கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் -25


முனைவர் இரா. இராமகிருட்டிணன்

  1. ஆரம்

ஆரம் என்பது சந்தனப் பூ. இதனைத்,  ‘திண்காழ் ஆரம்’, ‘ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த’, ‘ஆரம் நாறும் மார்பினை’, ‘ஆரம் நாறும் மார்பினன்’, ‘நறுங் காழ்ஆரமொடு மிடைந்த மார்பில்’, ‘மலைச்செஞ்சாந்தின் ஆர மார்பினன்’ என்றும், சங்க கால மக்கள் சந்தனத்தை மார்பில் பூசிக்கொண்டதை (மதுரைக்காஞ்சி, வரி 715; அகநானூறு, 22:12; குறுந்தொகை, 198:7 மற்றும் 161:6; நற்றிணை, 314:4; குறுந்தொகை, 321:1) போன்ற இலக்கியச் சான்றுகளால் அறியமுடிகிறது.

 

Image result for sandal tree flower
சந்தன மலர் [ஆரம்]
  சந்தனம் மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு நறுமணப் பொருளாகும். இம்மரம் காடுகளிலும், நாட்டின் பல பாகங்களிலும் வளரும். இதன் பாகங்களிலிருந்து பலவிதமான மணப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. சந்தனத்தைலம், சந்தனக் கட்டைஎன்று சந்தன மரத்தின் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். தென்னிந்தியாவில் தொன்றுதொட்டே சந்தனம் கைவினைப் பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மணம் கமழும் அகிற் புகையும், சந்தனப் புகையும் ஒருங்கு மணக்கின்ற கருமணலைப் போன்ற கரிய கூந்தல் என்பதை, ‘கமழ்அகில், ஆரம்நாறும் அறல்போல் கூந்தல்’ என்று குறுந்தொகை (286:2-3) காட்டுகின்றது. வையை நீர் கொண்டுவந்த வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையினது  புகையினால் சுற்றப்பட்ட, மாலையணிந்த அழகிய மார்பு என்பதை, ‘புனல் தந்த காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்’  எனப் பரிபாடல் (9:27-28) குறிப்பிடுகிறது.

நறைக்கொடி, நரந்தம் புல், அகில், சந்தனம் போன்ற சுமைகளைச் சுமந்து கொணர்ந்து அவற்றை நீத்துறைகள் தோறும் இடும்காவிரி ஆறு என்று பொருநராற்றுப்படை (வரிகள்238-239) கூறுகிறது.

தோலில் உண்டாகும் சொறி, சிறங்கு, வேர்க்குரு, பரு போன்றவைகளுக்கு சந்தனத்தின் பூசு மருந்தும், வாயுக்கோளாறு, வெப்பத்தாக்கம், அதிக தாகம், சீதபேதி, வயிற்றுக் கடுப்பு போன்றவைகளுக்கு சந்தனத் தண்ணீரும் நல்ல பலன் அளிக்கின்றன. சீன நாட்டின் ஆதிகால மருத்துவத்தில் சந்தன எண்ணெய் நல்ல பயனுள்ள மயக்க மருந்தாகவும் பயன்பட்டதாகத் தெரிகிறது.

 

  1. காழ்வை
Image result for அகில் கட்டை
காழ்வை

காழ்வை, அகில் பூ என்று கூறப்படுகிறது. திணைமாலை நூற்றைம்பது (28:1) அகிலைக் காழகில் எனக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள அகில் (கட்டைகள்) எரிய வைக்கப்படும்போது நறுமணப்புகை வெளியேறும் என்பதும், பெண்கள் தம்முடைய ஈரமான கூந்தலைக் காயவைக்க இதன் புகையைக் காட்டுவர் என்பதும் சங்க இலக்கியத்திலிருந்து தெரியவருகிறது (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, மு. நூ., ப. 101).

காழ்’ என்ற சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். அகக்காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக்காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்தினர்.

