சண்டாளிகா — 1


மூலம்: ரவீந்திரநாத் தாகூர் — தமிழ் மொழிபெயர்ப்பு: மீனாட்சி பாலகணேஷ்

http://wp.me/p4Uvka-Kv 
அங்கம்-1

தாய்: பிரகிருதி! பிரகிருதி! அவள் எங்கே போய்விட்டாள்? அவளுக்கு என்னவாயிற்று என்றே எனக்குப்புரியவில்லை. அவள் எப்போதும் வீட்டிலேயே இருப்பதில்லை.
பிரகிருதி: அம்மா! நான் இங்கேதான் இருக்கிறேன் அம்மா….
தாய்: எங்கே?
பிரகிருதி: இதோ, இந்தக் கிணற்றடியில்தான்….
2 bengali womenதாய்: நீ அடுத்தபடியாக என்ன செய்யப்போகிறாய்? உச்சிப்பொழுதாகிவிட்டது! சூரியன் அனல்கொளுத்துகிறான்; தரையில் கால்வைக்க முடியாமல் பொரிகின்றது! காலைக்குத் தேவையான நீரையும் அப்போதே கிணற்றிலிருந்து சேந்திக்கொண்டு வந்தாகிவிட்டது; மற்றபெண்கள் எல்லாரும் அவரவர்கள் குடங்களையும் நிரப்பிக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தாகிவிட்டது. பார்! அந்த ஆம்லோகி மரத்திலுள்ள காக்கைகள் சூடுதாங்காமல் தவிப்பதைப்பார்! நீ என்னடாவென்றால் இந்த வைசாகமாதத்து வெய்யிலில் ஒரு காரணமுமில்லாமல் அமர்ந்து வறுபட்டுக்கொண்டிருக்கிறாய்! உமை வீட்டைவிட்டுச் சென்று எரிக்கும் வெய்யிலில் தவம் செய்தாள் என்று ஒரு புராணக்கதை உண்டு- நீயும் அதைத்தான் செய்கிறாயா?
பிரகிருதி: ஆமாம் அம்மா! அப்படியே வைத்துக்கொள்! நானும் தவம்தான் செய்கிறேன்.
தாய்: கடவுளே! யாருக்காகவோ?
பிரகிருதி: எனக்கு யாரிடமிருந்து அழைப்பு வந்துள்ளதோ அவருக்காக!
தாய்: அது யாருடைய அழைப்பாம்?
பிரகிருதி: “எனக்கு நீர் கொடு.” இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் எதிரொலித்துக்கொண்டேயுள்ளன.
தாய்: கடவுளே நம்மைக் காக்க வேண்டும்! “எனக்கு நீர் கொடு,” என்று அவர் சொன்னாரா? யார் அது? நமது ஜாதியைச் சேர்ந்தவரா?
பிரகிருதி:அதைத்தான் அவர் கூறினார்- நம்மைச் சேர்ந்தவர் என்றே சொன்னார்.
தாய்: நீ உனது ஜாதியை அவரிடமிருந்து மறைக்கவில்லையே? நீ சண்டாள குலத்தைச் சேர்ந்தவள் என்று அவரிடம் சொன்னாயா?
பிரகிருதி: ஆம். அவரிடம் கூறினேன். அவர் அது உண்மையல்ல என்றார். ச்ராவணமாதத்துக் கருமேகங்களைச் சண்டாளர்கள் என்றால் என்னவாயிற்று என்றார். அந்தச் செய்கை அவற்றின் மழைபொழியும் தன்மையையோ அல்லது அவைபொழியும் நீரின் தரத்தினையோ மாற்றவியலாது. உன்னை நீயே இழிவுபடுத்திக்கொள்ளாதே என்றார்; தன்னை இழிவுபடுத்திக் கொள்வதும் ஒருவகையில் பாவம்தான், தற்கொலையைவிட அது மோசமானதாகும் என்றும் கூறினார்.
தாய்: உன்னிடமிருந்து வரும் இவை என்ன வார்த்தைகள்? ஏதாவது முன்பிறவியில் கேள்விப்பட்ட கதையா இது?
பிரகிருதி: இல்லை இது எனது புதுப்பிறவியின் கதையாகும்.
தாய்: எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. புதுப்பிறவி, ஆமாம்! எப்போது அது நிகழ்ந்ததாம்?
