விருந்து


ஹரி கிருஷ்ணன்

http://wp.me/p4Uvka-Jq

two talkingஅழைப்பிதழை நீட்டினார் நண்பர்.  அவசியம் வந்துவிடவேண்டும் என்று சொல்லி, அருமையான விருந்திற்கு ஏற்பாடு செய்திருப்பதைக் குறிப்பிட்டார்.  விருந்து என்ற சொல் இரண்டு பொருள்களில் மட்டுமே இன்றைக்குப் பயன்படுகிறது.  உணவளித்துப் போற்றுதல் என்பதொன்று.  உணவு உண்பவர் என்பதொன்று.  “வீட்ல விருந்தா?” என்று கேட்டால் விருந்தாளி வந்திருக்கிறாரா என்பது பொருள்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட விருந்து என்ற சொல் இன்னொரு பொருளிலும் பயன்பட்டது.  இன்றைக்கு நாம் அந்தப் பொருளை ஏறத்தாழ மறந்துவிட்டோம்.  விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்று பொருள்.  இந்தச் சொல்லுக்கு முதல்முதலில் இருந்த பொருளும் இதுதான்.  “வேடர்வா ராத விருந்துத் திருநாளில்” என்று குயில்பாட்டில் பாரதி எழுதியிருப்பதைப் பார்க்கலாம்.  வேடர்கள் வராத புதுமையான நாள் என்று பொருள். (பாரதிக்கு உரை எழுதவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!  அந்த அளவுக்குத் தமிழை மறந்துகொண்டிருக்கிறோம்.)hariki

விருந்தளித்தல், விருந்தோம்பல் என்றால், நம்மைப் பொறுத்தவரையில் வீட்டுக்கு வரும் மாமா, சித்தப்பா என்று உறவினர்களை உபசரித்தல்.  சிதைந்து வரும் கூட்டுக்குடும்ப அமைப்பில் அண்ணனும் தம்பியும்கூட ஒருவன் வீட்டில் இன்னொருவன் விருந்தாளிதான்.  ஆனால் உண்மையில் விருந்தோம்பல் என்பது உறவினருக்கு உணவளித்தல் இல்லை.  அறிமுகமில்லாத ஒருவருக்கு உணவளித்தல்.  விருந்தாளி என்றால் புதியவன்; அறிமுகமில்லாதவன் என்பது பொருள்.  (விருந்தாளிக்குப் பொறந்தவனே என்று திட்டுவதைக் கேட்டிருக்கிறீர்கள்தானே? அந்தத் திட்டலின் உண்மையான அர்த்தம் புரிகிறதா?) 

மாதவியிடமிருந்து திரும்பிவந்த கோவலனைக் கடிந்துகொள்கிறாள் கண்ணகி.  அதாவது, அவன் திரும்பிவந்த உடனே இல்லை.  மதுரைக்குப் போன பிறகு.  கொலைக்களக் காதையில் நடப்பது இது.  தான் இழந்தவை எவைஎவை என்று ஒரு பட்டியல் போடுகிறாள்.

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை…….

வாழ்க்கையில் இழந்தவற்றில் எதை மிகப் பெரிதாக எண்ணுகிறாள்?  “ஒண்ணும் வேண்டாம்யா.  விருந்தாளிகளை வரவேற்று உபசரிக்க முடிந்ததா என்னால்? நீ பக்கத்தில் இல்லாத போது நான் என்ன செய்யமுடியும்?”   இதே போன்ற ஆனால் வேறுமாதிரியான வருத்தம் சீதைக்கு.  அசோக வனத்தில் இருந்து, இராமனைப் பற்றி எண்ணுகிறாள்.

அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும் என்று அழுங்கும்

விருந்து கண்டபோது என்உறுமோ என்று விம்மும்

“நான் இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டேனே.  யார் அன்னமிடுவார்கள்?  நான் இடாமல் எப்படிச் சாப்பிடுவார்?  யாராவது விருந்தாளி வந்துவிட்டால் எத்தனை கஷ்டப்படுவார்?” என்று விம்மினாளாம்.

அவனும் அவளும் இணைந்து, இருவரும் அவரவர் பங்கினைச் செய்து, விருந்தினரை உபசரிக்க வேண்டும்.  ஒருவரில்லாமல் ஒருவர் மட்டும் செய்யும் காரியமில்லை அது.  இராமனும் சுக்ரீவனும் நண்பர்களாகிறார்கள்.  சுக்ரீவன் இராமனுக்கு விருந்தளிக்கிறான்.  என்ன விருந்து?  கனி, கிழங்கு, காய்கள் என்று குரங்கு உண்ணும் பொருட்கள்.  பரிமாறுபவர்கள் அனைவரும் தடித்தடியாய் ஆண்களாகவே இருப்பதைப் பார்க்கிறான் இராமன்.ramayana-kishkindha-kanda-1

“விருந்தும் ஆகிஅம் மெய்ம்மை அன்பினோடு    

இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா

“பொருந்து நன்மனைக்கு உரிய பூவையைப்

பிரிந்துளாய் கொலோ நீயும் பின்” என்றான்.