அகிலின் நிறைந்த நறிய புகையானது, மெல்லிதாகச் சென்று அடங்குவதற்கு இடனாகிய கபில நிறத்தால் வண்ணம் தீட்டப்பட்ட வீடு என்பதை,

“அகில்ஆர் நறும்புகைஐதுசென்று அடங்கிய

         கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு”

என்ற புறப்பாடல் (337:10-11) காட்டுகின்றது.

  1. புன்னை

கடி இரும் புன்னை – மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ என

புன்னை
புன்னை மலர்

நச்சினார்க்கினியர் கூறுவார். சங்க இலக்கியங்களில் மலரினங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பனவற்றுள் புன்னையும் ஒன்று. கடற்கரையோரத்தில் ஒருசில மரங்களே வளரக்கூடியவை. கடற்கரைக்கு சிறிது தள்ளிக் காணப்படும் கானலில் வளரும் மரங்களில் மிகவும் எளிதாகவும், பொதுவாகவும் காணப்படுவது புன்னைமரமென்று செடிநூலார் கருதுகின்றனர். புன்னை மரத்தை நெய்தல் திணைக்குரிய மரமாகக் கடல் சார்ந்த இடத்தில் காணப்படுவதாக சங்க நூல்களில் பலவிடங்களில் பாடப்பட்டிருக்கின்றது.

        “இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்,

                 நிலவுக்குவித்தன்ன வெண்மணல்ஒருசிறை,

                 கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப”                  

எனும் பாடலில் (குறுந்தொகை, 123:1-3) நிலவொளியைக் குவித்தாற் போன்றுள்ள வெண்மணலில் புன்னை மரம் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. புன்னையை ‘எக்கர்ப் புன்னை’ என்றும், ‘கானல் புன்னை’ என்றும் புன்னை மரம் காணப்படும் சூழல் விளக்கப்படுகின்றது. புன்னை மரம் கானலில் சூழ்ந்து காணப்பட்டதால் ‘புன்னையம் பொதும்பு’, ‘புன்னையம் கானல்’, ‘புன்னைப் பூம்பொழில்’ (அகநானூறு, 20:3, 80:13 மற்றும் 340:2; நற்றிணை, 74:7; குறுந்தொகை, 123:3)  என்றும் கூறப்படுகின்றது.

புன்னை மரக்கிளை கரியதாகக் காணப்படும். கடற்கரை மரங்களில் இதைப்போன்ற கரிய கிளைகளையுடைய பிற மரங்களைக் காண்பது அரிது. இதனால்தான் ‘கருங்கோட்டுப் புன்னை’ என்று சங்கப் பாடல்களில் (நற்றிணை, 67:5, 249:1 மற்றும்311:9) கூறப்படுகின்றது.

“கருங்கோட்டுப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ்சினை

                 விருந்தின்  வெண்குருகு ஆர்ப்பின்ஆஅய்”

எனும் நற்றிணைப் பாட்டில் (167:1-2) ‘குடக்குவாங்கு பெருஞ்சினை’ என்று சொல்லப்பட்டிருப்பது நுண்ணிய உண்மையான செய்தியாகும். கடற்கரையில் வீசும் ஈரக்காற்றினால், உப்பங்காற்றினால் ஊறு ஏற்படாதிருப்பதற்காகப் புன்னையின் கிளைகள் மேற்கு நோக்கி வளைந்து நீட்டியிருப்பதுண்டு. இது செடிநூற்படி மிகவும் உண்மையான செய்தியாகும்.

பொதுவாக மரஞ்செடி கொடிகளின் பூக்கள்தாம் அழகானவை என்று கருதப்படுகின்றது. ஆனால் புன்னை மரத்திற்குப் பூவைத் தவிர அதன் இலையும் மிக அழகானது. புன்னையின் இலை கரும்பச்சையாகப் பளபளவென்று காணப்படும். மெழுகு பூசினாற்போல் வழுவழுப்பாக ஒளிவிடும் புன்னை இலை பார்ப்பதற்கு அழகானது. இதனை, “வதிகுருகு உறங்கும்இன்னிழற் புன்னை” என்று குறுந்தொகை (5:2) சுட்டுகின்றது.

