கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 14


முனைவர் இரா. இராமகிருட்டிணன்

  1. பாலை

 

பாலை மலர்.JPG
பாலை மலர்க்கொத்து

பாலைமரம் சங்ககாலத்தில் மழையற்ற வறட்சியான பாலைநிலத்துக்கு உரியதாக, பாலை நின்ற பாலை நெடுவழி (சிறுபாணாற்றுப்படை, வரி 11)என்று கூறப்பட்டிருக்கின்றது. இதைப்பற்றி நற்றிணையில் ஒரு விளக்கம் காணப்படுகிறது.

உள்ளுதொறு நகுவேன் தோழி வள்ளுகிர்ப்

            பிடிபிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக்

            கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச்

            செல்வளி தூக்கலின்இலைதீர் நெற்றம்

            கல்இழிஅருவியின்ஒல்லென ஒலிக்கும் (நற்றிணை 1-5)  

பாலையின் நாரைப் பிளப்பதால் ‘வெண்கோட்டுடன்’ பாலைமரம் தோன்றுகின்றது என்று கூறப்படுவதை நோக்கவேண்டும். இதன் அடிமரம் மிகவெண்மையாகக் காணப்படும். இதனால் இந்த மரத்தைத் ‘தந்தப் பாலை’ என்றும், ஆங்கிலத்தில் ‘Ivory wood’ என்றும் அழைக்கின்றனர்.

பாலையின் மலர் கொத்தாகவும், வெண்மையாகவும் இருப்பதால் நற்றிணையில் ‘வாலிணர்’ என்றே இது அழைக்கப்படுகின்றது. பாலைமரம் தந்தப்பாலை, வெப்பாலை, நிலப்பாலை என்றும் அழைக்கப்படுகின்றது. சங்கநூல்களில் கூறபட்ட  பாலையையே தற்காலத்தில் ‘நிலப்பாலை’ என்றழைக்கின்றனர். முற்குறிப்பிட்ட நற்றிணைப் பாட்டில் பாலை மரத்தின் முக்கிய தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. பாலைமரம் நாருடைய பட்டையையுடையது, பட்டையுரித்த மரக்கொம்பு வெண்மையானது, பூக்கள் வெண்மையானவை, கொடிறுபோன்ற காயையுடையது, இலை தீர்ந்த காலத்தில் காய் நெற்றாவது ஆகிய குணங்கள் கூறப்பட்டுள்ளன.

பாலைமரத்தைத் தெலுங்கில் ‘தெள்ளப் பாலா’ என்றும், கன்னடத்தில் ’வெப்பாலா’ என்றும், இந்தியில் ‘காலாகுடா’ என்றும் அழைக்கின்றனர். பசுமை முழுவதும் கெட, கதிர் வெம்மையால் பாழ்பட்டுப்போன பாலையான வெம்மைமிக்க காடு என்பதை,

சூழ்கம் வம்மோ– தோழி! பாழ்பட்டுப்

            பைது அற வெந்த பாலைவெங்காட்டு

என ஐங்குறுநூறு (317:1-2) சுட்டுகிறது.

கொடிய வேனிற் காலத்தில் எல்லா மரங்களும் கரிந்துபோக இம்மரம் மட்டும் தளிர்த்துப் பூ விடுகிறது. இம்மரத்தின் பெயரால் அது வளரும் நிலமும் ‘பாலை’ எனப்பட்டது.

நிரை ஏழ்  அடுக்கிய நீள் இலைப் பாலை (பரிபாடல், 21:13)

நீண்ட இலையுடையதால் ‘நீள் இலைப் பாலை’ எனப்பட்டது. இலையின் நீட்சி கோடைக்கால வெம்மையைத் தாங்குவதற்கு எற்ப நீரைச் சேமித்து வைத்தற்காக அமைந்தது போலும்! அவ்விலைகள் எழேழாக அடுக்கியுள்ளமைபற்றி ஏழிலைப் பாலையாயிற்று. இப்பாலையின் மலர்கள் யானை மதம்போல் நாறும் என்பர். இக்காரணம் பற்றியே பரங்குன்றம் யானையாக உருவகப்படுத்தப்பட்டது என்று உ.வே சா. விளக்குகிறார்.