“என்னப்பா சுக்ரீவா! உன் மனைவியைக் காணோமே.  என்னைப் போலவே நீயும் உன் மனைவியைப் பிரிந்திருக்கிறாயா?” என்று கேட்கிறான்.  ருமையைச் சுக்ரீவன் பிரிந்திருப்பதும், வாலியின் ஆளுகைக்கு அவள் உட்பட்டிருப்பதும் தெரியவருகிறது.  தன்னைப் போன்றதொரு நிலையிலே சுக்ரீவன் இருப்பதை அறிகிறான்.  இந்த உணர்வு ஒற்றுமையே வாலியைக் கொல்வதற்கு உடனடி முடிவை இராமன் எடுக்கக் காரணமாகிறது.

விருந்துபசாரம் என்பது அவ்வளவு பெரிய கடமையாகக் கருதப்பட்டது.  அது ஒரு சமூகக் கடமை.  இல்வாழ்க்கையில் கடமை என்று வள்ளுவர் எதைச் சொல்கிறார்?

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றுஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

முதற்கடன் பிதிரர்கள்.  தென்புலத்தார் என்பதற்குப் பெரும்பான்மையோர் சொல்லும் பொருள் இது.  இது இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.  அதற்குள் போக நாம் விரும்பவில்லை.  அடுத்த கடமையாகத்தான் தெய்வம் குறிப்பிடப்படுகிறது.  தெய்வத்திற்கு அடுத்தது விருந்து.  அதிதி என்று சொல்வார்கள்.  நாள் இல்லாதவன் என்று பொருளாம்.  திதி என்றால் நாள்.  அ-திதி என்றால் எந்த நாள் எந்த வேளை என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடியவன்; உபசரிக்கப்பட வேண்டியவன் என்பது பொருளாம்.

இவை அனைத்தும் நமக்கு அன்னியமாகப் படுகின்றன.  அப்படி என்ன முக்கியமான சமாச்சாரம் இது?

அன்றொரு நாள் நண்பர் சொன்னார்.  “என்னய்யா இது.  செல்விருந்து நோக்கி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு அப்படீன்னு கதை விடறாரே, நடக்கிற காரியமா இது?  போறவங்களை அனுப்பி வச்சுட்டு வாறவங்களைப் பாத்துகிட்டே நிக்கிறது நடக்கிற காரியமா?” 

நிக்கிறது நடக்கிறது இரண்டும் ஒரே நேரத்தில் ஆகிற காரியமில்லைதான்.  அவர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ள கொஞ்சம் காலத்தால் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்.

வெளியூர்ப் பயணங்களுக்கு என்ன முன்தயாரிப்பு செய்துகொள்வோம்?  உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.  சாப்பாட்டை வழியில் பார்த்துக்கொள்ளலாம்.  இந்த ஹோட்டல் கலாசாரம் நமக்கு அவ்வளவு பழக்கமில்லாதது.  அதாவது சுமார் நூற்றைம்பது இருநூறு ஆண்டுகளுக்குமுன்.  உணவு விடுதிகள் இருந்திருக்கின்றன.  காசு கொடுத்துச் சாப்பிடும் வழக்கமில்லை.  காளமேகத்தின்

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

உலையிட ஊரடங்கும்.  ஓரகப்பை அன்னம்

இலையிட வெள்ளி எழும்

என்ற பாடலும் அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் என்ற பாரதி வரியும் அன்னசத்திரங்கள் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.  ஆனால் சாப்பிடுவதற்குக் காசு வாங்கும் வழக்கம் நிச்சயமாக இருந்ததில்லை.  காசில்லாமல் சாப்பிட்டதற்கே இத்தனைக் கார்வாரா என்று நீங்கள் காளமேகத்தைப்பற்றி எண்ணக் கூடும்.  அது ஒரு சமூகக் கடமை என்று கருதப்பட்டபோது இப்படிப் பாடியது மிக இயற்கையான ஒன்று.

முதன்முதலில் ஹோட்டல் தொழிலில் நுழைந்தவர்கள் உடுப்பிக்காரர்கள்.  உடுப்பியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார் டாக்டர் ஷிவராம் காரந்த்.

