ஆன்மீகமும் நானும் – 7


கல்பட்டு நடராஜன்

ஐயப்பன் வழிபாடு – 2

1974 டிசம்பர் மாதம் முதல் 1978 ஆகஸ்ட் மாதம் வரை நான் திருச்சியில் பணிபுரிந்து வந்தேன்.  இந்தச் சமயம் எனெக்கொரு உடல் உபாதை வந்தது.  வேலைசெய்துகொண்டே இருப்பேன்.  திடீரென வயிற்றைக் கலக்கும்.  அடுத்த வினாடி நான் கழிப்பறை நாடி ஓடவேண்டும்.  சில மருத்துவர்களிடம் சென்றேன்.  ஒவ்வொருவரும் ஒரு வியாதியின் பெயர்சொல்லி மருந்தும் கொடுத்தனர்.  ஆனால் குணம் ஒன்றும் தெரியவில்லை.  கடைசியாக ஒரு ரணசிகிச்சை நிபுணரை அணுகினேன்.

சில பரிசோதனைகளுக்குப் பின் அவர், ‘உங்கள் பெருங்குடலில் புற்றுநோய்யிருக்கலாம்.  குடலிலிருந்து சிறுதுண்டு சதையினை எடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்புவோம்.  அவர்கள் அதைப் பரிசோதித்து புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள்’ என்று சொன்னார்.

தஞ்சையிலிருந்து பத்துநாள்கள் கழித்து,  ‘புற்று நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை,’ என்று செய்தி வந்தது:

உடனே என் மனைவி,  ‘நான் நம் கம்பெனியின் ஒரு விநியோகஸ்தரின் அறிவுரைப்படி தஞ்சையிலிருந்து நல்ல செய்தியாக வந்தால் உங்களை ஐயப்பனைத் தரிசிக்க அனுப்புகிறேன் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.   நீங்கள் இந்த வருடம் சபரி மலை சென்று வரவேண்டும்’ என்று சொன்னாள்.

நானும் ஒப்புக்கொண்டேன்.

திரைப்பட நடிகர், காலஞ்சென்ற எம்.என். நம்பியார்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அவர் ஒரு தீவிர ஐயப்ப பக்தர்.  சுமார் ஐம்பதறுபது முறைகளுக்கும் அதிகமாகச் சபரிமலை சென்று வந்தவர் அவர்.  அவருக்கு ஐயப்பன்மீது பக்தி ஏற்படக் காரணம், அவர் ஆரம்ப நாள்களில் பணி துவங்கிய நாடகக் குழுவின் தலைவர், புகழ் பெற்ற காலஞ்சென்ற் திரு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் தான்.

நவாப் அவர்கள் அளித்துவந்த கிருஷ்ணலீலா என்னும் நாடகம் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று.  ஒருசமயம் அவர் கேரளாவில் நாடகம் நடத்தியபோது பர்மா ஷெல் மண்ணென்னை வியாபாரி ஒருவர் வீட்டில் தங்கினாராம்.  அந்த வியாபாரி, ‘நவாப்! நீங்கள் கிருஷ்ணனைப்பற்றி இவ்வளவு அழகாக நாடகம் நடத்துகின்றிர்களே! ஐயப்பனைப்பற்றியும் ஏன் ஒரு நாடகம் நடத்தக் கூடாது?’ என்று கேட்டாராம்.

ராஜமாணிக்கம் அவர்கள், ‘போடலாம்தான்.  ஆனால் அவர்பற்றிச் சரியான, நம்பிக்கையான தகவல்கள்வேண்டுமே?’ என்று சொன்னாராம்.

‘ஒரு முறை சென்று வாருங்கள், சபரி மலைக்கு.  ஐயப்பன் சரித்திரம் தானே புரிந்துவிடும் உங்களுக்கு,’ என்றாராம் அந்த வியாபாரி..

ராஜமாணிக்கம் பிள்ளையும் ஒருமுறை சபரிமலைக்குச் சென்றுவந்தார்.  அன்று சென்றவர், தன் ஆயுள்முடியும் வரை சென்று வந்தார்.  கூடவே தோன்றியது சுவாமி ஐயப்பன் என்ற அழகியதொரு நாடகமும்.  அக்குழுவிலிருந்த நம்பியார் அவர்களுக்கும் ஐயப்பன்மீது அபாரபக்தி தொற்றிக்கொண்டது.  சுவாமி ஐயப்பன் நாடகம் தமிழ்நாட்டில் பெருமளவு ஐயப்பபக்தியைத் தோற்றுவித்தது.

