கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 20


முனைவர் இரா. இராமகிருட்டினன்

64. வழை

Image result for வழை

வழை

இப்பூவைத் தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ [கொங்கு முதிர் நறு வழை]  எனக் குறிஞ்சிப்பாட்டும், பொய்கைக் கரைகளில் வளர்ந்திருக்கும், மணம் நிறைந்த இதனைக் ‘கரையன சுரபுன்னை’ என்று பரிபாடல் (11:17)பாடுகிறது. பண்டை மக்கள் இதனைக் கண்ணியாகக் கட்டி அலங்கரித்துக் கொண்டனர் என்பதை, ‘வழைப் பூங்கண்ணி’ என்று வரும் புறப்பாடல் வரியால் (131:2) அறிகிறோம்.

நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் (அகநானூறு, 8); கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து சுரபுன்னை வளரும். குமணன் ஆண்ட முதிரமலையிலும், வளர்ந்திருந்தது (புறநானூறு, 158:21-22), தொண்டைநாட்டு மலைகளில் வழை செழித்து வளர்ந்திருந்தது (குறுந்தொகை, 260:6): மூங்கில் அரிசி போட்டுக் குறமகள், வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள் என்பதை, “கழை வளர் நெல்லின் அரி, உலை ஊழத்து, வழை அமல் சாரல் கமழத் துழைஇ” என்ற வரிகள் (மலைபடுகடாம், வரிகள் 180-181) படம் பிடித்துக் காட்டுகின்றன.

வழை வளரும் காடு நீர்வளம் மிக்கவிருப்பதால், அது பாலைநிலமாக மாறுவதில்லை என்பதை, “வறன் உறல் அறியாத வழைஅமை நறுஞ் சாரல்” என்ற கலித்தொகைப் பாடலால் அறிகிறோம்; மேலும், சுரபுன்னை வளர்ந்துள்ள மலைச்சாரலில் திரியும் வருடை என்னும் நல்ல மானினது குட்டியை மலைமக்கள் வளர்ப்பதை “வழைவளர் சாரல்வருடை நன்மான், குழவி வளர்ப்பவர்” என்பதையும் கலித்தொகை (53:1, 50 : 21-22) காட்டுகிறது.

வையை ஆற்றின் நீரோட்டம், நாகமரம், அகில், சுரபுன்னை, ஞெமை, சந்தனம் ஆகிய மரங்கள் வருந்தும்படி செய்ததைப் பரிபாடல் (12:4-5) பதிவு செய்துள்ளது.

  1. காஞ்சி
Image result for காஞ்சி மலர்

காஞ்சி

காஞ்சியை ஆற்றுப் பூவரசு என்றும் கூறுவர். தண்ணீர் நிறைந்த பொய்கை, ஆறு, மடு இவைகளின் கரைகளில் இது வளர்ந்து நிற்கும். இளவேனிற் காலத்தில் மலரும் இம்மலரிலிருந்து நறுமணம் கமழும். தாதுகள் உதிர நிற்கும் காட்சியை,

“ ……………….  காஞ்சிப்

பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்,

                வதுவை நாற்றம் புதுவது கஞல”                  

என்று அகநானூறு (25:3-5) கூறுகிறது. இணராகப் பூத்து நிற்கும் இவை, கோதைபோன்று காட்சி தருவதை, ‘கோதை இணர, குறுங்கால், காஞ்சிப் போதுஅவிழ் நறுந்தாது’ என அகப்பாடல் (296:1-2) தெரிவிக்கிறது. குட்டையான அடிமரத்தைக் கொண்ட காஞ்சிமரத்தின்மேல் பச்சைநிறம்கொண்ட மாதவிக் கொடி படர்ந்திருந்ததை, “குறுங்கால் காஞ்சிசுற்றிய நெடுங்கொடிப் பாசிலைக் குருகின்”  என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் (375-376) காட்டுகின்றன.

குளிர்ந்த மடுவின் கரையின் மணல் திடல்களில் காஞ்சிமலர்கள் பூந்துகளைச் சிந்தியதால், அத்திடல்கள் திருமணப் பந்தலில் தோன்றும் மணத்தைப் பெறுகிறது.

