அடிமைத் திறனே அன்பாக – 4

அடிமைத்  திறனே அன்பாக – 4

முனைவர் கோ..முத்துக்குமாரசுவாமி

சுந்தரன் நட்பு

 செய்ய சேவடியின் சீற்றம்

புகழ்மிக்க வேளாண்குடியிற் பிறந்து திருமணம் வேண்டாது, கன்னிமாடத்திருந்து கொண்டு, திருவொற்றியூர்ப் பெருமானுக்குத் திருத்தொண்டு செய்து வாழ்ந்தவர் சங்கிலியார் என்னும் மாதரசி. (இவர் முன்னம் கயிலை நந்தவனத்தில் ஆலாலசுந்தரர் நந்தவனத்தில் கண்ணுற்றுக் காதலித்த மகளிர் இருவரில் மற்றொருவரான அனந்திதை)

thiyagarajar_thiruvarurதிருவொற்றியூரில் நம்பியாரூரர் இவரைத் திருவருளின்வழி கண்டு காதல்    வயப்படுகின்றார்; நடுநின்று இருவரையும் சேர்த்து வைக்க இறைவனை வேண்டுகின்றார்.

இறைவன் ஆரூரரின்பொருட்டுச் சங்கிலியாரிடம் பேச, ‘எம்பிரானே! நீ அருளிச் செய்தார்க்கு உரியேன் யான்; இமையோர் தம்பிரானே! தங்கள் அருளைத் தலைமேற்கொண்டேன்; மணம் பூண்டேன். பெருமானிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுளது ‘திருவாரூரின்கன் அல்லவா ஆரூரர் மகிழ்ந்துறைவது? என்றார். (ஆரூரர் என்று குறிப்பிட்டது, நாகரிகமாகப் பரவையாரை.)

இறைவனார் தோழமையினால் ஒரு விளையாட்டை விரும்பினார். “உனை இகந்து போகாமைக்கு ஒருசபதம் அவன் செய்வான்” என உறுதியளித்து விட்டு, நம்பியாரூரரிடம் ,” நீ அவளை மணந்து பிரியாமைக்கு ஒரு சபதம் அவள் முன்பு இவ்விரவே செய்க” என்றார்.

“அவளிடத்துச் சென்று சபதம் செய்துதான் இத்திருமணத்தை முடிக்க வேண்டும் என்பது தங்கள் கருத்தானால், மின்செய்த புரிசடையுடையீர்!, உம் அருள் பெறுதல் வேண்டும்” என்றார் நம்பியாரூரர்.

இறைவர் புன்முறுவலுடன், சபதம் செய்வதாகிய உன் செயலுக்கு இனி நாம் செய்வ வேண்டுவது என்ன?” என்றார்.

பிரியேன் எனச் சபதம் செய்தால் , நமராகிய இறைவரைப் பல தலங்கள்தோறும் சென்று தொழும் தம்முடைய கருத்துக்குத் தடையாக இருக்கும் என்னும் குறிப்பாலும், அதேசமயம் சங்கிலியார்பால் மனத்தைப் பறிகொடுத்த வேட்கையோடும் , நம்பியாரூரர் இறைவன்பால் தம் குறையைக் கூறி இரந்தார்.

“பெருமானே!, மங்கையவள்தனைப் பிரியாவகை சபதம் செய்வதனுக்கு, யான் அவளுடன்  திருக்கோயில் வந்தால் அப்போது, பெருமான் தங்குமிடம் திருக்கோயிலைவிட்டுத் திருமகிழமரத்தின்கீழ்க் கொள்ள வேண்டும்” என்றார்.

