கச்சியப்ப முனிவரின் காஞ்சிப் புராணம் – 5


முனைவர் கோ.. முத்துக்குமாரசாமி

           வண்டுகள் காதலர்கள் அணிந்திருந்த மாலையில் உள்ள மலர்களில் உள்ள மகாரந்த்த்தை முகர்வது, ஆடவர் மகளிரிடையே தூது சென்று உழல்வதுபோல இருந்தது.  மகளிர் தம்முடைய மனவிருப்பத்தைப் புன்னகையினால் வெளிப்படுத்தினர்

           பண்ணிசை பயிற்றியும், மார்பகங்களை மனங்கவரும்படி அசைத்தும், ஒருபுறம் முடிந்திருந்த குழலை அவிழ்த்து மறுபுறம் முடித்தும், அங்கிருக்கும் மரக்கொம்புகளைத் தழுவியும், தமது மனதில் எழும் காம உணர்ச்சியைக் காதலியர் தமது கருத்தைக் கவர்ந்த காதலருக்குத் தெரிவித்தனர்.

காதலர்கள், தங்கள் அழகுடைய காதலியரின் முலைமேல் எழில்பெற எழுதியும், அவர்களின் கருவிழிகளுகு மையிட்டும், வாசனைத்தைலம் பூசப்பெற்ற கூந்தலில் மலர்களைச் செருகியும்  நெற்றியில் சிந்தூரம் தீட்டியும் மகிழ்ந்தனர்.

      முலையும் தோள்களும் இறுக அழுந்துமாறு தழுவினர்;  முழுமதி போன்ற முகத்தில் முத்தமிட்டனர்; ஆடையும், கூந்தலும்,வளைகளும் நழுவிவிழ, படமெடுத்தாடும் பாம்புகளைப் போல உடலைப்பின்னிக்கொண்டு காமக்களியாட்ட்த்தில் ஒன்றினர்.

           மலர்படுக்கைமேல் புணர்ச்சியில் நீண்டு தங்கினவர்களுக்கு மணிவடங்கள் அற்று உகுந்தன. மேற்பூசின களபமும் குங்குமமும் அழிந்தன. நேச அன்பு மேலோங்கின.

             மன்மதன் கலவிக்கலைக்கு அதிபன். அவன் ம்ற்ற மாந்தர் கண்ணுக்குத் தெரியாத உருவிலியானவன் ஆதலால்,  செப்பு நேர் முலை மகளிரொடு மைந்தர் திளைத்திடும்  மெய்யுறு புணர்ச்சியின் நுட்பத்தை,  அவர்களின் அருகில்  நின்று கவர்ந்தான்.  அவன், தன்னை உருவிலியாக்கிய பவளச் சடையானாகிய சிவபிரானுடைய நெற்றிவிழிக் கனலை நன்றியுடன் துதித்தான்.

             வலிய கையில் தாங்கும் வில்லிலிருந்து தொடுக்கும் மலர்க்கணைகள் முற்றிலும் தீர்ந்து விட்டன. நீர்த்துறைகளில் வெண்மையான சங்குகள் மணி சொரியும் வயல்களில் சுரும்பும், பொய்கையில் பல்வகைப்பூக்களும் முழுவதும் எய்து முடிந்தமையால் அற்றுப் போய்விட்டன. எய்யக் கணையில்லமல் போய்விட்டமையால் மன்மதனும் தோற்றான்.

              வேற்று மனிதர்கள் அண்மையில் வந்ததால்  காதலர்ளின் ஒப்பில்லாத புணர்ச்சி இடையீடுற்றதால், அதைத்  தவிர்த்தனர். அவர்கள் இட்டிருந்த திரையின் மறைவை அடைந்து கிளி, பூவையை இனிமையாகத் தேற்றும். (கலவியத் தவிர்ந்த தலைவன் தலைவியத் தேறும் மொழிகளைப் பயின்ற கிளி, அம்மொழிகளால் பூவையைத் தேற்றும் என்பது குறிப்பு)..

