கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24


முனைவர் இரா. இராமகிருட்டிணன்

  1. சிந்துவாரம்
Related image
சிந்துவாரம்

கருநொச்சிப்பூ என நச்சினார்க்கினியர் அழைக்கும் இத்தாவரம் பற்றிய செய்தி குறிஞ்சிப்பாட்டு தவிர வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

“நந்தி வட்டமும் நாகத்து அலரும்

               சிந்துவாரமுஞ் சேபாலிகையும்”

என்று பெருங்கதையில் (2, இலாவண காண்டம், 15, விரிசிகை மாலைசூட்டு : 103-104) இத்தாவரம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

  1. தும்பை
Related image
தும்பை

தும்பையானது, தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மஞ்சள் தும்பை என பலவகைப்படும்.

வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை நன்கு வளரும் தும்பைக்கு எல்லா வகை மண்ணும் ஏற்றது.. நீளமான இலைகளுக்கு மேலும், கீழும் பூக்கள் அமைந்திருக்கும். இவை விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தும்பை மணம் கமழும் வெண்மையான சிறிய பூக்களைக் கொண்டது.. ஆதலால், ‘கமழ் பூந் தும்பை’ என்றனர். போருக்குச் செல்லும்போது இம் மலரைச் சூடிச் செல்வதை

      “ ……………. பல்தேர் கோலச் சிவந்த

              ஒளிறுஒள் வாடக் குழைந்த பைந்தும்பை”         

என்று புறம் (283 : 15, 347 : 2-3) கூறுகிறது.

கௌரவர்கள் பாண்டவர்களுடன் போரிட்டபோது, அவர்கள் பொன்னாலாகிய தும்பைப் பூக்கள் அணிந்திருந்ததை, புறப்பாடலும் (2 : 14-15), பொன்னால் செய்த தும்பைப் பூவைச் வீரர்கள் சூடி போரிட்டதை, ‘புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை’ என மதுரைக்காஞ்சியும் (வரி 737) கூறுகின்றன. போருக்குச் செல்லும் வீரர்கள் பொன்னால் செய்த தும்பைப் பூவைச் சூடியதைப் பதிற்றுப்பத்தும் கூறுகிறது. புறம் கொடுத்து ஓடாத படையினை உடைய கெடாத தும்பை சூடின போரில்  வல்ல வீரருடைய தலைவன் என்பதை, “வாடாத் தும்பை வயவர் பெருமகன்” என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 101) சுட்டுகின்றது.  

      இளமகளிர் தும்பை மாலையைச் சூடியதை, ‘தும்பை மாலை இளமுலை’ என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் பகுதி (127 : 2) தெரிவிக்கிறது. இதனைச உ.வே.சா. அவர்களும் கூறுவார்.

      இரு பெருவேந்தர்கள் தும்பைப் பூவைச் சூடித் தம் வலிமையின் பொருட்டுத் தம்முள் செய்யும் போர் தும்பைப் போர் எனப்படும். பதிற்றுப்பத்து தும்பைப் போர் பற்றிப் பேசுகிறது (88 : 23, 52 : 8).

மருத்துவப் பயன்கள்

      அதிகாலையில் தும்பைப் பூவைப் பசுவின் பால் விட்டு அரைத்து உள்ளுக்குத் தர விக்கல் நீங்கும். தும்பை இலையையும், மிளகையும் அரைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச நஞ்சு இறங்கும். தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள்கடி நஞ்சு நீங்கும். பெருந்தும்பைச் சாற்றினை மோரில் கலந்து தரச் செரியாமை, மந்தம் நீங்கும். தும்பைப் பூவையும், ஒரு மிளகையும் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும். தும்பைப் பூ, நந்தியாவட்டை பூ, புளியம் பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண்பார்வை தெளிவடையும். பல் முளைக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியைத் தடுக்கப் பெருந்தும்பை இலைக் குடிநீரைக் கொடுத்து வரலாம் எனக் கூறுவர் (மூலிகை வளம், குப்புசாமி, தும்பை).

  1. துழாய் [துளசி]
Image result for துள்சி
துளசி

நீலநிறத்துடன் இணராகப் பூக்கும் மணம் மிக்க துழாயின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது..

