சாணக்கிய நீதி – 1


ஒரு அரிசோனன்

எந்த நாடு உன்னைத் தன்மானம், மதிப்பு, வாழும் வழி, குடும்பம், உற்றார் உறவினர், நலம்விரும்பிகள், கற்கும் வழி, தன் முன்னேற்றம் – இவற்றைப் பெற அனுமதிக்கவில்லையோ, அந்த நாட்டில் வசிக்காதே.  அதைவிட்டு நீங்கு.  அது நீ வாழத் தகுதியற்றது.

—  சாணக்கிய நீதி

நூல் அறிமுகம்:

லகத்திலேயே முதன்முதலாகப் பொருளாதர நூலான அர்த்தசாத்திரத்தை எழுதியவர் என்ற  பெருமை இவருக்கிருந்தாலும், மேற்கு நாட்டவரான ஆடம் ஸ்மித்துதான் (Adam Smith) பொருளாதாரத்தின் தந்தை எனச் சொல்லப்படுகிறது.  ஆடம் ஸ்மித்துக்கும் மேலாக — ஓர் அரசன் எப்படித் தன் நாட்டை நிர்வகிக்க வேண்டும், எங்கெங்கு தந்திரமாக ஒற்றர்மூலம் உளவறிந்துச் செயல்படவேண்டும் என்று இவர் எழுதிய அர்த்தசாத்திரம் விளக்குகிறது.  இப்பொழுது உலகெங்கும் வல்லரசுகள் கையாளும் அரசதந்திரத்தைக் காணும்போது, அவர்களும் இவர்  எழுதியதைப் பின்பற்றுகிறார்களோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

சாணக்கியர்

யாரிவர்?  ஒரு ஏழை அந்தணராகப் பிறந்து, மகதப் பேரரசன் நந்தனால் உணவுண்ணும் பந்தியிலிருந்து எழுப்பித் தள்ளப்பட்டதால், அவனையே தொலைத்துக் கட்டித்தான் தனது அவிழ்ந்த குடுமியை முடிவேன் எனச் சூளுரைத்து, அவ்வண்ணமே அரச குடும்பத்தில் பிறக்காத சந்திரகுப்தனை மௌரியப் பேரரசனாக ஆக்கிய – கௌடில்யர் என்ற சாணக்கியர்தான் அவர். 

அவர் எழுதிய நூல்தான், சாணக்கிய நீதி.  இது வடமொழியான சங்கதத்தில் இருவரிப் பாக்களாக எழுதப்பட்டுள்ளது.  மொத்தம் பதினேழு அத்தியாயங்கள் உள்ளன.

நீதி எனில் முறைப்பாடு, சட்ட திட்டங்கள் வாழவேண்டிய அறநெறி என்றே பொருள்கொளல் வேண்டும். ஒரு நாடு தனக்கேற்ற சட்டதிட்டங்களை, நாட்டில் எப்படிப் பொதுவாழ்வு வாழவேன்டும் என்ற நெறிமுறையாக வகுக்கிறது.  பின்னர் அதில் தேவையான மாற்றங்களைக் கொணர்கிறது.

 கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு எழுதப்பட்ட நூல், சாணக்கிய நீதி.  எனவே, அதில் எழுதியிருக்கும் அனைத்தும் தற்பொழுதைய நடைமுறைக்கு ஒத்துவரும் என நினைத்தல் இயலாது.  எனினும், பெரும்பாலானவை இன்றும் பொருந்தும்.  உட்பொருளை எப்படிக் கொணர்கிறோம் என்பதைப் பொருத்தே, எந்தவொரு நீதிநூலும் அதன் மெய்ப்பொருளைத் தெளிவாக்கும்.