மலர்களில் வீழ்ந்துகிடக்கும் வண்டுகள் யாழில் வல்லவன் இசைக்கும் பாலைப் பண்ணின் இசையைப் போன்று ஒலித்தன என்பதை, ‘வல்லோன் தைவரும் வள்உயிர்ப் பாலை’ என்று அகநானூறு (355:4) பாடுகிறது.வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாகப் புனைந்த பாண்சாதி மகளிர் நரம்புக் கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்ததை,

வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்

            தொடை படு பேரியாழ் பாலை பண்ணி

என்று பதிற்றுப்பத்துப் பாடல் வரிகள் (46:4-5) குறிப்பிடுகின்றன. மேலும், கோவலர்க்குக் குழலோசை விருப்பமான ஒன்று; எனவே காட்டில் கிடைக்கும் மூங்கிலிலேயே துளை செய்து குழலை உருவாக்கிப் பாலைப் பண்ணை இசைக்கிறான். அதனை,

செந்தீத் தோட்ட கருந்துளைத் குழலின்

            இன்தீம் பாலை

என்று பெரும்பாணாற்றுப்படை (வரிகள் :179-180) கூறுகிறது.

  1. முல்லை
Image result for முல்லை
முல்லை மலர்

 

முல்லை தொத்தி ஏறும் கொடியாகும். இஃது இயற்கையில் குறுங்காடுகளிலும், காடுசார்ந்த வெளிகளிலும் வளர்கின்றது. கோடல் எதிர் முகைப் பசுவீ முல்லை, புறவில் பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூ, சிறுவீ முல்லைக் கொம்பின்தாஅய், இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை குறுந்தொகையிலே (62:1, 108:2-3, 348:3 மற்றும்220:3) முல்லையைப் பற்றிக் கூறப்படுகிறது. முல்லை கல்லுயரே ஏறுவதாகக் கூறப்பட்டுள்ளது. முல்லைச் செடியின் புதிய கிளைகள் மென்மையாக இருக்கும் என்று செடிநூல் கூறும். முல்லையின் பூ ‘பசுவீ முல்லை’,‘சிறுவெண்முகை’, சிறுவீ முல்லை’ என்று கூறப்பட்டிருக்கிறது. தாமரைமலர்போல முல்லை மலரும். தமிழர்தம் வாழ்வியலில் மிகவும் பங்கு கொள்ளும் சிறப்பான மங்கல மலராகும். முல்லையில் வெண்முல்லை, செம்முல்லை முதலிய வகைகள் உண்டு; எனினும் வெண்முல்லைக்கே ஏற்றம் மிகுதியாகும். முல்லை மலரினைத் தளவம், சாதி, பிச்சி என்றும், ஊசிமுல்லையைத் தளவு, மாகதி, நைதிகை என்றும் அழைத்துள்ளனர் (பி.நி. ஒன்பதாவது மரப்பெயர் வகை, 2948-2949).

தமிழ்நாட்டுத் திணைநோக்கில் சிந்திக்கையில் முல்லைமலர் காரணமாகவே காடும் காடு சார்ந்த நிலமுமாகிய நிலம் ‘முல்லை’ எனப் பெயர் பெறலாயிற்று. ஆவணி, புரட்டாசித் திங்கள் கொண்ட கார்ப்பருவத்தில் மாலைப்பொழுதிலே முல்லைப்பூ நிரம்ப மலரும் என்பதை நாடறியும். முல்லைப் பூவுக்கு அடுத்த நிலையில் இப்பருவத்தில் பீர்க்கம் பூவும், கொன்றைப் பூவும் சிறப்பாக மலரும் என்றும் இலக்கியங்களில் கூறுவர்.

