சண்டாளிகா- 5


மூலம்: ரவீந்திரநாத் தாகூர்; தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

அங்கம்-2 (தொடர்ச்சி)

ப்ரகிருதி: நேற்று அவரை உபாலி ஆற்றங்கரையிலுள்ள பாதால் கிராமத்தில் கண்டேன். புதிதாகப்பெய்த மழையால் ஆற்றில் நீர்பெருகிக் கொந்தளித்துக்கொண்டிருந்தது; அதன் படித்துறையின் கிளைகளில் மின்மினிப்பூச்சிகள் ஒளிவீசிக்கொண்டிருக்கும் ஒரு பழைய அரசமரத்தினடியில் பாசிபடிந்த ஒரு பலிபீடம் இருந்தது. அதனை நெருங்கியதும் அவர் திடுக்குற்றுச் சிலையாக நின்றுவிட்டார். அது அவருக்கு நீண்டநாட்களாகப் பரிச்சயமான இடம்; புத்தபெருமான் ஒருநாள் அங்குதான் அரசன் பிரபாசனுக்கு உபதேசம் செய்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அங்கமர்ந்து தன் கண்களைக் கரங்களால் பொத்திக்கொண்டார்.  அவரைக் கட்டியிருந்த வசியமந்திரத்திலிருந்து எந்த நொடியிலும் அவர் விடுபட்டுவிடுவார் என நான் எண்ணினேன். நான் பார்க்கப்போவதனை எண்ணிப் பயந்து, கண்ணாடியை வீசியெறிந்துவிட்டேன். நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் தடுமாறி, என்னாவாயிற்று என அறிய விருப்பமின்றி நானும் நாள்முழுவதும் அமர்ந்திருந்தேன். இப்போது திரும்பவும் இருள் படர்ந்துவிட்டது; இரவுக்காவலாளி நேரத்தினைக் கூவி அறிவித்தபடி சாலையில் போகின்றான், பார்! நடுஇரவின் பின்பு ஒருமணி நேரம் சென்றிருக்கவேண்டும். ஓ, அம்மா! சிறிது நேரமே உள்ளது; இந்த இரவினை வீணாக்காமல், உன்னுடைய முழுபலத்தையும் உன் வசியமந்திரத்தில் செலுத்துவாயாக.
தாய்: குழந்தாய், என்னால் இனி முடியாது; மந்திரம் பலமிழந்துள்ளது, நான் மனதாலும் உடலாலும் தளர்ந்துகொண்டிருக்கிறேன்.
ப்ரகிருதி: இப்போது உன் வசியம் தளரக்கூடாது. இப்போது அதனைக் கைவிட்டுவிடாதே! ஒருவேளை அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டரோ என்னவோ? ஒருவேளை நாம் அவரைப் பிணித்திருக்கும் இந்தச் சங்கிலி அவரைப் பிணிக்க இயலாது அளவுக்குமீறி இழுபட்டுவிட்டதோ என்னவோ? ஒருவேளை அவர் என்னுடைய இந்தப் பிறவியிலிருந்து இப்போது தப்பிவிட்டாரென்றாலோ, நான் அவரை இனி நெருங்கவே இயலாதென்றாலோ நான் என்ன செய்வேன்? அப்போது மாயையான என்னுடைய இந்தச் சண்டாளப்பிறப்பைப்பற்றிக் கனவுகாண்பதற்கு முயல்வேன். என்னால் இந்த அலட்சியத்தை இனியும் சகித்துக்கொண்டிருக்க முடியாது. உன்னை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் அம்மா! உன்னுடைய முழுச் சக்தியையும் இன்னும் ஒரேமுறை பிரயோகி! நற்குணங்களின் இருப்பிடமானவர்களின் அமைதியான சுவர்க்கம் ஆட்டம்காணும் விதத்தில், பூமியிலேயே பழமையான உன்னுடைய வசிய மந்திரத்தைச் செலுத்துவாயாக!
