தேவரின் திருக்குறள் அஷ்டாவதானம் – 3


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

http://wp.me/p4Uvka-E6 

நன்றி – பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள்:

க. பூபதிராஜா, பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம், 14, ஆண்டவர் நகர், 2-வது தெரு, கோடம்பாக்கம், சென்னை – 600024

பாதுகாப்பரண்

சீக்ஃ;ப்ரீட் கோடு அரண்

இதோடு அல்லாமல் அரசாங்கத்திற்கு அரண் ஆகிய பாதுகாப்பு மிகவும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. உதாரணமாக, இற்றைய அரசாங்கங்கள் மலை, ஆறு, கடல், “சீக்பிரிட், மாகினாட் லைன்” என்று அரண்களை வைத்திருந்ததை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இத்தாலி தேசம் இயற்கையாக அமைந்த ஆல்ப்ஸ் மலையையும், பிரிட்டன் இயற்கையாக அமைந்த கடலையும், ஜெர்மனி சீக்பிரிட் அரணையும், பிரான்ஸ் தேசம் மாகினாட் அரணையும் வைத்திருந்தது உங்களெல்லாருக்கும் தெரியும். இதை சில ஆயிரம் வருடங்களுக்குமுன்பு பாடிய திருவள்ளுவ நாயனார்,

”மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்

என்று சொல்லியிருப்பது குறிக்கத்தக்கது.

மேற்குத்தொடர்ச்சி மலை

மணிநீரென்றால் எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்று அர்த்தம். அது சமுத்திரத்திற்கும் ஜீவநதிக்கும் பொருந்தும். மண்ணும் என்கின்ற இடம் பாலை, காடு, எதிரிகள் மறைந்திருப்பதற்குச் சாதகமாகிய இடங்களைக் குறிக்கும். மலையும் என்கின்றது இயற்கையான மலைகள், மேற்குத் தொடர்ச்சிமலை, ஆப்பிரிக்காவில் உள்ள, காங்கோ, வட அமெரிக்காவின் மேற்குபாகத்திலுள்ள பெரும்காடுகளை ஒக்கும்.

இம்மாதிரி உள்ளவைகள் இயற்கை அரண்களாகும். செயற்கை அரண்களையும் வள்ளுவர் சொல்லாமலில்லை.

“உயர்வகலம் திண்மை அருமைஇன் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்

என்றும்,

“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்

என்கிறார்.

உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கும் உடையதாயும்,“சிறுப்பிற் பேரிடத்ததாகிக்” காக்கவேண்டிய இடம் சிறியதாயும், அதற்குள் அணிவகுத்து நிற்கும் படை, இருப்பதற்கு இடம் பெரியதாயும், “உறுபகை ஊக்கமழிப்பதரண்”. எதிரியின் ஊக்கத்தை அழிக்கக் கூடியதாய் சிதைக்கக் கூடிதாய் இருக்கவேண்டிய அரண் என்று சொல்லுகிறார். இவ்விதமான அரண்கள்தான் சீக்பிரிட் போன்ற அரண்களாகும்.

இம்மாதிரி அரண்களெல்லாம் இருந்துவிட்டால் போதுமா? போதாது. அதற்கு ஜெர்மனியின் வீழ்ச்சியே சான்று.  அதையும் வள்ளுவர் சொல்லாமல் விடவில்லை. அரண் எவ்வளவு வலிமையுடையதாயிருப்பினும் அதை நடத்தும் அரசனோ சேனையோ தடுமாறிவிட்டால் பிரயோஜசனமில்லையென்று சொல்கிறார். அதை

“எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்க்கண் இல்லது அரண்

நமது ஆட்சித் திறன்

மாதவி நடனம்

எவ்வளவு வலியுடையதாய் அரண் இருப்பினும் அதை நடத்துபவர் சரியற்றவராய் – மனவலிமை குறைந்தவராய் இருப்பின் பிரயோஜனமில்லை என்கின்றது குறள். என்ன தெளிவான கருத்து!