மரளி மண்ணிகே (மீண்டும் மண்ணுக்கு) என்று கன்னட நாவல்.  ஞான பீடப் பரிசு பெற்றது.  அதில் நான்காம் தலைமுறை இரண்டாம் தலைமுறையைப் பார்த்துக் கேட்பதாக ஒரு வசனம் வரும்.

‘ஏண்டா.  சோத்துக்கடை வச்சிருக்கியா?  சோறு விக்கிறியா?  ஏண்டா அந்தப் பாபத்தைச் செய்யறே?’  இந்த ஒரு வசனம் போதும்.  உணவுக் கடை என்பதும், உணவை விலைக்குத் தருவது என்பதும் யார் ஹோட்டல் தொழிலை ஆரம்பித்தார்களோ அவர்கள் குடும்பங்களிலேயே எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதைக் காட்டுவதற்கு.  உணவளித்தல் என்பது மிக உயர்ந்த அறம்.  அதற்குக் காசு வாங்குவது என்பது மிகப்பெரும் பாவம்.  இது நாம் வாழ்ந்த விதம்.  ஒரு தம்ளர் தண்ணீரை பிளாஸ்டிக் பையில் அடைத்து ஒரு ரூபாய்க்கு விற்கவும் வாங்கவும் பழகிவிட்டபிறகு இந்த அறம் நமக்கு அந்நியமாகவும் விசித்திரமாகவும் படுவதில் வியப்பில்லை.

(ஒரு லிட்டர் பால் பத்து ரூபாய்.  ஒரு லிட்டர் தண்ணீர், பாட்டிலின் மீது அச்சிடப்பட்டிருக்கும் பெயருக்கேற்ப பத்திலிருந்து பதினைந்து ரூபாய்.  இந்த வியப்பு யாரையாவது தாக்கியிருக்கிறதா என்பது தெரியவில்லை.)  காலமாறுதல்கள் என்றுதான் இவற்றைக் கருதவேண்டுமே ஒழிய, இன்றைய நிலவரம் தவறு என்று எண்ண முடியாது.

இப்படி ஹோட்டல்கள் இல்லாத நாளில் பயணம் மேற்கொள்பவர்கள் எப்படிச் செல்வார்கள்?  வண்டிகட்டிக் கொண்டு.  அல்லது கால் நடையாய்.  நூறு நூற்றைம்பது கிலோமீட்டர்கள்கூட நடைப்பயணம்தான்.  அவ்வளவு ஏன்?  காசியாத்திரையே நடைப்பயணம்தான்.

சொல்லிக்கொடுத்த சொல்லும் கட்டிக்கொடுத்த சோறும் எத்தனை நாளைக்கு?  வழியில் பசிக்கும்போது?  ஒரு நாளைக்கு மூன்றுவேளை பசிக்குமே!  என்ன செய்வார்கள்?

வழிநெடுக வீடுகளில் வாசலில் பெரிய திண்ணைகள் இருக்கும்.  களைப்பாற அதில் அமர்வார்கள்.  வீட்டுக்காரருக்குத் தெரியும் என்னவென்று.  வாயிலுக்கு ஓடிவருவார்.  “ரொம்ப தூரத்திலிருந்து வரீங்களோ?  களைச்சுப்போய் இருக்கீங்களே.  என்ன தொழில் நமக்கு?  பிரயாணக் களைப்பு முகமெல்லாம் எழுதியிருக்கே.  இன்னிக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு.  உள்ளே வரணும்.” என்றெல்லாம் உபசார மொழிகள் சொல்லி அவருடைய கூச்ச உணர்வை மாற்றி, இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து அவருக்கு உணவளித்து வழியனுப்பி வைப்பார்.

இந்தச் சூழலை மனத்தில் வைத்து சொல்லப்பட்டவைதான் விருந்து புறத்ததா தானுண்டல், மோப்பக் குழையும் அனிச்சம் போன்ற குறட்பாக்கள்.  இப்படி ஒருவர் பசியோடு வாயில் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் போது (விருந்து புறத்ததா) நாம் வீட்டுக்குள்ளேயிருந்து உணவு வாசனை வெளியே சென்று தாக்கும்படி உண்ணுதல் எத்தனை அநாகரீகம்!  (பெரிய ஐந்துநட்சத்திர விடுதிகளில் கூட உணவு வாசனை அந்தந்தக் கூடத்தைத் தாண்டி வெளியே வீசாமல் கவனித்துக் கொள்வார்கள்.)  இப்படி ஒரு நாளிலி (அ-திதி) நம் வீட்டில் உண்ணும்போது, ஒரு தவறான சொல் வேண்டாம்; முகம் மாறி நோக்கினாலே போதும்.  அவர் உள்ளம் என்ன பாடுபடும்?  முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்று சொன்ன வள்ளுவர் ஒரு உளவியல் வல்லுனர் என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்?

