கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 13


முனைவர் இரா. இராமகிருட்டிணன்

  1. கரந்தை
Related image

கரந்தைப் பூ

கரந்தை கொடிவடிவில் காணப்படும். இதனை நாறு கரந்தை என்று குறிஞ்சிப்பாட்டு உரையும், கரந்தை மாக்கொடி என்று பதிற்றுப்பத்தும் (பதிற்றுப்பத்து, 40:5, குறிஞ்சிப்பாட்டு, 76 உரை) குறிப்பிடுகின்றன. கரந்தைப் பூவின் நிறம் சிவப்பு. இது மணம் உடையது.  செம்பூங்கரந்தை என்று அகப்பாடல் (269 : 11) கூறுகின்றது.  பெண் கன்றின் முலை எழுந்து காட்டாது, பரந்து  காட்டுவது போலக் கரந்தைப் பூவும் செடியினின்று எழுந்து நில்லாது அதனோடு படிந்து விரிந்துகாட்டும். இதனை, நாகு முலை அன்ன நறும் பூங்கரந்தை என்ற புறப்பாட்டால் (261 : 13) உணரலாம்.

Image result for விஷ்னு க்ரந்தி

விஷ்ணுக் கரந்தை [கிரந்தி]

சங்க இலக்கியத்தில் கூறப்படும் கரந்தைமலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர். அவர்கள் காட்டுவன:

(அ) திருநீற்றுப்பச்சை என்னும் கரந்தை

(ஆ) விஷ்ணு கரந்தை

(இ) மூலிகைக் கரந்தை

(ஈ) பி.எல்.சாமி காட்டும் கரந்தை

Image result for திருநீற்றுப்பச்சை

திருநீற்றுப் பச்சை

  தொல்காப்பியம் கரந்தை என்பதை ஏழு புறத்திணைகளுள் ஒன்றான வெட்சித் திணையின் துறைகளுள் ஒன்றாகக் காட்டுகிறது (பொருள்: 63). வெட்சிசூடி ஆநிரை கவர்வதும், கரந்தைசூடி ஆநிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை (நூற்பா 22) கூறுகிறது. தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்ட, புறப்பொருள் வெண்பாமாலை பன்னிரண்டு திணைகளுள் ஒன்று எனக் கூறுகிறது.

இலக்கியங்களில் கரந்தை

      கரந்தையைக் கொட்டைக் கரந்தை எனவும், கொட்டாங் கரந்தை எனவும் வழங்குவார்கள். இது வயல்களில் தோன்றும் ஒரு கொடியாகும். கரந்தை வயல்களில் தோன்றுவதை, கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஒப்பும் என்று அகப்பாடல் (226 : 6)  காட்டுகிறது. இக்கொடி மண்டிக் கிடந்தமையால் வயல் அழகு பெற்றுத் திகழ்ந்ததை, கரந்தைஅம் செறுவில், (குறுந்தொகை, 26:1) காய்ந்த கரந்தை மாக்கொடி விளைவயல் (பதிற்றுப்பத்து, 40:5) என்னும் இலக்கிய வரிகளால் அறியலாம்.

      கரந்தை மறவனுக்கு உரிய நடுகல்லின் மேல், அம்பால் கிழித்த ஆத்தியின் நாரால் சிவந்த கரந்தைப் பூவால் கட்டிய தலைமாலையை, வரிகளைக் கொண்ட வண்டுகள் மொய்க்கச் சூட்டப்பட்டதைப் பின்வரும் அகப்பாடல் (269:10-12) காட்டுகிறது.

அம்பு கொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்

            செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி

            வரிவண்டு ஆர்ப்பச் சூட்டி

  1. குளவி
Image result for பன்னீர்ப் பூ

பன்னீர்ப் பூக்கள் [குளவி]