       ‘நாறு இணர்த் துழாய்’ என்றும், ‘புரிமலர்த் துழாஅய்’ என்றும் பரிபாடல் (15 : 15, 13 : 60) குறிப்பிடுகின்றது. மேலும், ‘கமழ்குரல் துழாஅய்’, ‘தாதுநறுந் துழாய்’, ‘பைம்பொற் துழாய்’, ‘தேம்பொழிதுழாய்’, ‘தேன் ஒழுகு துழாய்’, ‘மடல் அவிழ்துழாய்’, ‘இணர்த் துழாய்’ என்று இலக்கியங்கள் துழாயை இருசொல் பெயர்களால் குறிப்பிடுகின்றன (இரா. பஞ்சவர்ணம், கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், ப. 212).

      காண்போர் கண்களைக் கவர்ந்திழுக்கும் சக்கரப்படையினை ஏந்திய கையும், நறுமணம் வீசும் பூங்கொத்துக்களை உடைய துளவ மாலையை அணிந்த மார்பினையுடைய திருமால் என்பதை, “கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய், அலங்கல்” என்று பதிற்றுப்பத்தும் (31 : 8-9), “புனத்துழாய் முடிமாலை மார்பன்” என்ற திருவாய்மொழித் தொடரும் (6-4-7) சுட்டுகின்றன. மேலும், துறக்க உலகமாகிய மேலுலகிற்கு, மணம் கமழும் பூங்கொத்துகளைக் கொண்ட துளசி மாலை அணிந்த திருமால் அருள் செய்யாத நிலையில், ஏறிச் செல்லுதல் இயலாததாகும் என்பதைப் பரிபாடல்,

             “நாறுஇணர்த் துழாயோன் நல்கின் அல்லதை

               ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்”

என்ற அடிகளில் (15 : 15-16) உணர்த்துகிறது.

மருத்துவப் பயன்கள்

துளசியின் இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை. துளசிச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலைப் போக்கும். உடலில் ஏற்படும் கொப்புளங்களுக்குத் துளசி இலையை நீர்விட்டு அரைத்துப் பூசிவந்தால் அவை எளிதில் குணமாகும். தோல் வியாதிகளுக்குத் துளசிச் சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளை அவித்துப் பிழிந்து 5 மி.லி. சாறு காலை மாலை இரு வேளை அருந்தி வந்தால் பசி அதிகரிக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பினை மிகுவிக்கும். இலை கதிர்களை வாட்டிப் பிழிந்த சாற்றினைக் காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டுவர 10 நாட்களில் காது மந்தம் குணமாகும். மழைக் காலத்தில் துளசி இலையைத் தேநீர் போலக் காய்ச்சிக் குடித்துவந்தால் மலேரியா, நச்சுக் காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுபவர்கள், துளசி இலைக் கசாயத்தைக் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 துளசியை இடித்துச் சாறு எடுத்து, அத்துடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர பேன் பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசிவர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றைப் பூசிவந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக்கொத்துக்களைக் கட்டிவைத்தாலும், வீட்டைச் சுற்றி துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வரா.

துளசி இலை நல்ல நினைவாற்றலை வளர்க்கிறது. துளசிமணி மாலை அணிவதால் அதிலிருந்து மின்அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடை சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குக் கருத்தரிக்காது என்று துளசியின் மருத்துவப் பயன்கள் கூறப்பட்டுள்ளன (மூலிகை வளம் – குப்புசாமி – துளசி).

  1. தோன்றி
தோன்றி மலர்
தோன்றி மலர்

தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர். குறிஞ்சிப்பாட்டு இதனைச் ‘சுடர்ப்பூந் தோன்றி’ எனக் குறிப்பிடுகிறது.

      காந்தளுக்குத் தோன்றி என்று சங்க நூல்களில் பெயர்வரக் காரணம் என்ன? மலையாளத்தில் சங்கப் பெயராலேயே ‘தோன்றிப்பூ’, ‘மேந்தோன்னிப்பூ’ என்று இன்றும் நாட்டுப் பகுதியில் அழைக்கப்படுகின்றது. ‘மேல் தோன்றி’ என்பதே ‘மேந்தோன்னி’ ஆயிற்று. தரையில் கிழங்காக அடங்கி முடங்கிக் கிடந்த இச்செடி கார்காலத்தில் திடீரென்று கிளம்பி மேலே அழகிய பூவோடு தோன்றுவதால் ‘தோன்றி’ என்றும், ‘மேல் தோன்றி’  என்றும் அழைக்கப்பட்டது. மற்றைச் செடிகொடிகள் போல் அன்றி மற்றைக் காலங்களில் காணமுடியாதிருப்பதும், மழைக்காலத்தில் திடீரென்று தோன்றுவதும் காந்தளுக்குச் சிறப்பான தன்மையாகும். மலையாளத்தில் மழைக்காலத் தொடக்கத்தை உணர்த்தும் பூ இதுவேயாகும்.  