மென்மையான அரும்புகள் மலர்ந்த முடம்பட்ட முதிர்ந்த புன்னை மரத்தின் பெரிய கிளையில் பறவைகள் தங்குவதை அகப்பாடல் (10:2-4) சுட்டிக் காட்டுகின்றது.

புன்னை இளவேனிற் காலத்தில் மலரும். புன்னையின்அரும்பு கழுவப்பெறாத வெண்ணிற முத்தைப் போன்றிருக்கும். இதனை, ‘மண்ணா முத்தம் அரும்பிய புன்னை’ என்று அகநானூறு (30:13) குறிப்பிடுகிறது. இளம் பெண்கள் உயர்ந்த வெண்மணல் பரப்பில் தாழ்ந்திருக்கும் புன்னை மரத்தின் பூந்தாதுகள் உள்ள ஒளியுள்ள மலர்களைப் பறிப்பர். ஆடவர் புன்னை மலரின் மென்மையான பூங்கொத்தாலான தலைமாலையைச் சூடுவர். புன்னை மலர்தேனும் மணமும் உடையது. புன்னையின் பூ இணராக, கொத்தாகக் காணப்படுவதாக சங்க நூல்கள் (குறுந்தொகை, 311:5-7; புறநானூறு, 24:7-8) கூறுகின்றன. சோலையில் பொன் போன்ற நிறமுடைய புன்னையின் நறுமலர்கள் உதிர்ந்து பரவிக் கிடக்கும். இவற்றை,

“இணர்வீழ் புன்னை எக்கர் நீழல்”                 

எனும் குறுந்தொகைப் பாடல் வரியாலும் (299:3),

        “அன்றில் சேக்கும் முன்றில், பொன் என

                 நன்மலர் நறுவீ தாஅம்

                 புன்னை நறும் பொழில்”

“தேன்இமிர் நறுமலர்ப் புன்னை”

என்று கூறப்படும் அகப்பாடல் வரிகளாலும் (170:2 மற்றும் 360:17-19) அறியலாம். புன்னையின் பூ மிக வெண்மையானது. மொக்கு, பூ, பூவின் காம்பு ஆகிய எல்லாம் வெண்மையாகக் காணப்படுவதைப் புன்னையில்தான் காணமுடியும். புன்னையின் வெள்ளிய மொக்கு உடைவதை மிக அழகாக ஓர் உவமையின் வாயிலாகப் புலவர் ஒருவர் நற்றிணையில் (231:6-7) பாடியிருக்கின்றார்.

“உள்ளூர்க் குரீஇக் கருஉடைத் தன்ன,

                 பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னை”

ஊர்க்குருவியின் முட்டை உருவிலும் நிறத்திலும் புன்னையின் முற்றிய வெள்ளை அரும்பை ஒத்திருக்கின்றது. புன்னையின் அரும்பு அவிழ்வது ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தது போன்று இருப்பதாகக் கூறப்பட்டிருப்பது மிக நுண்ணிய, அழகான உவமையாகும்.

புன்னை மலர்களின் நுண்ணிய பூந்துகள் வீழப்பெற்ற நெய்தல் மலர் பொன்னோடு பொருந்திய நீலமணி போல அழகு பெறத் தோன்றுவதை ஐங்குறுநூறு (189:1-2) உணர்த்துகின்றது. கரிய கொம்புகளை உடைய புன்னையின் சிறுசிறு கிளைகள் தோறும் நறிய மலர்களிடத்தே, மலரும் காலம் பார்த்து, நுகர்தற்காகச் சுரும்புகள் ஆரவாரிப்பதைக் என்ற கலித்தொகைப் பகுதி (123:1-2)        காட்டுகிறது.