இற்றைய ரசாயன முறைகளைக் கண்டோர் முடிவாக அரை ஆராய்ச்சிக்கு வந்திருக்கின்றார்கள். இந்த அரை ஆராய்ச்சி வெள்ளையனின் விஞ்ஞானித்திற்குப் புதிதாக இருக்கலாம்.

 தமிழர்களுக்கு இது பழசு. நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உதாரணம் சொல்கிறேன். சில ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் என்னும் நூலில் மாதவியின் நடனகாலத்தில் அவளுக்காக அரங்கச் சாலையமைக்க ஒரு அளவுகோல் குறிக்கிறார். அதாவது அணுவுக்கு வருகிறார். அளவின் விவரம்,

எட்டு அணுக் கொண்டது ஒரு தேர்த்துகள்.

எட்டுத் தேர்த்துகள் கொண்டது ஒரு இம்மி.

எட்டு இம்மி கொண்டது ஒரு எள்.

எட்டு எள் கொண்டது ஒரு நெல்.

எட்டு நெல் கொண்டது ஒரு பருவிரல்.

இந்தப் பரு விரலைத்தான் சப்ரிஜிஸ்திரார் ஆபீஸில் ரேகைபதிகிற இடத்தில் கிட்டத்தட்ட இற்றைக்கு ஒரு அங்குலமென்று வைத்திருக்கிறார்கள்.

இருபத்திநான்கு பருவிரல் கொண்ட ஓர் அளவுகோல் என்கிறார். அதுதான் கிட்டத்தட்ட இருபத்திநான்கு அங்குலம்கொண்ட இரண்டடி ஆகும். இந்த அளவுகோலால் நீளமும் அகலமுமாக அரங்கசாலை அமைக்கப்படுகிறது. விரிக்கிற் பெருகும். இதை சிலப்பதிகாரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

அதோடு,

“அறியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை, யார்க்கும் தெரியாத தத்துவனை…” 

என்று ஆத்மார்த்திகள் கடவுளைக் குறிக்கிறபொழுது பாடியிருக்கும் பாட்டு உங்களுக்குத் தெரியும். இதை நோக்குகிறபொழுது தமிழன் அணுவை அறியாமல் இருந்தவனில்லை. ஆகையால் இற்றைய நீசராஜாங்கத்தைப்போல கொலைபாதகக் கருவிகளுக்கு அவன் அவனுடைய அறிவைப் பாழ்படுத்தவில்லை.

நான் சிறுபையனாக இருந்த காலத்தில் ஒருசமயம் உபாத்தியாயர்கள் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் பேசிக கொண்டிருக்கிற சமயத்தில் நம் முன்னோர்கள் பூமி உருண்டை என்பதைத் தெரியாமல் இருந்திருக்கிறார்கள். இப்பொழுது பூகோள சாஸ்திரம் வந்து நமக்கு அதை அறிவித்துவருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டபொழுது எனக்குப் பரிதாபமாக இருந்தது.

நான் சிறு பையனாய் இருந்ததால் அவர்களிடமிருந்து சற்று தூரத்தில் நின்று கொண்டு, “பூமி உருண்டை என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். உங்கள் முன்னோர்கள் தெரியாதிருந்தார்கள் என்று தயவுசெய்து நீங்கள் சொல்லாதிருக்கவேண்டும். யாராவது இரண்டணா கொடுங்கள். கோபாலகிருஷ்ணா கோனார் கடையிலிருந்து சிறிய புத்தகமொன்று வாங்கிவருகிறேன். அதில் பூமியைப் பற்றி பாட்டுக்கள் வருகின்றபொழுது “அண்டகோளம்” என்று பாடப்பட்டிருக்கிறது. இது பலவருஷங்களுக்கு முன், பூகோளம் வருவதற்குமுன் பாடப்பட்டவை.