தாய்: நான் சொன்னவிதத்தில் நீ எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டாயா?
ப்ரகிருதி: ஆம்! நேற்று வளர்பிறைச்சந்திரனின் இரண்டாவது இரவாகும். நான் கம்பீரா நதியில் நீரில் நன்றாக மூழ்கி நீராடினேன். இந்த முற்றத்தில் ஒரு வட்டத்தை அரிசியாலும், மாதுளைமலர்களாலும், சிவந்த பொடியாலும், ஏழுவிதமான ரத்தினங்களாலும் வரைந்தேன். மஞ்சள்நிறத் துணியாலான கொடிகளை ஊன்றி, சந்தனக் குழம்பையும் மலர்மாலைகளையும் ஒரு பித்தளைத்தாம்பாளத்தில் வைத்து, விளக்குகளை ஏற்றினேன். எனது ஸ்நானத்தின்பிறகு நெற்கதிர்களின் இளம்பச்சைநிறத் தாள்களைப்போன்ற நிறத்தில் ஒரு ஆடையை உடுத்தி, செண்பகப்பூவின் நிறங்கொண்ட சால்வையையும் அணிந்தேன். கிழக்குநோக்கி அமர்ந்தேன். இரவு முழுவதும் அவருடைய உருவத்தையே சிந்தையில் இருத்தினேன். எனது இடதுகையில் பதினாறு முடிச்சுகள் கொண்டதும், பதினாறு இழைகளைக் கொண்டதுமான தங்கநிறத்தினாலான ஒரு கங்கணத்தை அணிந்துள்ளேன்.
தாய்: அப்படியானால், உன்னுடைய பிரார்த்தனைக்கான நடனத்தை அந்த வட்டத்தைச் சுற்றி ஆடு; நான் அந்த பலிபீடத்தின் முன்பு எனது வசியத்தைத் தொடர்கிறேன்.
(ப்ரகிருதி பாடியபடியே ஆடவும் செய்கிறாள்)
ப்ரகிருதி, உனது கண்ணடியை எடுத்து, அதில் பார்! ஒரு கரிய நிழல்வடிவம் பலிபீடத்தின்மீது விழுந்துகிடக்கும். எனது இதயம் வெடித்துவிடும் போலுள்ளது; இனி என்னால் ஒன்றும் செய்யமுடியாது. கண்ணாடியில் பார்! இன்னும் எத்தனை நேரமாகும்?
ப்ரகிருதி: முடியாது, நான் திரும்பவும் பார்க்க மாட்டேன், நான் கேட்பேன் – எனது ஆழ்மனத்தின் குரலைச் செவிமடுப்பேன். அவர் தன்னைத் தெரியப்படுத்திக்கொண்டாரென்றால், அவரை என்முன்னால் காண்பேன். இன்னும் சிறிதுநேரம் கூடப் பொறு, அம்மா! அவர் கட்டாயமாகத் தன்னை என்முன் வெளிப்படுத்திக் கொள்வார்.  உற்றுக்கேள்!  அதோ அந்தப் புயலை உற்றுக்கேள்! அவர் வருகையின் புயல், அது! பூமி அவருடைய காலடியோசையில் நடுங்குகிறது, எனது இதயம் துடிக்கிறது.
தாய்: அது உனக்கு ஒரு சாபத்தைக் கொண்டுவருகிறது, மகிழ்ச்சியற்ற பெண்ணே! என்னைப் பொறுத்தவரை, அது கட்டாயமாக இறப்பைக் குறிக்கிறது.  எனது உடலின் இழைகள் சிதறிப்போய்விட்டன.