            அனங்கன் செய்யும் போராகிய கலவியின்போது மாதர்தம் மணிமிடற்றிலிருந்து எழும் ஒலியைத் தம் இனங்களாகிய பறவைகளின் பயிர்ப்புக் குரலாம் என எண்வகைப் பறவைகள் நெருங்கித் தொங்கவிடப்பட்ட திரைக்குள் திரண்டன, அம்மாதர்தம் கனிந்த இனியகுரலைக் கற்பதற்குப் புகுந்தனபோல். (கலவியில் மகிழும் மங்கையரின் மிடற்றிலிருந்து புறா முதலிய எண்வகைப் பறவைகளின் குரல் எழும் என்பர் காமநூல் வல்லோர்)

                காமப்போரிடும் மாரனைத் தம் துணைவரோடு ஒக்க நோக்கி, கலவிப்போரில் புறங்கண்ட வெற்றிப் பிரதாபமும்,  காமமயக்கத்தைக் கொடுத்தலால் வரும் கீர்த்தியும் குளிர்ந்த மொழியுடையாராகிய மகளிரின் மடமை நோக்கமும் மணிமுருக்கு அதரமும் அறிவுறுத்தன. (நோக்கு- கண். அதரம் வாயிதழ். கலவியால் மாதர்தம் மடமை நோக்கம் (கருங்கண்) சிவந்தன; மணி முருக்கு (செவ்விதழ் வெளுத்தன). செந்நிறம் வெற்றியின் நிறம்; பிரதாபம் எனப்படும். வெண்ணிறம் கொடையால் வரும் கீர்த்தியின் நிறம்.)

           களவொழுக்கத்தில் காதலரொடு புணர்ச்சி கொண்ட தலைவியின்  விழிச் வப்பின் செழுமையைக் கண்டு, இச்சிவப்பு கலவியினாலாயிற்றோ அன்றி நீர்விளையாடலின் ஆயிற்றோ என ஐயுற்ற செவிலியர், கூந்தலில் சூடிய மலரிலிருந்து சொட்டும் தேன்துளியினைக் கண்டு, இச்சிவப்பு நீர் விளையாட்டின் ஆயது எனத் தெளிந்தார். தேன் துளிர்த்ததை நீர்த்துளி என மயங்கினர் எனவாம். கலவியில் நிகழ்ந்ததை நீர்விளையாட்டில் ஆயதெனச் செவிலி தெளிந்தாள்.

            ஊடலுடன் தலைவியர் செல்வுழி, காதலர் துகிலினைப் பற்றி ஈர்த்தனர். உடை நழுவவே, மகளிர் காட்சிப்படும் அல்குலை விரைவாகத் தம் அங்கையால் மறைத்தனர். காதலர், அது நோக்கி, அகலும் பாம்பு அபிமந்திரத்து அடங்குமோ? என்றனர். அது கேட்ட மங்கையர் நாணங்கொண்டு குறுநகை விளைத்தனர்.

சோலையில் விளையாடல்களும் போட்டிகளும்:

செம்மறிக்கிடாய்ப் போர்வெற்றி, யானை, குதிரை, இரதம் , காலாள் போட்டிகளில் வெற்றி, சூட்டுடை வாரணம்- உச்சிக்கொண்டையை உடைய சேவல். குறும்பூழ்- காடை. கடா- எருமைக் கடா இவற்றைப் போரிடைச் செலுத்தி அடையும் வெற்றியைக் கொண்டனர் ஆடவர்கள். தாம் வளர்த்தும் விலங்கினங்களின் வெற்றி தம்முடையனவே யாகலின் வென்றியுங் கொண்டனர் .

இசைப்போர் வெற்றி, நாட்டியத்தில் வெற்றி, கிளி, பூவை ஆகியவற்றைப் பிடிப்பதில் வெற்றி, இவை போன்ற ஏனைய விளையாட்டிலும் வெற்றி கொண்டார், இணையில்லாத இன்பமே விளையும் முலைகொண்ட மகளிர்.

 அம்மையும் ஐயனும் இளவேனிலில் கருணை கொளல்:

இவ்வாறு வந்து தங்கிய இளவேனிலில் காமவேள் விழாநாளில் ஒருநாள், மானின் மருட்சியை வென்ற கண்ணளாகிய அம்மையுடன் மலர்த்தவிசில் விடைக்கொடி உயர்த்தவராகிய இறைவன் அகில உயிர்களும் களிப்புறும் பொருட்டுத் தாம் நிகழ்த்தும் ஒப்பற்ற இன்பவிளையாட்டினிடையில்

அந்தப்புரத்தில் உள்ள பூஞ்சோலையைக் காக்கும் தெய்வக்கன்னி  இடை நொசிய நடந்து வந்து, கயிலையில் அந்தப்புரத்தைச் சார்ந்து அங்கு வந்து அடி வணங்கும் தேவ மகளிர்களோடு செங்கை கூப்பினள்; பணிந்து எழுந்தாள். ‘எங்கள் நாயகனே! சயசய! எனத்துதி இசைத்தாள். பின் இறைவியுடன் அமர்ந்திருக்கும் இறைவரிடம் இவ்வாறு கூறத் தொடங்கினாள்.