இரும்பு­  போன்ற கரிய  புன்னை மரக்கிளைகளில் உள்ள பச்சை இலைகள் நீல மணிகள் போன்றன; அவ் இலைகளின் இடையே உள்ள பூங்கொத்துகள் வெள்ளியைப் போன்றன; அப்பூக்களின் நடுவே உள்ள பூந்துகள் பொன்துகள் போன்றது; அத்துகள் உதிர அதனைப் பெற்ற வண்டுகள் புலியின் மேல் உள்ள புள்ளிகளைப் பெற்றன என்று நற்றிணை (249:1-6) கற்பனை நயம்படக் காட்டுகின்றது.

  1. நரந்தம்
Image result for நரந்தம் பூ
நரந்தம்

இம்மரம் மலையில் வேங்கையுடன் மலர்ந்திருக்கும். பெரிய கொம்பினையுடைய நாரத்தை மரத்தின் நறுமணம் கமழும் அன்றலர்ந்த அழகிய மலர்கள் உதிரும்படி, முசுக்கலை என்னும் ஆண் குரங்குகள் பாய்ந்து தாவித் திரியும் தேன்  மணம் கமழும் நெடிய மலைகள் என்பதை,

                                “பெருஞ்சினை

                 நரந்த நறும்பூ நாள்மலர் உதிர,

                 கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கை,

                 தேம்கமழ் நெடுவரை”

என்று அகப்பாடல் (141:25-28) கூறுகிறது.

சோலையில் நறுமணம் உள்ள நரந்த மலர்களில் வண்டுகள் பொருந்தியதால் அம்மலர்களின் பூந்துகள் மணம் சோலையெல்லாம் பரவியதை, “காவே, சுருபுஇமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம், நரந்த நறுமலர் நன்கு அளிக்கும்மே” என்று பரிபாடல் (16:14-15)  பாடுகின்றது.

        ‘நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்’ என்று வரும் குறுந்தொகைப் பாடல் வரி (52:3) இம்மலரை மகளிர் தலையில் சூடினர் என்பதைச் சுட்டுகிறது. இதே செய்தியை ‘நரந்தம் நாறு இருங் கூந்தல்’ என்று  கலித்தொகையும் (54:5) கூறுகிறது. ஆனால் இக் காலத்தில் ‘நாரத்தம்பூ’ என்று வழங்கப்படுவதை யாரும் சூடுவதில்லை. எனவே நாரத்தம்பூ என்பதும், ‘நரந்தம்’ என்பதும் வேறு வேறு இனங்களாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

‘நரந்தை நறும்புல்’ என்ற புறநானூற்றுப் பாடல் வரி (132:4) இப்பெயருடைய ஒரு புல்வகை இருப்பதை உணர்த்துகிறது.

நரந்த மலர்களால், பல காழாகப் புனையப்பட்ட மாலைகள் சுற்றப்பட்ட வளைந்த மருப்பினையுடைய சீறியாழ் என்பதை,

        “நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய

                 ஐதுஅமை பாணிவணர் கோட்டுச் சீறியாழ்”

என்ற புறப்பாடல் (302:4-5) கூறுகிறது. யாழின் கோட்டிற்குப் பூப்புனையும் மரபு இங்கே சுட்டப்பட்டுள்ளது.

  1. நாகம்
Related image
நாகம் மலர்

நாகம் குறிஞ்சி நிலத்து மலையுச்சிகளில் வளரும். கொத்துக் கொத்தாக நாக மலர் மலர்ந்திருக்கும் நாகமலர் நல்ல மணமுடையது. இவற்றை, ‘நறுவீ நாகம்’, ‘நல்இணர் நாகம்’ என்ற பாடல் வரிகளால் (சிறுபாணாற்றுப்படை, வரி 115, பரிபாடல், 12:80-81) அறியலாம். இதனைச் சுரபுன்னை என்று கூறுவர். ஆனால் நாகம் வேறு, சுரபுன்னை வேறு என்பதை, “நல்இணர் நாகம், நறவம், சுரபுன்னை எல்லாங் கமழும் இருசார் கரை” என்று வரும் பரிபாடல் வரிகளால் அறியலாம். மேலும், “நனைசினையன நகுவிரையன நலனுடைய நாகம்” என்று நீலகேசி இத்தாவரத்தைக் குறிக்கிறது.

