சேக்கிழாரின் செழுந்தமிழ்


மீனாட்சி பாலகணேஷ் & கம்பபாத சேகரன் (சங்கரன்)

          இலக்கியம் என்பது மாந்தர்களை நெறிப்படுத்தி வாழ்ந்திடச் செய்யும் குறிக்கோளைக் கதைகள், வரலாறு மூலமாக எடுத்துரைப்பதாகும். உலகின் எல்லா மொழி, சமயம், இனம், நாடு முதலியவற்றில் இலக்கியங்கள் பல உண்டு. அவைகள் வெறும் நீதி சூத்திரமாக மட்டும் அல்லாது பல நயங்களை உள்ளடக்கி அமையும். அவ்வாறு அமைந்த நயங்களை இலக்கியச் சுவை என்பர் அறிஞர்.

          இலக்கியச்சுவை உள்ளத்தைத் தெளிவாக்கி ஒருநிலைப் படுத்தி உயர்ந்த சிந்தனைக்கு வழிவகுக்கும்; நன்னெறியில் செலுத்தும். சமய தத்துவங்களைக் கூறவந்த  துறவியர்கள் கூட இந்த இலக்கியச் சுவையைத் தங்கள் படைப்பில் பதித்துள்ளனர். இலக்கியச்சுவையை ஒருவன் உணர்ந்துவிட்டால் அவன் அதிலிருந்து மீளவே முடியாது. அப்படிப்பட்ட இன்பம் அதனால் கிடைக்கும்.

          தமிழில் தோன்றிய இறையியல் நூல்களான சாத்திர, தோத்திர, பிரபந்த, காப்பிய நூல்களில் இச்சுவை மிக அதிகமாகவே, வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவில் உள்ளது. நமது சமய நூல்களை வெறும் தத்துவ சாத்திர நூல்களாகவேதான் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். அது தவறான கருத்து. சாத்திர உண்மைகளை அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களும் புரிந்துகொள்ளும் தன்மையில்தான் அவைகளை  இலக்கியச்சுவையோடு அமைத்துப்படைத்துள்ளனர்.

  இப்பகுதியில் சைவசமயத்திற்கு ஒரு பெரும் காப்பியக் கருவூலத்தை அருளிச்செய்த சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தின் சில பாடல்களின் இலக்கியசுவையைக் காண்போம்.

          ஆனாயர் வரலாற்றைக் கூறவந்த சேக்கிழார் அப்பகுதியில் கார்காலத்தைப் பற்றி பெண்ணாக உருவகம் செய்கிறார். உலக மேடையில் நடனமாட வருகிறாள் கார் எனும் மங்கை. அவளின் நடனத்திற்கு நீல மயில்கள் முழங்குகின்றன. வரிசையாக வளர்ந்துள்ள கொடிகளிலமர்ந்துள்ள வண்டுகள் புறவம் என்னும் முல்லைப்பண்ணைப் பாடுகின்றன. முல்லைக்கொடியில் இந்திரகோபப்பூச்சிகள் (தம்பலப்பூச்சிகள்; இவை உமிழ்ந்த வெற்றிலை எச்சிலைப்போன்ற நிறத்துடன் இருக்கும்) நிறைந்திருக்க, அது அவளது சிவந்தவாய் போன்று உள்ளது. அவ்வாயில் முல்லை அரும்புகிறது. அது சிவந்த அவ்வாயில் புன்சிரிப்புப் போல விளங்குகிறது. அந்த முறுவலைக் காட்டியவண்ணம் கார்மகள் மின்னலாம் இடையும், மாலைவேளை என்னும் தனமும் அசைய வருகிறாளாம்.

          நீலமா மஞ்ஞைஏங்க நிரைக்கொடி புறவம்பாட

         கோலவெண் முகையேர் முல்லைக் கோபவாய் முறுவல்காட்ட

         ஆலுமின் னிடைச்சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்

         ஞாலநீடு அரங்கில் ஆடக்கார் எனும் பருவநல்லாள்.

                                                                      (ஆனாயர்-19)

          திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் நிலவளம் கூறும் இடத்தில் நெய்தல் நிலத்தில் ஓர் காட்சியைக் கூறுகிறார். கடற்பகுதியில் செல்பவர்களுக்கு நடைபாதையின் பக்கங்களில் உள்ள புன்னைமரம் பொதிந்து வைத்துள்ள மலராகிய பொன்னை அளிக்கிறது. இதனைக் கண்ட தாழை, நெய்தல்மலரில் வந்து தங்கியுள்ள வண்டுகள் உண்பதற்கு, மடலில் பொதிந்துள்ள சோறு தெரிய பிளந்து மலர்ந்து உள்ளிருக்கும் சேற்றைக் கொடுக்கிறது. ஆனால் புன்னை கொடுத்த பொன் உடனே பசியாற்றாது, எனவே தாழை உடனே உண்பதற்குச் சோற்றைக் கொடுக்கின்றது என்கிறது அந்தப்பாடல்.

