில், மூன்று புள்ளிகளை எழுதியிருப்பார் என்றும் நம்ப இடமிருக்கிறது. காட்டாக, தளைதட்டாத (ஆய்தம் அலகுபெறாத) குறளில்,
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோ டக்க துடைத்து – குறள் 22:10
என்றும், தளைதட்டக்கூடிய (ஆய்தம் அலகுபெறும் குறளில்,
அற்றா ரழிபசி தீர்த்த ல:தொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி – குறள் 23:6
என்றும் திருவள்ளுவர் எழுதியிருந்திருக்கலாம். ஓர் எழுத்தில் புள்ளி வைப்பதால் அதன் மாத்திரை அளவு பாதியாகக் குறைகிறது என்ற தொல்காப்பியப் பொதுவிதியும் இங்கே மீறப்படவில்லை அல்லவா?
எனவே, கணினிக்கான திருக்குறள் பாடப்பகுதியில், ஆய்தம் அலகுபெறும் இடங்களிலெல்லாம் அது : என்ற குறியீட்டால் எழுதப்பட்டது. ஏனைய அலகுபெறா இடங்களில் அது வழக்கமான ஃ என்ற குறியீட்டால் எழுதப்பட்டது. : வருமிடங்களில் அந்த எழுத்து, ஒரு குறிலாக ஒரு மாத்திரை பெற்றுவரும் என்று கணக்கிடவேண்டும் எனக் கணினிக் கட்டளைகள் திருத்தி எழுதப்பட்டன. பின்னர், திருக்குறளில் எந்தத் ‘தவறும்’ இல்லையென்ற செய்தியுடன் கணினிநிரல் வெற்றிகரமாகத் தன் பணியை ஆற்றி, திருக்குறளில் வரும் சீர், தளை ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொடுத்தது. அவ்வாறு பெற்ற கணக்கீடு இதுதான்.
சீர்களின் எண்ணிக்கை – KURLTXTS.txt
நாள் 174 (13.1) மலர் 665 (50.0) காசு 200 (15.0) பிறப்பு 291 (21.9)
தேமா புளிமா கூவிளம் கருவிளம்
— 2366 (29.6) 1058 (13.3) 956 (12.0) 680 ( 8.5)
காய் 1184 (14.8) 1011 (12.7) 287 ( 3.6) 438 ( 5.5)
தளைகளின் எண்ணிக்கை
இயற்சீர் வெண் 5060 (63.4)
வெண்சீர் வெண் 2920 (36.6)
இவ்வாறு எடுத்துக்கொள்வதற்கு வேறு ஏதேனும் சான்றுகள் உள்ளனவா என்று பார்ப்போம்.
சங்க இலக்கியங்கள் அஃதை என்ற பெயர் கொண்ட சிலரைப் பற்றிக் கூறுகின்றன. அக் குறிப்புகள் கிடைக்கும் இடங்கள் இவை:-
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நன்கலன் ஈயும் நாண்மகிழ் இருக்கை – அகம் 76/3,4
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4
இங்குக் கூறப்படும் அஃதை ஓர் ஆண்மகன் என்றும், மதுரையைச் சேர்ந்த ஒரு உபகாரி என்றும் இவன் அகுதை என்றும் அழைக்கப்படுவான் என்றும் முனைவர்.இரா.செயபால் கூறுகின்றார்2. அடுத்து,
அம் கலுழ் மாமை அஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் – அகம் 96/12
என்ற அடியிற் காணப்படும் அஃதை ஒரு பெண்மகள் எனவும் சோழரின் மகள் எனவும் காண்கிறோம்.
மேலும், சங்க இலக்கியங்கள் அகுதை என்ற பெயர் கொண்ட சிலரைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. இவர்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கும் இடங்கள் இவை:-
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5
இந்த அகுதை மதுரையைச் சேர்ந்த உபகாரி என்று உ.வே.சா கூறுகிறார்3.
அகுதை களைதந்து ஆங்கு ——- – அகம் 208/18
சீர் கெழு நோன் தாள் அகுதைக்கண் தோன்றிய – புறம் 233/3
மணம் நாறு மார்பின் மறப் போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/5,6
இங்குக் குறிப்பிடப்படும் அகுதை கூடல் என்ற கடற்கரை நகருக்குத் தலைவன் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்4. எனவே சங்க காலத்தில் அஃதை, அகுதை எனப் பெயரிடப்பட்ட பலர் இருந்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. இந்தப் பெயர்களில் ஆய்தம் அலகுபெறாமலும், அலகு பெற்றும் வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு அலகு பெறாப் பெயர்கள் ஃ என்ற குறியீட்டிலும், அலகு. பெற்ற பெயர்கள் : என்ற குறியீட்டிலும் எழுதப்பட்டிருக்கலாம். நாளடைவில் இந்த அலகுபெற்ற பெயர்களிலுள்ள ஆய்தம் ‘கு’ என்று மாற்றப்பட்டிருக்கலாம்.
ஆய்தம் அலகுபெற்றும், அலகு பெறாமலும் எழுதப்படும் இரண்டு முறைகளுக்குமுள்ள வேறுபாடும், அதன் மூலம் திருக்குறளில் ஆய்தம் வருமிடங்களில் உள்ள தளைதட்டும் சிக்கலும், திருக்குறளைக் கணினி மூலம் ஆய்வு செய்தபோது தீர்த்துவைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
பார்வை:
- சிவலிங்கனார் ஆ, தொல்காப்பியம் – உரைவளம் – நூன்மரபு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1980, பக். 47.
- செயபால், இரா, முனைவர், அகநானூறு – மூலமும் உரையும், பதிப்பாசிரியர்கள் – முனைவர்.அ.மா.பரிமணம், முனைவர். கு.வெ.பாலசுப்பிரமணியன் , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் , சென்னை, 2007, பக். 229.
- உ.வே.சா. குறுந்தொகை – மூலமும் உரையும், உ.வே.சா நூல்நிலையம், சென்னை 90, 2000, பக்.547.
- ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை, புறநானூறு – பகுதி II திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18 2007, பக்.74, 294
***