  1. நள்ளிருள்நாறி

Related image
நள்ளிருள்நாறி [இருவாட்சி]
இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி எனக் குறிப்பிடுகிறது. இதனை இருவாட்சிப் பூ என்பர். மாலையில் மலரும் இப்பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். குறிஞ்சிப்பாட்டு தவிர ஏனைய சங்கப் பாடல்களில் இத்தாவரம் பற்றிய குறிப்பு காணப்படவில்லை.

  1. குருந்து
Image result for குருந்து மலர்
குருந்து மலர்

பெரும்பாலும் கொன்றையும், குருந்தும் சேர்த்தே சொல்லப்படுகின்றன. இது முல்லை நில மலர்.  ‘நன் பொன்அன்ன சுடர் இணர்க் கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே’ (ஐங்குறுநூறு, 436:2-3) எனக் கொன்றையும், குருந்தும் இணைந்து வரும் இடங்களை மிகுதியாகப் பார்க்கலாம். இது கார் காலத்தில் மலரும். இம்மலர் பெரிய பூவினை உடையது.

கள் ஒழுகும் பசுமையான குருந்த மரத்தின் நறுமணம் வீசும் கிளையிலிருந்து ஆண்மயில் தன் துணையை அழைத்துக் கூப்பிடுவதை,

“மஞ்ஞை

                நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,

                துணைப் பயிர்ந்து அகவும்”

என்ற பாடல் வரிகள் சுட்டுகின்றன. மேலும், உழவர்கள் கூழ் உண்பதற்காக சென்று தங்கும் வலிய இலையினையுடைய குருந்த மரத்தின் வளைந்த கிளையில் மயில் சென்று அமர்ந்து, கிளிகளை ஓட்டும் மகளிரைப் போல ஒலியுண்டாக அகவிய காட்சியை,

“வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,

                 கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும்”

என்ற அகப்பாடல் பகுதி (85:11-13 மற்றும் 194:14-15) படம் பிடித்துக் காட்டுகிறது. கொன்றையும் குருந்தும் கார் காலத்தில் மலர்வதை,

“காசின் அன்ன போது ஈன் கொன்றை

                 குருந்தொடு அலம்வரும் பெருந்தண் காலை”

என்ற குறுந்தொகைப் பாடல் (148:3-4) உணர்த்துகிறது. சங்க கால மக்கள் குருந்தம் பூவாற் கட்டிய மாலையை அணிந்ததையும், முல்லையைக் குருந்தம் பூவோடு மகளிர் உச்சியில் சூடியதையும்,

“குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்”

“முல்லைக் குருந்தொடு முச்சி வேய்ந்து”

என்ற பாடல் வரிகளால் (கலித்தொகை:11:7 மற்றும் 113:25) அறியலாம்.

குரவு, தளவு, குருந்து, இவை அரவின் எயிறு போன்றும், கோடல் அரவின் படம் போன்றும் அரும்பியதை,

                “குரவும்தளவும் குருந்தும் கோடலும்

                 அரவு கொண்டு அரும்ப”

என்று பெருங்கதை (1. உஞ்சைக்காண்டம், 49. முல்லை நிலங்கடந்தது :98-99) காட்டுகிறது.

