ஆன்மீகமும் நானும் —  8


நடராஜன் கல்பட்டு

கொக்கென்று நினைத்தீரோ, கொங்கணரே?

Image result for sanyasi and woman clipartஒரு ஊரில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒருவன் தன் மனைவி, குழந்தைகளைவிட்டுவிட்டுக் காஷாயம் தரித்துக் காட்டுக்குச் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தவம்புரிந்தான்.  உணவு தேவைப்பட்டபோது அருகிலிருந்த ஒரு ஊருக்குச் சென்று பிச்சையெடுத்து உண்டான்.  சில நாள்கள் கழிந்தன.

ஒரு நாள் அவன் தவம் செய்துகொண்டிருந்தபோது மரத்தின்மீது வந்தமர்ந்த கொக்கு ஒன்று அவன் தலையில் எச்சமிட்டது.  தவம்கலைந்த அவன் கோபக் கனல் வீச மேலே அண்ணாந்து பார்த்தான்.  அடுத்த கணம் கொக்கு சாம்பலாகிக் கீழே விழுந்தது.

புதுச் சாமியாருக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.  ஆகா, எனக்கு அபாரசக்தி வந்துவிட்டது என்று எண்ணியபடி ஊருக்குள் நுழைந்தார்.  ஒரு வீட்டின் கதவைத் தட்டி, “சாமியார் வந்திருக்கிறேன்.  பிச்சைபோடுங்கள்” என்று உரக்கக் கத்தினார்.

உள்ளிருந்து குரல் வந்தது, “நான் என் கணவருக்கு போஜனம் அளித்துக்கொண்டிருக்கிறேன் சற்றுப் பொருங்கள். வருகிறேன்.”

சற்றுநேரம் கழித்து மீண்டும் கதவைப் பலமாகவே தட்டி, “சாமியார் வந்திருக்க்றேன்.  பிச்சைபோடுங்கள்,” என்று உரத்த குரலில் கத்தினார்.

சற்று நேரத்திற்குப் பின் கதவு திறந்தது.  கையில் அரிசியுடன் வந்த பெண்ணைப் பார்த்துப் புதிய சாமியார், “எவ்வளவு நாழியாக நான் காத்திருப்பது?” என்று கேட்டார்.

பதிலுக்கு அந்தப் பெண், “என்ன என்னையும் கொக்கென்று நினைத்தீரோ?” என்று கேட்டாள்.

“கொக்கை நான் எரித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அதுவா?  பக்கத்துத் தெருவிலிருக்கும் காதர் பாச்சா என்றொரு கசாப்புக் கடைக்காரரிடம் போய்க் கேளுங்கள்,” என்றாள் அவள்.

காதர் பாச்சாவின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்துக் கதவைத் தட்டினார் சன்யாசி.

உள்ளிருந்து, “செத்த இருங்க, வந்தீட்டேன்.” என்ற காதர் பாச்சாவின் குரல் கேட்டது.

சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் கதவைத் தட்டினார் சன்யாசி.

“வாரேன்னு சொன்னேன் இல்லெ.  செத்தப் பொறுமையா இருங்க.”

பொறுமையிழந்த துறவி கதவிலிருந்த இடுக்கு வழியாக உள்ளே பார்த்தார்.  வயது முதிர்ந்த தந்தைக்குக் குளிப்பாட்டி, உடல்துடைத்து, ஆடை அணிவித்து நாற்காலியில் மெள்ள உட்காரவைத்து, தட்டொன்றிலிருந்து உணவினை எடுத்து அவருக்கு ஊட்டிக்கொண்டிருந்தான் காதர் பாச்சா.  அவருக்கு வாய் கழுவிவிட்டு, மெல்லத் தூக்கிப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வந்து வாசல் கதவைத் திறந்தான் அவன்.

கதவைத் திறந்ததும் கண்ணில் பட்ட சாமியாரைப் பார்த்து, “யாரு நீங்க?  ஒங்களெ பக்கத்துத் தெரு வாசுகியம்மா அனுப்பினாங்களா?  என்னா வேணும் ஒங்களுக்கு?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான் காதர் பாச்சா.

துறவி, “அப்பா நான் தேடி வந்தது கிடைத்துவிட்டது,” என்று சொல்லி மீண்டும் வாசுகியம்மாள் வீட்டினை அடைந்து கதவைத் தட்டினார்.