முல்லைப் பூவானது அழகுநங்கையின் பற்களே போலிருத்தலால் அதுகொண்டு அவர்களின் புன்னகையையும் சுட்டுவர். கார்ப்பருவ நங்கை முல்லை மலராகிய நகை காட்டி நிற்றலைப் புலவர்கள் பலரும்அழகுறப் புனைந்துள்ளனர்.

           முல்லை  இலங்கெயிறு ஈன நறுந்தண்கார்

            மெல்ல இனிய நகும் (கார் நாற்பது,14)

தலைவியைப் பிரிந்த தலைவன் தான் மேற்கொண்ட செயல் முடிந்து மீள்கிறான்; வழியில் அரும்பியிருந்த முல்லைக் கொடியைப் பார்த்து, “நீ தனித்திருப்போரை நோக்கி அரும்பால் எள்ளி நகையாடுதல் அழகா, தகுமா?” என வினவும் பாங்கிலே கருவூர்ப்பவுத்திரன்,

முல்லை வாழியோ, முல்லை! – நீநின்

            சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை;

           நகுவை போலக் காட்டல்

            தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே!    (குறுந்தொகை, 162:3-6)        

எனப் பாடிச்செல்கிறார்.

தலைவனொருவன் செயல் முடிந்து கார்க்காலத்தில் வருவேன் எனக் கூறிச்சென்றான். ஆனால் அவன் வரவில்லை. தலைவி வருந்துகிறாள். இதனை,

     …………    ……………  பூங்கொடி முல்லைத்

            தொகுமுகை இலங்கு எயிறு ஆக

            நகுமே –தோழி! – நறுந்தண் காரே          

என்ற பாடல் அடிகள் (குறுந்தொகை, 126:3-5) சுட்டுகின்றன. இதன்பூ தொகுத்துக் காணப்படும் என்ற பொருளில் ‘தொகுமுகை’ என்று கூறப்படுகிறது. செடிநூலிலும் முல்லையின் விரிந்தபூவை விட மொக்குத்தான் ‘வெண்முகை’, தொகுமுகை’, ‘குறுமுகை’ என்று கூடுதலாகப் பாடப்பட்டிருக்கின்றது. முகைத்தல், முகை முற்றல், முகையவிழ்தல் என்று மூன்று பருவங்கள் கூறப்படுகின்றன.

சோழன் கரிகாலன் பொருநருக்கு விருந்தளித்தான். சோறு முல்லை அரும்புகள் போல ஒரே அளவாக இருந்தது; முனை முரியாத அரிசியிலான சோறு என்பதை, முகிழ்த்தகை, முரவை போகிய முரியா அரிசி, விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் என்ற பொருநராற்றுப்படையும் (வரிகள்:112-114), பெருமுது பெண்டிர் நற்சொல் கேட்பதற்காக முல்லை மலர்களை நெல்லுடன் கலந்து தூவி தெய்வத்தை வழிபட்டதை முல்லைப்பாட்டும் (வரிகள் :8-11)  பதிவு செய்துள்ளன.

காட்டில் உள்ள ஒரு புதர் யானைபோலத் தோற்றமளித்தது. அப்புதர் மேல் பூத்த முல்லைப்பூக்கள் யானை முகத்தில் உள்ள வரிகளும், புள்ளிகளும் போன்றிருந்ததை, சிறுவீ முல்லை தேம்கமழ் பசுவீ, பொறிவரி நன்மான் புகர்முகம் கடுப்ப, தண்புதல் அணிபெற மலர என்று நற்றிணை (248:1-3) குறிப்பிடுகின்றது. முல்லைக் கொடி அரும்பு ஈன்று பூத்த காட்சி காட்டுப்பூனை சிரித்தது போன்றிருந்தது என்று குறுந்தொகை (220:3-5) குறிப்பிடுகிறது. பூனைக்குட்டியின் பல்லைப்போன்று பசிய இலைகளுக்கு இடையே முல்லையின் அரும்பு மலரும் என்றும், வெண்மையான பூக்களைக்கொண்ட முல்லையை வேலியாகக் கொண்டது கோடைக்கானல் என்றும் புறம் (117:8-9, 205:6) பேசுகிறது.