பிரகிருதி: அன்றொருநாள் நடந்தது அது. அரண்மனை மணி மதியத்தை அறிவிக்க அடித்தது. வெயில் கொதித்துக் கொண்டிருந்தது. நான் அந்தக் கன்றுக்குட்டியை- அதுதான், அதன் தாய் இறந்துவிட்டதே, அதனை- கழுவிக்கொண்டிருந்தேன். அப்போது காவி உடையணிந்த ஒரு புத்தபிட்சு வந்து என்முன் நின்றவண்ணம், ‘எனக்குக் கொஞ்சம் நீர்கொடு,’ எனக்கேட்டார். எனது உள்ளம் ஆச்சரியத்தில் துள்ளியது. உடல் விதிர்விதிர்க்க நான் அவர் பாதங்களில்- அவற்றைத் தொடாமல்- விழுந்து வணங்கினேன். காலைப்பொழுதின் வெளிச்சத்தில் அவர் வடிவம் ஒளிவீசியது. நான் சொன்னேன்: “நான் ஒரு சண்டாளினி; இந்தக் கிணற்றுநீர் அசுத்தமானது.” அதற்கு அவர், “என்னைப்போல நீயும் ஒரு மனிதப்பிறவிதான். சூட்டைத் தணிவித்து, தாகத்தினை அடக்கும் எல்லாநீரும் புனிதமானதே,” என்றார். எனது வாழ்க்கையிலேயே முதல்முறையாக நான் அப்படிப்பட்ட சொற்களைக்கேட்டேன்; முதல்முறையாக அவரது குவித்தகரங்களில்- எவருடைய கால்தூசியைத் தொடுவதற்கு நான் அஞ்சினேனோ அவருடைய கரங்களில்- குடிப்பதற்காக நீரை ஊற்றினேன்.
தாய்: ஓ முட்டாள் பெண்ணே! எப்படி நீ இவ்வாறு புத்திகெட்டுப்போனாய்? இந்தப் பைத்தியக்காரச் செய்கைக்காக நீ விலைகொடுத்தே தீரவேண்டும்! நீ எந்த ஜாதியில் பிறந்தவள் என்பதை மறந்துவிட்டாயா என்ன?
பிரகிருதி: ஒரே ஒருமுறைதான் அவர் கரங்களைக் குவித்து என்கரங்களிலிருந்து நீரை ஏந்தினார். அந்தச் சிறிய அளவிலான நீர், எல்லையற்ற கடலாகப் பரந்து வளர்ந்தது. அவற்றில் ஏழு கடல்களும் ஒன்றுசேர, என் ஜாதி அதில் மூழ்கிப்போயிற்று; என் பிறவி கழுவி சுத்தப்படுத்தப்பட்டது.
தாய்: அட! உன் பேச்சும்கூடத்தான் மாறிப்போயிருக்கிறது. அவர் உன் நாவையும் மந்திரத்தால் கட்டிப்போட்டிருக்கிறார். நீ என்ன சொல்கிறாய் என்று உனக்கே முதலில் புரிகின்றதா?
பிரகிருதி: அம்மா! சிராவஸ்தி நகரில் வேறு எங்கும் நீரே இல்லையா என்ன? எல்லாக்கிணறுகளையும் விட்டுவிட்டு அவர் ஏன் இந்தக்கிணற்றுக்கு வந்தார்? இதனை உண்மையாலுமே என் புனர்ஜன்மம் என்றுதான் நான் எண்ணுகிறேன். மனிதனின் தாகத்தைத் தீர்க்கும் பெருமையை எனக்களிக்கவே அவர் இங்குவந்தார் போலும்! புகழுக்குரிய அந்தப்பெருஞ்செயலைச் செய்யவே அவர் வந்துள்ளார். எந்தப்புனிதமான இடத்திலும் அல்லது நீரூற்றிலும் அவர் தனது இந்தச்சபதத்தை நிறைவேற்ற உதவும்நீரைக் கண்டிருக்கமுடியாது. தனது வனவாசத்தின் தொடக்கத்தில் ஜானகி (சீதை) நீராடிய இதுபோன்ற நீரை குஹன் எனும் சண்டாளன் தான் அவளுக்காகச் சேந்திக்கொடுத்தான் என்றார். அப்பொழுதிலிருந்து எனது உள்ளம் களிப்பில் கூத்தாடிக்கொண்டிருக்கிறது; எனது உள்ளத்தில், ‘எனக்கு நீர்கொடு; எனக்கு நீர்கொடு,’ எனும் அவரது சொற்கள் எதிரொலித்துக் கொண்டே உள்ளன.
தாய்: எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, குழந்தாய். இதனை நான் விரும்பவேயில்லை. இந்த மந்திரவித்தையையும் அதன் வசிய சக்தியையும் நான் புரிந்துகொள்ளவில்லையே! இன்று உனது பேச்சு எனக்குப்புரியவில்லை; நாளை உன்முகமும் புரியாமல்போகலாம். அவர்களிடைய (பிட்சுக்களுடைய) வசியசக்தி உனது ஆத்மாவையே மாற்றியமைத்தும் விடலாமே!
பிரகிருதி: இத்தனை நாட்களும் நீ உண்மையான என்னைப் புரிந்து கொண்டிருக்கவில்லை அம்மா! என்னை அறிந்துகொண்டவரே என்னை எனக்கு உணர்த்துவார். ஆகவே நான் காத்திருந்து பார்க்கப்போகிறேன். மதியத்திற்கான மணியோசை அரண்மனையிலிருந்து ஒலிக்கிறது; பெண்கள் அனைவரும் தங்கள் தண்ணீர்க்குடங்களை எடுத்துக்கொண்டு வீடுசெல்கின்றனர்; தொலைவில், வானத்தில் ஒருபட்டம் தன்னந்தனியாக உயரே பறக்கிறது; நானும் எனது நீர்க்குடத்தைக் கொண்டுவந்து இங்கு இந்தக்கிணற்றடியில் அமர்ந்துகொள்கிறேன்.