என் அதிருஷ்டம் நவாப் அவர்களின் மகன் எனக்குக் குருவாக அமைந்தார்.

வழக்கமாக வெய்யில் நாள்களிலும் வெந்நீரில் குளிப்பவன் நான்.  பச்சைத்தண்ணீரில் குளித்தால் முதுகுப் பிடிப்பு வந்துவிடும்.  முதல் முறையாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒருவித பாதிப்புமின்றி பச்சைத்தண்ணீரில் குளித்தேன்.  அது மட்டுமல்ல.  காலணியின்றி நடந்திடாத எனக்கு இரண்டே நாள்களில் அதுவும் பழகிப்போயிற்று.  முதல் இருநாள்கள் காலில் கற்கள் உறுத்தினாலும் மூன்றாவது நாளிலிருந்து அதுவும் பழகிப்போய்விட்டது.  அதனால் மலை ஏறும்போது கூரிய கற்களும் என் கால்களை ஒன்றும் செய்யவில்லை.

அந்த யாத்திரையில் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லமுடியாது.  அந்த இன்பத்தினை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.  பல சிறுசிறு கஷ்டங்களைப் பொருட்படுத்தாது உறுதியோடு பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பன் சன்னதியை நாம் அடையும்போது நம் மனம் லேசாகிறது.  சொல்லமுடியாத இன்பத்தினை அனுபவிக்கிறோம்.

எல்லாமே இன்பமயம் என்றும் சொல்லிவிடமுடியாது.  சிறுசிறு கஷ்டங்களும் அனுபவிக்கத்தான் வேண்டியிருந்தது.

லட்சக் கணக்கில் அங்கு வரும் பக்தர்களைக் காண, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  ஆனால் அதேசமயம் யாத்ரீகர்கள் திறந்த வெளியிலே மலஜலம் கழிப்பதும் பின் பம்பை நதியில் உடல்கழுவுதலும், அதே நதியில் மக்கள் குளிப்பதும், நீரைக் குடிப்பதும் பார்க்க அருவருப்பாக இருந்தது.

சன்னதியை அடையப் பதினெட்டு படிகள் வழியாக ஏறும்போது அங்கு உடைக்கப் பட்டுள்ள தேங்காய்ச் சில்லுகள் கால்களில் குத்துவதும், தேய்ந்து சரிவாக இருந்த கற்படிகளில் வழிந்தோடும் இளநீரில் வழுக்குவதும் நமக்கு சிரமம்தரும் ஒன்று.

மலை ஏறி ஐயப்பனைத் தரிசித்துவிட்டு பம்பைக்குத் திரும்பியதும் நீங்கள்வந்த வண்டி எங்கு நிற்கிறது என்று கண்டுபிடிப்பது ஒரு பெருங்கஷ்டம்.

நான்காவது கஷ்டம், பிய்ந்த கீற்றுக் கூரையின் கீழே மண் தரையில் துண்டினை விரித்துப்போட்டுப் படுக்கவேண்டி இருப்பது.

இந்த நான்கு கஷ்டங்களுமே அடுத்த முறை நான் சென்றபோது நிவர்த்தி செய்யப்பட்டிருந்தன.

ஆங்காங்கே சுத்தமான கழிப்பறைகள், பக்தர்கள் தங்குவதற்கு பல விடுதிகள், அழகான உறுதியான இரும்புப்படிகள், உங்கள் வண்டியை அழைத்திட ஒலிபெருக்கி வசதி, இப்படி எல்லாமே பக்தர்களுக்கு சாதகமான மாற்றங்கள்.

two talkingஅடுத்த ஆண்டு பிள்ளைப்பேறின்றி இருந்த ஒரு வினியோகஸ்தரிடம் நான், ‘நீங்கள் ஏன் சுவாமி அய்யப்னுக்குவேண்டிக்கொண்டு சபரி மலை ஒரு முறை சென்று வரக் கூடாது?’ என்று கேட்டேன்.

அவரது மனைவி, ‘உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால் அவர் சார்பாக வேண்டிக்கொண்டு நீங்கள் ஏன் செல்லக் கூடாது?’ என்று கேட்டாள்.

அதனால், அவர்களுக்காக நான் இரண்டாவது முறை சென்றுவந்தேன்.  ஆனால் அவர்களுக்கு மகப்பேறு கிடைக்கவில்லை.  நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்கவேண்டுமோ?