ஆரூரரின் கலக்கமும் துணிவும்

நம்பியாரூரரின் உள்ளம் சங்கிலியாரை மணம்புரிந்துகொள்வதில் வேட்கை கொண்டிருந்தாலும், அதைக்காட்டிலும் இறைவரைப் பலதலங்கள்தோறும் சென்று  சொன்மாலை சாத்தி வழிபடுதலிலேயே முனைப்புடன் இருந்தது. அதனால் சபதம் செய்ய மனம் துணிந்தது;

அதே சமயம் அச்சபதத்தைத் தன்னால் காத்தொழுக இயலாது என்றும் தெரிந்திருந்தது. இறைவர் சந்நிதியில் சபதம் செய்தால் அதைக் கொண்டு செலுத்தல் வேண்டுமேயன்றி வழுவுதல் ஒருகாலத்திலும் கூடாது. எனவே, ஆரூரர் ,இறைவனின் முன்னிலையைத் தவிர்க்கும் பொருட்டுத் தாம் சூழுரைக்கும்போது இறைவரைத் திருக்கோயிலிலிருந்து அகன்று நிற்கும்படி வேண்டிக் கொண்டார்.

இதனால், சபதம் செய்து அதைப் பிழைத்தலால் வரத்தக்க துயரங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க ஆரூரர் துணிந்திருந்த மனவுறுதியையும் உலகவாழ்வைக் காட்டிலும் இறைபணி செய்தலில் செய்தலிலேயே முனைப்பு இருந்தமையும் தெளிவாகும்.

தோழமை விளையாட்டு

தம்பிரான் தம் தோழருடன் விளையாட்டை விரும்பியோ அல்லது சங்கிலியாரின் இடையறாத வழியடிமைப் பெருமையை நினைந்தோ, சங்கிலியாரிடம் மறுமுறையும் கனவினில் எழுந்தருளி,” நங்காய்! நம்பியாரூரன் உன்னிடம் சபதம் செய்ய வருவான். அப்பொழுது நீ திருக்கோயிலில் நம்முன் சபதம் செய்தற்கு இசையாது , அவனது சபதத்தை மகிழ மரத்தின் கீழ்க் கொள்க” என்று உரைத்தருளினார்.

சங்கிலியார் தம் தோழியரிடம் மருட்கையும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வினராய் இச்செய்தியைத் தெரிவித்தார்.

மறுநாள் திருக்கோவிலுக்குச் சங்கிலியார் வருவதற்கு முன்னமேயே ஆரூரர் அங்கு வந்திருந்தார். சங்கிலியாரைக் கண்ணுற்றவுடனே, சபதம் செய்ய அழைத்தார்.

தோழிமார், “எம்பெருமான்! இதற்காக எழுந்தருளி, இமையவர்கள் தம்பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது” என்ன, வன்றொண்டர், “கொம்பனையீர்! யான் சபதம் செய்வது எங்கு?” என்றார்.

அதற்கு அவர்கள் மகிழின்கீழ் என்றனர். மறுத்தால் அலராகும் என்றஞ்சிய வன்றொண்டர் , மகிழ மரத்தை மும்முறை வலம் வந்து , “யான் அகலேன்” என்று சூளுரைத்தார்.

இறைவன் ஆணையால், அடியவர்கள் திருமணத்தை முடித்து வைத்தனர். ஆரூரர் சங்கிலியாருடன் பேரின்பம் இனிது நுகர்ந்து திருவொற்றியூரரை நாளும் தொழுதிருந்தார்.

 திருவாரூர் வசந்த விழா பற்றிய நினைவு

இப்படியொழுகும் நாளில், திருவொற்றியூரில், ‘பொங்குதமிழ்ப் பூஞ்சந்தனத்தின் கொங்கணைந்து குளிர்சாரலிடை வளர்ந்த கொழுந்தென்றல்’ அணைந்தது.

கொழுந்தென்றலின் வருகை ஆரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவில் தம்பிரான் திருவோலக்கம் கொள்ளும் காட்சி நினைவுக்குக் கொண்டு வந்தது; அதுவே அவருக்கு ஏக்கமாயிற்று.  அவ்வசந்தவிழாவில் பரவை நாச்சியாருடைய பாடல் ஆடல்களைச் சிந்தனை மாத்திரத்தானே யன்றிக் கண்ணாலும் கண்டாற் போலாயினார்.