விவிலியத்திலிருந்து ஒரு சான்று:  அடிமைகளையும் நன்றாக நடத்து என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியத்தில் வருகிறது.  அதன் உட்பொருள் என்ன?  அமெரிக்காவில், “ஏசுபிரானே அடிமைகள் வைத்திருப்பதை ஆதரித்துள்ளார்,” என்று தெற்கில் அடிமைத் தனத்தை ஆதரித்துக் குரலெழுப்பினர்.  ஆனால், அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களோ, “சாத்தனைப் போல வேதம் ஓதாதீர்.  இப்பொழுது அதன் உட்பொருள் என்னவென்று சிந்தியுங்கள்.  நமக்கு கீழே, நம்மை அண்டி வேலைபார்ப்பவரை நன்கு நடத்துங்கள் என்று ஏசுபிரான சொன்னார் என்றுதான் அதற்குப் பொருள்.  மனிதரை மனிதர் விலங்குபோல நடத்துவது, வாங்கி விற்பது, அவர்தம் உரிமையைப் பறிப்பது அந்த ஏசுபிரானுக்கே அடுக்காது,” எனப் பொங்கியெழுந்து போர் தொடுத்து, அடிமைத் தனத்தையே அறவோடு அகற்றினர்.  இது வரலாறு. 

ஆகவே, எதையும் நாம் உட்பொருளறிந்து உணரவேண்டும்.  சொல்லுக்குச் சொல் மொழிமாற்றம் செய்து பொருள்கொள்வது முறையாகாது என்று முன்மொழிகிறேன்.  இருப்பினும், இக்காலத்துக்குப் பொருந்தாதவை ஒருசில இருக்கக்கூடும்; அதனால், சாணக்கியநீதியே சரியல்ல என்று கூக்குரலிடுவது பொருந்தாது என்ற எச்சரிக்கையையும் செய்வது எனது கடமையாகும்.

அவர் வடமொழியில் எழுதிய நூலை என்னால் இயன்ற அளவுக்குப் பொழிப்புரையுடன் விளக்கி எழுதலாம் என்ற அவாவினால் முன்வந்து தொடங்குகிறேன். 

அவர் எழுதியதில் என்னை மிகவும் கவர்ந்த நீதியை நான் முதலிலேயே மொழிமாற்றம் செய்து கொடுத்திருக்கிறேன்.  ஏன் பலரும் தாய்நாட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள்?  சிந்தித்துப் பார்த்தால், சாணக்கியன் அன்றே சொல்லிய அறிவுரைப்படிதானே நடந்துகொள்கிறார்கள்? 

உக்ரைனில் கல்விக்குச் சென்ற இந்திய மாணவர்

உக்ரைன்-ரஷ்யப் போரில் எத்தனை இந்திய மாணவர் – மருத்துவக்கல்விக்காக அங்கு சென்றவர் திரும்பி வந்தனர்?[1],[2]   இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தும் ஏன் அங்கு சென்றனர்? தன் தாய்நாட்டில் கற்கும் வழி இல்லாததால்தானே? 

அதுமட்டுமல்ல;  இரண்டரை ஆண்டுகளில் இருபத்தியெட்டு இலட்சம் இந்தியர்கள் வெளிநாட்டுக்குக் வேலைநாடிச் சென்றுள்ளார்கள்.[3]  ஏன்?  தாய்நாட்டில் வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் சென்றிருப்பார்களா? ஏன் அவர்களுக்கு எங்கோ பத்தாயிரம் மைல்களுக்கும் அதிகமாக, உலகின் அந்தப் பக்கத்திலுள்ள நாட்டுக்குத் தங்கள் பிறந்தமண்ணை விட்டு ஓடவேண்டும்? அப்படியென்ன அந்த அமெரிக்கக் கண்டம் அவர்களுக்குத் தங்கள் தாய்நாட்டில் இல்லாத சிறப்பு கிட்டிவிட்டது?

சிந்திக்கவேண்டிய விடயம் அது.

அறிமுகத்தை மேலும் வளர்க்காது, சாணக்கியன் செப்பிச்சென்ற நீதியைக் காணுவோமா?

