தாலாட்டும் அம்மை


மீனாட்சி பாலகணேஷ்

வளர்ந்துவரும் சிறுகுழந்தையை பல்வேறு செயல்கள் செய்ய ஊக்குவிக்க வேண்டித் தாய்மார்கள் சப்பாணி கொட்ட வேண்டுவார்கள்; தளர்நடை நடந்துவர வேண்டுவார்கள்; குழந்தையை உறங்கவைக்கத் தாலாட்டும் பாடுவார்கள். புலவர்கள் இவற்றை தெய்வக்குழந்தைகள் செய்வதாகப் பத்துப் பருவங்களாக்கிப் பாடல்கள் புனைந்து ‘பிள்ளைத்தமிழ்’  எனப் பிரபந்தங்கள் இயற்றினர்.

            பெருமைவாய்ந்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் குமரகுருபரர். இதில் சப்பாணிப் பருவத்தில், அம்மையைத் தனது இருகரங்களையும் சேர்த்துக் கொட்டி விளையாடத் தாயின் நிலையில் நின்று வேண்டுபவர், பல காட்சிகளைக் கண்முன் சித்திரங்களாக விரிக்கின்றார். இதில் ஒரே பாடலில் அன்னை தெய்வத்தின் மூன்றுநிலைகளைக் கண்டு களிக்கலாம்.

            மீனாட்சி அன்னையின் அழகிய மீன் போன்ற விழிகள், கயல்மீன்களை வென்று வீழ்த்தும் வாள் போன்றவை. அத்தகைய கண்களாகிய கடலில், அடியார்கள் பொருட்டு கருணைவெள்ளம் பெருகிப் பிரவகிக்கின்றது; அது அமுதமானது பெருக்கெடுத்து மடைதிறந்து ஊற்றுவதைப் போல் தடையின்றிப் பெருக்கெடுக்கிறது. குழந்தைகளாகிய அடியார்களை (நம்மை) உய்விக்கும் பொருட்டு அது கடலின் அலை போன்று மோதி மோதி வீசுகின்றது. தனது கண்களின் வழியே, பார்வையாலேயே மீன் குஞ்சுகளைக் காப்பதுபோல அன்னையும் கண்களால் அமுத கடாட்சத்தைப் பொழிந்து அடியாரைக் காக்கின்றாள்.

            வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தின் இளம் காலைப் பொழுதில், கடல் அலைகளின் வீச்சத்தை, கரையில் நின்று, அதில் நனைந்து, ரசித்து அனுபவித்திருப்பவர்கள் அது எந்த விதமான சுகானுபவம் என்று அறிவார்கள். அன்னையின் கடாட்சமும் அது போன்றே வாழ்வில் கொடுமையாக வருத்தும் துன்பங்களிலும், கருணையாகிய அலைகளை இடை விடாது வீசுகிறது. அடியார்களைத்தன் கருணையில் முழுக்காட்டி ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துகின்றது.

            ‘சேலாட்டு வாள்கண் கருங்கடல் கடைமடை

                   திறந்து அமுதம் ஊற்று கருணைத்

          தெண்திரை கொழித்தெறிய……….’ என்று மீனாட்சி எனும் தெய்வத்தாயை குமரகுருபரர் ஏற்றுகிறார்.

            இவ்வாறு கண்களால் காக்கும் மீனாட்சி அன்னையின் காக்கும் திறத்தைப் போற்றிய பாடல் அடிகளையே அடுத்த அடிகளுக்குத் தொடக்கமாக எடுத்துக் கொள்ளும் நயம் அருமையானது.

            இங்கு நாம் காண்பது மீனாட்சி என்ற இளம் அன்னை தான் பெற்றெடுத்த குழந்தையை அன்புடனும் ஆசையுடனும் நாள்தோறும் நீராட்டி, தாலாட்டி, பாலூட்டி, பாராட்டிச் சீராட்டி மகிழும் ஒரு காணற்கரிய காட்சி!

           

THE BIRTH OF UKKIRA PANDIAN | Temples in Tamil Nadu | Temple news

கடல்போலும் கண்களில் அன்பு சொரியும் கருணைப் பார்வையுடன், தன் தெய்வக்குழந்தையை  மடியில் வைத்துச் சீராட்டுகின்றாள் மீனாட்சியன்னை. இந்தக் குழந்தை யார் தெரியுமா? பாண்டியர் குலக்கொழுந்தாம் உக்கிரகுமார பாண்டியன்! வெண்மையான நுரை போன்ற அலைகளை உடைய கடலை நெருப்பூட்டியவன் இவனே!  முருகப்பெருமானின் அவதாரமான திருமகனும் இவனே. உமாதேவியார் மீனாட்சியாக அவதரித்து மதுரையை அரசாண்ட காலத்தில் கருத்தரித்து ஈன்றெடுத்த திருமகன்தான் உக்கிரகுமார பாண்டியன்!

            அரசியானாலும் கூட தாயன்பு மட்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது; அதை எந்தப் பெண்ணுமே விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. அன்னை தடாதகைப் பிராட்டியும் தனது சிறிய கணைக்காலில் குழந்தையைக் குப்புறக்கிடத்திக் கொண்டு, வாசனைப்பொடி பூசி, இளம் சூடான நீரை ஊற்றிக் குளிப்பாட்டுகின்றாள்; நீராட்டலில் துவண்டு விட்ட குழந்தையை, நீரைத் துடைத்து, அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து மார்போடு அணைத்துக் கொள்கின்றாள்; சாம்பிராணிப் புகை காட்டித் தலைமுடியை உலர்த்தி, அதற்கு நறுமண எண்ணை பூசுகிறாள். நெற்றியில் உயர்வாகப் போற்றப்படுவதும் வெண்காப்பு எனப்படுவதுமான ‘திரு ஆலவாயானின் திருநீற்றை’ப் பூசுகிறாள்!