       இதழ்கள் நிறைந்த தோன்றி மலர்கள் உதிரம் போலப் பூத்திருப்பதையும், தளிரையும் கொத்துக்களையும் உடைய கொன்றை பொன் போன்ற மலர்களைச் சொரிவதையும்,

              “முறி இணர்க் கொன்றை நன்பொன் கால,

               ………… தோடுஆர் தோன்றி குருதி பூப்ப”

என்று முல்லைப்பாட்டு (வரிகள் 94-96) பாடுகிறது.

      தோன்றிப் பூ தீச்சுடர் போன்று விளங்குதலால் ‘ஒண் சுடர்த் தோன்றி’ என்று சிறப்பிக்கப்படுகிறது. ‘தாய தோன்றி தீயென மலரா’ என்றும், ‘சுடர்புரை தோன்றி’ என்றும், ‘வாடையொடு நிவந்த ஆய்இதழ் தோன்றி, சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழ’ என்றும், ‘தோன்றி அஞ்சுடர் ஏந்த’  என்றும், “குருதிமலர்த் தோன்றி” என்றும், நெருப்புப் போன்று மலரும் தழைத்த தோன்றி என்றும், வாடைக்காற்றால் உயர்ந்த அழகிய இதழ்களையுடைய தோன்றியின் சுருங்கிய அரும்புகள் சுடர் கொண்ட அகல் விளக்குகள் போல் விரிந்து மலர்ந்தன என்றும் இலக்கியங்கள் தோன்றி மலரைச் சிறப்பித்துக் கூறுகின்றன. “தோன்றி மரகதத் தண்டின் விளக்கு எடுப்ப” என்று கல்லாடத்தில் அழகாகக் கூறப்பட்டிருக்கின்றது. பல இடங்களிலும் உள்ள புதர்களிலெல்லாம் தோன்றிப்பூ தழைத்துத் தன் மலரை விளக்கென ஏந்தி நின்றதை.

                                        “பல்வயின்

              தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ”

என்றும், ஒளியுடன் விளங்கும் தோன்றி மலர் என்பதை, ‘ஒண்பூந் தோன்றி’ என்றும் நற்றிணைப் பாடல் பகுதிகள் (69 : 5 – 6, 221 : 2) சுட்டுகின்றன.

தோன்றி மலர்கள் மலர்ந்து காணப்படுவது கார்த்திகைத் திருவிழா விளக்கினை நினைவூட்டுமென்பர்; இதனை,

              “நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

               தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்

புலமெலாம் பூத்தன தோன்றி

என்ற பாடல் வரிகளால் (கார் நாற்பது, 26) அறியலாம்.

நீண்ட காம்புடன் கூடிய நீண்ட பூவிதழ்கள் முதலில் தலைகீழாகத் தொங்குவது போலிருக்கும். அப்போது பூவிதழ்கள் பச்சை, மஞ்சள், வெண்மை கலந்த சிவப்பு நிறமாக மாறிமாறித் தோன்றும். ஆனால் பூ முதிர்ந்த பருவத்தில் இதழ்கள் செங்குத்தாக மேல் நோக்கித் தோன்றும் என்று குறுந்தொகை (107) குறிப்பிடுகின்றது. மேல்நோக்கியிருக்கும் இதழ்கள் வளைந்து காணப்படும்போது சேவலின் கொண்டை போலத் தோன்றுவதை,  “கொய்ம்மலர் தோன்றிபோற் சூட்டுடைய சேவலும்”  என்று சீவக சிந்தாமணி (வரி 73) சுட்டுகின்றது.