  1. வேங்கை
Image result for வேங்கை மலர்
வேங்கை மலர்

சங்க இலக்கியப் பாடல்களில் மிகுதியான இடங்களில் பயிலப்பட்ட மலர் இது. புறவிலும், மலைச் சாரல்களிலும், குறிஞ்சி நில மக்கள் வீட்டு முற்றங்களில் பெரும்பாலும் வேங்கை வளர்ந்திருக்கும். பூக்கும் காலத்தில் மஞ்சள் நிறப் பூக்கள், மாலை மாலையாகப் பூத்து நிற்பதைக் காணலாம். சிவப்பு நிறத்திலும் வேங்கை மலரினம் உண்டு. ‘பொன் இணர்வேங்கை’, ‘கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை’ என நற்றிணை (151:9 மற்றும் 222:1 பாடுகின்றது. இதன் மொட்டுகள் கரிய நிறத்துடன் காணப்படுவதை,

        “கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை”

என்ற பாடல் வரி (அகநானூறு, 232:7-8) உணர்த்துகின்றது.

தேனும், தாதும் நிறைந்த இம்மலர் மணம் பொருந்தியது. இதனை, ‘நறுவீ வேங்கை’ என்றனர். வேங்கை மலர் மரத்திலிருந்து உதிர்கின்ற காட்சி, கொல்லன் உலையில் தெறிக்கின்ற இரும்பின் பொறி சிதறுவது போலக் காட்சியளிக்கின்றதாம். ‘மணிமருள் மாலை மலர்ந்த வேங்கை’ என்ற அகப்பாடல் வரியால் (302:6) இம்மலர் மாலை நேரத்தில் மலரும் என்பதை அறிகிறோம்.

வேங்கை பூத்து நிற்பதை நன்னிமித்தமாகக் கொண்டனர் பழந்தமிழர்.  எனவேதான் இதனை, ‘நல் நாள் வேங்கை’ (நற்றிணை, 206:7) என்றும், ‘கணிவாய் வேங்கை’ என்றும் அழைக்கின்றனர். வேங்கை மலரை வண்டுகள் மூசும் என்பதை,

“நளிச்சினை வேங்கை நாள்மலர் நச்சி,

                களிச்சுரும்பு அரற்றும்”                     

எனவும்,

“சுரும்பு உண விரிந்த கருங்கால் வேங்கை”      

எனவும் வரும் பாடல் வரிகள் (சிறுபாணாற்றுப்படை, வரிகள் 23-24; நற்றிணை, 168:1) உணர்த்துகின்றன.

கரிய நிறத்தைக் கொண்ட அரும்புகள் அவிழ்ந்த, கணிவனைப் போலக் காலம் கூறும் வேங்கை மரம் என்பதை, “கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை” என்று நற்றிணை (373:6) பாடுகின்றது. வேங்கை அரும்பு விடும் காலம் தினை கொய்யும் காலமெனக் கானவர் கருதுவாராதலின் வேங்கையைக் கணிவனை ஒத்தது என்றனர்.

ஊர் மன்றத்தின்கன் உள்ள வேங்கை மரங்கள் மணநாளை அறிவிப்பது போல் பூத்து நின்றன; அம்மரங்களின் மணி போன்ற அரும்புகள் மலர்ந்த பொன்னிறப் பூக்கள் உதிர்ந்து வீழ்ந்து மன்றத்தினை அழகு செய்யும் என்பதை,

“மன்ற வேங்கை மணநாட் பூத்த

                 மணிஏர் அரும்பின் பொன்வீ”

என்ற அகப்பாடல் பகுதி (232:7-8) காட்டுகிறது. பொன் போன்ற கொத்துக்களையுடைய வேங்கைப் பூ என்றும், சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூ என்பதை, ‘செவ்வீ வேங்கைப் பூ’ என்றும் மலைபடுகடாம் (வரி 434) குறிப்பிடுகின்றது.

வேங்கையின் பொன் நிறம் பெற்ற பூங்கொத்துகளைப் பறிக்க எண்ணும் பெண்கள், அம்மரத்தின் அருகில் நின்று ‘புலி புலி’ என்று கூவினர்; அப்படிக் கூவினால் அம்மரம் தன் கிளைகளைத் தாழ்த்திப் பூக்களைப் பறித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையை, “தலைநாள் பூத்த பொன்இணர் வேங்கை, மலைமார் இடூஉம் ஏமப் பூசல்” என்று மலைபடுகடாம் (வரிகள் 305-306) புலப்படுத்துகின்றது.

