சங்ககாலத்தில் போரும் அமைதியும் பாகம் – 4

 முனைவர் ஜ. பிரேமலதா

 

மன்னர்களில் இருவகை:

“ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியிடை யீரும் பேணித்

தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறா அ தீரும்

அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்”

– (புறம்: 9 – வரி 1-6)

பசுவும் பசுவின் இயல்பை ஒத்த பார்ப்பனரும், பெண்டிரும், நோயுற்றவரும், இறந்து தென்திசை வாழும் முன்னோர்க்குச் செய்யும் சடங்குகளைச் செய்வதற்குப் புதல்வர்களைப் பெறாதவரும் கேட்பீராக; யாம் எம் அம்புகளை விரைவு பட செலுத்திப் போரிட உள்ளோம். நீவிர் யாவரும் பாதுகாப்பான இடத்தை அடையுங்கள், என அறநெறியைக் கூறும் மன உறுதியை உடையவன் எம் வேந்தன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் போர் வீரன் ஒருவன் தன் மன்ன்னின் அறவழிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதாக இப்பாடல் உள்ளது. இவ்வாறு இந்த வீரன் குறிப்பிடவேண்டிய தேவை என்ன? அறவழிப்பட மன்னர்களிலிருந்து, அறவழிப்படாத மன்னர்களை மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவா? அறவழிப்படாத மன்னர்கள் இருந்தார்களா? ஆம். மறுபுறம் நாடு பிடிக்கும் ஆசை காரணமான சில மன்னர்கள், வளமான நாடுகளின் மீது மன்னர்கள் போர் தொடுத்து மக்களின் வாழ்வாதாரங்களைக் குலைத்துக் கொண்டிருந்தனர்.

இதனால்,வளமான ஏழடுக்கு மாளிகை, பருவத்திற்கு ஒன்றாக குடியிருக்க கட்டிய மாளிகை போன்றவற்றில் செல்வமிகு மன்னர்கள்,, மன்னரைச் சார்ந்து வாழ்ந்த அதிகார மையத்திற்குட்பட்டவர்கள் வாழ்ந்தார்கள். அதேகாலத்தில்தான் சுரைக்கொடி படர்ந்த குடிசைகளில் பசியால் கதறும் பச்சிளம் குழந்தைகளுக்கு முலைப்பாலுக்கு பதிலாக உதிரம் ஒழுகும் அளவு வறுமை பீடித்தவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவேறு நிலைகளையும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

பசியால் ஒருபுறம் குழந்தைகள்  மறுபுறம அறுவடைக்கு நின்ற நெற்பயிர்களெல்லாம் அறுவடை செய்வாரின்றி வாடி நின்றன. உழவர் உழவுத்தொழில் செய்யாது நீங்கினர். வெற்றி பெற்ற மன்னர்கள் பகைவர் நாட்டில் புகுந்து மக்கள் வாழும் மனைகளைப் பாழாக்குவதும், விளைந்த வயலைக் கைப்பற்றி எறியூட்டுவதும், கொள்ளையடிப்பதும் நிகழ்த்தினர்.  கழுதைகளை பூட்டி வயலில் உழச் செய்து விளை நிலங்களை பாழாக்கினர் (புறம்-15) என்று புறநானூறு பதிவு செய்துள்ளது.

தோற்றோடிய மன்னனின் நாட்டில் மக்களின் விளைநிலங்களை பகைவீரர்கள் பாழாக்கியதால், உழவர்கள் உழவுத் தொழில் செய்யாது நீங்கினர். பகைவீரர்கள் அறுவடைக்குக் காத்திருக்கும் விளைந்த வயலைக் கைப்பற்றி எறியூட்டினர். சேகரித்து வைத்திருக்கும் பொருட்களைக் கொள்ளையடித்தனர். மக்கள்  பயன்படுத்தும் நன்னீர் நிலைகளையெல்லாம் யானைகளை விட்டு அழித்தனர்.(புறம் -16) வீடுகளையெல்லாம் எறியூட்டினர்.

