பாடிப்பறந்த குயில் – 5


வையவன்

http://wp.me/p4Uvka-Hc

“கங்கா!” என்று அவன் கூப்பிட்டதும் ஜீவானந்தத்துக்குத் தன்னிலை மறந்துவிட்டது. மனக் குகையில் அந்த ஒலி அலைபட்டுக் கங்கை நதியின் கம்பீர முழக்கத்தைப்போல் பலத்த எதிரொலிகளைச் சிருஷ்டித்தது. எந்தப் பெயர் அவனுடைய வாழ்க்கையில் தேவாலயத்துத் தூங்கா மணிவிளக்குப் போல் துக்கத்தினூடே ஒளிவீசிக்கொண்டிருந்ததோ அந்தப் பெயர் அது. அந்தப் பெயரைத் தொடர்ந்து, நிலாமுற்றத்தின் விளிம்புக்குமேலே மெல்லமெல்ல எழுந்த வரும் சந்திரவட்டம்போல் அவனது நினைவின் பொறிகளில் மெதுவாக… மெதுவாகப் பாதசரங்கள்கூட அதிகம் சப்திக்காமல் அவள் வந்துகொண்டிருந்தாள். தியாகராஜன் ஜீவானந்தத்தின் மனத்துக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தை உணராமல் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான்.two men eataing

“உங்களுக்கு ‘மீரா’ கேரக்டர் பிடிக்கிறதா, மிஸ்டர் ஜீவன்? நான் விரும்புவதில்லை. புருஷனுக்கும் மீறிய, அவனையும் தாண்டிய பக்தின்னா என்னாலே ஒத்துக்க முடியல்லே. அது நம்ம சாஸ்திரதர்மங்களுக்கு விரோதமாயிருக்கிறதாக எனக்குப்படுகிறது. ‘ஆண்டாள் பரவாயில்லே. கண்ணனுக்காகத் தவமிருந்து, அவனுடைய காதலைக் குறித்தே ஏங்கியிருந்தாள். தன்னுடைய மனசும் மேனியும் மானிடருக்கு என்று பேச்சுப்பட்டால் எவ்வளவு கொதிக்கிறதுன்னு திருமணம் செஞ்சுக்காமலே இருந்தாள். இது காதல்!”

ஒருபக்கம் மனத்துக்குள் அந்த மகோன்னதமான அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு, ஜீவானந்தம் மறுபுறம் இந்த வார்த்தைகளையும் கேட்டான். அதற்காக அவன் தர்க்கிக்க விரும்பவில்லை.

அந்நேரத்தில் வாசற்படியோரத்தில் ஒரு எவர்சில்வர் தட்டை ஏந்திய இரு சிவந்த கரங்களும், சந்தனவண்ண பட்டுச்சேலையின் சிவப்புக் கரை முன்றானை காற்றில் அசைந்தாடுவதும் தெரிந்தன. அவள் தயக்கத்துடன் நின்றாள்.

“மீராவை எனக்கு மதிக்கத் தோன்றுகிறது ஸார்! அவளுடைய பக்தி ஆத்மீகமானது. அது காதலில்லை. ஆண்டாள் கண்ணனைக் காதலித்தாள். அவள் பாவம் வேறு; மீராவின் பாவம் வேறு.”

“அப்படியா! உங்களுக்கு மீரா ‘கேரக்டர்’ பிடிக்கிறதுன்னு சொல்லுங்க. என் மனைவிக்கும் அப்படித்தான் மிஸ்டர் ஜீவன்!”

ஜீவானந்தம் பதறிப்போய் அவனைத் திரும்பிப்பார்த்தான்.  சாதாரண வார்த்தையொன்று சொல்லியவன்போல் தியாகராஜன் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எது வாயில் வரக்கூடாதோ அதுவே தியாகராஜன் வாயிலிருந்து வந்தது. அவன் அபிப்பிராயம் என்ன என்பது மூடுமந்திரமாக, பெரிய புயலுக்கோ மழைக்கோ சூலுற்றிருக்கும் வானம் போல் எச்சரித்தபடியேயும் இருந்தது. அதற்கப்புறம் ஜீவானந்தம் பேசவேயில்லை. எழுந்து கைகழுவச் சென்றபோது மட்டும் தற்செயலாகக் கங்காவின் கண்கள் அவனைச் சந்தித்தன. மேனியெல்லாம் காயம்பட்டுத் தீனமாகப் பார்க்கும் பேடைப் புறாவைப்போல் அந்த சமயத்தில் கங்கா புறப்பட்டாள். சரேலென்று ஜீவானந்தம் அவளைக் கடந்துவிட்டான்.