அண்டம் என்றால் முட்டை. கோளம் என்றால் உருண்டை என்று அர்த்தம்.  இதுதான் ஆங்கிலத்தில் ஓவல் ஷேப் என்று இருக்கிறது. பூகோளம் பையன்களுக்குப் போதிக்கிறபொழுது “கிச்சிலிப்பழ வடிவ உருண்டை” என்கின்றது” என்று சொன்னேன்.

அவர்கள் சற்று கோபத்தோடும் ஆச்சரியத்தோடும் நோக்கினார்கள். ஆனால், தாங்கள் சொன்னது தவறு என்று உணர்ந்தார்கள். நம்மில் வாத்தியார்களின் நிலைமையே இப்படி!  இவ்வாறிருந்தால் மாணவர்களின் நிலை என்ன?  மாணவனின் நிலை அதுவாக இருந்தால் பொது ஜனத்தின் போக்கென்ன?

தமிழின் கலையுணர்ச்சியை இன்றைய தமிழன் எவ்வளவுதூரம் தெரிந்திருக்கிறான் என்பதை நாம் நினைக்கிறபொழுது வருந்தாமலிருக்க முடியவில்லை. மற்றும் ரேடியோ முதலிய ஒலிக்கருவி ஆராய்ச்சிக்கு வருவோம். அது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டவை என்பது வெள்ளையர் கூற்று, பறைசாற்று.

ரேடியோ வருவதற்குமுன் எந்த விஞ்ஞானியின் மூளையிலும் அது ஞாபகத்திற்கு  எட்டாத காலத்தில் சுவாமி விவேகானந்தா அவர்கள் 1893-ம் வருஷம் செப்டம்பர் மாதவாக்கில் சிகாகோ என்னும் நகரில் செய்த பிரசங்கத்தில் “உங்கள் விஞ்ஞானம் கம்பிமூலமாகச் செய்தியை ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு அனுப்பத் தெரிந்திருக்கிறது. ஆனால் இயற்கை தேவியோ கம்பி இல்லாமலேயே செய்தியை எங்கும் பரப்பும் சக்தி உடையவள்” என்றும் பேசி இருக்கிறார்.

பாரதியாரும்,

பாரதியார்
பாரதியார்

“காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்

என்று பாடியிருக்கிறார். இதுவும் ரேடியோவிற்கு முற்பட்ட காலம். இன்னும் பல ரசாயனங்களெல்லாம் உரோமர் காண்டம் ஏழாயிரம் (7000) போகர் பன்னிரெண்டாயிரம் (12000) போன்ற நூல்களிலும் ஏராளமாக மலிந்து கிடக்கின்றன. விரிக்கிற் பெருகுமென விடுத்தோம்.

உத்தமஞானியே அரசன்

அந்த மாதிரி உள்ள விஞ்ஞானம், மெஞ்ஞானம் இரண்டையும் தெளிவறக் கண்ட மகாஞானிகளில் ஒருவர் திருவள்ளுவ நாயனார். அவரது வாயிலிருந்து வந்த மணிமொழிகளே திருக்குறள்.

முன்னால் ஞானிக்கும் கவிகளுக்கும் தொடர்பு உண்டு என்று சொன்னேன். அரசனே ஞானி, ஞானியே அரசன் என்று சொன்னேன். ஞானி சோம்பேறியல்ல என்றும் சொன்னேன்.

இதன் மர்மம் என்ன? சற்று ஆராய்வோம்.

ரேடியோவிற்கு வருவோம். ரேடியோ என்பது காந்த சக்தியால் புறப்பட்ட சப்தம்.  காற்றின் அசைவால் சிதைந்து போகாமல் பல்லாயிரம் மைல்களுக்கு விரைந்து சென்று குவிந்து, கேட்பதற்கு உதவுகின்றது.