எறியூட்டப்பட்ட மனைகளிலிருந்து தீயின் ஒளி எங்கும் பெருகியது. புறம்(7) கழுதைகளை பூட்டி வயலில் உழச் செய்து விளை நிலங்களை பாழாக்கினர். (புறம்-15) மக்கள் வாழ முடியாதபடி, பகைவர் நாட்டை முற்றிலும் பாழாக்கிய நிகழ்ச்சிகளை இப்படிப் பல பாடல்கள் சுட்டுகின்றன வெற்றி பெற்ற மன்னர்கள் பொற்குவளைகளில் நீர் அருந்தினர். அவருடைய மகளிர்  பொன் அணியால் பறவை விரட்டினர்.  தோல்வியடைந்த மன்னர்களின் நாட்டிலோ இயல்பான வாழ்க்கயை இழந்து  மக்கள்  கொடிய வறுமையில் உழன்றும் கஞ்சிகூட குடிப்பதற்கில்லாமலும் வாழ்ந்தனர். ஒரு பக்கம் பசியினால் உண்ணப்பட்ட ஏழை மக்கள். மறுபுறம் பசியென்பதையே அறியாத பெருஞ்செல்வர்கள்.

போருக்குப் பின்னரும் வாழிடம் தேடி அலையும் மக்கள் படும் துன்பங்களைப் பல பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன.

.“”கடும்பின் கடும்பசி தீர””

(புறம்-163)

கடும்பசி கலக்கிய இடும்பை (புறம்-230) போன்ற பாடல்கள் பசிக்கொடுமையைப் பற்றிக் கூறுவதால் தொடர்ந்த போர்களால் மக்கள் நிலையற்ற வாழ்க்கையில் கடும்பசிக்கு ஆளான நிலையினை அறியலாம். இதனால் போர்கள் நிகழாவண்ணம் தடுக்கப் பல வகைககளிலும் புலவர்கள் பாடுபட்டுள்ளனர்.

poor_indian2சுரைக் கொடி படர்ந்துள்ள ஏழைகளின் குடிசைகளில் பசியால் வாடி கதறும் குழந்தைகளைப் பல பாடல்கள் காட்டுகின்றன.வற்றிய முலையிலிருந்து முலைப் பாலுக்குப் பதில் இரத்தம் ஒழுகும் அளவிற்கு வறுமையால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கண்ணிலும் இரத்தம் ஒழுக வாழ்ந்திருந்தார்கள் என்ப்தயும் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

சாதாரண கீழ்நிலை மக்கள் வறுமையில் வாடியமை குறித்தும் புறம்(68,139,159,164,196, 210, 211, 266, 375, 376, 378) உணவு சமைத்தலை மறந்த உயர்ந்து ஓங்கிய அடுப்பில் காளான் பூத்துள்ளது; பசியால் வருந்திப் பாலின்மையால் தோல்போன்றுள்ள துளை தூர்ந்த வறிய முலையை சுவைக்குந்தோறும் பால் காணாமல் குழந்தை அழுகின்றது; அக்குழந்தையின் முகத்தைப் பார்த்து நீர் நிரம்பிய கண்ணோடு என் மனைவி வருந்துவாள்; என் மனைவியின் வருத்தத்தைப் பார்த்து, இத்துன்பம் தீர்த்தற்குரியவன் நீயென நினைந்து நின்னிடத்து வந்தேன்; என்று புலவர்கள் வள்ளலிடம் தனது வறுமைநிலையை உரைக்கும் பாடல்கள் வறுமையின் உச்சத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த வறுமை எப்படி ஏற்பட்டது? தாயினால் கைவிடப்பட்ட உண்ணாத குழந்தையைப் போலிருந்த நாட்டில் என்ற பாடல்வரிகள்  நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னன் தோற்றோடிவிட்ட நிலையில் நாட்டின் நிலையையும், நாட்டு மக்களின் நிலையையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

“”ஈன்றோள் நீத்த குழவிபோல”

– புறம்230

“”மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப

இருங்கண் குழிலி கவிழ்ந்து இழுது மறப்ப””

– புறம்-65

புலவர்கள் வெற்றி பெற்ற மன்னர்களைப் பாராட்டும் அடிப்படையில் பல செய்திகளைக் கூறிச் சென்றாலும், போரின் அவலங்களையும் இதனால் மக்கள் படும் துயரங்களையும் மறைமுகமாகச் சுட்டுகின்றனர்.