          சுழிப்புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டணிய

         வழிக்கரைப் பொதிப்பொன் அவிழ்ப்பன மலர்ப் புன்னை

         விழிக்கும் நெய்தலின் விரைமலர்க் கட்சுரும்பு உண்ணக்

         கழிக்கரைப் பொதிசோறு அவிழ்ப்பன மடற்கைதை

                                                            (திருக்குறிப்பு – 36)

          புன்னை பொன்கொடுக்க, நெய்தல்மலரில் தங்கியுள்ள வண்டுகளுக்கு தாழை சோறு கொடுக்கும் இக்காட்சியின் சுவை எப்படி அழகாக உள்ளது!!

                              அடுத்து மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றில் தலைவன்- தலைவி தொடர்பான ஒரு காட்சியை எடுத்தியம்புகிறார்.

          நீலவிழி உழத்தியர் களை பறிக்கும்போது தப்பிய செங்கழுநீர் வயலிலுள்ள நீரால் வளர்ந்து மலர்ந்துள்ளது. அதனைப்பார்த்து நெற்பயிர்கள் தலைசாய்த்து வணங்குகின்றன.

          கண்நீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்து ஒதுங்கி

         உள்நீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்து மலர்க்கண் சிவக்குந்

         தண்ணீர் மென்கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும்

         மண்நீர்மை நலம்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள்.

                                                                      (மானக்கஞ்சாற நாயனார் – 2)

          அதாவது “உன்னுடைய நலனைக் கருதும் எங்களை உழத்தியர் களைந்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து, உன்னுடைய உதவியின்றியே பிழைத்தோம். இனி உனக்கு என்னுடன் என்ன உறவு?” என்று தலைவி கேட்க, அதற்குத் தலைவன் தவறு செய்துவிட்டாலும் கூட அதனை ஒப்புக்கொண்டு தலைவணங்குவது போல உள்ளதாம் செங்கழுநீர் மலரும், நெற்கதிரும். தலைவி சினந்து கேட்கும் கேள்வியைச் செங்கழுநீரின் சிவந்த வண்ணம் காட்டுகின்றது!!

          கம்பனும் இதுபோன்று வேறொரு காட்சியைக் காட்டுவான். களையெடுக்க வந்த உழவன் களைபறிக்காது உலவினான். ஏனெனில் அந்த வயலில் குவளை, கமலம், ஆம்பல், வள்ளை முதலியன களைகளாக உள்ளன. அதனைப்பார்த்த உழவனுக்குத் தனது உழத்தியின் முகம் முதலான உறுப்புகள் நினைவுக்குவர, அவற்றைப் பறித்திட மனம் இல்லாமல் உலவுகின்றானாம்.

          பண்கள் வாய்மிழற்றும் இன்சொல் கடைச்சியர் பரந்து நீண்ட

         கண்கை கால்முகம் வாய்ஒக்கும் களைஅலால் களைகிலாமை

         உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகலாது உலவிநிற்பார்

         பெண்கள்பால் வைத்தநேயம் பிழைப்பரோ சிறியர் பெற்றால்.

                                                                      (கம்பன்-41)

          பெண்களிடம் கொண்ட அன்பு பிழையாகுமா? அதனால்தான் மலர்களைக்கண்ட உழவன் தன் மனைவியின் உறுப்புகள் அவையெனப் பறித்துக் களையாது உலவினான்!

                             

சேக்கிழார் நாவுக்கரசர் வரலாற்றில் மருதநிலம் பற்றிக் கூறுமிடத்து நால்வகை சேனைகளாகக் காண்பிப்பார். கதலியின் குலைகள் யானைமுகமாகவும், நெற்பயிர்கள் குதிரைமுகமாகவும், பெரிய வண்டிகள் தேர் போன்றும் ஆரவாரம் செய்யும் உழவர்கள் படைவீரராகவும் விளங்குவதனால் நால்வகை சேனைகளையும் போன்றது மருதம்!