சின்மயா மிஷன் நடப்புகள்

விஜயவாடவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்குப்பின் எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமைகள் பெண்களுக்கான ஆன்மீக வகுப்புகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவர்களுக்கான பாலவிஹாரும் நடத்த வசதிகள் செய்துதந்தேன்.  அதேசமயம் நானும் பகவத்கீதையின் சில பகுதிகளை மனனம் செய்துவந்தேன்.  அவற்றை அர்த்தத்துடன் கற்றேன்.

திருச்சிக்கு மாற்றலாகி வந்தபின் சின்மயா மிஷனின் திருச்சிக் கிளையின் சார்பில் பிரம்மச்சாரி ஹரிதாஸ் அவர்களைத் திருச்சிக்கு அழைத்து, சொற்பொழிவுகள் நடத்தச்செய்தோம்.  அப்போது அவர் பத்து நாள்களுக்கு எங்கள் வீட்டில் தங்கி இருந்தார்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு நேரம் தியானத்தில் அமர்வார் ஹரிதாஸ்.  அவர் எழுமுன் நாங்களும் எழுந்து தயாராகிவிடுவோம். அவர் தங்கியிருந்த நாள்களில் எங்கள் வீட்டில் ஒரு தெய்வீக ஒளி வீசுவதுபோல உணர்ந்தோம்.  அடுத்த வருடமே பிரும்மச்சாரி ஹரிதாஸ் முற்றிலுமாக சன்நியாசம் எடுத்துக்கொண்டு சுவாமி ஹரிநாமானந்தாவாக மாறினார்.

ஒரு முறை சுவாமி சின்மயானந்தா அவர்கள் திருச்சிக்கு விஜயம் செய்தார்.  பின் சுவாமி தயானந்தா அவர்கள் கும்பகோணத்தில் ஒரு வாரத்திற்கு தியான வகுப்புகள் நட்த்தினார்.

எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதற்காகவும், இறைவனின் துதிகள் கற்றுத்தருவதற்காகவும் வகுப்புகள் ஆரம்பித்தோம்.  ஆரம்ப நாள்களில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.  வகுப்பின் முடிவில் இறைவனின் படங்களுக்குக் கற்பூர ஹாரத்தி எடுத்து, வாழைப்பழம் நிவேதனம்செய்து, குழந்தைகளுக்குப் பிரசாதமாக ஆளுக்கொரு வாழைப்பழம் கொடுத்துவந்தோம்.  ஆனால் நாளடைவில் ஈடுபாடுக் குறைவினாலோ என்னவோ, எண்ணிக்கை குறைந்துகொண்டேவந்து ஒருநாள் எனது இரு மகள்களைத் தவிர வேறுயாரும் வரவில்லை.  வாங்கிவைத்திருந்த பழங்கள் எல்லாம் வீணாகின.

அதற்கடுத்த வாரம் எனது இரு மகள்களைத் தவிர மேலும் இருவர் வந்தனர்.  அதில் ஒருத்தி எனது கடைசி மகளின் தோழி.  பக்கத்துவீட்டுப் பெண்,  பெயர் சிவகாமி.  வயது பத்து. அன்று வாழைப்பழம் வாங்கி வைக்காததால் வீட்டிலிருந்த இரு வாழைப்பழங்களைப் பாதிப்பாதியாக வெட்டி வகுப்புமுடிவில் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டி வந்தது.

சிவகாமி, ‘அரை மணி நேரம் கவான் கவான்னு கத்த வெச்சூட்டுக் கெளெவன் அரை வாளப்பளத்தக் கொடுக்கறான்.  யாரு வருவா இதுக்கு?’ என்று குறைப்பட்டுக்கொண்டாள்.

அன்றோடு பாலவிகார் முடிவுக்கு வந்தது.  அப்படி அவள் சொல்லக் காரணம் அரை வாழைப்பழம் அல்லவென்றும்,  அன்று காலை தோட்டத்தில் விளையாடும்போது என் மகளோடு ஏற்பட்ட ஒரு சிறு சண்டைதான் என்பதும் பின்னால் தெரியவந்தது.  அப்போதே தன் தீர்மானமான முடிவினைத் சிவகாமி என் மகளிடம் தெரிவித்துவிட்டாளாம்!

மூன்றாம் முறை ஐயப்ப தரிசனம்

1979ல் பங்களூரில் பணிபுரிந்துவந்தபோது மீண்டும் ஐயப்பனைத் தரிசிக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது.  அங்கிருந்த ஒரு குழுமத்துடன் இணைந்தேன்.  மாலை அணிந்து இரு வாரங்களுக்குப் பின்னர் நான் பதினைந்து நாள்களுக்கு பம்பாய் சென்று அங்கிருந்து நான்கைந்து நாள்கள் கொச்சிக்குச் செல்லவேண்டி நேர்ந்தது.  நான் சேர்ந்திருந்த ஐயப்பபக்தர் குழு பங்களூரிலிருந்து கொச்சிவரை ரயிலிலும், அங்கிருந்து வாடகைக் கார்களிலும் செல்வதாய் இருந்தது.  ஆகவே, நான் அவர்களிடம் கொச்சியில் சேர்ந்துகொள்வதாகச் சொல்லிவிட்டுப் பம்பாய் கிளம்பினேன்.