வாயைவிட்டு புறப்பட்ட சப்தம் அழியாது சஞ்சரிக்கின்றது. அது இடைச் சிதைவால் அழிந்ததுபோல் காணப்படுகின்றது என்பதைக் காட்டுகிறது. விஞ்ஞானம் சப்தத்தைக் கூட்டு விக்கவும் இயக்கத்தைக் கேட்கவைக்கவும் கண்டிருக்கிறது.

மெஞ்ஞானமோ, சப்தத்தைப்போல் எண்ணங்களும் சஞ்சரிக்கின்றன. அவைகள் மகான்களால் ஞானிகளால், தெய்வ நிலையமைந்த உத்தம புருஷர்களால் எண்ணப்படுகின்ற எண்ணங்கள் சஞ்சரித்து அதை நடத்துவதற்காக ஆன்மாக்கள் தோன்றிய காலத்தில் அவர்கள் உள்ளத்தில் புகுந்து அவர்களைக் கருவியாக வைத்துக்கொண்டு காரியத்தை நடத்துகின்றன என்பதைக் கண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உலகை இயக்கும் ஞானிகள். அந்த இயக்கத்திற்கு இணைந்துவிடுகின்றவர்கள் உயிர்கள்;  அரசன் இவை இரண்டிலும் நடுநிலையாக நிற்கிற அஸ்திவாரம். உயர்ந்த அரசன் இந்த இயக்கத்தோடு இணைந்து உலகைப் பரிபாலிக்கிற உத்தமஞானி, இவன்தான்.

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.

என்று சொல்லப்பட்ட பாட்டிற்கு இலக்காவான். அவன்தான் “மக்கட்கிறை” என்று சொல்லப்படும் மனிதனுக்குள் கடவுள் தன்மை பெற்றவன்!  அம்மாதிரிக் காலமும், அம்மாதிரி அரசும் இருந்த காலத்தில் பாடிய நூல் திருக்குறளாகும்.

அஷ்டாவதானம்

இற்றைய அஷ்டாவதானத்தை கேட்டீர்கள். இது குறளில் உள்ள விமர்சனம். முன் காலத்தில் நம்நாட்டுப் புலவர்கள் அஷ்டாவதானம் செய்வதுண்டு. அது எப்படியெனில்,

“வேலு மயிலுமெனச் சொன்னவுரை மாறாமற் சொல்ல

எதிர் சூதாட பண்ணு சதுரங்கத்திற் கடிபார்க்க,

சொற்புலவர் தங்கள் கவியை அவதானிக்க

எட்டெட் டெழுத்தாணிக்கேற்ற கவி சொல்லவும் யான்

அஷ்டாவதானியென ஆகினேன்

என்று நடத்தப்பட்டது.

இதிலும் எமகண்டம் பாடுவது என்ற மற்றொரு முறையும் உண்டு.  அது எப்படி என்றால், யானையின் தந்தத்தில்  மிகவும் கூர்மையான இரண்டு கத்திகள் கட்டப்படிருக்கும். ஒரு வித்துவான் அந்தக் கத்திகள் இரண்டிற்குமிடையே தன் கழுத்து இருக்கும் அளவிற்கு ஓர் உயரம் போட்டு நிறுத்தப்படுவான். யானையின் சுபாவம் அசைந்துகொண்டிருப்பது. அந்த அசைவுக்கு லாயக்காக இந்த வித்துவானும் அசைந்துகொண்டே நிற்கவேண்டும். தவறினால் கழுத்து இரண்டு துண்டாகும். இவ்வாறு எமகண்டம் பாடியவர் காளமேகமாவார். இன்னும் தசாவதானம் என்ற பத்துவித முறைகளும், சதாவதானம் என்ற நூறுவித முறைகளும் நடந்ததுண்டு, அவைகளை ஆராய்வதற்கு இது சந்தர்ப்பம் அல்ல.