அவள் கதவைத் திறந்ததும் அவள் கால்களில் விழுந்து வணங்கி, “தாயே சரஸ்வதி என் கண்களைத் திறந்துவிட்டீர்கள்.  ஒருவனின் முதல் கடமை அவனை நம்பி உளோரைக் காப்பாற்றுதல் என்பதைப் புரிந்துகொண்டேன் நான்”  என்ற துறவியின் காஷாயம் பறந்தது.  சாதாரண உடையில் தன் வீட்டை நோக்கிப் பயணித்தான் அவன்.

பேச்சும் நடை முறையும்

எனது நோக்கம் யாரையும் என் வழிக்குத் திருப்புவதோ அல்லது யாருடைய மனதையும் புண் படுத்துவதோ அல்ல என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன்.

இனி வரும் இரு மடல்களைப் படிக்க உங்கள் மனதினை சற்றே திடப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.  இதைச் சொன்னவுடன் ஏதோ திகில்கதை சொல்லப்போகிறேன் என்று எண்ணவேண்டாம்.  சராசரி மனிதர்களின் கத தான் சொல்லப் போகிறேன்.

1992ல் ஒருமுறை எனது நாலரை வயதுப் பேரனுடன் டில்லியிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்தேன்.  தூங்கும்வசதிகொண்ட பெட்டியில் எனக்கு நடுவிருக்கையும் எனது பேரனுக்கு மேலிருக்கையும் அளிக்கப்பட்டிருந்தன.

நாங்கள் பயணித்த பெட்டியில் சென்னையிலிருந்து ஹரித்துவார், டெல்லி என்று ஆன்மீகப் பயிற்சிப் பட்டரைக்காகச் சென்றுவிட்டுத் திரும்பும் சென்னை சின்மயா மிஷன் அன்பர்கள் சுமார் இருபதுபேர் இருந்தார்கள்.  ஏறியதிலிருந்து பயிற்சிப் பட்டரையில் தாங்கள் அனுபவித்த இன்பம்பற்றிப் பேசிவந்தனர்.

படுக்கும் நேரம் வந்தது.  நான் என் அருகிலிருந்தவர்களிடம், “இந்தச் சிறுவனுக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கிறது.  தூக்கத்தில் புரண்டு கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டு விடுவான்.  உங்களில் யாராவது ஒருவர் கீழிருக்கையை அளிக்கமுடியுமா?” என்று கேட்டேன்.

“ஹூஹூம். முடியாது” என்றனர் அவர்கள்.  அன்றிரவு நடுவிருக்கையில் பேரனை இடுக்கிக்கொண்டு படுத்துவந்தேன்.

மறுநாள் பொழுது விடிந்தது.

நான் அவர்களிடம், “நீங்கள் பேசிக்கொண்டு வருவதிலிருந்து சின்மயா மிஷன் அங்கத்தினர்கள் நீங்கள் என்று தெரிகிறது.  பகவத் கீதை படிப்ப துண்டல்லவா?” என்று கேட்டேன்

“கட்டாயம் தினசரி படிப்போம்.”

“பக்தி யோகம் என்னும் பன்னிரெண்டாவது அத்தியாயம்?”

“அது எங்களுக்கு மனப் பாடமாகத்த் தெரியுமே.”

“அப்படியா?  அதில் அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ரக் கருண ஏவச என்று ஒரு வரி வருகிறதே அதற்கு என்ன பொருள்?”

“எல்லா உயிகளிடத்தும் நட்பையும் கருணையையும் தவிற வெறுப்பு காட்டக்கூடாது என்பது அதன் பொருள்.”

“நேற்றிரவு இந்தச் சிறுவனுக்காக உங்களில் ஒருவரது கீழிருக்கையைக் கேட்டேன்.  அதைக் கொடுக்க யாருமே முன்வரவில்லை.  பகவத் கீதையைப் பள்ளிமாணவன் வாய்ப்பாடுகளை மனனம் செய்வதுபோல் தினமும் படிப்பதினால் என்ன உபயோகம்? அதில் உள்ள ஒரு வரியினைக்கூட உங்கள் வாழ்க்கையில் நடை முறையில்கொண்டு வரமுடியவில்லையே!”

என் கேள்விக்கு பதில் இல்லை.

சின்மயானந்தா உயிருடன்யிருக்கும்போதே தயானந்தா பிரிந்து தனியாக ஆசிரமம் ஆரம்பித்தார். 