  1. நந்தி
Image result for நந்தியாவட்டை பூ
நந்தியாவட்டை

தற்காலத்தில் இப்பூ நந்தியாவட்டை என்று வழங்கப்படுகிறது. இதன் இலைகள் கரும் பச்சை நிறமாகவும்; பூக்கள் வெண்ணிறமாகவும் இருக்கும். பூசைக்கு உரிய மலரானதால் திருக்கோயில் நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. இதன் பிறப்பிடம் வட இந்தியா என்றும், இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப் பூஞ்செடியாக வளர்க்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இச்செடி 3 – 5 அடி உயரம் வளரும்.          

“நறையும் நந்தியுமறைபயில் அகிலும்      

               வழையும் வாழையும்”

என்று பெருங்கதையில் (இலாவண காண்டம், 12, மாசன மகிழ்ந்தது : 15-16)  பல்வகை தாவரங்களோடு நந்தியும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் பயன்கள்

       நந்தியாவட்டை வேரை நீரில் கொதிக்கவைத்து, வற்றிய நீரைக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண்களில் உண்டாகும் கொதிப்புக்கு இதை, கண்களை மூடிக்கொண்டு மென்மையாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். இதன் வேரை வாயிலிட்டு மென்று துப்பிவிட பல்வலி நீங்கும் எனக் கூறப்படுகிறது (மூலிகைவளம் – குப்புசாமி – நந்தியாவட்டை).

  1. நறவம்
நறவம்-பூ
நறவம்

நறவம், கொடியில் கொத்து கொத்தாய்ப் பூக்கும், பெருந்தொலைவு மணம்வீசும் அணியக்கூடிய வெண்மை நிறப்பூ; வளைந்த அக இதழின் முதுகில் ஒரு சிவப்பு வரிக்கோடு உண்டு; கூடிய பூ; குறிஞ்சி நிலத்தது; மகரந்தம் பொன்னிறமானது (கு. வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், ப. 100).

       ‘நறவம்’ என்ற சொல் மலரிலுள்ள தேனை உணர்த்துகிறது. நறவு, நறாஅ, நறா என்னும் சொற்கள் ஒரு வகை கள்ளை உணர்த்துவன. போர்க்களம் செல்லும் படைவீரர்களுக்கு ‘தீந்தண் நறவம்’ கொடுத்தனர் என்னும்போது ‘நறவம்’ என்னும் சொல்லும் கள்ளை உணர்த்துகிறது.

      முறுக்கவிழ்ந்த மகளிரின் கண்ணைப் போன்ற நெய்தல் பூ, தேன் பொருந்திய நறவம் பூவோடு சேர்ந்து அரசரும், பிறரும் ஒன்று கூடிய பந்தல் முழுவதும் மணம்வீசியதை,

            “வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்

               நனைஉறு நறவின் நாடுடன் கமழ”

என்று பதிற்றுப்பத்து (51 : 17-18) கூறுகிறது.

முல்லைப் பூ, நறவம்பூ, கருநீல மலர், அல்லிப் பூ போன்ற பூக்கள் எல்லாம் சேர்ந்து கட்டிய பூமாலையைச் சங்க கால மக்கள் அணிந்ததைக் கலித்தொகைப் பாடல் (91 : 1-3) உணர்த்துகிறது.

      குளத்தில் பூத்த நெய்தல் மலரையும், அரும்பு மணம் பரவுவதற்குக் காரணமான மலர்ச்சியினால் கண்டோர் விரும்பும் நறவ மலரின் இதழையும் ஒத்த தலைவியின் மதர்த்த மையுண்ட கண்கள் என்று பரிபாடல் (வரிகள் 8 : 74-75) உணர்த்துகின்றது. . தலைவியின் கண்கள் குவளைமலரின் கரிய இதழ்களைப் போல நீர் ததும்புகின்ற கரிய இமைகளைக் கொண்டிருந்தன; தலைவனின் பிரிவால், நறவம்பூவின் சிவந்த இதழினைப் போன்று தோற்றமளித்ததை, “நறவின், சேயிதழ் அனைய ஆகி, குவளை மாஇதழ் புரையும் மலிர்கொள் ஈர்இமை” என்று அகப்பாடல் (19 : 9-11)  காட்டுகின்றது.

      அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தீற்றினாற் போல சிவந்த வரி கொண்ட இதழை உடைய, நெடுந்தூரம் மணம் கமழும் நறவம் பூ என்பதை, “அவ்வளை வெரிநின் அரக்குஈர்த் தன்ன, செவ்வரி இதழ சேன்நாறு நறவின்” என்று நற்றிணை (25 : 1-2) சுட்டுகின்றது.