            இப்பொழுது நீராடிய குழந்தைக்குப் பசிக்குமே? அந்த எண்ணம் உண்டான பொழுதே தாயன்பில் கொங்கைகளில் பால் பெருகுகின்றது. அதைச் சங்கில் வார்த்து பாலைச் சுழற்றி அசைத்து உறங்க எத்தனிக்கும் குழந்தையின் ‘வாயிதழ் நெரித்தூட்டி’ உண்ண வைக்கிறாள்; குழந்தையின் வயிறு நிரம்பி விட்டது எனத் தெரிந்ததும், வாயைத் துடைத்துத் திரும்பவும் வாசனைப் பொடியைப் பூசி விடுகிறாள்; “என் கண்மணியே கண்வளராய்,” என்று பச்சிளம் மதலையை பசும்பொன் நிறத்தையுடைய தனது அழகிய துடையில் இட்டுத் தாலாட்டி உறங்க வைக்கிறாள்.

            …………………………………………வெண்திரை நெருப்பூட்டு

                   தெய்வக் குழந்தையைச் செங்

          கோலாட்டு நின்சிறு கணைக்கால் கிடத்திக்

                   குளிப்பாட்டி உச்சி முச்சிக்

          குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பு மிட்டுவளர்

                   கொங்கையில் சங்கு வார்க்கும்

          பாலாட்டி வாயிதழ் நெரித்தூட்டி உடலில்

                   பசுஞ்சுண்ணமும் திமிர்ந்து

          பைம்பொற் குறங்கினிற் கண்வளர்த் திச்சிறு

                   பரூஉமணித் தொட்டிலேற்றித்

          தாலாட்டி ………………………………………………

என்று புலவர் விளக்கியிருப்பது மீனாட்சி எனும் தாயின் செயல்களைத்தான்.

            இனி நாம் காணப்போவது மீனாட்சி எனும் சிறு பெண்குழந்தையின்  இனிமைபொருந்திய பாவை விளையாடலையும் கூட!

            பாவைகள் எனப்படும் பொம்மைகளை வைத்துக்கொண்டு பெரும்பாலும் சின்னஞ்சிறுமியர் விளையாடும் விளையாட்டே பாவை விளையாடல் எனப்படும். ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களில் இதனை ஒரு பருவமாகவே புலவர்கள் பாடியுள்ளனர். அன்னைமாரும் மற்ற பெண்டிரும் செய்வதுபோன்று, பாவைக்குழந்தையைக் கணைக்காலில் இட்டு, உடலில் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டி, வாசமிகு பொடிகளைப்பூசி மகிழ்கிறாள் குழந்தை. இது பாவனை விளையாட்டு! முலைப்பாலையும் அருந்தச் செய்வதாக பாவனை செய்தபின், குழந்தையை உறங்கவைக்க அதனைத் தன் மடியிலிட்டு உறங்க வைக்கிறாள்.

            குழந்தையும் கண்ணயருகின்றது. எத்தனை நேரம் தான் தாயின் மடியிலேயே உறங்குவதாம்? தந்தை மலயத்துவச பாண்டியன், மகளுடைய பாவை விளையாட்டுக்காக, அழகானதொரு மணித்தொட்டிலைச் செய்து கொடுத்திருக்கிறான். குழந்தையின் உறக்கம் கலைந்து விடாமல், மெல்ல அதை மடியிலிருந்து எடுத்து பருத்த மாணிக்கக்கற்களை அழுத்திச்செய்த சிறிய அழகிய தொட்டிலில் இடுகின்றாள் குழந்தை மீனாட்சி. இந்த மெல்லிய அசைவினால் குழந்தையின் உறக்கம் சிறிது கலைந்து அது சிணுங்குகின்றது (இதுவும் பாவனையே!). உடனே மிகுந்த கனிவுடன், தாலாட்டைத் தொடர்ந்து இன்னும் சிறிது பாடியபடி, தொட்டிலையும் தன் கைகளால் மெல்ல அசைத்து ஆட்டுகின்றாள். பாவைக் குழந்தையை இவ்வாறு உறங்கப் பண்ணுகிறாள் இந்த தெய்வக் குழந்தை.

            “இவ்வாறு (உன் குழந்தையின்) தொட்டிலை ஆட்டுகின்ற கைத்தாமரை மலர்களைக் குவித்து மீனாட்சியம்மையே, சப்பாணி கொட்டி அருளுவாயாக; தமிழ் மொழி தோன்றிய நாள் முதலாகப் புகழுடன் விளங்கி வருவது பழமையான மதுரைநகர். அந்த மதுரையில் தானும் அத்தமிழுடன் தோன்றி வளர்ந்த கொடிபோன்ற பெண்ணே, சப்பாணி கொட்டியருளுவாயாக,’ என்று வேண்டுகிறார் புலவர்.

            ‘தாலாட்டி ஆட்டு கைத்தாமரை முகிழ்த்தம்மை

                   சப்பாணி கொட்டியருளே!

          தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்தகொடி

                   சப்பாணி கொட்டியருளே.’

            அற்புதமான சித்திரமாக விரிந்து இலங்கும் பாடல் இது.

உலகிற்கே அன்னையான அவளும் ஒரு தாய்!

அவளே குழந்தையாகித் தாயாக விளயாடுகின்றாள்.

            உலகமாந்தராகிய நாமெல்லாம் அவளுடைய பாவைகள். நம்மை வைத்து அவள் விளையாடும் விளையாட்டுகளே நம் வாழ்வில் நிகழும் இன்பதுன்பங்கள் என நயம்பட உரைக்கும் பாடல்.

பின்னூட்டமொன்றை இடுக