தமிழின் பெருமை

தமிழின் பண்டைக்காலப் பெருமை இற்றைக்கு மிகவும் குறைந்திருக்கின்றது. மண்ணுலகு மட்டுமல்ல, விண்ணுலகையும் தேர்ந்து தெரிந்துகொண்டு களிக்க பாடிக்கொடுக்கப்பட்டது தமிழ். இற்றைக்கிருக்கிற வானுலக ஆராய்ச்சியில் சூரியனில் சில புள்ளிகளிருக்கின்றன என்பதைச் சிரமப்பட்டு கண்டுபிடித்திருக்கின்றனர். செவ்வாய் மண்டலத்தில் பிராணிகள் இருக்கலாம் என்ற சந்தேகக் குறிப்பிலிருக்கின்றது ரசாயனம்.

அற்றைய நிலையோ, அதுவல்ல, மண்ணுலகு, வானுலகு, வானோர்க்குகந்த உலகு என்கிறவை அத்தனையும் சிறப்பாக ஆராயப்பட்டிருக்கின்றன. அண்டம், பிண்டம், சாரசரம், அதலம், மத்திபம், பாதாளம் இவைகளிலுள்ள சஞ்சரிப்பு, இவை அத்தனையும் சிவஞானபோதமென்றும் நூலைப் பார்த்துத் தெரிந்துகொள்க. இதைப்போல பல இடங்களிலுள்ள வசிப்பு உயிர்கள் இறப்புக்குப்பின் அவரவர்கள் குணங்கள், செய்கைக்குத் தக்கவாறு போய்ச்சேருகிற இடங்கள் எல்லாம் குறளும் சொல்லுகிறது. உதாரணமாக,

“யானெனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.

என்னும் குறளில் யான் எனது என்னும் அகங்காரமும் ஆசையும் அற்றவன் மண்ணுலகினின்றும் உயர்ந்த, வானுலகினின்றும் உயர்ந்த இடத்திற்குப் போய்ச்சேருகிறான் என்பதை நிச்சயப்படுத்திச் சொல்வதிலிருந்து வானுலகிலும் சஞ்சரிப்பு இருக்கிறது என்பதை உறுதிப் படுத்துவதுடன், அது போக பாக்கிய சுவர்க்க நிலையே தவிர முக்தி நிலையில்லை என்பதையும் வானோர்க்குயர்ந்த உலகம்தான் மோட்ச நிலை என்பதையும் வெகு தெளிவாகக் காட்டுகிறது. பண்டைத் தமிழ் மக்கள் மூளைக் கலையில் மட்டுமல்ல, சிற்பத்திலும், சித்திரத்திலும், கணிதத்திலும், வான ஆராய்ச்சியிலும், கடலாராய்ச்சியிலும் கரைகடந்து நின்றிருக்கின்றனர்.

அவையனைத்தையும் தெளிவு படுத்த நேரம் போதாது. விஷயக் குறிப்பிற்கும் அப்பாற்பட்டது.

கலைத்திறன்

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு குறிக்கிறேன். பழைய காலத்தில்  இருந்த சிற்பங்கள், இற்றைக்கு இருக்கிற் கோவில்கள், மண்டபங்கள், கற்சிலைகள், அஜந்தாகுகை இன்னும் மற்றுமுள்ள மகாபலிபுரம் போன்ற இடங்களிலுள்ளவைகளைக் கண்டு தேர்ந்து தெளிக. மொகஞ்சதாரோ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிற பள்ளத்தில் காணப்படுகின்றவை பழமையான தமிழர்களால் ஆக்கப்பட்டது என்று ஆங்கிலேயர்கள் துருவி ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிற கட்டடங்கள், பாலக் கூண்டுகள், தண்ணீர் போகும் குழாய்கள், இற்றைக்கு உள்ள நவீன இஞ்சியனியரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைச் சுண்ணம். இந்தச் சாந்து எப்படி சேர்க்கப் பட்டவை என்று எடுத்து “மினரல் கெமிக்கல்” ஆராய்ச்சி மூலமாக பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமல் திகைக்கின்ற தன்மையெல்லாம் முன்னைய தமிழ் நாகரீகக் கலையை நன்கு நிரூபிக்கும்.