குறிஞ்சிநில மலர்களில் ஒன்றான குளவிமலரை இக்காலத்தில் பன்னீர்ப் பூ அல்லது மரமல்லிகைப் பூ என்று அழைப்பார்கள். இதனைப் பெருந்தண் குளவி என்று நற்றிணை (51:8) குறிப்பிடுகிறது. கார்காலம் தொடங்கி முதல் மழை பெய்தவுடனேயே அரும்புவிட்டு புதர்புதராக வெள்ளைவெளேரெனப் பூத்துக் குலுங்கும் இது, முல்லை இனங்களில் ஒன்று. இதனை, மலை மல்லிகை, காட்டு மல்லிகை என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுவார்.  மலைச் சாரல்களில் இது அதிகமாக வளர்ந்திருக்கும். இந்தக் கொடியை யானையும், குரங்கும் தின்னும். மலைநாட்டு மக்களின் வீடுகளின் முற்றங்களிலும் இது வளர்ந்திருக்கும். மணம்மிகுந்த மலர் என்பதால் இதனைக் கமழும் குளவி என்று அடைகொடுத்தும் கூறுவர். கூதளம் கவினிய குளவி முன்றில் என்ற புறப்பாடல் வரி (168:12) முன்றிலில் குளவி படர்ந்திருப்பதைத் தெரிவிக்கிறது. குளவியின் தளிர்களையும், பூக்களையும் குரங்குகள் விரும்பி உண்பதை ஐங்குறுநூறு (279:2) காட்டுகின்றது.

      வரகுவைக்கோலால் வேயப்பட்ட குடிசையின்மேல் மணமுள்ள காட்டு மல்லிகை படர்ந்திருந்ததை, ஏனல் உழவர் வரகுமீது இட்ட,கான்மிகு குளவிய என்று பதிற்றுப்பத்து (30:22-23)  பாடுகிறது,

     குறிஞ்சிநிலத் தலைவன் குல்லை, காட்டு மல்லிகை (குளவி), கூதாளி, குவளை ஆகியவற்றின் மலர்களால் புனைந்த மிகக் குளிர்ந்த மாலையை உடையான் என்பதை,

குல்லை,குளவி, கூதளம், குவளை,        

 இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் 

என்ற பாடல் (நற்றிணை, 376:5-6) உணர்த்துகிறது. குவளைமலர்களோடு சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகையின் மணம் வீசுகின்ற தலைவியின் நெற்றி என்பதை,குவளையொடு பொதிந்த குளவிநாறு நறுநுதல்என்று குறுந்தொகை (59 : 3)  பாடுகிறது.

      நறுமணம் கமழும் மலை மல்லிகையோடு கூதளம் தழைத்து விளங்குவதை, நாறுஇதழ்க் குளவியொடு கூதளம் குழைய என்று புறப்பாடல் (380:7) சுட்டுகிறது. முருகன் பச்சிலைக் கொடியில் சாதிக்காயை இடையிடையே சேர்த்து, அதனோடு அழகிய புட்டிலைப் போன்ற வடிவுடைய தக்கோலக் காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் வெண்டாளிப் பூவையும் சேர்த்துக் கட்டிய தலைமாலையை உடையவன் என்பதை,

            அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு

            வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

என்று திருமுருகாற்றுப்படை (வரிகள்: 191-192) சுட்டுகின்றது.

      முல்லையும் குறிஞ்சியும் மோதுவதுபோன்ற ஒரு காட்சி. முல்லை நிலத்தின் காளையும், குறிஞ்சியாகிய மலை நில எருதும் ஒன்றையொன்று புண் உண்டாகும்படித் தாக்கின. வலிமையான இதழை உடைய காட்டு மல்லிகை மலரைச் சூடிய முல்லைநிலக் கோவலரும் குறிஞ்சிமலர் சூடிய குறவரும் அங்கே இருந்தனர். தத்தம் தலையில் சூடிய மலர்கள் வாடும்படி, காளையயும் விடையையும் மோதவிட்டுப் பார்த்தனர். அந்த இடத்தில் உண்டான ஆரவாரத்தைக் கூத்தர் கேட்டனர். இக்காட்சியை,

           இனத்தில் தீர்த்த துளங்குஇமில் நல்லேறு

            மலைத்தலை வந்த மரைஆன் கதழ்விடை

            மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்

            கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப

            வள்இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய

            நல்ஏறு பொரூஉம் கல்என் கம்பலை

என்று மலைபடுகடாம் (வரிகள் : 330-335) நயம்படக் காட்டுகிறது.

     மற்றொரு இனிய காட்சி. நீர் ஓடும் பக்கத்தில், அரிய இடத்தில் நெருங்கி வளர்ந்த குளவி மலரோடு கூடிய, கூதாளிப் பூவையும் கொண்ட தலைவனுடைய தலைமாலையின் ஒழியாத மணம் அசையக்கூடிய காற்றில் வீசுகின்றதாம். இதனை,

           நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற

            குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி

            அசையா நாற்றம் அசை வளி பகர

என்று அகம் (272:7- 9) பாடுகிறது.