குறிப்பு:  சாணக்கியர் எழுதிய வடமொழிச் செய்யுள்களை நாகரியில் எழுதாது, தமிழெழுத்துக்களிலேயே கொடுத்திருக்கிறேன்.  சரியான ஒலிப்புக்காக 1, 2, 3, 4 என்று எழுத்துக்குமேலே சிறிய எண்களில் கொடுத்துள்ளேன்.

*          *          *

அத்தியாயம் 1

ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதி4பதிம் ப்ரபு4ம் |

நாநாஶாஸ்த்ரோத்3த்4ருதம் வக்ஷ்யே ராஜநீதிஸமுச்சயம் || 1  ||

பதவுரை:  மூன்றுலகங்களுக்கும் நாயகரும், எங்கும் நிறைந்தவருமான இறைவனைத் தலைவணங்கிப் பல சாத்திரங்களிலிலும் காட்டப்பட்ட அரசநீதியை எடுத்துரைக்கிறேன்.       —             —             1

நீதிநூல் எழுதும் சாணக்கியர்

விளக்கம்இறைவணக்கத்துடன் எதையும் தொடங்குவது தொன்றுதொட்டு வரும் மரபு  அதையே சாணக்கியரும் செய்துள்ளார்.  இதற்கு என்ன விளக்கம் என்று கேட்பதுபோல இருக்கும்.  முதலில் அவர் எப்படி இறைவனை வணங்குகிறார் என்று பார்த்தால், தலையால் வணங்குகிறேன் என்கிறார்.  கைகூப்பி வணங்குவதை விடத் தலையால் வணங்குவது சிறப்பாகும்.  எண்சாண் உடலுக்குத் தலையே முக்கியம் என்பதால், தலையால் பணிவதே சாலச் சிறந்தது என்று குறிப்பிடுகிறார்.

இறைவன் எப்படிப்பட்டவன் என்பதையும் சொல்கிறார்.  மூவுலங்களுக்கு அதிபதி என்றால் அதென்ன மூன்று உலகங்கள்?  நமக்குத் தெரிந்தவரை பூவுலகம் ஒன்றில்தானே மக்களும், உயிரினங்களும் உள்ளன.  அப்படியிருக்க, மற்ற இரண்டு உலகங்கள் எவை என்ற கேள்வி எழுகிறது.  வேதம், பூ:, புவ:, ஸுவ: என்று மூன்று உலகங்களைக் குறிப்பிடுகிறது.  அவை, மண்ணுலகம், விண்ணுலகம், இறையுலகம் என எழுதாக் கிளவி சொல்லுகிறது.  இவை மூன்றுக்கும் அதிபதியாக இருப்பவர் எங்கும் நிறைந்திருக்க வேண்டுமல்லவா?  அதனால் இறைவனை விஷ்ணு (omnipresent) என்று சங்கதத்தில் குறிப்பிடுகிறார்.

இக் குறியீட்டைத் திருமால் எனச் சொல்லுவோரும் உளர்.  அவர்கள், சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர் என்ற பெயரும் உள்ளதால், திருமாலையே குறிப்பிட்டுள்ளார் எனவும் வாதிப்பர்.  எனினும் அவரைத் திருநீற்றுடன் சிவபக்தராகவே காட்டுகின்றனர்.  அதனால், இறைவன், எங்கும் நிறைந்தவர் என்று பொருள் கொள்கிறேன்.  ஆனைமுகனையும், “சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்” என்றுதான் துதிக்கிறோம்.  எனவே, அத்துதி விஷ்ணு என்ற சொல்லுக்கு ‘எங்கும் நிறைந்தவர்’ என்றே ஆனைமுகனைச் சுட்டுகிறது. 

ஆகையால், சாணக்கியரின் விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் நிறைந்தவர் என்ற பொருளையே எடுத்துக்கொள்கிறேன்.