          கருங்கதலி பெருங்குலைகள் களிற்றுக் கைம்முகம் காட்ட

         மருங்குவளர் கதிர்ச்செந்நெல் வயப்புரவி முகம்காட்ட

         பெருஞ்சகடு தேர்காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க

         நெருங்கிய சாதுரங்கப்பலம் நிகர்ப்பனவாம் நிறைமருதம்.

                                                            (நாவுக்கரசர் -6)

          கம்பனும் அயோத்தியின் அகழிபற்றிக் கூறுமிடத்து,

          ஆளும் அன்னம் வெண்குடைக் குலங்களா அருகராக்

         கோளெலாம் உலாகின்ற குன்றமன்ன யானையா

         தாளுலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா

         வாளும் வேலும் மீனம் ஆக மன்னர்சேனை மாறுமே.

                                                            (கம்பன்- 111)

          வெள்ளை அன்னம் வெண்குடையாக, முதலைகள் யானைகளாக, அகழி அலைகள் குதிரைகளாக, மீன்கள் வீரரின் வாளும், வேலுமாக மன்னர் சேனை போன்றுள்ளது என்பான். இங்கு தேர் கூறப்படவில்லை.

                                        சேக்கிழார் திருநாளைப்போவார் வரலாற்றில் ஆதனூர் வளம் கூறுமிடத்து ஒரு நாடகக் காட்சியைக் காட்டுவார். வயலின் அருகில் ஒரு தென்னைமரம் நெற்றுகளுடன் நிற்கிறது. வயலின் உள்ளேயுள்ள ஒரு முரட்டு வாளைமீன் தென்னைமரத்தைச் சாய்க்க எண்ணி அடிமரத்தை வலிமையுடன் முட்டியது.  அதனைக்கண்ட தென்னை வாளைமீனைத் தண்டிக்க தனது நெற்றை உதிர்த்து, நெற்று வாளைமீனைத் தாக்கி சேற்றில் அழுத்தி அதன்மேல் கிடந்தது. இதனை அருகில் உள்ள பலாமரம் கண்டது. மீனுக்கு இரங்கித் தனது கனியை வெடிக்கச் செய்து, அதில் உள்ள தேனை வயலில் பாய்ச்சியது. அப்போது வயலில் உள்ள சேறு தேனால் இளகியது, நெற்று மிதந்தது. இடைப்பட்ட வாளைமீன் தப்பியது.

          இதோ அந்தப் பாடல்:

          பாளைவிரி மணகமழும் பைங்காய் வன்குலைத் தெங்கின்

          தாளதிர மிசைமுட்டித் தடங்கிடங்கின் எழப் பாய்ந்த

         வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண்பலவின்

         நீளமுதிர் கனி கிழிதேன் நீத்தத்தில் எழுந்துகளும்

                                                  (திருநாளைப்போவார் -4)

          மேலும் இவ்வரலாற்றிலே ஆதனூர் பற்றிக்கூறுமிடத்து கரும்புச்சாறு அலைக்கும் வலிய குலைகளையுடைய வயலில் தகடு போன்ற வரால்மீன் எழ, எருமைபூட்டி ஏர் உழுவார் சால்வழியே, கருவுற்ற நண்டு மெதுவாக அசைந்து செங்கமல மலர்மீது ஏறி அங்கு கரு உயிர்க்க, அவைகளுக்குக் கமலம் தனது மகரந்தத்தை உதிர்க்கும் என்பார்.

          நீற்று அலர் பேரொளி நெருங்கும் அப்பதியின் நிறைகரும்பின்

         சாற்று அலை வங்குலை வயலில் டகட்டுவரால் எழப் பகட்டேர்

         ஆற்றலவன் கொழுக்கிழித்த சால்வழிபோய் அசந்தேரிச்

         சேற்றலவன் கருவுயிர்க்க முருகுயிர்க்கும் செழுங்கமலம்

                                                                                (திருநாளைப்போவார்-2)

          இப்பாடலில் கருவுற்ற நண்டு ஈன அதற்குக் கமலம் மருந்தாகத் தாது கொடுப்பது, நந்தனார் குலத்தவர் மகவு ஈன்றோர்க்கு கோரோசனை எனும் மருந்து கொடுக்கும் குறிப்பும் உள்ளதனைக் காணலாம்.

          இன்னும் பலபாடல்களைச் சேக்கிழார் இலக்கியநயத்துடன் அமைத்துள்ளார். அவைகளை திருத்தொண்டர் மாகதையில் கண்டு திளைக்கலாம்.

                                        ————000000———-

பின்னூட்டமொன்றை இடுக