முற்காலத்தில் அரசர்களுக்கு அரசிகளுக்கு ஒருவருக்கொருவர் பார்ப்பதற்கு ஓவியங்கள் தீட்டுவதுண்டு. அந்த படங்களெல்லாம் ஒருவரை ஒருதரம் பார்த்த மாத்திரத்தில் எழுதப்பட்டவை. அரசிகள் படங்களெல்லாம் மெல்லிய சல்லாவுக்குப் பின்னால் அவர்களை நிறுத்தி, வெளியிலிருந்து அவர்கள் உருவை திரை மறைவில் நிழல்போலாடும் பிம்பத்தைத் கண்டு எழுதப்பட்டவைகள்.

ஒருவருடைய சிறு விரல் நகம் கிடைத்தால், அதை வைத்துக் கொண்டே இன்ன விரலுக்கு இந்த நகம் இருக்கும். அந்த விரல் சாமுத்திரிகா லட்சணப்படி இன்ன கையிலேயே அமையும் என்று முடிவு கண்டு உருவங்கள் சிலைரூபமாகவும், படங்கள், சித்திரரூபமாகவும் அமைக்கப்பட்ட காலமும் உண்டு.

ஒரு மரத்திலுள்ள இலைகளை எண்ணிக் கொள்வதற்கும் கணித நூல் இருந்திருக்கின்றது.

பாஞ்சசன்யம்

இற்றைய தாவர வர்க்க சாஸ்திர வளர்ச்சிகள் மகரந்தங்களை வண்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எடுத்துச் செல்கின்றன என்று சொல்லுகிறதென்றால் அற்றைய காதல் நூல் பெண்ணை புஷ்பத்திற்கு ஒப்பிட்டுவண்டோய்ச்சி மருங்கணைதல் என்று காதலைச் சித்தரிக்கின்றது.

மற்றும் கடல் ஆராய்ச்சியில் ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும், ஆயிரம் வலம்புச் சங்குகள் கூடிய இடத்தில் ஓர் சலஞ்சலமும், ஆயிரம் சலஞ்சலம் கூடிய இடத்தில் ஓர் பாஞ்சசன்யமும் இருக்குமென்று கூறுகிறது. அந்த பாஞ்சசன்யந்தான் கிருஷ்ணபகவான் கையிலிருக்கின்ற சங்கு என்று சொல்லப்பட்ட மர்மத்தின் முறை. அந்த சங்குதான் ஓங்காரத்தின் தொனியை ஒழுங்காக்க் கிளப்ப வல்லது. அதே தொனிதான் கருவிகளொடுங்கிய காலத்தில் காரணங்கள் ஓய்ந்த காலத்தில் இருதயத்தினின்றும் கேட்கப்படுகின்ற நாதம்.

இன்னும் ஆராய்ச்சிகள் பல, மற்றொரு முறை சமயங்கிடைத்தால் சொல்லுவோம்.

மருத்துவ சக்தி

மேலும் மருத்துவம் சம்பந்தமாகவோ பஸ்பம், சுண்ணம், திராவகம், கஷாயம், செந்தூரம் என்ற முறைகள் அத்தனையும் தேர்ந்து தெளிந்து, அதோடு மட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றுந்திறமையும் தங்கம் செய்யும் திறமையும் பெற்றிருந்தது தமிழ்.