                “தண்கயம் நண்ணிய பொழில்தோறும், காஞ்சிப்

                 பைந்தாது அணிந்த போதுமலி எக்கர்

                 வதுவை நாற்றம் புதுவது கஞல” — அகநானூறு 25:3-5

தாதும், தேனும் நிறைந்திருப்பதால் வண்டுகள் எப்போதும்  இம்மலரைச்சுற்றி ஆர்த்துக்கொண்டே இருக்கும். அத்துடன்,இதன் தாதினைக் குயில்களும் அளைந்துகொண்டிருக்கும் என்பதை, ‘மிஞிறு ஆர்க்கும் காஞ்சி’ எனவும், ‘விரிகாஞ்சித் தாதுஆடி இருங்குயில் விளிப்பவும்’ (26:3, 34:8) என்பதையும், மகளிர் தழை ஆடைக்காகப் இதன் தளிரைப் பறிப்பதைக் ‘கொய்குழை அகை காஞ்சி’(74:5)  எனவும் கலித்தொகை காட்டுகின்றது.

உழவர்கள் இதன் நிழலில் தூற்றா நெற்குவியலைக் குவித்து வைப்பர் (பதிற்றுப்பத்து, 62:15). இம்மலர்கள் நறிய பூமாலையைத் தொடுத்தாற்போன்று காட்சியளிப்பதை, “நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக் குறுங்காற் காஞ்சி கொம்பர் ஏறி” என்று சிறுபாணாற்றுப்படை (178-179) சுட்டுகின்றது.

  1. மணிக்குலை கள் கமழ் நெய்தல்

ஆம்பல், கெட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை. கடலாடு மகளிரும் நெய்தல் பூவை மணலில் செய்த பாவைக்கும் அணிய விழையார் (ஐங்குறுநூறு, 187:2-3). சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர், ‘நெய்தலங்கானல் நெடியோய்’ என விளிக்கிறார். இதனால் நெய்தலங்கானல் என்பது சோழ நாட்டின் பகுதியாக விளங்கிய பெருநிலப் பகுதி எனத் தெரிகிறது (புறநானூறு, 10:12).

தேன் நாறும் நறிய நெய்தற்பூ என்பதை மதுரைக்காஞ்சி (வரி 250),  “கள் கமழும் நறு நெய்தல்” என்று குறிப்பிடுகிறது. நீண்ட நறியநெய்தல், கருமை ஒரு வடிவு கொண்டது என்று கூறும் வண்ணம் அலர்ந்ததை, “மை என விரிந்தன, நீள் நறு நெய்தல்” என்று மலைபடுகடாம்  (வரி 124) பாடுகிறது.

  1. பாங்கர்
Image result for பாங்கர் மலர்

பாங்கர்

‘பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால்’ (கலித்தொகை, 111:3-4) எனக் கூறப்பட்டிருப்பதால், முல்லைபோலக் கொடி இனமாக இதைக் கருதலாம். ‘தாய’ என்பது படர்தல் என்ற பொருளில் ஈண்டு ஆளப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள ‘பாங்கர்’ என்ற சொல்லுக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ‘ஓமை’ என்று பொருள் கூறியுள்ளார். அவரே கலித்தொகையில் வரும் (பாடல் 111) ‘பாங்கர்’ என்ற சொல்லுக்கு ‘பாங்கர்க் கொடி’ என்றும் உரை வகுத்துள்ளார்.

கார் காலத்தில் வெண்நிறத்தில் பூக்கும் பாங்கர் கொடியானது முல்லைக் கொடியுடனும், காந்தள் கொடியுடனும் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டிருப்பதால், இதுவும் ஒரு முல்லை நிலத்துக் கொடியாகத்தான் இருக்கவேண்டும். சூடப்படும் பூ என்பதைத்தவிர, இதைப் பற்றிய வேறு பண்புகள் சங்க இலக்கியப் பாடல்களில் கிடைக்கப் பெறாமையால், இதனுடைய தற்காலத் தாவரப் பெயரைச் சரியாக நிர்ணயம் செய்ய முடியவில்லை என்கிறார் கு. வி. கிருஷ்ணமூர்த்தி (தமிழரும் தாவரமும், பக். 111-112).

  1. மராஅம்
செங்கடம்பு.jpeg

செங்கடம்பு

மரா மரம் – கடம்பு என வழங்கப்படும். இது வெண்கடம்பு, செங்கடம்பு என இரு வகைப்படும். வெண்கடம்பின் மலர்கள் மழையுடன் வீழும் பனிக்கட்டிக்கு (அகநானூறு, 211:1-5) உவமிக்கப்படுகின்றன. நெருப்பினைப்போலச் செந்நிறப் பூக்களை உடைய கொம்புகளைக் கொண்ட மராமரம் என்பதை, “எரி கான்றன்ன பூஞ்சினை மராஅத்து” என்னும் பாடல் பகுதியால் (மலைபடுகடாம், வரி 498) அறிகிறோம்.

“தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ்சினை, வேனில் ஓர்இணர்” என்னும் குறுந்தொகைப் பாடல் பகுதியாலும் (211:4-5), ஐங்குறுநூறு இளவேனிற் பத்தில் இடம்பெறும், “அவரோ வாரார்; தான்வந்தன்றே, வலம் சுரி மராஅம் வேய்ந்து, நம் மணங்கமழ் தண்பொழில் மலரும் பொழுதே” (ஐங்குறுநூறு, 348) என்னும் பாடலும், மராமரம் இளவேனிலில் பூப்பது என்பதும், இதன் மலர் வலமாகச் சுழித்த அமைப்புடையது என்றும் அறிவிக்கின்றன.

தேனுண்டாக மலர்ந்த கடம்பின் மெல்லிய பூங்கொத்துக்களையும், யா மரத்தின் பூக்களையும் மரல் நாரில் தொடுத்து கூத்தர் அணிந்தார்கள்.

“தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும்,

                 உம்பல் அசைத்த ஒண்முறி யாவும்,

                 தளிரொடு மிடைந்த காமர் கண்ணி,

    வெண்கடம்ப மரப்பூக்கள், ‘விரிமலர் மராஅம் பொருந்தி’ [அகப்பாடல் -172:7] என்றும், வண்டுகள் பாயும் வெண்கடம்பின் பூங்கொத்துகள் கமழும் கூந்தல் என்றும், ‘தேம் பாய் மராஅம் கமழும்கூந்தல்’ [நற்றிணை -20:3] பாடப்பெற்றிருக்கின்றன.

வேங்கட மலையிலுள்ள வெண்கடம்ப மரத்தில் கிளிஞ்சல் சுண்ணாம்பைப் போல வெள்ளிய பூக்கள் பூத்ததை, “சுதை விரித்தன்ன பல்பூ மராஅம்” என்ற அகப்பாடல் வரி (211:2) காட்டுகின்றது. வெண்கடம்ப மரத்தின் குறுகிய கிளையை வளைத்து நின்றான் தலைவன்; தலைவி அக்கிளையில் வலமாகச் சுரிந்த வெண்மையான பூங்கொத்துகளைப் பறித்தாள்; அவற்றைத் தனக்கும், தன் பஞ்சாய்க் கோரைப் பாவைக்கும் பகுத்து வைத்ததைக் கண்டு தலைவன் மகிழ்ந்த இனிய காட்சியைப் பின்வரும் ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று (383:2-6) பதிவு செய்துள்ளது.

“நெடுங்கல் மராஅத்து குறுஞ்சினை பற்றி,

                 வலஞ்சுரி வால்இணர் கொய்தற்கு நின்ற

                 மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந்தன்றே –

                 பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்

                 அம்சாய்க் கூந்தல் ஆய்வது கண்டே”

        பலராமன் மார்பில் புரளும் வெண்கடம்ப மாலை போன்று திருமாலிருஞ்சோலை அருவி திகழ்ந்ததை, “….  தம்முன் மார்பின், மராமலர்த்தாரின் மாண்வரத் தோன்றி, அலங்கும் அருவி” எனும் பரிபாடல் வரிகள் (15:19-21) சுட்டுகின்றன. நீர்க் கரையிடத்தே அழகுற நின்ற, பூங்கொத்துகளை உடைய வெண்கடம்பு என்பதை, ‘ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்’ என்றும், நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், பழைய வலியுடைய மராஅம் மரத்தின் கீழும் தெய்வங்கள் உறையும் என்பதை, ‘துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்’ என்றும் கலித்தொகை பாடல் வரிகள் (26:1, 101:13) உணர்த்துகின்றன. “செந்தளிர் மராஅத்துப் பைங்காய்” என்று பெருங்கதை (3. மகத காண்டம், 1. யாத்திரை போகியது :114) குறிப்பிடுகிறது.

         திரங்குமரல் நாரில் பொலியச் சூடி” – (மலைபடுகடாம், 428-431, 498)

இருளையும் தோற்கச் செய்யும் பருத்த அடியையுடைய செங்கடம்ப மரத்தில் பூத்த, சக்கரம் போல் வட்ட வடிவமான பூக்களால் தொடுக்கப்பட்ட குளிர்ச்சியுள்ள மாலை கிடந்து அசையும் மார்பினனாய் முருகன் விளங்குவதை,

                “இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து

                 உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்”

எனும் திருமுருகாற்றுப்படைப் பாடல் வரிகள் (10:11) சுட்டுகின்றன.

[இன்னும் மலரும்]

Advertisements

One thought on “கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 20

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s