தாய்: யாருக்காக நீ காத்திருக்கிறாய்?
பிரகிருதி: ஒரு வழிப்போக்கனுக்காக.
தாய்: எந்த வழிப்போக்கன் உன்னைத்தேடி வரப்போகிறான், முட்டாள்பெண்ணே?
பிரகிருதி: அந்த ஒரே வழிப்போக்கன், அம்மா, அந்த ஒரேஒருவன்தான் வருவார்; அவரிடத்தில் உலகின் பலவழிகளிலும் செல்பவர்கள் அத்தனைபேரையும் காணலாம். ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்கிறது; ஆயினும் அவர் வரக்காணோம். அவர் ஒரு சொல்கூடக் கூறாவிடினும், அவர் கொடுத்த வாக்கு என ஒன்றுண்டு; அதை அவர் ஏன் நிறைவேற்றக்காணோம்? எனது இதயம் நீர்காணாத ஒரு கட்டாந்தரையாகிவிட்டது; அதன்மீது நாள்தோறும் அனல்பொழிகின்றது; சுடுகாற்று நெருப்பு ஜ்வாலையாகப் படபடக்கிறது. அதன் நீரை ஒருவருக்கும் அளிக்க இயலாது; ஏனெனில் யாரும் அதனைப் பெற்றுக்கொள்ள வரப்போவதில்லை.
தாய்: இன்றைக்கு உன்னுடைய பேச்சு எனக்கு ஒன்றுமே புரியவில்லை; என்னவோ நீ ஒரு மயக்கத்தில் இருப்பதைப்போல் உணருகிறேன். உனக்கு என்னவேண்டும் என வெளிப்படையாகச் சொல்…
பிரகிருதி: எனக்கு அவர் வேண்டும். எதிர்பாராத ஒரு பொழுதில்- அவர் வந்தார்; (நான் அவருக்கு நீர்வார்த்த) எனது இந்தப் பணிவிடையும் உலகை வழிநடத்தும் கடவுளால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனும் அற்புதமான உண்மையை எனக்குக் கற்பித்தவர் அவர்தான். ஓ! எத்தகைய அதிசயமிக்க சொற்கள் அவை! ஒரு நச்சுச்செடியில் மலர்ந்த மலரான நானும்கூட இவ்வாறு பணிவிடைசெய்ய இயலும் என்பதனை எனக்கு அறிவித்தவர் அவரே! அவர் அந்த உண்மையை உயர்த்திக்காட்டி, புழுதியில் இருக்கும் இந்த மலரை அவருடைய மார்பிலணிந்துகொள்ளட்டும்!
தாய்: எச்சரிக்கையாக இரு, பிரகிருதி, இப்படிப்பட்ட ஆண்களின் சொற்கள் கேட்டுக்கொள்வதற்கு மட்டுமே, கடைப்பிடிக்கப்படுவதற்கு அல்ல என்று அறிந்துகொள். கெட்டவிதி உன்னை இந்த மண்ணாலான சுவரின்மீது அழுத்தியுள்ளது; உலகத்தில் எந்த மண்வெட்டியினாலும் அதனைப்பெயர்த்தெடுக்க இயலாது! நீ அசுத்தமானவள்: வெளியுலகை உனது அசுத்தமான தோற்றத்தினால் கறைப்படுத்தாதே! உன் எல்லைகளைத்தாண்டி வெளிவர முயற்சிப்பது அத்துமீறலாகும்.
பிரகிருதி: (பாடுகிறாள்)

மண்ணிலுள்ள மலர் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் எனக்கூறுகிறது;
ஏனெனில், இந்தத் தாழ்மையான இடத்திலிருந்து நான் உனக்குப்
பணிவிடை செய்கிறேன்.
நான் புழுதியிலிருந்து பிறந்தவள் என்பதனை மறக்கச் செய்,
ஏனெனில் எனது ஆத்மா அதிலிருந்து சுதந்திரமானது.
நீ உனது கண்பார்வையை எனது மலரிதழ்களின்மீது தாழ்த்தும்போது,
நான் ஆனந்தத்தில் மெய்சிலிர்க்கிறேன்.
உனது திருவடி ஸ்பரிசத்தை எனக்களித்து என்னை
தெய்வீகமாக்கிவிடு;
ஏனெனில் இந்த உலகம் தனது வழிபாட்டை என்மூலமாகவே
நடத்தல்வேண்டும்.

(தொடரும்)

_

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s