திருவாரூர்த் தியாகேசப் பெருமானைப் பிரிந்திருக்கும் வருத்தம் “எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே” என ஏசறவால் மனமழிந்து இரங்கச் செய்தது; தான் செய்யும் குற்றங்களுக்கெல்லாம் உடன்பட்டுத் துணை நிற்கும் தோழனுமாய், பரவையார் சங்கிலியார்  ஆகியோருடன் கூட்டுவித்த பான்மையை நினைவு கூரச் செய்தது. திருவாரூர்ச் சிவனடியே விரும்பித் திருவொற்றியூரை அகன்று திருவாரூருக்குச் செல்ல ஆரூரர் ஒருப்பட்டார்.

சங்கிலியாருக்குச் செய்து கொடுத்த சபதத்தைப் பிழைத்தார்.

ஆலாலசுந்தரர், மண்ணுலகில் வந்து பிறக்குமுன் இறைவனின் முன்னிலையை விட்டுத் தாம் நீங்கும் நிலைமையைச் “செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்” என்றார். இறைவனின் திருவடியை செம்மையான திருவடி என்றார். செம்மை- நடுநிலைமை. அந்த நடுநிலையான செம்மை கடுமையான இறைமைக் குணம். அது ‘வேண்டுதல் வேண்டாமை யற்றது’. இதனை விளக்கும் கதைகள் பல தலபுராணங்களில் காணக் கிடைக்கின்றன.

தம்முடைய தேவியேயாயினும், விளையாட்டாகத் தம்முடைய இருவிழிகளைப் பொத்திப் பிரபஞ்சத்தை இருளில் புதைத்துத் துன்புறுத்தியதற்குக் கழுவாயாக மண்ணில் பிறக்கச் செய்து தவமியற்றச் செய்தது ,அந்த ஒருபாற் கோடாத இறைமை. (காஞ்சிப் புராணம்)

இறைவன் தன்னை நம்பியாரூரர் ஏசின இகழ்ந்தன அனைத்தையும் தோழமை உணர்வோடு யாவுங் கிழமை கீழ்ந்திடா நட்புடன் (குறள் 901) பொறுத்துக் கொண்டான்.  ஆனால், தன்னடியவராகிய சங்கிலியாரை மணந்துகொள்ளுமுன் அவரைப் பிரியேன் என்று கூறிய சூளுரையைப் பிழைத்துத் திருவாரூருக்குச் செல்ல விரும்பித் திருவொற்றியூரை நீங்கியவுடன் அந்த செய்ய சேவடி ஆருரரின் கண்ணிரண்டையும் பறித்துக் கொண்டது; உடலில் நோயையும் அளித்துத் துன்புறுத்தியது.

தன் அடியவருக்கு ஆண்டவன் அளிக்கும் தண்டனை சற்றுக் கடுமையாகத் தானிருக்கும்.

திருவொற்றியூர் எல்லையை நீங்கியவுடன் இருகண் பார்வையையும் நம்பியாரூரர் இழந்தார். பார்வையை இழந்த நம்பியாரூரரின் பாடல்கள் நெஞ்சைப் பிழிவன; கண்ணீரைப் பெருகுவிவிப்பன.

ஒற்றியூர் எனும் பெயருடைய ஊரில் எழுந்தருளியிருப்பவனே! ஆசாரசீலனே! (தூய உடம்பினனாய் அன்றி மல) மாசுடைய உடம்புகொண்டே உன் திருவடியை அடைவேனாயினேன். அந்த உடம்புக்கு உரிய குறைகளோடே என்னை நீ ஆட்கொள்ள வேண்டும்.

பாலை விரும்புவோர் பிழுக்கையை வாரி நீக்கி விட்டுப் பாலை மட்டும் கொள்வர். அதுபோன்று என்பால் நீ கண்ட குற்றங்களை நீக்கி உயிர்களிடத்து நீ விரும்பும்குணம் என்னிடமும் இருப்பதை நோக்கி எனக்கு நீ அருளல் வேண்டும்.