நோக்கு நுலைகல்லா நுண்மைய

பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை

நெய்யும் அளவிற்கு…

மீன் வலை காய்ந்த நிழலைப்போல மெல்லிய ஆடை மற்றும் மோதிரத்தில் மடித்துவைத்துவிடக்கூடிய பட்டாடை என பல நுட்பமான ஆடைவடிவமைப்பு சிறப்புமைகள் இருந்தபோதிலும் சங்ககாலத்து பெருநர்ஆற்றுப்படையில் புலவர் தம் ஆடைகுறித்துக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

 ஈரும் பேனும் கூடிக்குலாவி குடியிருக்கும்  உடை வேர்வையில் நனைந்து நாற்றமடிக்கிறது.   என் உடை வேறு நூல்கள் நுழைந்திருக்கிற தையல் போட்ட கிழிந்த கந்தை என்பதை,

ஈரும் பேனும் இருந்து இறைகூடி

வேரொடு நனைந்து வெற்றிழை நுழைந்த

துன்னல் சிதார

(பொரு 80-82)

என்று ஒடுக்கப்பட்ட வாழ்வின் வறுமை படம்பிடிக்கப்படுகிறது. எனவேதான் “சங்க காலத்தைப் பொற்காலம் என்பதா? வறுமையை உண்டாக்கிவிட்டு, அதே வறுமையை நீக்குவது போல நடவடிக்கை மேற்கொண்ட முதலாளித்துவ தர்பார்கள் என்பதா என்று கேட்கிறார் ந.வேலுச்சாமி்

மக்களும் இருவகை

வெற்றி பெற்ற மன்னரைச் சார்ந்த பொற்குவளையில் நீர் அருந்தியோரும் பொன் அணியால் பறவை விரட்டியோரும் இருந்த சமூகத்தில்தான், தோற்றோடிய மன்ன்னின் நாட்டில் கொடிய வறுமையில் உழன்றோரும் கஞ்சி குடிப்பதற்கில்லாரும் வாழ்ந்தனர். ஒரு பக்கம் அடுபசி உழந்த இரும்பேர் ஒக்கல். இன்னொரு பக்கம் தொல்பசி அறியா துலங்கா இருக்கை.  புறநானூறு மன்னர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும், ஏழையர் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும் இவ்வாறு கூறுகிறது.

வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்

விரவுமணி யொளிர் வரும் அரவு றாழாரமொடு

புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்

 (புறம் – 398)

மலை போன்ற தோள்களில், விலை மதிப்புடைய பல மணி கோர்க்கப்பட்ட பாம்பு போன்று வளைந்திருக்கும் ஆரத்தை பூ வேலைப்பாடுடைய கலிங்கம் என்ற ஆடையை மன்னன் அணிந்திருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

செல்வ மகளிர் பல வகை மணிக்கள் கோத்த பொன் வடங்கள், பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு, மேகலை பொன் வளையல் போன்றவற்றை அணிந்திருந்ததாக காரிக் கண்ணனார் (புறம்.253) குறிப்பிடுகிறார். செல்வ மகளிர் ‘மாணிழை மகளிர்’, ‘வாலிழை மகளிர்’ என அணிந்திருக்கும் அணிகலன்களை முன்னிறுத்திக் கூறப்பட்டுள்ளனர். பெரும்பாணாற்றுப்படையும் (327-335) பல்வகை மகளிர் அணிகலன்களைப் பற்றிக் கூறுகிறது.

ஆனால் ஏழைப் பெண்களோ, பொன், வெள்ளி, இரும்பு அணிகலன்கள் அணியும் வாய்ப்பற்ற வறுமை நிலையில் வாடினர். எனவே வயலில் களையாகப் பறித்துப் போடப்பட்டிருந்த குவளை, ஆம்பல் ஆகியவற்றின் தண்டகளைக் கொண்டு வளையல் செய்து அணிந்து கொண்டனர்.