இந்நூலின் நோக்கம் அரசநீதிதான். அதையெல்லாம் தான் அறிந்தது எனாமல், அவையடக்கத்துடன் சாத்திரங்கள் உரைப்பதைத்தான் தானும் தொகுத்து வழங்குவதாகச் சொல்கிறார்.

அரசநீதி (political rules) என்று எழுதியிருக்கிறதே, இது அனைவருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழும்.  அரசன் நாட்டிற்காக இயற்றி நிறைவேற்றும் சட்டம் மக்கள் அனைவராலும் பின்பற்றவேண்டியதே.  நெறிமுறைகள் இருந்தபோதிலும், அவை சரிவர பின்பற்றப்படுகின்றவா என்று பார்த்து, தவறுபவர்களைத் திருத்தவோ, தண்டிக்கவோ உரிமையுள்ளவன் அரசன்.  ஆகவே, அரசநீதி என்றால், மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும், அதை எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதும் அதில் அடங்கும்.

அதையே சாணக்கியர் பின்வரும் பாக்களில் வலியுறுத்துகிறார்.

அதீத்யேத3ம் யதாஶாஸ்த்ரம் நரோ ஜானாதி ஸத்தம: |

4ர்மோபதே3ஶவிக்2யாதம் கார்யா(அ)கார்யம் ஶுபா4 (அ)ஶுப4ம்  ||  2  ||

பதவுரை:  எந்த நல்லொழுக்கமுள்ள மனிதன் இந்தச் சாத்திரத்தை கவனத்துடன் கற்கிறானோ, அவன் மிகச்சிறந்த நன்நெறிகள் செய்ய உகந்தவை, செய்யத் தகாதவை என விளக்குவதை அறிவான்.  —  2

விளக்கம்எவராக இருந்தாலும், தான் தொகுத்த நெறிமுறைகளைக் கற்றால், எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது, எவை நல்லவை, எவை தீமை பயப்பன என்று அறிவான் என்று இயம்பவில்லை.   மாறாம நல்லொழுக்கமுள்ள மனிதர் மட்டுமே பயனுறுவார்கள் என்கிறார். 

சங்கதத்தில் ‘தம’ என்றால் சிறந்த என்று பொருள்.  எனவே, சிறந்த மனிதர் எனாமல் ‘ஸத்’ என்ற முன்னொட்டை ஏன் சேர்க்கவேண்டும்? மிகச்சிறப்பான என்று ஏன் சொல்லவேண்டும்?  எந்தவொரு நன்நெறியையும் கற்று விளக்கச் சிறந்தவராக இருந்தாலும் போதாது, மிகச்சிறப்பான, அதாவது நல்லொழுக்கம் உள்ளவராக இருந்தால் மட்டுமே, நெறிகளில் நம்பிக்கைவைப்பர், அதைச் சரியானபடி புரிந்து, உணர்ந்து செயல்படுவர் என்கிறார். 

ஒரு சிறிய உதாரணம்:  ஒரு கொடியவனுக்குப் பயந்து ஒருவர் ஓடிவந்து  இவரிடம், “என்னைக் கொலைசெய்ய ஒருவன் வருகிறான்.  அருள்கூர்ந்து என்னைக் காட்டிக்கொடுத்து விடாதீர்கள்!” என்று  வேண்டிக்கொண்டு ஒளிந்துகொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

ஒளிந்துகொண்ட சில கணங்களில் அக்கொடியவன் வந்து, “இங்கு ஒருவன் ஓடிவந்தானே, நீங்கள் கண்டீர்களா?” என்று இவரைக் கேட்கிறான்.

“பொய் சொல்லாதே, உண்மையே பேசு” என்று அறநெறி உரைக்கிறது. 

