வாழ்க்கை எனும் ஓடம்… – 2


மீனாட்சி பாலகணேஷ்
2. பிச்சை புகினும் கற்கை நன்றே!

Image result for teacher and students clipart
நன்றி: Lakeshore

“வீட்டுப்பாடம் எழுதின நோட்டுப் புத்தகத்தை எல்லாரும் என் மேசையில் கொண்டுவந்து வையுங்கள்!” வகுப்பு ஆசிரியையிடமிருந்து உத்தரவு பிறந்தது. மடமடவென எல்லா மாணவிகளும் வரிசையாகச் சென்று எங்கள் நோட்டுப்புத்தகங்களை அடுக்கினோம். ஒழுங்காக அடுக்குகிறோமா எனக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்தபடி இருந்தார் கலைவாணி டீச்சர். அலமேலு தயங்கியபடியே தனது வீட்டுப் பாடத்தை அவற்றுடன் சேர்த்தாள். பாய்ந்து எடுத்தார் ஆசிரியை.

“ஏய்! என்ன இது? என்னத்திலேயோ கிறுக்கிட்டு வந்திருக்கே? ஒழுங்கா ஒரு நோட்டுப் புத்தகத்தில எழுதற வழக்கம் இல்லையா?” எனச் சீறினார்.
ஒரு இயலாமையுடன் தலைகுனிந்து நின்ற அலமுவின் கோலம் என் மனதை வாட்டிச் சிதைத்தது. ஏன்? அவள் எழுதிய வீட்டுப் பாடத்தில் என்ன தப்பு? அவள் கையெழுத்து மணிமணியாகத்தான் இருக்கும். பின்….?
மாணவிகள் நாங்கள் எல்லாரும் வீட்டுப்பாடத்திற்கென்று ஒரு நோட்டுப்புத்தகம் வைத்திருப்போம். சிலர் ஆண்டுத் தொடக்கத்தில் புதியதாக ஒரு இரண்டு குயர் நோட்டுப்புத்தகம் வாங்கி அட்டைபோட்டு லேபில் எல்லாம் ஒட்டி வைத்திருப்பார்கள். சிலர், வீட்டுப்பாடம்தானே என்று சென்ற ஆண்டு நோட்டுப் புத்தகங்களின் எஞ்சிய பக்கங்களைச் சேர்த்து பைண்டுசெய்து தனியாக வைத்திருப்போம். இதை ஆசிரியை/பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொள்ளும்/கொள்வார். என்னுடையது இந்த ரகத்தைச் சேர்ந்தது. காகிதத்தை வீணாக்காமல் உபயோகிக்க என் தந்தையார் சொல்லித்தந்த ஒரு நல்ல வழி இது.
பாவம்! அலமுவினுடைய வீட்டுப்பாட நோட்டு எது தெரியுமா?

நம்ப மாட்டீர்கள்.

தினசரி கிழிக்கும் நாள்காட்டி காலண்டர் உண்டே! அதன் பின்பக்கம்தான்! பாவம், அவ்வளவு வறுமைப்பட்ட குடும்பம். ‘வதவத’வென்று நான்கு தம்பி தங்கைகள். அவள் தகப்பனார் ஒரு சாப்பாட்டு விடுதியில் சமையல்காரர். அம்மா அங்கிங்கு வீடுகளில் சிரார்த்த சமையல், முறுக்கு சுற்றுவது, வடகம் போடுவது என்று அப்பப்போது வேலைசெய்வாள். பெரிய வரும்படி கிடையாது என்பது வெட்டவெளிச்சம். இரண்டுவேளை குடும்பம் ஒழுங்காகச் சாப்பிட்டாலே பெரிய விஷயம். இதில் பள்ளிக்கூடமா, படிப்பா, நோட்டா, புத்தகமா?

எல்லாமே ஒரு கழைக்கூத்தாட்டம் தான்!
அலமுவிடமிருந்தும், அவள் வீட்டிற்கு ஒரொரு சமயம் சென்றதிலிருந்தும் இதையெல்லாம் அறிந்துகொண்டிருந்தேன். என் பெற்றோர்கள் நான் அங்கு செல்வதனைத் தடைசெய்துவிட்டனர். ஏனென்றால், அலமுவின் அம்மா அற்ப சொற்ப உணவை — அவளுடைய தகப்பனார் சிலபொழுதுகளில் கொண்டுவரும் கீரைவடை, பஜ்ஜி ஆகியவற்றையும், வீட்டிலுள்ள நீர்மோர் சேர்த்த சாதத்தையும் மாவடுவுடன் — எனக்கும் பகிர்ந்தளிப்பார்களே — அதனால் அனாவசியமாக அக்குழந்தைகளின் பங்கில் துண்டு விழுவதனை என் தாயார் விரும்பவில்லை எனப் பின்னாளில் தெரிந்து கொண்டேன். எப்படிப்பட்ட இங்கிதம்!
இப்போது வீட்டுப்பாடத்திற்கு வருவோம். அலமு என்ன செய்யப்போகிறாள்? குழப்பத்துடன் உள்ளம் பதைபதைக்க அவளையே பார்த்தபடி இருந்தேன். “எல்லாரும் போர்டில் உள்ள கணக்கைப் போடுங்கள்,” என உத்தரவிட்ட ஆசிரியை, “என்ன இது அலமேலு? ஹெச். எம். ( தலைமை ஆசிரியை) பார்த்தால் இந்த ஒழுங்கீனத்திற்கு என்ன பதில் சொல்வது?” எனப் பாதி கரிசனத்துடனும், பாதி கண்டிப்பாகவும் கேட்டார். அலமு ‘திரு திரு’வென விழித்தாள்.
வகுப்பாசிரியை அலமுவை அடுத்தநாள் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வரும்படி கூறி, வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

அது அலமுவால் முடியாது என்பது எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் சட்டங்கள் சட்டங்கள்தாமே? அவற்றை மீற இயலுமா?