இதை,

‘கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’

எனப் புறநானூறு (352) கூறுகிறது. பவள வளையல் கிடைக்காத இவர்கள் களையாக தூக்கி எறியப்பட்ட தண்டுகளை அணிந்த காட்சியை,

‘பவள வளை செறிந்தாட் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளை பசுந்தண்டு கொண்டு’

பரிபாடல் பரிவோடு பதிவு செய்துள்ளது. ஏழை ஆண்கள் இலை., தழைகளாலும் பூக்களாலும் மடலை, கண்ணி செய்து அணிந்து கொண்டதை,

‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்’

‘பாசிலை தொடுத்த உவைலக் கண்ணியன்’

(புறம்.54)

‘கோட்டவும் கொடியவும் விரை இக்காட்ட

பல்பூமி டைந்த படலைக் கண்ணியன்’

(பெரும்.173)

போன்ற சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

செல்வம் மன்னர்களிடத்தும் மன்னர்களைச் சார்ந்தவர்களிடத்தும் மட்டுமே குவிந்து கிடந்த சூழல் சங்ககாலத்தில் நிலவியதற்கு இவையே சான்று. மக்களின் நாடி பிடித்துச் சொல்பவர்கள் புலவர்கள் என்பதாலேதான் மன்னர்கள் புலவர்களை தங்க நெருங்கவிட்டார்களோ என்னவோ\ல் எதற்கும் அஞ்சாமல் புலவர்களைத் திருப்பியனுப்பிய மன்னர்களையும் காண்கிறோம்.

பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன் பரிசு கொடாமல் காலம் நீட்டித்த வழி ஆவுர்மூலங்கிழார்,

“ஒல்லுவது ஒல்லும் என்றலும்,யாவர்க்கும்“

(புறம் 196)

என்ற பாடல் வழி தன் வறுமை நிலையை எடுத்துரைத்து, தன்னால் கொடுக்க முடியாததை கொடுப்பேன் என்றலும், கொடுக்க முடிந்ததை கொடுக்க மறுப்பதும் ஆகிய இரண்டும் இரப்பவர்களை வாட்டமுறச் செய்யும். அத்தோடு ஈவோரின் புகழையும் குறைவுபடச் செய்யும். இப்போது நீ எனக்குச் செய்ததும் அத்தகையதே.  என் மனைவி மக்கள் வறுமையின் மிகுதியால் கல் போல உணர்ச்சியிழந்து இறுகிக் கிடந்தாலும், நீ எனக்குச் செய்த தீங்கினால், நின் பிள்ளைகள் நோயின்றி இருப்பாராக. நின் வாழ்வில் நலம் உண்டாகுக. நின் பிள்ளைகள் நோயின்றி இருப்பாராக. நின் வாழ்நாள் சிறந்து வாழ்வதாக‘ என்று வாழ்த்துகிறார். வஞ்சப் புகழ்ச்சியணி என்று எடுத்துக் கொண்டாலும், புலவர் தைரியமாக மன்னரை எதிர்த்து கடுஞ் சொற்களை இங்கு கூறுவதில்லை. கூறமுடியாது என்பது தான் உண்மை நிலை.

ஒளவையார், அதியமான் நெடுமானஞ்சி தமக்குப் பரிசில் தர ஒருசமயம் காலம் தாழ்த்தியபோது அவர் கூறிய சொற்கள் இவை.

“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”

 –(புறம். 206.)