செங்காரி எருது ஒன்று தன்னை அடக்க வந்தவரைக் குத்திக் கொன்றது; அதன் கழுத்தில் இருந்த மணி குருதியோடு பொருந்தி நறவம் பூப்போல தோன்றியது; அதன்மேல் வண்டு வந்து படிந்ததை, கலித்தொகைப் பாடல் (105 : 39 – 42) படம் பிடித்துக் காட்டுகின்றது.

       “நற்சினை நறவமும் நாகமும் நந்தியும்” என்று பெருங்கதையும் (2, இலாவண காண்டம், 20. சண்பையுளொடுங்கியது : 60) இத்தாவரத்தைக் குறிப்பிடுகி்ன்றது.

  1. புன்னாகம்

மலையில் வளரும் மரத்தில் பூக்கும் மணம் வீசும் இம்மலரை. ‘நறும் புன்னாகம்’  எனக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது. கந்தபுராணத்தில், “புன்னாகம் நாகம் அணிவான் அடிபோற்றி நோற்று” என்று அசுரகாண்டத்திலும், “புன்னாக வீயும் கொணர்ந்தேன் புனைகிற்றி என்ன” என்று தேவகாண்டத்திலும் இப்பூ சுட்டப்படுகிறது.

  1. பாரம் [பருத்தி]

Image result for பருத்தி
பாரம் [பருத்தி]
பாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும். மிகவும் லேசான பொருளைப் பாரம் எனல் மங்கல வழக்கு. அது கொடிய நஞ்சு கொண்ட பாம்பை நல்ல பாம்பு எனவும், கருநிற ஆட்டை வெள்ளாடு எனவும் வழங்குவது போன்றது.

      பாரம் என்னும் தாவரப் பெயர் கம்பராமாயணத்தில், “பாரம் மாமரம், முடியிடைத் தலையிடப் படலும்” (சுந்தர காண்டம், பாசப் படலம், பாடல், 1030) எனப் பயின்று வந்துள்ளது. 

  1. பீரம்

Image result for பீர்க்கம் பூ
பீரம் [பீர்க்கம்பூ]
பீர்க்கம் பூ என நச்சினார்க்கினியரால் குறிப்பிடப்படும் இப்பூ பீரை, பீரம், பீர், பீர்க்கு என்றெல்லாம் வழங்கப்படும். பாழிடங்களிலும், வேலியோரங்களிலும் படர்ந்து வளர்கின்ற பொன்போன்ற நிறத்தை உடைய இம்மலர் வாடைக் காலத்திலும் மலரும்.

             “நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய

               தாறு படு பீரம்”                                     

“பீர் இவர் வேலிப் பாழ் மனை”

ன்ற இலக்கிய வரிகள் (நற்றிணை, 277 : 6-7) இது வேலியோரங்களில் மலரும் என்பதைக் காட்டுகின்றன.

                                    “பொன்என

               இவர் கொடிப் பீரம் இரும்புதல் மலரும்

               அற்சிரம்”                                    

என்ற வரிகள் (பதிற்றுப்பத்தும், 26 : 10) “பொன் போல் பீரமொடு, புதல் புதல் மலர” என்று நெடுநல்வாடையும், அதன் நிறத்தையும், காலத்தையும் காட்டுகின்றன.

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் உடலில் ஏற்படும் பசலைக்குப் பீர்க்கம் பூ உவமிக்கப்படுகிறது. இதை,

                              “மாமை,

              அரிநுண் பசலை பாஅய், பீரத்து

              எழில் மலர்”

என்று அகப்பாடல் (45 : 7-9) விளக்குகிறது. நீர் ஒழுகுகின்ற பசுமையான புதரைப் பற்றுக்கோடாகக் கொண்டு, படர்ந்து தழைத்த, மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் என்பதை, “நீர்வார் பைம்புதற் கலித்தமாரிப் பீரத்து”  என்ற குறுந்தொகைப் பாடல் வரிகள் (98 : 4-5) காட்டுகின்றன.