வெளி ஹாலுக்கு இருவரும் வந்தனர். நிஷாவின் தந்தை தேடிக்கொண்டிருப்பதாக பியூன் வந்து சொன்னான்.

“என்ன ஜீவன்! நீங்க தயார்தானே?” என்று கேட்டவாறு சுவரில் நிறுத்தியிருந்த துப்பாக்கியை மடித்துச் சரிபார்க்கலானான் தியாகராஜன்.

“ஓ, நான் தயார்!”

“அப்ப கிளம்புவோம்… ஜானகிராம்!  ராஜவேலைக்கூப்பிடு” என்று பியூனுக்குத் தெரிவித்தான் தியாகராஜன்.

சிறிது நேரத்தில் ஷிகாரி ராஜவேல் அங்கு வந்துநின்றான். அவனைக் கண்டதும் தியாகராஜனின் குரலில் இருந்த அதிகார மிடுக்கு சிறிது தளர்ந்தது.

“நீ டிபன் செஞ்சாச்சாப்பா?”

“முன்னேயே ஆயிடுச்சு சார்!”

“அப்ப, புறப்படவேண்டியதுதானே? ஜானகிராம் கிட்டே என்னென்ன தேவையோ எடுத்துக்கச் சொல்லிடு… ஜானகிராம்! ஆறு பேருக்குச் சாப்பாட்டுக்குச் சொல்லியிருக்கிறேன். ஒழுங்காகக் கட்டியெடுத்து ஜீப்பிலே கொண்டுபோய் வை. சீக்கிரமா போ. சரி, ராஜவேல், நீ கையைக் கழுவிக்கிணு சீக்கிரம் வாப்பா” என்று இருவரையும் அனுப்பினான்.

“ஜீப் காரு அந்தப் பக்கம் போவாதுங்க!” என்று வெளியே நின்றிருந்த நிஷாவின் தந்தை ஜக்கோடன் மரியாதையுடன் தெரிவித்தான்.

“அப்படியா…? எவ்வளவு தூரம் வரையில் போகும்?”

“நாம் போக வேண்டிய இடத்துக்கு ரெண்டு மைல் இப்பாலிலேயே பாட்டை நின்னுடுதுங்க.”

“சரி! அதுவரையில் போனாப் போவுது! ஆமா, முன்னாடியே அந்த இடத்துக்குப் போயிருக்கிறீயா நீ?”

“என்ன எசமான், அப்படிக் கேட்டீங்க? போனவாட்டி போய்ப் போட்டுட்டு வந்த பரணை இன்னும் பிரிக்கிலீங்க!”

“சரி, மிஸ்டர் ஜீவன்! நாம் போய் ஜீப்பை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு வருவோம்; வாங்க!”

ஜீவானந்தம் பூட்ஸை மாட்டிக்கொண்டு எழுந்திருக்கலானான். இருவரும் வெளியே வந்தபோது ஜான்ஸன் வெளியே போய்க்கொண்டிருந்தார்.

“ஹலோ! குட்மார்னிங் ஸார்! நாங்கள் வேட்டைக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நீங்களும் வந்து கலந்து கொண்டால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்று அவரிடம் திரும்பி வணக்கத்தைக்கூட எதிர்பாராமல் விடுவிடுவென்று சொன்னான் தியாகராஜன்.

ஜான்ஸன் புன்னகையோடு அவன் சொல்லிமுடிக்கும்வரை நின்றார். ஜீவானந்தம் ஒன்றும் கூறாமல் வெறுமனே வணங்கினான்.

“எஸ், எனக்குத் துப்பாக்கியெல்லாம் வீட்டிலே இருக்கு” என்று பதிலிறுத்தார் ஜான்ஸன்.

“ஓ, என்னிடம் இரண்டு இருக்கு. .நீங்க இஷ்டப்பட்டால் என்னுடையதை  உபயோகப்படுத்திக் கொள்ளலாம்” என்றான் தியாகராஜன்.

அரை மணி நேரத்தில், ஐவரைச் சுமந்துகொண்டு கிழக்குநோக்கி ஜீப் புறப்பட்டது.

தியாகராஜன் ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்தான். வண்டி புறப்பட்டு, காட்டுப் பாதையின் கரடுமுரடான குலுக்கலுக்கும், அதிர்ச்சிகளுக்கும் ஆளாய்ப் போய்க்கொண்டிருந்தபோது ஜீப்புக்கு எதிரில் இரண்டு கைகளையும் ஆட்டியவாறே நிஷாவின் உருவம் தூரத்திலிருந்து ஓடிவந்தது.