எனது உறவினர் ஒருவர் தன் பையன் பம்பாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சேர்ந்திருப்பதாகவும், அவன் பெற்றோரைப் பிரிந்து இருப்பதால் மிகவும் வருந்துவதாகவும், அடிக்கடி அவன் திரும்ப வந்துவிடுவேன் எனச் சொல்வதாகவும், அவனை நான் சென்று பார்த்து புத்திமதி சொல்லிவிட்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Image result for a man walking without shoes clipartஅதனால் பம்பாயில், ஞாயிறன்று மத்தியானம் மாதுங்கா சென்றடைந்தேன்.  கால்களில் செருப்பு இல்லை.  ஆடை கருப்பாக இருந்ததால் வெப்பத்தை உள்வாங்கிக் கொளுத்தியது.  சாலையில் உருகியிருந்த தார், கால்களில் ஒட்டிக்கொண்டு பொரித்தது.  ரயில் நிலையத்திலிருந்து பி.ஐ.டீ. யை நோக்கி நடந்தேன்.  ஆனால் அன்று என் உறவினரின் மகன் சகமாணவர்களுடன் எங்கோ வெளியே போயிருந்தான். எனவே, ரயில்நிலையம் நோக்கி நடந்தேன்.

ரயில் நிலையம் அருகே சாலையில் நான்காக மடித்த காகிதத் துண்டு கிடந்தது.  உடனே குனிந்து அதைப் பொறுக்கி எடுத்தேன்.  பிரித்துப் பார்த்தால் ஐந்து புதிய நூறுரூபாய் நோட்டுக்கள்.  ஆரம்பித்தது என் மனத்துள் ஒரு குழப்பம்.

‘ஐயோ பாவம், யாரோ ஒருவர் இதைத் தவரவிட்டிருக்கவேண்டும்.  இதைக் காவல்நிலையத்தில் சேர்த்துவிட்டால் அவருக்குப்போய்ச் சேர்ந்துவிடும்.’  என்று மீண்டும் பி.ஐ.டீ. அருகில்தான் இருந்த காவல் நிலையத்தைநோக்கி நடந்தேன்.

பாதிவழியில் ஒரு சந்தேகம், தொலைத்தவர் புகார் செய்யாதிருந்தால் காவல்காரர்கள் அல்லவோ இதை எடுத்துக்கொண்டுவிடுவார்கள்?  நானும்தான் எவ்வளவோ முறை பணத்தைத் தொலைத்திருக்கிறேன்.  ஒருக்கால் அவற்றுக்கு பதிலாகத்தான் கடவுள் இதை எனக்குக் கொடுத்துள்ளாரோ?’ என்ற நினைப்பு திரும்பினேன் ரயில் நிலயம் நோக்கி.

மீண்டும் ஒரு குழப்பம்.  ‘அப்படி நானே வைத்துக்கொண்டால் அது பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டது ஆகிவிடாது?’

‘சரி இப்போது போவாயில்யிருக்கும் சின்மயா மிஷனின் தலமை அலுவலகத்திற்கு தானே போய்க்கொண்டிருக்கிறோம்.  அங்கு சுவாமிஜியிடமே கேட்டுவிடுவோம்’ என்று நினைத்து போவாய்க்கு பேருந்தில் ஏறினேன்.

எனது துரதிருஷ்டம் சுவாமிகள் சின்மயானந்தா, தயானந்தா, மற்றும் ஹரிநாமானந்தா ஆகிய மூவரும் வெளியூர் சென்றிருந்தனர்.  நான் தங்கி இருந்த இடத்திற்கு ஏமாற்றத்துடன் திரும்பினேன்.  அந்தப் பணத்தை செலவழித்துவிடக்கூடாது என்பதற்காக என் வங்கிக் கணக்கில் செலுத்தினேன்.  பின் கொச்சி சென்றேன்.

கொச்சியிலிருந்த மேலாளர், “நடராஜன், சாயங்காலம் என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டார்.