யான் எப்பிழை செய்தாலும் உன் திருவடிக்குப் பிழை செய்யேன்.(திருவடியை மறவேன்). வழுக்கி விழும்பொழுதிலும் உன் திருப்பெயரைச் சொல்லுதலன்றி வேறறியேன்.”    பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள்; அதுபோல் என் பிழையை நீக்கி என்னை ஆட்கொள்ள வேண்டும்.( பிழுக்கைஆட்டின் சாணம். அது சிறுசிறு துண்டாகவும் கெட்டியாகவும் நீரில் எளிதில் கரைந்துவிடாதபடி இருக்கும். ஆட்டின் பின்புறமாக இருந்துதான் அதன் பாலைக் கறப்பர். பால் கறக்கும் சமயங்களில் ஆடு பிழுக்கை போட்டு அது பாலில் விழுந்துவிடுவதும் உண்டு. ஆட்டுப்பாலின் பயனை அறிந்தவர்கள், அதில் விழுந்து விட்ட பிழுக்கையை எடுத்து நீக்கிவிட்டுப் பாலை மட்டுமே கொள்வர்)

அடியனேன் பிறக்கும்போதே உனக்கு அடிமையாகப் பிறந்தேன்.(இதைக் கர்ப்ப தாஸத்துவம் என்பர்) நான் இப்பொழுது படுந் துன்பமெல்லாம் என் காதற் சங்கிலி காரணமாக நீ அளித்தனவே யாகும். சங்கிலி காரணமாக நான் பிழை செய்தாலும், உன் திருவடிக் கடிமை செய்வதில் பிழையேன் நீ எனக்குச் செய்வன அனைத்திற்கும் இசைந்தேன்.”

ஒற்றியூர் எனும் ஊரில் எழுந்தருளியிருப்பவனே! நான் நன்னெறியில் செல்லவே தலைப்படுகின்றேன். யான் ஒருபோதும் உனக்குச் சமமான பெருமையுடையனாக,’ உன்னைப்போல என்னைப் பாவிக்கமாட்டேன். அவ்வாறிருக்க, நீ, என் கண்ணைப் பறித்துக் கொண்டாய். வழிதெரியாது சுழியில் உள்ள நீர்போலச் சுழலுகின்றேன். உள்ளமும் ஒருவழிப்படாது சுழலுகின்றது. கழியிற் பொருந்திய நாய்போல ஒருவன் தரும் கோலினைப் பற்றிக் கொண்டு அவனால்கறகறஎன்று இழுக்கப் படுதலை நீக்கி, நீ ,உனது திருவருளை எனக்கு அளிப்பாயாக!”

 “ஒற்றியூருறைவானே! உன் கருணையை யான் பெற்றிருந்தும், பெறாதவனைப் போலத் துன்புறுகின்றேன். இன்னது செய்தால் இன்னது விளையும் என்று அறியாமல்  நீ எனை முற்றும் வெறுத்திடக் கடவதாகிய (சூள் பிழைத்தல்)பிழையச் செய்துவிட்டேன். ஆயினும் மற்றுத் தேவரை நினையேன்; உனை மறவேன்

என்று கழிவிரக்கத்தோடு பாடிய திருப்பாடல்கள் உள்ளத்தை உருக்குவன.

ஊன்றுகோல் பெறல்

சுந்தரர் திருவொற்றியூரிலிருந்து வடதிருமுல்லைவாயில் வணங்கி, திருவெண்பாக்கம் எனும் தலத்தை அன்பரோடு அடைகின்றார். திருக்கோவிலை வலம் வந்து, வணங்கி,

பெருமானாகிய நீர் பொறுத்துக் கொள்வீர் என நம்பி, அடியனாகிய யான் ஒரு பிழை செய்ய, அதனை நீர் பொறாததனால் உமக்கு வரும் பழியைச் சிறிதும் கருதாதே, நீர் என்னுடைய கண்ணைப் படலத்தால் மறைப்பித்தீர். நீர் இப்பொழுது திருக்கோவிலில் இருக்கின்றீரோ

என்று வினவ இறைவன் திருக்கோவிலினுள் இருந்து அயலார்போல உளோம் போகீர்” என்றானாம்.

