தமிழன்னையின் அணிகலன்கள்


மீனாட்சி பாலகணேஷ்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஈரோட்டில் நான் பள்ளிச்சிறுமியாக இருந்த காலத்தில், ஆண்டாண்டுதோறும் தமிழிலக்கிய விழா ஒன்றினை நான் படித்த கலைமகள் கல்விநிலையத்தின் தாளாளரான உயர்திரு. மீனாட்சிசுந்தர முதலியார் M.A., L.T., அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். திருவாளர்கள். கி. வா. ஜ., ம.பொ. சி., கி. ஆ. பெ. விசுவநாதம் இன்னும்பல பெரும் தமிழறிஞர்கள் வந்து நான்கு நாட்கள் இலக்கிய உரைகளாற்றிச் சிறப்பிப்பார்கள். அவ்வமயம் பள்ளி இசையாசிரியை எங்களுக்குக் கடவுள் வாழ்த்தும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடுவதற்காக, சங்க இலக்கியங்களிலிருந்து பல பாடல்களைத் தொகுத்துச் சொல்லிக்கொடுத்திருந்தார்.

Image result for கி.வா. ஜகன்நாதன்

கி.வா. ஜகன்நாதன்

சிறுமிகள் நாங்கள் பாடிமுடித்ததும் வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜ. அவர்கள், “குழந்தைகள் மிக அழகாகப் பாடினார்கள்,” என ஆசிகூறிப் பாராட்டிய பின்னரே விழாவினைத் துவக்குவார்கள். நாங்களும் பரவசத்தில் பூரித்து மகிழ்ந்த நாட்கள் அவை.
நான்கு நாட்களும் வெவ்வேறு பாடல்களைப் பாடுவதற்காக, அச்சமயம் மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘நீராரும் கடலுடுத்த,’ எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மட்டுமின்றி, இன்னொன்றும் சொல்லித்தரப் பட்டது. இன்றுவரை பல இடங்களில் இதனைப் பாடி வந்துள்ளேன். பல தமிழாசிரியர்களையும் இதனை இயற்றியவர் யாரெனக் கேட்டும் வருகிறேன்; எவருக்கும் தெரியவில்லை!
தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்துள்ள இந்த அழகிய பாடல் ஐம்பெரும்காப்பியங்களையும் தமிழ்த்தாயின் அணிகலன்களாகச் சித்தரிக்கின்றது.
மிக அழகான பொருள்செறிந்த பாடல்.

காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
யாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார்இன்பப்
போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடிச்
சூளாமணியும் பொலியச்சூடி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்குதமிழ் நீடுவாழ்க!

பொருள் அறிவது மிக எளிது.
Image result for தமிழன்னைதமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி ஒளிர்கின்றது. கைகளில் அணிந்த வளைகளாக வளையாபதி எனும் காப்பியம் திகழ்கின்றது. கருணை பொருந்திய அத்தமிழன்னையின் மார்பில் (சீவக)சிந்தாமணி எனும் ஆரம் ஒளிவீசுகின்றது. அன்னையின் மெல்லிய இடையில் (மணி)மேகலை அணியப்பட்டுள்ளது. அவளுடைய திருவடிகள் சிலம்பார் இன்பப் போதொளிர்பவை- அதாவது சிலம்புகளை (சிலப்பதிகாரம்) அணிந்த திருப்பாதங்கள். சிலப்பதிகாரத்திற்கு மட்டும் ‘சிலம்பார் இன்பப்போது’ எனும் அடைமொழி ஏன்? சிலப்பதிகாரத்தைப் படிப்பவர்கள் அடையும் மகிழ்ச்சி, பெருமிதம், ஆகியன இன்பமயமானவை. ஆகவே அத்தகைய பெருமை பொருந்திய சிலம்பினை அணிந்துள்ள தமிழ்த்தாயின் திருவடிகள் இன்பம் மிகுந்த அழகான மலர்களால் அர்ச்சிக்கப்படுவனவாம்.
பின், தனது பொன்முடியாகச் சூளாமணி எனும் பெரும்காப்பியத்தையே அணிந்துள்ளாள் தமிழன்னை. இவள் அரசியாக அமர்ந்து எந்தச் செங்கோலைக் கையில் ஏந்தியுள்ளாள் தெரியுமா? ‘நீதியொளிர் செங்கோலாய்’த் திருக்குறளைத் தாங்குகிறாள் இவள். தமிழன்னை செங்கோலோச்ச இதைவிடத் தகுதியான செங்கோல் எதுதான் உளது?
அத்தகைய தமிழ் நீடுவாழ்க! என உளங்கனிந்து பெருமிதத்தில் விம்மி வாழ்த்தும் இந்தப்புலவர் யார்?
தெரிந்தவர்கள் சான்றுகளுடன் கூறுங்களேன்.
இதைப்பாடும்போதெல்லாம் என் உள்ளமும் உடலும் நெகிழ்ந்து சிலிர்க்கும்.
பின்னாளில் இதனைக் கல்லூரி விழாவொன்றில் தமிழறிஞர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைமைதாங்க, கடவுள் வாழ்த்தாகத் திருக்குறளையும், தமிழ்த்தாய் வாழ்த்தாக இதனையும் நான் பாடியபோது, அன்னார் அகமிக மகிழ்ந்து, கல்லூரி முதல்வரிடம் பிரத்தியேகமாக எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கக் கூறியிருந்தார்.
இதெல்லாம் எண்ணிப் பரவசப்படக்கூடிய நிகழ்ச்சிகள்.
தமிழுக்கும் அமுதென்று பேரல்லவா?

****

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s