“திருவினளாகிய இறைவியின்  பொன்போன்ற தேமல் படர்ந்த முலைகளாகிய வெங்களிற்றின் தந்தங்களின் மேற்பொருது வார்ந்து இழிகின்ற மதநீரெனப் புதிய தேன் அருவிபோல் சொரியும் தாழ்ந்த மாலை மார்பனே! (இளவேனில் வந்தது’ காம இன்பத்துக்குரிய காலமாதலின் இறைவன் மார்பின் மாலை அதற்கேற்றபடி வருணிக்கப்பட்டது)

பாற்கடலில் பவளம் கிடந்ததுபோல  அம்மை திருமாற்பிற் குங்குமம் பதிந்துள்ள நீறணி மார்பனே! உனக்குத் தோற்ற வேனில்வேள் போர்க்குத் தூது விட்டாலென மலயமாருதம் நம்முடைய கயிலாயத்தில் மென்மெல அசைந்து உலாவியது. (தனி- நிகரில்லாத. துகிர்- செம்பவளம். வேனில் வேள்- மன்மதன். மலயக் காற்று- தென்றல்.)

            கத்தூரிக் குழம்பு பூசியமணம் மிக்க நறுங்குழலளாகிய பார்வதியின் குளிர்ந்த முகமாகிய தாமரைமலரில்  தேனருந்த வண்டுபோல் உன்விழி செல்லும் பிரகாசமானமுகத்தை உடையாய்! இளவேனிலாகிய மைந்தனை நிலம் ஈன, வெள்ளணி அணிந்தாற்போல மலைகளில் அருவிகள் பாய்ந்தொழுகுகின்றன. (இறைவரின் திருக்கண்களாகிய வண்டுகள், இறைவியின் திருமுகத்தாமரையின் தேனுண்ணும். . வெள்ளணி- தான் புதல்வனைப் பெற்றமையைத் தலைவனுக்கு அறிவித்தற்கு    நினைத்து வெண்மலர் முதலியவற்றை அணிந்து கொள்ளச் செய்து  ஒருத்தியைத் தலைவியானவள் தலைவன்பால் விடுத்தல்.)

மாமிசத்தைத் துழாவிய வேலினை நிகர்த்த செவ்வரி படர்ந்த உமையின் விழியுடன், வண்டுக் கூட்டங்கள் துழாவிய கொன்றைமாலை கமழ்கின்ற திருத்தோளினை உடையாய்! முன்னர்ப் பிரியப்பெற்ற காதலனை மீளப்பெற்றுத் தளர்வு நீங்கிய மாதர்போல் நறுமணம் துழாவப் பெற்ற மலர்ப்பொழில் தென்றலால் வளம் படைத்தது. (உமையின் கண் செவ்வரி படர்ந்து வேலின் இலைபோல அகன்றும் கூரிய கடையைக் கொண்டும் இருத்தலால் நிணந்துழாவு வேல் நிகர் விழி எனப்பட்டது. மகளிர் காதலால் அணைவதற்குரிய உறுப்பு,ஆடவர்க்குச் சிறந்த தோள். ஆதலால் உமையின் கண்கள் இறைவனின் தோளில் படிந்தன. இறைவனின் குமிண் சிரிப்பு அம்மையின் கண்களுக்கு விருந்தாக அமைதலினால், ‘மங்கை கட்கடையின் கூர்நிறுத்திய குறுநகை’ என்றார். நாணத்தினால், அம்மை இறைவனை நேராகப் பார்க்காமல் கடைக்கண்ணால் நோக்கினா ளாதலால், ‘ கட்கடையின் கூர் நிறுத்திய ‘ என்றார்)

கருப்பினந் கரும்பு வில்லினனாகிய மன்மதன். போருக்குப் பின் தோற்ற அர்சர்கள் வென்றவனுக்குத் திறைசெலுத்துவர். அதுபோல, கோங்க மரங்கள் பூத்தன, அவ்வாறு பூத்திருந்தமை  மன்மதன் அலங்கரிக்கப் பட்ட தேரினைத் திறையாக நிறுத்தியதை ஒத்திருந்தது.