ஹரிநாமானந்தா காவி உடையைக் களைந்துவிட்டு மணம் செய்துகொண்டு அமெரிக்கா பயண்மானார். 

தஞ்சையிலிருந்த ஒரு பிரும்மச்சாரி, தான் தங்கியிருந்த இரு பெண்குழந்தைகளின் தாயான வீட்டு எஜமானரின் மனைவியை அழைத்துக்கொண்டு தனி ஆசிரமம் அமைக்கச் சென்றுவிட்டார்.

திருச்சியிலிருந்து மேல் பயிற்சிக்காக பம்பாய் சென்ற ஒரு பிரும்மச்சாரி தன் சக மாணவியைக் காதல்புரியத் தூண்ட, அவள் அதை வெறுக்க, அவள் முகத்தில் கத்தியால் அவர் குத்த, அது போலீஸ்வரை போய்விட்டது.

இதையெல்லம் பார்த்தபோது இவர்கள் போதிப்பது என்ன, நடந்து கொள்ளும் விதம் என்ன,  படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா,  இவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்தான் எனத் தோன்றியது.

“இறைவன் எல்லாவற்றினுள்ளும் இருக்கிறான்.  அவனைக் காண/அடைய உன்னை நீயே நான் யார் என்று கேட்டுப்பார்.  அந்தக் கேள்விக்கு விடை கண்டால் உன்னுள் உறையும் ஈசனை நீ காணலாம்” என்ற பகவான் ரமணரின் கூற்று எனக்கு சரியெனத் தோன்றியது.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு.  உன்னால் முடிந்த உதவியைப் பிறருக்கு நீ செய்.  நேர்மையாகவும் உண்மையாகவும் இரு.  இவையே நீ நற்கதி அடைய வழிசெய்யும் தியானம்.  வேத, புராண, இதிகாசங்களைப் படித்தால் மட்டும் போதாது.  அவற்றில் நீ காணும் நல்லவற்றை உன் வாழ்க்கையில் நடை முறைக்குக்கொண்டு வா.  அதுதான் நீ செய்யவேண்டிய பூஜை.  என்ற முடிவிற்கு நான் தள்ளப்பட்டேன்.

நீங்களும் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆகலாம்

seethakathiஒருவர் இறந்தபின் அவரது உடல் அழுகிக் கிருமிகளை உண்டாக்கக்கூடியது.  ஆகவே அதை உடனே அப்புறப்படுத்தியாகவேண்டும்.  இல்லையென்றால் அக்கிருமிகள் அருகிலுள்ள மற்றவர்களைப் பாதிக்கும்.

இறந்தவர்களின் உடல்களை நம்மிடையே இருந்து அப்புறப்படுத்துவதில் பழக்கங்கள், மதத்திற்கு மதம், சாதிக்குச் சாதி வேறுபடுகிறது.  கிருஸ்துவர்களும், முஸ்லீம்களும் அவற்றைப் புதைக்கின்றனர்.  இந்துக்களில் சிலர் புதைக்கின்றனர்.  சிலர் எரிக்கின்றனர்.  பார்ஸீக்கள் என்றழைக்கப்படும் சூரியவழிபாடு செய்யும் சொராஷ்ற்றியர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான ஒரு இடத்தில் அதற்கெனெப் பிரத்தியேகமாகக் கட்டப் பட்ட நிசப்தக் கோபுரத்தில் (Tower of silence) எறிந்து விடுகின்றனர்.  அது கழுகு, காகம் போன்ற பறவைகளுக்கு உணவாகிறது.

புதைப்பதால் இடம் ஆக்கிரமித்துக் கொள்ளப்படுகிறது.  அது மட்டுமின்றிப் பின்நாள்களில் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் சேதப்படுத்திவிட்டால் மக்களிடையே கலவரங்களுக்கு வழிவகுக்கிறது.

எரிப்பதால் பஞ்சபூதங்களால் ஆன இவ்வுடல் அந்த பஞ்சபூதங்களுடனேயே சேர்க்கப் படுகிறது.  அதிக நிலப்பரப்பும் வீணாவதில்லை.