ப்ரகிருதி: சாபமல்ல, அது சாபத்தைக் கொண்டுவரவில்லை, அது எனது புதிய பிறவியின் பரிசைக் கொண்டுவருகின்றது. அந்த இடியும் மின்னலும், சாவின் சிங்கமுகக்கதவுகளை நொறுக்குகிறன; கதவு உடைபடுகிறது; சுவர்கள் நொறுங்குகின்றன; எனது இப்பிறவியின் பொய்ம்மையான முகமும் நொறுங்குகிறது. அச்சத்தின் அதிர்வுகள் எனது சிந்தையை உலுக்குகின்றன; இருப்பினும் ஆனந்தத்தின் சீரான இணைப்புகள் எனது ஆத்மாவை மிக்க களிப்படையச் செய்கின்றன. எனது எல்லாவற்றையும் அழிப்பவனே! எனது எல்லாமாக இருப்பவனே!  நீ வந்துவிட்டாய்!  எனது அவமானத்தின் உச்சியில் நான் உன்னை சிம்மாசனத்திலமர்த்துவேன்! உனது அரச இருக்கையை எனது வெட்கம், பயம், மகிழ்ச்சி இவற்றினால் அமைப்பேன்.
தாய்: எனது நேரம் நெருங்கிவிட்டது! இனி என்னால் ஒன்றும் செய்ய இயலாது. உடனே கண்ணாடியில் பார்ப்பாயாக.
ப்ரகிருதி: அம்மா, எனக்கு பயமாக இருக்கிறது. அவருடைய பயணம் அதன் முடிவை நெருங்கிவிட்டது, அதன்பின் என்ன உள்ளது?  அவருக்கு அதற்கப்புறம் என்ன உள்ளது? நான் மட்டுமே, பரிதாபகரமான நான் மட்டுமே உள்ளேனா?  வேறு ஒன்றுமே இல்லையா? இந்த நீண்ட, கொடுமையான வலிக்குக் கொடுக்கப்படும் விலை இதுதானா? நான்மட்டும்தானா? மிகக் களைப்பூட்டும், கடினமான பாதையின் முடிவில் இது ஒன்றுதானா?  நான் மட்டுமேதானா?
தாய்: என் கொடிய மகளே! என்மீது இரக்கம்காட்டு! என்னால் இனிப்பொறுக்க முடியாது. கண்ணாடியில் பார், சீக்கிரம்!
ப்ரகிருதி: (கண்ணாடியில் பார்த்துவிட்டு அதனை வீசியெறிகிறாள்). ஓ அம்மா, அம்மா, நிறுத்து! உனது வசியத்தினை முறியடித்துவிடு, உடனே முறியடித்துவிடு. நீ என்ன செய்திருக்கிறாய்? என்ன செய்துவிட்டாய்? எத்தகைய தீச்செயல், தீமையான செயல் இது?  இதைவிட இறந்தே போயிருக்கலாம். என்ன கொடுமையான காட்சி இது! எங்கே அந்த ஒளியும் பிரகாசமும்? எங்கே அந்த ஒளிரும் புனிதம்? எங்கே அந்த ஓளிவீசும் தெய்வீகச்சுடர்? எப்படிக் களைத்துச் சிதைந்து, அவர் எனது வாயிலுக்கு வந்துள்ளார்! அவர் தன்னுடைய சுயத்தின் தோல்வியை ஒரு பெரும்பாரமாகச் சுமந்துகொண்டு, கவிழ்ந்த தலையுடன் வருகிறார்…  இது ஒன்றுமே வேண்டாமே! ஒன்றுமே வேண்டாமே! (வசியம் செய்யப் பயன்படுத்திய உபகரணங்களை உதைத்துச் சின்னாபின்னமாக்குகிறாள்). ப்ரகிருதி, ப்ரகிருதி, நீ உண்மையிலேயே ஒரு சண்டாளினி அல்ல என்பது உண்மையானால், வீரமுள்ள அவரை அவமதிக்காதே. அவருக்கு வெற்றி உண்டாகட்டும்!  வெற்றி!  வெற்றி!!