வாய் மடுத்த கொடிய விடம் விளங்கும் கண்டத்தை யுடையவனே! நீ, விடம் ததும்பும் இக்கண்ணினாளுடன் (பார்வதியுடன்) இன்ப விளையாட்டுக்குப் பொருத்தமாவதன்று எனக் களைந்து எறிந்த புலியதளைத் தான் போர்த்துக் கொண்டு நின்றதே போன்று   மலர்க் கொத்துக்களைப் பூத்து விரித்து நின்றன, வேங்கை மரங்கள். (சிவனுக்குக் காமநோய் விளைப்பதாகலின் கடுத் (விடம்) ததும்பிய என்றார். அவருடைய காமநோயைத் தணித்துக் கருணை செய்தலின் கருங்கணாள் என்றார். கருங்கண்- குளிர்ச்சியுடையகண். “இருநோக்கு இவளுண்கண் உள்ளது, ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்றந்நோய்க்கு மருந்து’( 1091) எனும் திருக்குறள் காண்க. இங்குப் புலியென்றது, வரிப்புலியை அன்று. புள்ளித்தோலாடையுடைய வேங்கைப்புலியையாம்.)

பொலிவால் பொன்னை வென்ற  புரிசடையினனே. ‘புராதனனே- பழமையானவனே. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!.  நீ, மலையர்சன் மகளுடன் மகிழ்ந்தாடிய திறத்தை அறிந்து பாம்பணைத் துயின்றவனாகிய திருமால், தன்னோடும் ஆட,அடுத்துக் காத்திருப்பது போன்று காயாமரங்கள் செறிமலர் ஊழ்த்து உகுக்கின்றன. (நிறத்தால் காயாமலர் திருமாலை ஒக்கும். திருமாலுக்குக் காயமலர்வண்ணன் என்பதொரு பெயர்)

துளைக்கையுடைய பெரிய களிற்றின் தோலைப் போர்வையாய்ப் போர்த்திய பகவனே! மலையான் மகளுடன் ஆடல் விரும்பிய நின் தோற்றப் பொலிவினைக் கேட்டு மன்மதன் இனிப் பயமில்லாமல் நின்மேல் மலரம்புகளைத் எய்யலாம் என விரும்பி வந்திட்டதை ஒக்கக் காஞ்சிமரம் பூத்து நின்றது. (எதிரூன்றல் காஞ்சி. போருக்கு வந்தவனை நேர் கொண்டு எதிர்த்து நிற்றல் காஞ்சி என்னும் திணையாகும் என்பது புறப்பொருள் இலக்கணம்.)

வெண்ணிறப் பிறைமதியைச் செந்நிறமும் திரட்சியும் கொண்ட சடையில் தரித்த அழகனே!, தான் இழந்த பற்களை மீள அடையும் பொருட்டு சூரியன் சிவந்த ஒளிகாலும் தேரொடு புக்கிருப்பது போலச் செருந்தி மரங்கள்  தேன் வழியும் மலர்திரள்கள் செறிந்து நிற்கின்றன.( சூரியன் தக்கயாகத்தின்போது வீரபத்திரரிடம் பற்களை இழந்தான்)

சினமிக்க கூரிய பற்களையுடைய பாம்புகள் மாலையாகச் சூழ்ந்த செஞ்சடைக் கூத்தனே(சிவன்)! அனங்க வேளெனும் தமையனுக்கு (காமனுக்கு) அவனுடைய அழகிய உருத் தருக என்று தவம் இயற்றும் பொருட்டு அவனுடைய தம்பி சாமன் மனத்தில் ஆசையுடன் வந்ததென ஞாழல் மரம் திகழ்ந்தது.

மேருவாம் பொன்மலையை வளைத்து, அசுரர்களுடைய மூன்று எயில்களைச் சிதறடித்தவனே! நடைப்பயண மாகிய தவத்தை மேற்கொண்ட விபூதி பூசிய மெய்த்தொண்டரே போல, அழகிய வெண்மலர்களை மலர்ந்த வெண்கடம்பு மரங்கள்.(வெண்ணிற மலர்கள் பூத்த மராமரங்கள் முழுநீறு பூசிய அடியவர்களை ஒத்திருந்தன).

sivan worshipபோர்முனையில் முழங்கு அழல் போன்ற நிறத்த சூலப்படையை ஏந்திய செங்கரத்தோய்! நின்னையே நினையும் மாதவர்களுக்கு நின் ஏவலால் அவர்களை அடைந்து அவர்களுடைய மிக்க விருப்பங்களை நிரப்புகின்ற உருத்திரகணங்களைப் போன்று ந்ன்றன, நீண்ட மராமரங்களை அடுத்து மலர்ந்த கூவிளங்கள்.” (கூவிளம்- வில்வம். மரா- அடியவர். மராமரமடியவர் என முன்னைப் பாடலில் கூறப்பட்டது.)