இவர் என்ன செய்வார்?  அறநெறியைக் கற்றிருக்கிறார்.  உண்மை பேசவேண்டும் என்று  ஒளிந்துகொண்ட இடத்தைச் சுட்டிக்காட்டுவாரா? அல்லாது, “இங்கு எவரும் ஒளிந்ததை பார்க்கவில்லை,” எனப் பொய்யுரைப்பாரா?

அறநெறிப்படி உண்மை பேசினால், எளியவன் ஒருவனின் உயிர் போகும்;  கொலைக்குத் துணைபோன பாவம் இவரை வந்துசேரும்.  பொய்யுரைத்தால், அந்தப் பாவமும் வந்து சேரும்.  எச்செயலும் அறநெறிக்குப் புறம்பானதே! எதைச் செய்வது? 

பொய்யும் சொல்லக்கூடாது, உண்மையைச் சொல்லி ஓர் அப்பவி கொலையுறுவதற்கும் காரணமாக அமையக்கூடாது.  என்னதான் செய்வார், இவர்?

கொலைசெய்ய வந்தவனையே கேள்விமேல் கேள்வி கேட்கிறார்.  “அவன் ஏன் ஓடி வந்தான்?  அவன் எப்படி இருப்பான்?  நீ ஏன் அவனைத் துரத்திக்கொண்டு வந்தாய்?  அவன் செய்த குற்றம் என்ன?  திருடினானா, இல்லை வேறு ஏதாவது தீச்செயல் செய்தானா?  அவன் உயரமா, குட்டையா, ஒல்லியா, நெட்டையா?  கருப்பா, மாநிறமா, வெளுப்பா?  என்ன நிற ஆடைகள் அணிந்திருந்தான்?”

இவர் குழப்பும் குழப்பத்தால், துரத்துபவன் பொறுமையிழந்து அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

இவர் நன்நெறிக்கு ஊறு விளைவிக்கவில்லை;  உண்மையும் சொல்லவில்லை, பொய்யுரைக்கவுமில்லை;  எளியவனையும் காப்பாற்றிவிட்டார்.  இதை உணர்ந்தே, சாணக்கியருக்குச் சில நூற்றாண்டுகள் பின்னர் அவதரித்த, தமிழ்மறை இயற்றிய வள்ளுவரும்,

திருவள்ளுவர்

பொய்மையும் வாய்மையிடத்தே, புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்,

எனப் பகர்ந்திருக்கிறார்.

‘தர்ம உபதேச விக்யாத’ என்றால் நன்நெறியின் சிறந்தஅறிவுறுத்தல் என்றாகும்.  அது சொல்வதன்படி, எது செய்யத் தக்கது, எது தகாதது என்று அவை விளக்குவதை அறிந்தால்தான் சாணக்கிய நீதியைச் சரியாக உணர இயலும்.  அதைக் கற்றுச் செயல்பட, மிகச்சிறந்த நல்லொழுக்கமும் வேண்டும், அவர் எழுதியதைக் கவனமாகக் கற்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.

அப்பாடா!  எதற்கும் ஒரு மறுப்பு, அதாவது டிஸ்க்ளைமர் வேண்டுமல்லவா!  அதைத்தான் சாணக்கியர் இங்கு கொடுக்கிறார்.  இல்லாவிடில், அவரது நீதி குரங்கு கைப் பூமாலை ஆகிவிடும்.

தத3ஹம் ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா  |

யேன விஞ்ஞாநமாத்ரேண ஸர்வஞ்ஞத்யம் ப்ரபத்3யதே  ||  3  ||

பதவுரை:  எதன் பொருளை அறிந்தவுடனேயே அனைத்து அறிவாற்றலும் வந்துசேருகிறதோ, அதை மக்கள் நலத்தை விரும்பி நான் நன்றாக வழங்குகிறேன்.                              —                            —             3

விளக்கம்எழுத்தாளர் தன்னுடைய பாண்டித்யத்தைக் காட்டுவதற்காக எழுதும் நூல்கள் கற்பவரைப் போய்ச் சேராது; நூலில் துவக்கத்திலேயே, இறைவணக்கத்துடன் யாருக்காக எதற்கு எழுதப்பட்டது என்று சொல்லவேண்டும் என்று தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தன்னுடைய தத்துவபோதம் என்னும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.[4]  அது சாணக்கியரின் நீதிநூலிலும் வெளிப்படுகிறது. 