“என்ன செய்ய? குளித்துவிட்டு ரேடியோகேட்டுக்கொண்டு உட்கார்வேன்.“

“நீ தங்கியிருக்கும் ஒட்டல் அருகே உள்ள மைதானத்தில் சுவாமி தயானந்தாவின் சொற்பொழிவுத் தொடர் இன்று ஆரம்பமாகிறதே.  அங்கு போகலாமே!” என்றார் அவர்.

மைதானத்திற்குச் சென்று முதல் வரிசையில் அமர்ந்தோம்.  சுவாமிகள் பேச்சைத் துவக்கினார்’  தலைப்பு, “உடலுக்கும் மனதுக்குமான போராட்டம் – உண்மை மதிப்பும் ஏற்றுக்கொண்டுள்ள வேடத்திற்கேற்ற மதிப்பும்.”

“சுட்டெரிக்கும் வெய்யிலில் பம்பாய்த் தெரு ஒன்றில் ஒருவன் நடந்துகொண்டிருக்கிறான். தெருவில் மடித்த நிலையில் காகிதத் துண்டுகளைக் கண்டு உடனே குனிந்து அதைப் பொறுக்குகிறான்.  அவனுக்குத் தெரியும், அதன் மதிப்பு.  குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு நேரம் கையை நீட்டினாலும் கடைக்காரன் மிட்டாயை அவனுக்குத் தருவதில்லையே, அம்மாவின் காசு கை மாறினால் ஒழிய.

“காகிதத்தைப் பொறுக்கியவன் அதை பிரித்துப்பார்க்கிறான்.  ஐந்து புத்தம் புதிய நூறுரூபாய் நோட்டுக்கள்.  அவன் மனத்துள் போராட்டம் ஆரம்பிக்கிறது — காவல் நிலையம் சென்று அதை அவர்களிடம் சேர்ப்பதா, அல்லது தானே வைத்துக் கொள்வதா என்று.”

அவர் இதைச் சொல்லும்போது என் உடலிலுள்ள உரோமங்கள் எல்லாம் செங்குத்தாய் நின்றன.  அவரும் நான் தங்கி இருந்த விடுதியில் தான் தங்கி இருந்ததால் சொற்பொழிவு முடிந்ததும் அவருடனே அவர் அறைக்குச் சென்றேன். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை நெருங்கி என் மனக் குழப்பதிற்கு ஒரு விடை காணமுடியவில்லை.

மறுநாள் மதிய உணவிற்குப்பின் சுவாமிஜீயின் அறைக்குச் சென்றேன்.  அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமிஜி, நேற்று நீங்கள் பம்பாயில் சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த ஒருவன் கதையையும், அவனுக்குக் கிடைத்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் பற்றியும், அவனது மனக் குழப்பத்தையும்பற்றிச் சொன்னீர்கள்.  ஆனால் குழப்பம் தீர்வதற்கான விடை தரவில்லையே” என்றேன்.

“என்ன புதிர் போடறே நடராஜா?” என்றார் அவர்.

பத்துநாள்களுக்கு முன்பு எனக்கு பம்பாயில் நேர்ந்த அனுபவத்தைச் சொன்னேன்.

“என்ன தாடி, மீசை வெச்சிண்டுயிருக்கே?”

“சபரி மலை போறேன், இன்னும் மூணு நாள்லெ.”

“அப்பொ அந்த ஐநூறு ரூபாயெ அவன் உண்டியல்லெ சேத்தூடு.  அவன் அது எங்கெ போய்ச் சேரணுமோ அங்கே சேர்த்துடுவான்.  ஒன் மனசுலெயிருக்கற பாரமும் கொறெஞ்சூடும்.”

மறு நாள் என் அலுவலகத்தில் ஒரு காசோலையினைக் கொடுத்து, ஐநூறு ரூபாய் வாங்கி இரண்டு நாள்களில் சபரிமலை உண்டியலில் சேர்த்தேன்.

பின் ஒரு சமயம் சுவாமி ஹரிநாமானந்தாவைச் சந்தித்தபோது அவரிடம் எனது விஜயவாடா, பம்பாய், கொச்சி அனுபவங்களைச் சொல்லி, “எனக்கு ஏன் இப்படி யெல்லாம் நடக்கிறது?” என்று கேட்டேன்.

“ஒரு சாதகன் முன்னால் இந்த மாதிரியான சில மின்னல்கள் தோன்றும்.  அதைத் தனக்கு சக்தி பிறந்துவிட்டதாக எண்ணி இறுமாப்பு அடைந்தால் கொக்கென்று நினைத்த கொங்கணவனுக்கு ஏற்பட்ட கதி தான் எற்படும்” என்றார் அவர்.

(தொடரும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s