என்று இவ்வாறு வனத்தெழில் முழுவதையும் பலபடக் கூறி மேலும் உவகையோடு கூறத்துவங்கினாள்.

“எம்பிரான் தன்னுடைய குடங்கையால் வளர்த்த மாங்கன்று நின்னுடைய செய்ய திருமேனி போல வளர்ந்தது; அன்னை உமை தன் கரத்தால் வளர்த்த மாலதியும். (மாலதி- முல்லை, குருக்கத்தி.) மையுண் கண்ணியின் முகை முறுவலை நிகர்த்து முகிழ்த்து அழகுடையனவாய், விளங்கும் உன் பொற்சடையின் மீதும் அன்னையின் கூத்தலின் மீதும் மிலைச்சுதற்கு அமைந்தன.” என்றாள். (மாமரத்தின் மீது முல்லைக்கொடி படரும் காலம் என்பது குறிப்பு)

சோலையைக் காக்கும் தெய்வக்கன்னி கூறியதைக் கருணைநாயகராகிய இறைவர் கேட்டு மகிழ்வுடன் குறுநகை காட்டினார். திருமகளினும் மேலான அழகுடையவளின் (உமையின்) செழுமையான தாமரைபோன்ற முகத்தை நோக்கினார். இறைவியின் மனக்குறிப்பையும் அறிந்து, அவை இரண்டிற்கும் (மாந்தளிர், முல்லை) மணமுடிப்போம் என்று உமையொடு எழுந்தார்

(மாந்தளிர் சடையிலும் முல்லை குழலிலும் அணியத் தகுவனவாயின எனவும் கொள்ளலாம்.)

siva parvatiபொன்மணி மாலைகளும், அணிகலன்களும், மணமாலைகளும், நறுமணப் பொடிகளும், குங்குமக் குழம்பும், ஆடைகளும் குளிர்ந்த சந்தனக் கலவைகளும் வேறு நறுமணத் திரவியங்களையும் தேவமகளிர் அளவில்லாத அளவுக்குக் கொணர்ந்தனர்.

சிலர் கண்ணாடி, சிலர் வெற்றிலைத் தாம்பூலம் என மங்கலப்பொருள்களை ஏந்திவந்தனர். சிலர் வாசனைப் பொருள்களுடன் கூடிய வெற்றிலைச் சுருள்களை (இக்காலத்து ‘பீடா’ என்ப்படுகின்றது) முன் செல்லுவார்க்கு நீட்டினர்.

வெற்றிலை மென்று உமிழ்நீரைத் துப்புவதற்காகச் சிலர், மகிழ்வுடன் படிக்கம் பிடித்தனர். ( படிக்கம். உமிழ்நீரைப் பிடிக்கும் பாத்திரம்.)

சிறந்த மாடகயாழ், குழல் முதலிய கருவிகளுடன் பாடல்கள் இசைக்கும் அழகிய மளிர் முன்னும் பின்னும் செல்ல, சூடகம் (தோள்வளை) மேகலை, சிலம்பு முதலிய அணிகலன்கள் ஒலித்தவண்ணம் சிலர் நட்னமாடிச் செல்ல,  வெண்குடை மேலே நிழலளிக்க, பெரிய கவரியைச் சிற்றிடைக் கொடிபோல்வார்  இருபக்கத்திலும் இரட்ட, ஒள்ளொளி பரப்பும் சாந்தாற்றிகள் பரவ, மிக்கெழிலுடைய திருப்பாதணிகள் கழலிணை சூட., சிவனது அழகிய முகத்து விழிகளும் உமையின் ஒப்பற்ற முகத்து வாள்விழிகளும் சார்ந்து திருமுகத்தழகினைப் பருகிக் களித்தன.

சிவனது தோளணி உமையின்புயத்தும் உமையின்புயத்துத்  தார்கள் சிவனாரது தோள்களையும் உறத் திளைத்தன; சிவனது அங்கையும் உமையின் அங்கையும் கோத்தன.

[தொடரும்]

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s