முதலில் இறைவணக்கம் எழுதினார்.  அதன்பின் எந்த நெறிநூல்களிலுந்து தொகுத்து எவருக்காக எழுதப்பட்டது, இந்நூலை எப்படிக் கற்கவேண்டும், அதனால் என்ன பயன் என்று இரண்டாம் செய்யுளில் எழுதினார்.  இந்தச் செய்யுளில் எதற்காக எழுதினோம் என்பதைத் தெரிவிக்கிறார்.

தனது அறிவுத்திறனை, நீதிநூல்களைத் தான் கரைத்துக் குடித்ததைப் பறைசாற்ற இந்த நூலை எழுதுவதாகச் சொல்லவில்லை; மாறாக, மக்களின் நலத்தை விரும்பியே தன் வழங்கியதாக எடுத்துரைக்கிறார். சரி, எழுதியாகிவிட்டது.  இதைக் கற்பதனால் என்ன கிடைக்கும் என்று இதற்குமுன் எழுதிய செய்யுளில் தெரிவித்திருந்தும் அதை வலியுறுத்துவற்காக, மீண்டும் இந்த நூலின் கருத்தை, அதன் உட்பொருளை உள்வாங்கினால் அனைத்து அறிவாற்றலும் வந்து சேருகின்றன என முழங்குகிறார்.

சங்கதத்தில் ஸர்வ என்றால், அனைத்து என்று அறிவோம்.  அதை நடைமுறையில் தங்குதடையின்றிக் கையாளுகிறோம்.  ஸர்வஞ்ஞத்யம் என்றால் அனைத்தையும் அனைத்தையும் அறியும் திறன் என்று எடுத்துக்கொளல் வேண்டும்.   ‘அனைத்தையும்’ என்றால்?  முன்வந்த செய்யுளில் சொன்ன, நீதி நெறிப்படி செய்யத்தகுந்த நற்செயல்கள் எவை, செய்யத் தகாதத் தீச்செயல்கள் எவை என்பதை ஆய்ந்தறியும் அறிவாற்றலே ஆகும்.

(தொடரும்)


[1]         “ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் உக்ரைனில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்,” உக்ரைனிலிருந்து திரும்பும் மருத்துவ மாணவர்கள்; அவர்கள் எதிர்காலம் இனி என்னாகும்? — விகடன் இணைய இதழ், மார்ச், 3, 2022, https://www.vikatan.com/social-affairs/education/how-ukraine-war-will-impact-future-of-indian-medical-students-who-are-study-there   

[2]      “மருத்துவப் படிப்புக்காக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் உக்ரைன் செல்வது ஏன்?” — இந்து தமிழ் திசை, ஆகஸ்ட் 5, 2022, https://www.hindutamil.in/news/india/772662-why-do-thousands-of-students-go-to-ukraine-to-study-medicine-educators-say-opening-more-medical-colleges-in-india-is-the-solution.html

[3]   “2.5 ஆண்டுகளில் வேலைக்காக வெளிநாடு சென்ற 28 லட்சம் இந்தியர்கள்,” தினமணி இணைய இதழ், 5, ஆகஸ்ட், 2022,  https://www.dinamani.com/india/2022/aug/05/28-lakh-indians-have-gone-abroad-for-work-in-25-years-3893192.html

[4]       “தத்துவபோதம்”, தயானந்த சுவாமிகள் ஆங்கிலந்தில் எழுதி பேராசிரியர் ந. மணி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல், ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளை, கோயம்புத்தூர், 2013.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s