      நெற்றி தனக்குரிய நிறத்தை இழந்து, படர்கின்ற பீர்க்கங் கொடியின் மலர் போல நிறம் கொண்ட பசலையைப் பெற்றது என்பதை, ‘நுதலே, பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே’ என்று நற்றிணை (197:1-2) அழகுற உணர்த்துகின்றது. பொன் அணிகளால் அழகு பெறவேண்டிய தோள்கள், அவை கழன்று வீழப் பொன்னிறம் உடைய பீர்க்க மலர் போன்ற பசலையைத் தோற்றுவித்ததை, ‘மென்தோள் ஆய்கவின் மறைய, பொன்புனை பீரத்து அலர் செய்தன்றே’ என்று ஐங்குறுநூறு (452 : 4-5) சுட்டுகிறது. 

  1. குருக்கத்தி
Image result for குருக்கத்தி
குருக்கத்திப் பூ

நறுமணமுள்ள பூக்களைத் தரும், பசுமையான அழகிய பெரிய கொடியான குருகு தற்காலத்தில் குருக்கத்தி என்றும்,. மாதவி என்ற வடமொழிப் பெயராலும் வழங்கும்.

இது பஞ்சு போன்ற துய்யினை அகத்தே கொண்டு அழகாகக் காட்சியளிப்பதை, ‘மதனின் துய்த்தலை இதழ பைங்குருக்கத்தி’ என்று நற்றிணை (97 : 5-6) காட்டுகின்றது. இது பெரிய கொடியாக அடர்ந்து வளர்வதால் நிறைய இடத்தை அடைக்கும். வெயில் நுழைய முடியாதபடி அவ்வளவு அடர்த்தியாகக் காஞ்சி மரத்தில் சுற்றிப் படர்ந்திருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (வரிகள் 374-376) கூறுகின்றது.   

குருக்கத்தி மிக நீண்ட கொடி என்பதால் ‘நெடுங்கொடி’ என்றும், இது காஞ்சி மரத்தைச் சுற்றி ஏறுவதைப் பெரும்பாணாற்றுப்படையும், தடித்துக் காணப்படுவதால் ‘கொழுங்கொடி’ என்றும் பெயர்கள் உண்டு.. இதைப் பந்தலில் ஏற்றி வளர்த்தனரென்பதைச் சிலப்பதிகாரம்,

            “கோதை மாதவி சண்பகப் பொதும்பர்”

              “கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக்

               காவுங் கானமுங் கடிமல ரேத்த”    

(2. மனையறம் படுத்த காதை, வரி 18, 14. ஊர்காண் காதை, வரிகள்113-114) என்று குறிப்பிடுகின்றது. தலைப் பகுதியில் துய்யை உடைய இதழ்களுடன் கூடிய குருக்கத்திப் பூவொடு பித்திகை மலரை விரவிக் கட்டி அதை விலைக்கு விற்ற உழவர் மகளைப் பற்றி நற்றிணை (97: 6-7) பேசுகின்றது.

      இதனைப் பசிய குருக்கத்திப்பூ என்கிறார் நச்சினார்க்கினியர்.

பாண்டியனின் வையை ஆறு கஞ்சங்குல்லை, மகிழம், குருக்கத்தி, பாதிரி போன்ற பல்வேறு மலர்களைச் சுமந்துகொண்டு வருவதை,‘குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி ……. …… எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ’ என்று பரிபாடல் (12 : 79-81) குறிப்பிடுகிறது.

வடமொழி இலக்கியத்தில் குருக்கத்திக் கொடியை அழகிய பெண்களுக்கு உவமையாகக் கூறுவது வழக்கம். சிலப்பதிகாரத்திலும் மாதவியைக் குருக்கத்திக் கொடியோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டிருக்கின்றது. குருக்கத்திப் பூ முருகனுக்குரியதாகச் சிந்தாமணி கூறுகின்றது. “கத்திகைக் கண்ணியை அணிந்த கடவுள்”(971). கத்திகை என்பது குருக்கத்தியாகும். குருக்கத்தி  மக்கிய இலைகளுடன் கூடிய உரமுள்ள நிலத்தில் நன்கு வளரும். ‘குப்பையில் முளைத்த குருக்கத்திபோல’ என்று பழமொழி வழங்குகின்றது. குருகின் பூ வெண்ணிறமானது. இது இயற்கையில் பசுங்காடுகளிலும், அருவிப் பள்ளங்களிலும் காணப்படும் (பி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், பக். 178-180).

***

பின்னூட்டமொன்றை இடுக