பொன்போன்ற புதிய வேங்கை மலர் தந்த பூந்துகளைப் பூசிக்கொண்டு அதனால் அழகு பெற்ற மயில் கூட்டம் பசுமையான கல்லின்மேல் கூடி ஞாயிற்றின் ஒளியில் திளைத்த இனிய காட்சியை,

        “வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள்

                 பொன்னின் அன்ன பூஞ்சினை துழைஇக்

                 கமழ்தாது ஆடிய கவின்பெறு தோகை

                 பாசறை மீமிசைக் கணம் கொள்பு ஞாயிற்று            

                 உறுகதிர் இளவெயில் உண்ணும்”

என்று நற்றிணை (398:3-7) பதிவு செய்துள்ளது. வேங்கை மலர்கள் கொண்டு மலையில் வீற்றிருக்கும் கடவுளாகிய குல முதல்வனை தலைவியொருவள் வழிபட்டதை, “மன்ற வேங்கை மலர்சில கொண்டு, மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி” எனும் ஐங்குறுநூற்றுப் பாடல் வரிகள் (259:2-3) காட்டுகின்றன. மலையைச் சேர்ந்து வளர்ந்துள்ள வேங்கை மரம் தன் கிளைகளில் ஒளியுள்ள மலர்களைச் சொரிவதை, “வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கை, பூஉடைப் பெருஞ்சினை” எனும் பதிற்றுப்பத்துப் பாடல் வரிகள் (41:8-9) சுட்டுகின்றன.

  1. புழகு

Image result for புழகு மலர்
புழகு [மலை எருக்கு]
புழகு, புனமுருங்கை என்றும், புனமுருக்கு என்றும் அழைக்கப்பட்டது. “அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்”  என்ற வரிக்கு (219) உரை கூறுமிடத்து நச்சினார்க்கினியர், புழகு என்பதற்கு மலையெருக்கு எனப் பொருள் கூறுகிறார்.  இச்செடி நெருக்கமாக வளரும். வேர்க் கிழங்கு உண்டு. ‘அரக்கு விரித்தன்ன பருஏர்அம் புழகு’ (குறிஞ்சிப்பாட்டு, அடி 96) என்றதால் இதன் பூ பருத்தது, மிகவும் பேரழகு கொண்டது, அரக்குச் சிவப்பு நிறம் உடையது என்பதை அறிகிறோம். ‘அகன்றலைப் புழகு’ (பெருங்கதை, 2:12:27) என்றதனால் இது அகன்று விரிந்து தழைக்கும் என்பதை அறியமுடிகிறது. இதனை மலை எருக்கு என்கிறார் கோவை இளஞ்சேரன் (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, மு. நூ., ப. 99) இதனை செம்பூ என்கிறார் நச்சினார்க்கினியர். செம்பூவுக்கு அவர் சுட்டும் மேற்கோள்:

செறிவுடனும், வினைத்திறனோடும் தொடுத்தமைந்த செம்மலர்க் கண்ணிகளை  ஆடவர் சூடியிருந்தனர் என்ற கருத்தமைந்த,

“செறிவினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்”

என்ற இப்பரிபாடல் வரியாகும் (22:21).

[முற்றும்]

 

4 Comments

    1. common name for ‘நரந்தம்’ is நாரந்தை – In English It is called ‘BITTER ORANGE’. .நாரத்தம் பூ என்ற பெயரில் ஒரு பூ உள்ளது. இதனை யாரும் சூடுவதில்லை. நரந்தம் பூவை மகளிர் தலையில் சூடினர். .எனவே ‘நரந்தம்’ என்பதும் நாரத்தம் பூ என்பதும் வேறு வேறு. இனங்களாக இருக்கக்கூடும்.

      முனைவர் இரா. இராமகிருட்டிணன்

      Like

பின்னூட்டமொன்றை இடுக