Image result for two women in train clipartஎனது உள்ளம் தத்தளித்தது. மாலை பள்ளிமுடிந்து வீடுதிரும்பும்வரை நிலைகொள்ளவில்லை. அப்பாவிடம் அலமுவின் நிலைமையை விளக்கி, பழைய நோட்டுப்புத்தகங்களின் பக்கங்களைச் சேர்த்து பைண்டு செய்தவற்றில் ஒன்றினை எடுத்துக்கொண்டுபோய் அவளிடம் கொடுத்துவிட்டு வந்தபின்தான் நிம்மதியாயிற்று.

“சமர்த்துப்பொண்ணே!” எனப் பாட்டி என்னை அணைத்துக் கொண்டாள்; அப்பா என் தலையைப் பரிவோடும் பெருமிதத்தோடும் வருடினார்.

***

காலம் உருண்டோடியது. அவரவர்கள் தமது வாழ்க்கைப்பாதையில் சென்றோம்; செல்கிறோம். ஒரு ரயில் பயணத்தின்போது என் வயதொத்த ஒரு பெண்மணி என்னிடம், “நீங்க ரமாதானே? பொள்ளாச்சியில் இருந்தேள் இல்லையா?” என்றபோது அவரை நிமிர்ந்து உற்றுப்பார்த்தேன். இது……? “நீங்கள்…….,” என்னை முடிக்க விடவில்லை.

“நான்தான் அலமு!” படீரென்று போட்டுடைத்தபோது ஆச்சரியமும் கழிவிரக்கமும் நிரம்ப அவரை நோக்கினேன்.
“இப்போ எங்கே? என்ன பண்ணறே? பண்ணறீங்க?”
“ஸ்கூல் டீச்சரா இருந்து ரிடையர் ஆயிட்டேன். ஒரே பையன் கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கான். இது என் மருமகள்; பேர்த்தி அலமு; சொந்தக்காரா கல்யாணத்துக்குப் போயிட்டு வரோம்,” எனப் பிரமிக்க வைத்தாள் என் தோழி. எனக்குப் பேச எத்தனையோ இருந்து நாவெழவேயில்லை! எப்படிப்பட்ட எதிர்நீச்சல் போட்டு மேலான ஆசிரியைத்தொழிலில் வேறு ஈடுபட்டு, எளிமையின் சின்னமாக…. என் தோழி! பரவசத்தில் அவளை இறுக அணைத்துக் கொண்டேன்.
எங்கள் இருவர் கண்களிலும் பழைய எண்ணங்களில் நீர் தளும்பியது. கேட்க வேண்டிய பல வினாக்கள் இருவரிடமும் கொள்ளைகொள்ளையாக; ஆனால் யாருக்கும் விடை தேவையில்லை; தானே இருவருக்கும் புரிந்துவிடும். நுணுக்கமான விளக்கங்கள் இங்கு தேவையேயில்லை.
“ரமா, கேட்டிருக்கியா நீ? பிச்சைபுகினும் கற்கை நன்றே என்று சொல்லிக் கொடுத்தாங்களே, நம்ம டீச்சர்…..”

அலமு என்ன சொல்ல வருகிறாள் எனப்புரிந்தது. இன்னும் இந்த ரயில் பயணத்தில் அதையெல்லாம் அறிந்துகொள்ள நேரமிருக்கிறது. கண்களைத் துடைத்துக்கொண்டு, “வாடீ, முதலில் சாப்பிடலாம்,” என அவரவர் சாப்பாட்டு மூட்டைகளைப் பிரித்தோம். அவளுடைய தயிர்சாதமும் மோர்மிளகாயும் தேவாமிர்தம். கீரைவடை வேறு! “அப்பாகிட்டயிருந்து நான் கத்துண்ட சமையல்டீ,” என வெள்ளையாகச் சிரித்தாள் அலமு.
ரயில் கூவிக்கொண்டே ஓடியது. நேரம் ஓடியது. எண்ணங்கள் ஓட்டமாக ஓடின. கணவர்களும் துணைசேர்ந்து கொள்ள எங்கள் பேச்சும் எதையெல்லாமோ தொட்டுத்தொட்டு ஓடிக்கொண்டே இருந்தது.
வாழ்க்கையெனும் ஓடம் எத்தகைய உயர்வான பாடங்களையெல்லாம் வழங்குகிறது! உள்ளம் சிலிர்த்தது.

*****

பின்னூட்டமொன்றை இடுக