திருவெண்பாக்கத்தில் அருளிய பிழையுளன பொறுத்திடுவர் எனத் தொடங்கும் திருப்பதிகம் முழுவதும், இறைவன் தனக்கு இங்கு அடியனாகிய தன்னை நடத்திய முறையை அடியவர் பலரிடத்தும் முறையிடுவது போலப் பாடுதலினால், தெய்வச்சேக்கிழார், இத்திருப்பதிகத்தை, “முன்னின்று முறைப்பாடு போல்மொழிந்த மொழிமாலைஎன்று கூறியருளினார்.

ஒன்பதாவது திருப்பாடலைப் பாடியவுடன், இறைவன் ‘ஒன்னலரைக் கண்டாற்போல’,  (ஒன்னலர்- வேண்டாதவர், பகைவர்)   திருக்கோவிலின் உள்ளிருந்து கொண்டே  ஊன்றுகோலொன்றினை வீசிவிட்டு, “உளோம் போகீர் என்றானாம்.

——– உலகமெலாம்

ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன

ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே

எனச் சுந்தரர் அடியவரிடம் இறைவனைப் பற்றிய முறையீடு செய்தருளிய திருப்பாடல் உள்ளமுருக்கும்.

இடக்கண் பெறுதல்

சுந்தரர் காஞ்சிபுரம் வருகின்றார். கருணைவிழியாள் காமாட்சித்தாய், அடியவனின் துயரத்தைக் காணச் சகியாது, தன் பாகமாகிய இடது விழியை அளிக்கின்றாள். கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே எனச் சுந்தரர் ஏகாம்பரரைப் பாடித் துதித்தார்.

திருவாரூரில் வலது கண்ணும் பெறுதல்

திருவாரூர்ப் பூங்கோயிலை வணங்கி, ஆரூர் மூலட்டானம் சேர் பிஞ்ஞகனைக் கண்ணாரக் கண்டு  வணங்குதற்கு, “ஆழ்ந்த துயர்க்கடலிலிருந்து அடியேனை எடுத்தருளி, மற்றைக் கண்ணும் தாரும்” என இறைஞ்சிய திருப்பதிகம், நெஞ்சினை நைவித்துக் கண்ணில் நீரைப் பெருகுவிக்கும் சோக உணர்வு மிக்கதாகும்.

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பிரானிரே!, உம்மையன்றிப் பிறர் யாரையும் வேண்டாமல், உமக்கே என்றும் மீளா அடிமை செய்கின்றவர்களாகிய அந்தநிலையில் பிழையாத அடியவர்கள் (தங்கள் துன்பத்தை வெளியிட விரும்பாமல்) மனத்துக் குள்ளேயே வெதும்பி, தங்கள் முகவாட்டத்தால் துயரைப் பிறர் அறிந்துகொள்ளும்படி இருந்து, பின்னர், அத்துயரைத் தாங்கிக்கொள்ள இயலாமல், உம்பால் வந்து சொல்வார்களாயின், நீர் அதனைக் கேட்டும் கேளாதவர்போல் வாளாயிருப்பீர்!. இதுவே உம்முடைய இயல்பாயின் , நீர் நன்கு வாழ்ந்துபோம்” (அடியவர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நாம் நன்றாக இருந்தால் போதும் என்பது உம்முடைய நினைப்பாயின், உம்முடைய நினைவின்படியே நீர் நன்றாக வாழ்ந்துபோம்!!)”