‘முல்லை’ என்னும் சொல் முல்லைப்பூ, முல்லைநிலம், அகத்திணையில் முல்லைத் திணை, புறத்திணையில் முல்லைத் துறை முதலானவற்றைக் குறிக்கும். முல்லைகார் காலத்தில் மாலை நேரத்தில் மலரும்.‘முல்லை அரும்புவாய் அவிழும் பெரும்புன்மாலை’என நற்றிணை (369:3-4) கூறுகின்றது.

காட்டுப் புறங்களில் கொன்றை, காயா, தளவம் இவற்றுடன் கலந்து காணப்படும். மற்றக் காலங்களில் வெறும் புதர்போன்று காட்சியளிக்கும். முல்லைக்கொடி கார்காலத்தில் தளிர்த்து, ஏராளமான அரும்புகளை விடும். இதன் முகை வெண்மையாக நீண்டிருக்கும். செந்நிறப் புறவுகளில் வளரும் இக்கொடியின் மலர்கள்மிகுந்த மணமுடையன. மலருக்குரிய பலபெயர்களில், முல்லைமலரைக் குறிப்பிடும்போது ‘முல்லை வீ’ எனச் சங்க இலக்கியங்களுள் குறிக்கக் காணலாம். இவற்றை,

வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை

            வீகமழ் நெடுவழி       

முல்லை வீகழல் தாஅய், வல்லோன்

            செய்கை அன்ன செந்நிலப் புறவு220

என்ற இலக்கியப் பகுதிகளால் (அகநானூறு, 124:11-12; 134:5-6) அறியலாம். மேலும், பெரிய காட்டு முல்லைப் பூக்கள் கரும்பு நுனி அளவும் சென்று படர்ந்து இருப்பது, சிரிப்பதுபோல் காணப்படுகிறது. வண்டுகளின் வாய்களில் அப்பூக்கள் தேனைப் பெருக்குவதை,

     கான மா முல்லைக் கழைக் கரும்பேறி வெண்முறுவல் செய்து அலர்கின்ற

     தேனின் வாய் மலர் முருகு

என்று பெரிய திருமொழி (5-3-5) காட்டுகிறது.

     ‘முல்லை’ எனும் சொல்லே காட்டில் மலரும் வன முல்லையைத்தான் குறிக்கும். பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்.

ஒல்லையூர் நாட்டு வள்ளல் சாத்தன் இறந்ததால் அவ்வூர் மக்கள் சாத்தன் பிரிவுக்கு வருந்தி முல்லை மலரையும் வெறுத்தனர். அதனைச் சங்கப் புலவர்,

           இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்;

            ….   ….  பாணன் சூடான்; பாடினி அணியாள்;

            …..  வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

            முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?

என்று ஆற்றாது பாடுகிறார். சாத்தன் இறந்ததால் பகைவர் அகம் மலர்வர்; ஆனால் முல்லையே நீ ஏன் மலர்ந்தாய் என வினவுவதாக இப்பாடல்  (புறநானூறு, 242) அமைந்துள்ளது.

 

முல்லை – நன் முல்லை

அள்ளூர் நன்முல்லையார் சங்க கால புலவர்களில் ஒருவர். இக்காலத்தில் மகளிர் சூடிக்கொள்ளும் முல்லை இந்த நன் முல்லை ஆகும். இதனைச் சூடிக்கொண்ட புலவர் நன்முல்லையார். இவரது பதினொருபாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

முல்லை – நாள் முல்லை என்னும் நித்திய  முல்லை

இதற்குப் பருவ காலம் இல்லை; நாள்தோறும் பூக்கும்.