தைத்தான் தாயுமான சுவாமிகள் “கந்துக மதகரியை வசமாய் நடத்தலாம்” என்ற பாட்டில் “ஐந்து லோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்”  என்கிறார். விற்றுண்ணல் என்பது தங்கமாக்குவது. ரசத்தைக் கொட்டி குளிகைகள் உண்டாக்கி அக்குளிகை மூலம் ஆகாயத்தில் சஞ்சரித்த காலமும், அதிவிரைவில் பல ஆயிரம் மைல்கள் தனிச் ரீரத்தோடு சஞ்சரித்த காலமும் உண்டு.  இன்றும் இருக்கிறது. இன்றும் அம்மாதிரி மகான்கள் குற்றாலமலைக்கு மேல் அகஸ்தியர் ஆச்ரமத்திலும், சுருளி என்ற மேற்குமலைத் தொடரிலும், கதிர்காமம் என்ற இலங்கைமலையிலும் இமயமலையிலும் இருக்கிறார்கள். சஞ்சரிக்கிறார்கள்.

அக்காலத்திய வைத்தியர் ஒருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப் பார்த்து அவன் கீரையோ கீரை என்று கூறும் குரலைக் கேட்டு பக்கத்து மனிதரிடத்தில் “இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான். இவனை சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்” என்று சொன்னபடியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அவன் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தின் சிறப்பில் ஆதாரமிருக்கின்றது.

இற்றைக்கு உயர்ந்த வைத்தியர்கள் என்று சொல்லுகிற டாக்டர்களெல்லாம் போதிக்கின்ற சுகாதாரத்தை ஆச்சாரக் கோவை என்ற சிறுநூல் அன்றே போதித்திருக்கின்றது.

தமிழ் சங்கம், முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று இருந்த காலமும் அகஸ்தியர், நக்கீரர் போன்ற துறவிகளும், முருகன், சிவபெருமான் போன்ற தெய்வங்களும், அச்சங்கங்களை ஆக்குவித்தார்கள். ஊக்குவித்தார்கள்.

அவைகள் இன்று சீர்கெட்டு சிதைந்து கிடக்கின்றன. இவைகளுக்கு ஆக்க காலம் வருகின்றது.

தமிழின் எதிர்காலம்

அதற்கு அறிகுறியாகத்தான் சமீபகாலத்தில் தோன்றிய மகான் ஜோதி ராமலிங்க சுவாமிகள்,

“கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நிறைந்த சன்மார்க்கர் ஆழ்க

தெருள் நிறைந்த நல்லோர் நினைத்த நலம்பெருக

எல்லாரும் இன்புற்று வாழ்க இசைந்து

என்று சொல்லி மறைந்திருக்கிறார்கள்.

சீக்கிரம் திருவருள் செங்கோலாட்சி நடைபெறும் என்று அருளியிருக்கிறார்கள். அந்தக் காலம், தமிழ்த்தன்மை பெற்று வன்மை பெற்று வளமுற்று இந்தியாவை ஆளுங்காலம். அதைத்தான் மிகச் சமீபகாலத்தில் மறைந்த பாரதியார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போலினிதாவ தெங்கும் காணோம்” என்றும்,

“இந்நாடு சேம்முற வேண்டுமெனில்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

என்றும் பாடியிருக்கிறார்.

இதை எவர் மறைப்பினும் எதிர்ப்பினும் தமிழ்மொழி தன் சிம்மாசனம் ஏறுங்காலம் சமீபிக்கிறது. தெய்வத்தின் திருவருளை எதிர்த்து நிற்க சிறு அரசுக்குச் சக்தி போதாது. அக்காலத்தில் குறள் அதன் மகிமையும் மாண்பும் உணர்ந்த மக்களைப் பெரிதும் உடைத்தாகி இயங்கும். இத்தனைக்கும் உலகம்மை மீனாட்சி உதவி புரிவாளாக! அந்நாள், திருக்குழந்தை முருகன் அகஸ்தியருக்குப் போதித் முழுத் தமிழும் முழங்கும் – முழு இந்தியாவிலும்.

வாழ்க தமிழ்!

[முற்றும்]

***   ***   ***

பின்னூட்டமொன்றை இடுக