ஆனால் அவரே தன்னிலையிலிருந்து இறங்கி, அதியமான்,

“பரிசில் பெறூஉம் காலம்நீட்டினும் நீட்டாது ஆயினும், களிறு தன்கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத்தது அது பொய்யாகாதே”

– (புறம்.101. )

என்று கூறுகிறார். பசித்துன்பம் இப்படியெல்லாம் இவர்களைப் பாட வைத்துள்ளது. இப்புலவர்கள்தான் ஒருவகையில் மன்னர்களுக்கு நெருக்கமானவர்கள். மன்னர்களுக்கே அறிவுரை கூறக் கூடியவர்கள், துணிந்து நிற்பவர்கள் என்றெல்லாம் போற்றப்பட்ட புலவர்களின் கையற்ற நிலையையே பல பாடல்கள் சுட்டுகின்றன. ஔவை போன்ற புகழ் பெற்ற மன்னர்கள் விரும்புகின்ற புலமை பெற்ற புலவர்களின் நிலையே இவ்வாறிருந்ததெனில், குடும்பம்,குழந்தைகள் என உள்ள எளிய புலவர்களின் வறுமைத்துன்பம் சொல்லற்கரியது. ஔவையார் பொறுத்திருந்தாவது பரிசில் பெற்றார்(?). அதியமானின் இயல்பு அவருக்குத் தெரியும். எனவே உரிமையோடு கோபித்துக் கொண்டார். பின்னர், நட்பினால் சமாதானமாகி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் பிற புலவர்களால் ஆற்றுப்பட்டுத்தப்பட்டு, முன்பின் தெரியாத, மன்ன்னை நாடிச் செல்பவர்களின் நிலை என்ன? பெருந்தலைச் சாத்தனார் நிலையைப் பாருங்கள்.

மூவன் என்ற மருத நில குறுநில மன்ன்னை நாடி பெருந்தலைச் சாத்தனார் செல்கிறார். ஆனால் மூவன், பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசளிக்காமல் காலம் தாழ்த்தினான். அவனிடமிருந்து பரிசு பெறலாம் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தனார், மூவன் தன்னை இகழந்ததாகக் கருதினார். “மலையிலிருந்த மரம் ஒன்று பழுத்த பழங்கள் உடையது என்று எண்ணிப் பறவைகள் அந்த மரத்தை நாடிச் செல்கின்றன. ஆனால், பருவகாலம் மாறிவிட்டது. அம்மரத்தில் பழங்கள் இல்லை. வேறு வழியில்லாமல் பறவைகள் பழங்கள் இல்லாமல் திரும்பிவிட்டன. அப்பறவைகளைப்போல், நான் உன்னை நாடி வந்தேன்; நான் இப்பொழுது வெறுங்கையோடு செல்லவேண்டிய நிலையில் உள்ளேன். நீ எனக்குப் பரிசு அளிக்காவிட்டால், நான் அது குறித்து வருந்த மாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வதையே என்றும் விரும்புகிறேன். ஆனால், நான் பரிசு இல்லாமல் திரும்பிச் செல்வது நமக்குள் இருக்கட்டும்.” என்று கூறிப் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமலேயே தன்மானத்தோடு வெளியேறுகிறார்..வேட்டைச் சமூக நிலையிலிருந்து, முல்லை நில விளைச்சலுக்கு மாறி, மருதநில சமூக வாழ்க்கையில் மக்கள் இரண்டு வர்க்கங்களாக பிளவுபட்டு நிற்பதையும், வேட்டைச் சமூகத்தில் இருந்த விடுதலைஉணர்வும், எப்போதாவது கிடைத்த உணவும் கூட முற்றிலும் பறி போய் கையேந்தும் அவல நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டதையும் பாடல்கள் பதிவு செய்துள்ளன.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்

கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்

அகல் அடை அரியல் மாந்தித் தெண்கடல்

படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்

மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!

பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து

பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்

பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்

பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்

நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலேன்

வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!

ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்;

நோயிலை ஆகுமதி; பெரும, நம்முள்

குறுநணி காண்குவ தாக; நாளும்

நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்

தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்

பெருவரை அன்ன மார்பின்

செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே.

(புறம்-151)

வறுமை நிலை துரத்த, பாணர்கள் கொடிய சுரங்களைக் கடந்து உணவைத் தேடிச் சென்றுள்ளனர். இப்பாடல் சுறும் அவலத்தை  அறிந்தால் அவர்களின் வறுமை நிலை புலப்படும். சிறுபாணாற்றுப்படையில் ஒரு பாண் மகளின் நிலை குறித்த பதிவு உள்ளது.

புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்

காழ்சோர் முது சுவர்க் கனச்சிதலரித்த

பூமிபூத்த புழற் காளமாம்பி

ஓல்கு பசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்

வளக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க்குறைந்த

குப்பை வேளை உப்பிலி வெந்ததை

மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து,

சில நாட்களுக்கு முன்புதான் குட்டிபோட்ட நாய், தன் குட்டியை மெல்லிய குரலில் அழைக்கும் அளவுக்குப் புன்மை உடைய வீடு அப்பாணன் வீடு. அவர் வீட்டுக் கூரையின் மூங்கில்கள்  எல்லாம் கட்டுக்கள் இற்று விழுந்துகொண்டிருக்கின்றன. அவர் வீட்டுப் பழய சுவர்களில் கறையான் கூட்டம் அரித்துக் குவித்த புழுதிக் குவியல்களாக உள்ளன. அவற்றில் காளான் பூத்திருக்கின்றன. வருத்தம் தந்த பசியாலே பாணன் மகள் ஒடுங்கிய இடையோடும் வளையல் அணிந்த கையோடும் குப்பையில் கேட்பாரற்று முளைத்த வேளைக் கீரையை உப்பில்லாமல்வேக வைக்கிறாள். பின், தங்கள் குடும்பத்தை ஊர் கேலி செய்யுமே என்று, உள்ளே நடப்பது வெளியே தெரியக்கூடாது என அஞ்சித் தலைவாயிலை அடைத்துக்கொண்டு நின்றிருக்கிறாள்.

மன்னர் ஆடையும் மக்கள் ஆடையும்: 

நோக்கு நுலைகல்லா நுண்மைய

பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை

நெய்யும் அளவிற்கு…

 மீன் வலை காய்ந்த நிழலைப்போல மெல்லிய ஆடை மற்றும் மோதிரத்தில் மடித்துவைத்துவிடக்கூடிய பட்டாடை என பல நுட்பமான ஆடைவடிவமைப்பு சிறப்புமைகள் இருந்தபோதிலும் சங்ககாலத்து பெருநர்ஆற்றுப்படையில் புலவர் தம் ஆடைகுறித்துக் கூறுவது மிக விநோதமானது. ஈரும் பேனும் கூடிக்குலாவி என் உடையில் அரசுபுரிகிறது. அது வேர்வையில் நனைந்து நாற்றமடிக்கிறது. என் உடை வேறு நூல்கள் நுழைந்திருக்கிற தையல் போட்ட கிழிந்த கந்தை என்பதை,

“ஈரும் பேனும் இருந்து இறைகூடி

வேரொடு நனைந்து வெற்றிழை நுழைந்த

துன்னல் சிதார்”

(பொரு 80-82)

என்று ஒடுக்கப்பட்ட வாழ்வின் வறுமை படம்பிடிக்கப்படுகிறது.

“கூதிர்பருந்தின் இருஞ் சிறகு அன்ன பாறிய சிதரோன்”

 (புறம்.150)

என வன்பரணர், கண்டீரக் கோ பெருநள்ளியிடம் பருந்தின் சிறகு போல கிழிந்திருக்கும் தன் ஆடையைப் பற்றிக் கூறுகிறார்.

எது மாறினாலும் மாறாத வறுமை ஒருபுறம், எச்சட்டங்களுக்கும் அசையாத சொத்துக்குவிப்பு மறுபுறம் இரண்டும் தண்டவாளங்கள் போல் தொடர்வதும் நிகழத்தானே செய்கின்றன.

 ***************************************************

1 Comments

  1. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழக்குடிகள் என்றாலும் நாடுபிடிக்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் போரிட்டு அதன் விளைவாக யாதும் அறியாத மக்களை வறுமைக்குள் தள்ளியது வேதனை. சங்க இலக்கியங்கள் அக்கால வரலாற்றை பேசுவது மனம் எனும் நீரோடையில் கல்லேரிந்தது போல் உணர்ந்தேன் 😂🙏

    Like

பின்னூட்டமொன்றை இடுக