முல்லை – அகத்திணை உரிபொருள்

முல்லை நிலத்து மக்களுக்கு ஆநிரை மேய்த்தல் தொழில். அடுத்த நாட்டு ஆடு மாடுகளைக் கவர்ந்து செல்வதும், போரிட்டு மீட்பதும் இந்த நிலத்தில் என்றனர். இருத்தலும், இருத்தல் நிமித்தமும் முல்லைத் திணையின் உரிப்பொருளாகும்.

முல்லை புறத்திணைத் துறையில் விரிபொருள்

மூதின் முல்லை என்னும்போது, குடும்பத்தில் முதிர்ந்த இல்லத்தரசி,விருந்தோம்பி, வீரனாக மகனை வளர்க்கும் திறம் கூறப்படும். வல்லாண் முல்லை என்னும்போது குடும்பத்தில் வாழும் வீரன் ஒருவன் தன் உடைமைகளை ஏற்போருக்கு வழங்கி மகிழும் வள்ளன்மைத் திறம் கூறப்படும்.

முல்லை மலர் மணத்தால் மகளிர் தம் கணவரை இன்புறுத்துவர் என்பது இலக்கியச்  செய்தியும், வாழ்வியலுண்மையும் ஆகும். குலமகளிர் தம் கற்பொழுக்கத்திற்கு அறிகுறியாக முல்லை மலர் சூடுதல் ஒரு தமிழ் மரபாகும். இதனை,‘முல்லை சான்ற கற்பின்’ (சிறுபாணாற்றுப்படை, வரி 30) என்றும், ‘வாள் நுதல் அரிவை முல்லை மலைய’ (ஐங்குறுநூறு, 408:2) என்றும், ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்’ (நற்றிணை, 142:10-11) என்றும், ‘முடிசூட்டு முல்லையோ முதற் கற்பு முல்லையோ’ (தக்கயாகப்பரணி, 113) என்றும், ‘முல்லையந் தொடை அருந்ததி’ (பிரபுலிங்கலீலை, 2 கைலாசகதி, 27) என்றும், ‘வண்முல்லை சூடுவதே நலங்காண் குல மாதருக்கே’ (குலோத்துங்கசோழன் கோவை, 138) என்றும், ‘முல்லைச் சூட்டு மிலைச்சி’ (சீவகசிந்தாமணி, பாடல் 2438) என்றும் புலவர்கள்  (கூறியுள்ளனர்.

கன்னியரினும் திருமணமான மகளிர் முல்லை மலர்க் கொடியைத் தெய்வநலச் சின்னமாகவே கருதி வந்துள்ளனர். எனவே, ஒவ்வொருவரும் தத்தம் இல்லத்தில் முல்லைக் கொடியை வளர்க்க முனைந்தனர். அவ்வாற்றான் அதனை, ‘இல்வளர் முல்லை’ என்றே போற்றிக் கூறினர் (செ. வைத்தியலிங்கன், தமிழ் பண்பாட்டு வரலாறு, முதல் பாகம், ப. 133).

முல்லைப் பூவின் மருத்துவ குணம்

     முல்லைப் பூ தலையில்சூட மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

முல்லைப் பூவின் சாறு பிழிந்து மூன்று துளி மூக்கில் விட, தலைவலி நீங்கும். மேலும் இச்சாற்றினை இரண்டு முதல் நான்கு துளி வீதம் கண்ணில் விட்டுவர கண் பார்வைக் குறைபாடு நீங்கும். முல்லைப் பூவை அரைத்து அப்படியே வைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் சுரப்பு குறையும். ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்துவர மாதவிடாய்க் கோளாறுகள் குணமாகும். சொறி, சிரங்குகளைக் குணப்படுத்தும் மருத்துவத் தன்மை முல்லைப் பூவுக்கு உண்டு. பூ மட்டும் அல்லாமல்அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் மருத்துவச் சிறப்பு உண்டு என்பர் (ஈகர – தமிழ்க் களஞ்சியம் – முல்லைப் பூவின் மருத்துவ குணம்).

பின்னூட்டமொன்றை இடுக