  1. கலி மா
Image result for மாம் பூ

மாம்பூக்கள்

மாம்பூவிற்கு மணம் உண்டு. கடிகமழ்கலிமா, கவிழ்இணர்மா (குறிஞ்சிப்பாட்டு, வரி 76; திருமுருகாற்றுப்படை, வரிகள்: 59-60) என்று இலக்கியங்கள் குறிக்கின்றன.

      வாய்ப் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகின்றன. உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க, கொசுத்தொல்லை ஒழியும்.

      முக்கனிகளில் ஒன்றாகப் போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன என்று கூறுவர்.

  1. தில்லை
thillai

தில்லைப்பூக்கள்

தில்லைமரம் அலாதியான மரம். ஒருபுறம் அது அச்சம் தரும் மரம்; மறுபுறம் நம்மைப் பெரிதும் ஈர்க்கும் தன்மையது. இந்தச் சிறு மரத்தின் எந்தப் பகுதியை ஒடித்தாலும் அரளிமாதிரி பால் தெறிக்கும். அந்தப் பால் நம் உடலில் பட்டால் அரிக்கும், எரியும், சிவந்துபோகும்; கண்ணில் பட்டாலோ, கண்ணெரிச்சலோடு, கொஞ்சம் கொஞ்சமாய் தற்காலிகமாகவோ, சிலபொழுது முற்றிலுமாகவோ கண் பார்வை போகவும் செய்யலாம். இதனாலேயே இந்த மரத்தைக் குருடாக்கும் மரம் [Blinding tree] என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

      தில்லைமரம் மிகுதியாக இருந்த ஊர் தில்லை. தில்லையில் உள்ள சிவன்கோவிலின் தலமரம் தில்லை. இந்தத் தில்லைமரம் தற்போது சிதம்பரத்தில் இல்லை. எனினும், சிதம்பரத்தை அடுத்துள்ள பிச்சாவரம் உப்பங்கழிகளில் இன்றும் மிகுதியாக உள்ளன.

சங்கப் பாடல்களில் தில்லை மரம்

      தில்லைமலர் மணம் வீசும் மலர். நீர் நாய் குருளை(குட்டி)மீனைத் தின்றபின் தில்லை மரப் பொந்தில் பள்ளி கொள்ளுமாம். தில்லைமரங்கள் ஊருக்கு வேலியாக அமைவதும் உண்டு. உப்பங்கழிகளில் முண்டகமும், தில்லையும் ஓங்கிவளரும். தில்லைக் காய்கள் முனிவர்களின் சடைமுடி தொங்குவது போலக் காய்த்துக் குலுங்கும் எனச் சங்கப் பாடல்களால் அறியமுடிகிறது (நற்றிணை, 195:2-3, ஐங்குறுநூறு, 131:2 மற்றும் கலித்தொகை, 133:1-2).

        ஒலிக்கும் வெள்ளிய அருவியில் பலகாலும் நீராடுவதால், கருஞ்சடை நிறம் மாறி தில்லைத் தளிர் போன்று தோன்றியதை, கறங்கு வெள்ளருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்என் சடை என்று புறப்பாடல் (252:1-2) காட்டுகிறது.

      தில்லைமரம் ஆண் மரம், பெண் மரம் எனத் தனித்தனியானது. ஆண் தில்லைமரத்தில் இலையுதிர்ந்த வடுக்களின் அருகில் பூக்கதிர்கள் உருவாகும். பூக்கள் மஞ்சள் சாயலோடு கூடிய சிறு பூக்களாக இருக்கும். பெண் பூக்கதிர்கள் ஆண் கதிர்களைக் காட்டிலும் சிறியவை; ஒரு செ.மீ. முதல் இரண்டரை செ.மீ.வரை அளவுடையவை. இரண்டு பூக்களுமே திசம்பர், சனவரியில் அதிகமாகப் பூக்கும். அதனை அடுத்து ஆகஸ்ட்டு, அக்டோபர் மாதங்களில் சிறிதளவு பூக்கும்.

[தொடரும்]

***

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s