 விரும்பி உமக்கு ஆட்பட்ட நான் ஒற்றி வைக்கப்பட்டவன் அல்லேன். என்னைப் பிறருக்கு விற்கவும் நீர் உரிமையுடையீர். இப்படி என்மேல் நீர் உரிமையுடையராக இருக்கவும் ஏன் நீர் என் கண்களைப் பறித்துக் குருடனாக்கினீர்? எக்குற்றமும் உமக்கு இழைக்காத என்னைக் கொத்தையாக்கிய நீரே பழியுடையவராயினீர். என்னுடைய மற்றைய கண்ணையும் தர உமக்குச் சம்மதம் இல்லையாயின் நீர் வாழ்ந்துபோம்

திருவாரூர்ப் பெருமானே! கன்றுகள் மடியை முட்டிமுட்டிக் குடிக்கப் பால் சுரக்கின்ற பசுக்களைப் போல, அடியார்கள் நாள்தோறும் உம்மைப் பாடிப்பாடிப் பயன்பெறுவர். அப்படிப் பாடிய பின்னும் அவர்கள் பயனைப் பெறாது, கண் குருடாய்க் குன்றின்மேல் முட்டிக் குழியில்  வீழ்ந்து வருந்தும் நிலையில் வைப்பது உம் கருத்தாயின், நீர் நன்றாக வாழ்ந்து போம்

திருவாரூரிரே! முதலில் (கயிலையில் அணுக்கத் தொண்டராக) உம்மை மறவாத மனத்தைக் கொடுத்தீர். பின் மாயம் செய்து இந்த உடம்பை எடுக்கும்படி செய்தீர். இப்பொழுது என்னுடைய கண்ணையும் பறித்துக் கொண்டீர். உமக்கு ஆட்பட்டோருக்கு நீர் செய்யும் நன்மை இதுவேயாயின், நீர் நன்கு வாழ்ந்துபோம்

அடிகளே! அடியவராகிய நாங்கள் இழிவில்லாத நல்ல குலத்திலே வந்து பிறந்தோம். அதற்கேற்ப எல்லாமாகிக் கலந்து நிற்கின்ற உம் பரத்துவத்தை நல்லசொற்களால் பாடி ஏத்துவோம். உம்மை பாடிப் பரவும் அடியோமாகிய யாம் வழி காணாது அலமருதல்தான் உம்முடைய விருப்பமாயின் நீர் நன்கு வாழ்ந்து போம்

பெருமானே! உம்மைத் தவிரப் பிறரெல்லாம் பேயோடும் பழகியபின் பிரியின் அப்பிரிவு துன்பந் தருவதே என்று சொல்லுவார்கள்; அதனல் பழகியபின் பிரிவதற்கு மனஞ் சம்மதியார். ஆனால், நீரோ, உம் திருமுன் நாய்போலத் திரிந்து முறையிட்டாலும் வாய் மூடியிருக்கின்றீர். உம்முடைய தோழமையின் பண்பு இதுவேயேயின் நீர் நன்கு வாழ்ந்துபோம்

என்று முறையிட்ட சுந்தரர்,

இறுதியாக,

ஆரூர் மூலட்டானத்தில், கருணையே வடிவாகிய உமையம்மையின் பாகத்தைக் கொண்டவரே! இப்பாருலகறிய, நீர், உமது திருவடிப் பெயராகிய ஆரூரன் என்ற பெயரைப் பெற்ற நம்பியாரூரனாகிய என்னுடைய கண்ணைப் பறித்துக் கொண்டீர். இக்கொடுஞ் செயலான் நீரே பழிபட்டீர். இனி, நீர் இனிது வாழ்ந்து போதிர்

என்று கூறிய ஆற்றாமை நிறந்த கடுஞ்சொல்லைக் கேட்ட பெருமான், அன்பனது துயரஞ் சகியாது மற்றையதாகிய வலது  கண்ணின் பார்வையையும் திரும்பத் தந்தான்.

****************

பின்னூட்டமொன்றை இடுக