ஆனால் இந்த மூன்று வழிகளைத் தவிர நான்காவதாக ஒரு வழியும்யிருக்கிறது.  அதுதான் உடல் உறுப்புகள் தானம்.  இறந்தவரின் உடல் மூன்றுமணி நேரத்திற்குள் அதற்கான வசதிகள்கொண்ட மருத்துவமனைக்குச் சேர்ப்பித்தால் அந்த உடலிலிருந்து கண், கல்லீரல், மூத்திரக் காய்கள், இருதயத்தில் உள்ள வால்வுகள் போன்றவை அறுவடை செய்யப்பட்டு தேவையானவர்களுக்குப் பொருத்தப்பட்டு அவர்களுக்கு உயிர் தானம் அளிக்கப்படும்.  இதனால் நீங்களும் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆகலாம்.  என்றுமே சிரஞ்சீவியாக வாழலாம்.

எனது மனைவியும், நானும் எங்கள் உடலை ராமச்சந்திரா மருத்துவ மனைக்குத் தானமாக அளிக்க ஒப்புதல் கடிதங்கள் கொடுத்துப் பதிவு செய்துகொண்டுள்ளோம்.  என்ன ஒன்று,  இவ் விஷயம் எனது மூன்று மகள்களின் சம்மதம் வாங்கிக்கொண்டு செய்யப்பட்ட ஒன்று என்றாலும் நாங்கள் இறக்கும்போது அருகில் இருப்பவர்கள் மருத்துவமனைக்குத் தெரியப்படுத்தி உடலினை எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.

சிரத்தையும் சிரார்த்தமும்

Image result for சிராத்தம்இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்து குடும்பத்தினை வாழ்த்திடல் வேண்டும் என்பதற்காக ஒருவர் இறந்தபின் அவரது பிள்ளைகள் இறந்தவர்களுக்கென வருடாவருடம் சிரார்த்தம்செய்கின்றனர்.  செய்யும் விதம் மதத்திற்கு மதம் வேறு பட்டாலும் செய்வதின் நோக்கம் ஒன்றுதான்.

இது தேவையற்ற ஒன்று என்பது என் சொந்தக் கருத்து.

உங்கள் பெற்றோர்களை நினைவில் இருத்திக் கொள்ள ஒரு வழி இது என்று சிலர் சொல்வார்கள்.  வருடத்தில் ஒருநாள்தான் அவர்களை நினைவுக்குக்குக் கொண்டுவரவேண்டும் என்றால் அந்த ஒருநாள்தான் எதற்கு?  தன்னைப் பெற்று, பாசத்தினைப் பொழிந்து, வியர்வையும் ரத்தமும்சிந்தி, உழைத்து உங்களை ஆளாக்கியவர்களை என்றுமே அல்லவா மறக்காது நினைவில் இருத்திக் கொள்ளவேண்டும்?

ஒருவர் இறந்த பின் அவருக்குச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்யாவிட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையாது, அது உங்களை சபித்து விடும் என்று சிலர் சொல்வார்கள்.  வாழ்ந்த நாள்களில் பெற்றோரை மதிக்காது நடந்துகொண்டவர்கள்கூட இந்தப் பயத்தினால் வருடாவருடம் சிரார்த்தம்செய்வதுண்டு.  குழந்தைகள் அவர்கள் கண்களில் கண்ணீர் வருமாறு நடந்துகொண்டிருந்தாலும்கூட, எந்த ஒரு தாயும் தந்தையும் தன் குழந்தைகள் கஷ்டப்படவேண்டும் எனச் சபிக்கமாட்டர்கள்.

ஒருவர் அவர் தாய் தந்தைக்கு உயிரோடுயிருக்கும்போது அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதந்தால் மட்டும் போதாது.  அவர்களைத் தங்களுடனேயே வாழவைத்துக்கொண்டு, என்றுமே அவர்கள் சந்தோஷமாக வாழ வழிசெய்யவேண்டும்.

கடைசியாக நான் இதுவரை எழுதி வந்ததின் சாராம்சம்

  1. இறைவனைக் காண — அவரிடம் உங்கள் முறையீடுகளை வைக்க இடைத் தரகர்கள் உதவி தேவையில்லை.
  2. எங்கும் நிறைந்த இறவைன் உங்களுள்ளும் இருக்கிறான்.
  3. வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களைப் படிப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் படித்தவற்றுள் உள்ள நல்ல விஷயங்களை உங்கள் வாழ்வில் முடிந்தவரை கடைப்பிடியுங்கள்.
  4. எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் பழகுங்கள்.
  5. உங்களால் ஆன உதவிகளைப் பிறருக்குச் செய்யுங்கள்.
  6. உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

(முற்றும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s