இரவலர்களுக்கு இடுவதற்கும், விருந்தோம்பலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமே உபசாரம்தான்.  ஒரு பிச்சைக்காரனுக்கு ஏதாவது போட வேண்டுமென்றால், பையிலே கைவிட்டோமா, கையில் கிடைத்ததை அவனிடம் தந்தோமா (அல்லது கம்பீரமாகப் போடுவதாகக் கற்பனை செய்துகொண்டு தூக்கியெறிந்தோமா) என்று நடந்து போய்விடலாம்.  விருந்தோம்பலில் அது முடியாது.  அங்கே உபசாரம் மிக முக்கியம்.

இப்படி அன்றாடம் ஒரு வீட்டில் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  ஒருவர் அப்போதுதான் போவார்.  அடுத்தவர் திண்ணையில் அமர்வார்.  செய்து செய்து அலுத்துப்போகும்.  சாப்பிட்ட பிறகு இலை எடுத்தல் போன்ற பின் நிகழ்வுகள்.  ஒரு நாளில் எத்தனை முறை செய்ய முடியும்?  வீட்டுக்காரர் என்ன சொல்வார்?  விருந்தாளியை வீட்டுக்குள் அழைத்துவந்த பிறகு, “கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.  தினம் நம் வீட்டில் நாலு பேராவது சாப்பிடுவார்கள்.  இன்னும் ஒரு மூன்றுபேர் வந்துவிடட்டும்.  ஒன்றாக சாப்பாடு போட்டுவிடுகிறேன்” என்ற விதத்தில் பேச ஆரம்பித்து விடுவார்.  அவர் அலுப்பு அவருக்கு.  அப்படிச் செய்யாதே என்கிறார் வள்ளுவர்.  முதலில் வந்தவனுக்கு உணவளித்து அனுப்பு.  அதன் பிறகு வரும் விருந்தைப் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.  அடிக்கடி செய்ய வேண்டியது குறித்து அலுத்துக்கொள்ளாதே.  உனக்கு நல்ல மோட்சம் காத்திருக்கிறது.  வானத்தவர் இதே போல உன்னை வரவேற்பார்கள் என்று சொல்கிறார்.

செல்விருந்து நோக்கி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு

வள்ளுவர் ஓர் அறத்தை வலியுறுத்தும் மூன்று விதங்களில் இது ஒன்று.  உனக்குப் பெரிய நன்மைகள் விளையும் என்று ஆசை காட்டுவார்.  இதைச் செய்யாவிட்டால் உனக்கு இப்படிப்பட்ட துன்பம் விளையும் என்று அச்சுறுத்துவார்.  இப்படிச் செய்பவனுக்கு அடுத்த உலகிலும் பயன் விளையும் என்று மோட்ச உலகத்தைப் பற்றி, இறப்பிற்குப் பிறகு பெறப்போகும் நன்மைகள் குறித்துப் பேசுவார்.  அம்மாவைப் போன்ற உள்ளம்.  மாதானுபங்கி என்று அவருக்கு ஒரு பெயர் உண்டு.  இந்தக் காரணத்தினால்தான்.  நம்மை எப்படியாவது ஓர் அறம் செய்யவைத்துவிட வேண்டும் என்ற பேராசை.

அதை விடுங்கள்.  இந்தக் காலத்துக்கு இது பொருந்துமா என்று குறுக்குக் கேள்வி போட்டார் நண்பர்.

பசி இருக்கின்ற வரையில் நிச்சயம் இது பொருந்தும்.  உணவு விடுதியில் உண்ணமுடியாத சூழல் சில சமயங்களில் இன்னும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.  வந்த இடத்தில் பர்ஸ் தொலைந்துபோகலாம்.  திடீர்க் கடையடைப்பு நடக்கலாம்.  இன்னும் பலவித லாம்கள் ஏற்படலாம்.  பசியோடு தவிக்கும் ஒரு ஜீவனைச் சந்திக்க நேரிடலாம்.  வள்ளுவர் அப்போது நம்மிடம் பேசுவார்.  செவியுள்ளவன் கேட்கக்கடவன்.

இக்கட்டுரை திரு ஹரிகிருஷ்ணன் அவர்களின் “நினைவில் நின்ற சுவைகள்” என்ற புத்தகத்தில் உள்ள ஒரு கட்டுரை.

***    ***   ***

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s