(ஆனந்தா நுழைகிறார்)

ப்ரகிருதி:  ஓ, புனிதரே!  என்னைக் கடைத்தேற்ற நீர் வந்துள்ளீர்கள்!  அதனால்தான் இந்தக் கொடுமையை உணரவேண்டி வந்தது. என்னை மன்னிப்பீராக! மன்னிப்பீராக!! உமது திருவடிகள் எல்லையற்ற அவமானமான எனது பிறப்பை வெறுத்துத்தள்ளட்டும். நான் உங்களை இந்த மண்ணிற்குக் கீழே ஏன் இழுத்தேன் தெரியுமா? இல்லாவிடில் எவ்வாறு நீங்கள் என்னை உங்கள் சுவர்க்கத்திற்கு உயர்த்த இயலும்? ஓ, தூய்மையானவரே! புழுதி தங்கள் பாதங்களை அழுக்காக்கிவிட்டது, ஆனால் அவை காரணமின்றி அவற்றை அழுக்காக்கவில்லை. எனது மாயத்தோற்றத்தின் திரை அவற்றின்மீது விழுந்து அந்தப்புழுதியைத் துடைக்கட்டும். வெற்றி! வெற்றி உமக்கே!!  ஓ புனிதரே!!!IMG_2312
தாய்: புனிதரே! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். எனது பாவங்களும் எனதுயிரும் ஒன்றுசேரத் தங்கள் திருவடிகளில் வீழ்ந்துகிடக்கின்றன, தங்கள் மன்னிப்பெனும் புகலிடத்தை நாடும் எனது நாட்களின் இறுதி இதுவே! (விழுந்து இறந்துவிடுகிறாள்)

ஆனந்தா: (பாடுகிறார்)

மிகப்புனிதரான புத்தருக்கு, கடல்போலும் கருணைகொண்டவருக்கு,
பூரணமான, புனிதமான, உயர்வான அறிவினை உணர்ந்தவருக்கு,
உலகின் பாவங்களையும் துயரங்களையும் அழிப்பவருக்கு,
அவர்முன்பு பயபக்தியுடன் நான் தலைவணங்குகிறேன்.

[முற்றும்]

***   ***   ***

பின்குறிப்பு:

புத்தரின் சீடரான ஆனந்தாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்த ஒரு சண்டாளப்பெண் அவர்பால் காதல்வயப்பட்டு, தன் தாயின் வசியத்தால் அவரை அடைய முயலுகிறாள். அவளுடைய வீட்டின் வாசற்படிவரை வந்துவிட்ட ஆனந்தா புத்தபிரானைவேண்டி, அந்த மையலிலிருந்து தப்பிச்செல்கிறார் என்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் ஒருகதை.

ரவீந்திரநாத் தாகூர்

தாகூர் தனது எழுத்தின் கற்பனை வலிமையால் இதனை ஒரு உயிரோட்டமான நாடகமாக, ஒரு சண்டாளப்பெண் தன்னை உணரும் அறிவின் பிரக்ஞை அளவுமீறுவதால் உண்டாகும் விபரீதத்தை விளக்கிப் புனைந்துள்ளார். தான் கொடுப்பதும், ‘தனக்கும் இவ்வுலகில் ஒரு முக்கியமான இடமுண்டு’ எனும் தன்னுணர்வும், ப்ரகிருதியை அளவுக்குமீறிச் செயல்படவைக்கின்றன. ஆனந்தாவிற்குத் தன்னையே கொடுக்கவிழையும் அவள், ‘அவருக்குத் தான் தேவைதானா’ எனச் சிந்திக்க மறந்துவிடுகிறாள். தான் பணிவதின்றி அவரை எப்படியேனும் அடையமுயல்கிறாள். இறுதியில் எஞ்சுவது அவமானமும் துயரமும் குழப்பமும்தான். அவளுடைய தாயும், மகளைத் திருப்திசெய்யும் முயற்சியில் இறந்துவிடுகிறாள். இத்துயரங்களே ப்ரகிருதியின் கண்களைத் திறக்கின்றன. அறிவுவந்ததும் மகிழ்ச்சி இல்லை; ‘மறுதளித்தல் என்பது எண்ணங்கள் நிறைவேறுதலால் அல்ல’ என உணர அவளுக்கு இத்துயரங்கள் தேவையாக உள்ளன என தாகூர் மிக அழகாக இந்த நாடகத்தின்மூலம் உணர்த்தியுள்ளார்.

 

******

_

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s