“ஹோய்ய்…! வண்டியை நிறுத்து! நிறுத்து!”

தியாகராஜனின் முகம் மலர்ந்தது. அவன் புன்னகையோடு வண்டியை நிறுத்தினான்.

“என்னாம்மா, நிஷா!” என்று கோபத்தோடு கேட்டான் நிஷாவின் தந்தை.

“நானும் வேட்டைக்கு வருவேன்” என்று நன்றாக நிச்சயம் பண்ணிக் கொண்டு பேசுபவள்போல, வராவிட்டால் அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்வாள் என்று எச்சரிக்கிற தொனியில் பேசினாள் நிஷா.

“வேட்டையுமாச்சு, கோட்டையுமாச்சு! போ, போ. உங்காத்தாகிட்டே அப்புறம் நான் பதில் சொல்ல முடியாது” என்று ஜீப்பில் இருக்கிற அத்தனை பேரையும் மறந்து கத்தினான் ஜக்கோடன்.

கோபமும், ரோஷமும், அவமானமும், வருத்தமும் அவளுடைய அழகிய சிவந்த முகத்தில் தத்தளித்தன. உதடுகளை இறுக மூடிக் கொண்டு அவள் எதிரிலேயே நின்றாள்.

“பாவம், அதுவும் வரட்டுமே!” என்று அவளுடைய தோற்றத்தை ரசித்தபடியே கூறினான் தியாகராஜன்.

“உங்களுக்குத் தெரியாதுங்க, எஜமான்! இந்தப் பொம்பளைப் பிள்ளைக்கு அளவுக்குமீறிச் செல்லம் கொடுத்திட்டேன். இது தம் போக்கிலே ஆடுது. வேட்டைக்கு வந்து இவ என்னத்தைக் கிளிக்கப்போறா?”

“இல்லை, ஜக்கோடன்! இவளும் வரட்டும். மலைஜாதிப் பெண்ணானால், தைரியமும் வீரமும் அவள் உடம்பிலேயே ஓடணும். வேட்டைகளை அவள் பார்க்கணும்” என்று இடைமறித்தார் ஜான்ஸன்.

ஜக்கோடன் முகத்தில் ஒரு தர்மசங்கடம் நிலவியது. அவர் வார்த்தை அவனுக்குத் தேவவாக்கு. அவன் பேசாமல் இருந்து விட்டான். நிஷாவின் முகத்தில் புதுப் பூவொன்று மெல்ல மலர்வதைப் போன்ற களிப்பு உருவாகியது. அவள் அவசரத்தோடு ஜீப்பில் ஏறி ஜீவானந்தத்தின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அங்கேதான் சிறிது இடமிருந்தது; முன்புறம் இல்லை. ஜீப் மெல்லப் புறப்பட்டதும் நிஷாவின் முகத்திலிருந்த மந்தஹாசம் ஜீப்பின் இயக்கத்தால் புளகாங்கிதமுற்று அதிக சப்தமில்லாத சிரிப்பாக மலர்ந்தது. ஜீப்பின் ஓசையால் ஜீவானந்தத்துக்கும் ஜான்ஸனுக்கும் மட்டுமே அது கேட்டது.

அந்திக்கு மேல்தான் கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் ஆரம்பிக்கும். ஆகவே, காட்டில் விஸ்தாரமாக நுழைந்து பார்த்துவிட்டு வருவது என்று தியாகராஜன் தன் திட்டத்தைப் பிரஸ்தாபித்தான். ஜான்ஸனுக்கும் அது சரியென்று பட்டது. நிஷாவையும் கூட இழுத்துக்கொண்டு அலைவது நன்றாயில்லை என்று ஜக்கோடன் அபிப்பிராயப்பட்டான். ஆனால் அவள் தன் பலத்த ஆட்சேபத்தை முகத்திலேயே தெரிவித்துக்கொண்டாள். அதனால் அவளையும் கூட அழைத்துக் கொண்டு செல்லவேண்டி நேரிட்டது. எல்லோரும் அந்த அமைதிநிறைந்த காட்டில் கலகலவென்று பேசியபடியே உயிர் சந்தடியை ஏற்படுத்திக்கொண்டு நடந்தனர். பூட்ஸ் ஓசைகளையும், சிரிப்பொலிகளையும் கேட்டுப் பயந்து சில பறவைகள் கூட்டைவிட்டுப் பறந்தன. அடர்ந்த புதர் ஒன்றின் அருகில் திடீரென்று ஒரு சலசலப்பு கிளம்பியது. சட்டென்று அனைவரும் சிலைகள் போன்று நின்றுவிட்டனர்.

[தொடரும்]

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s