கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2


முனைவர் இரா. இராமகிருட்டிணன்

http://wp.me/p4Uvka-DB 

2.  கபிலர்

            கபிலர்கபிலர், தமிழ்ச் சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் குறிஞ்சிப்பாட்டை இயற்றிய  ஆசிரியர். இவர் பிறந்தஊர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூர் என்று திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் கூறும்.

இவர் அந்தணக் குலத்தவர் .

“யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்”,

“யானே தந்தை தோழன்; இவர் என் மகளிர்; அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே”

(புறநானூறு, 200-201)

என இவர் தம்மைக் கூறிக்கொள்வதாலும்,

“புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்”

(மேலது, 126)

என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் பாராட்டிக் கூறுவதாலும் இதனை உணரலாம்.

கபிலர் பாடிய பாடல்கள்

          சங்க இலக்கியத்துள் 235 பாடல்கள் இவரது படைப்புகள். இவற்றுள் புறப்பொருள் பற்றியன 38 பாடல்களே. அகத்திணை சார்ந்த 197 பாடல்களில் 193 பாடல்கள் குறிஞ்சிக்குரியனவாம். ஏனைத் திணைகளில் ஒவ்வொன்று பாடி ஐந்திணைப் புலவராக விளங்குகிறார். இவருடைய அகப்பாடல்களுள் 182 களவிற்கும், 12 கற்பிற்கும் 3 கைக்கிளைக்கும் உரியனவாம். கைக்கிளையைப் பாடிய ஒரே புலவர் கபிலரே. ‘குறிஞ்சிக் கபிலர்’ என்ற பெயரோடு ‘களவுக் கபிலர்’ என்னும் பெயரையும் இவருக்கு அளிக்கலாம்.

இவர் பாடிய பாக்கள்:

நற்றிணை              –        20

குறுந்தொகை                   –        29

ஐங்குறுநூறு           –         100

பதிற்றுப்பத்து                  –        10

கலித்தொகை                   –        29

அகநானூறு            –        18

புறநானூறு             –        28

குறிஞ்சிப்பாட்டு     –           1

ஆக மொத்தம்                  –        235

“கல்விப்பரப்பு, சொல்லாட்சிச் சிறப்பு, கற்பனை வளம், உவமை அழகு, காவிய நுணுக்கம், பாட்டுத் திறம் போன்றவற்றில் கம்பருக்கு ஒப்பிடலாம் கபிலரை” என்பது பேராசிரியர் தமிழண்ணலின் கணிப்பு.

கம்பருக்கொரு சடையப்ப வள்ளல் கிடைத்ததாற் போல் கபிலருக்கு பாரிவேள் கிடைத்தான். செல்வவளத்தின் நிழலிலே  கவிவளம் பெருக்கெடுத்தோடிற்று எனலாம். ‘விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று கம்பர் பாராட்டப்பெற்றவாரே,  ‘குறிஞ்சிக் கபிலன்’   எனக் கபிலரும் புகழ்பெற்றார்.

கபிலரைப்  பாராட்டிப்  பாடியவர்கள்

தாம் வாழ்ந்த நாளிலேயே புலமைச் சான்றோரால் போற்றப்பட்ட கவிவள்ளல் கபிலர். நக்கீரர் இவரை,

“உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்”    

  (அகநானூறு,78)

என்றும்,

பெருங்குன்றூர்க் கிழார்,

“உவலை கூராக் கவலை இல் நெஞ்சின், நனவில் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே” 

(பதிற்றுப்பத்து, 85)  

என்றும்,

பொருந்தில் இளங்கீரனார்,

“செறுத்த செய்யுட் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க்கபிலன்

(புறநானூறு, 53)

என்றும்,

மாறோக்கத்து நப்பசலையார்,

“புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,

இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, ப

ரந்து இசை நிற்கப் பாடினன்”

(மேலது, 126)

என்றும்,

“பொய்யா நாவின் கபிலன்”   

(மேலது, 174)

என்றும், வியந்து பாடினார்கள். இவற்றால் இவருடைய பெரும் புகழும், வாய்மையும், பாடும் திறமையும், கல்வி கேள்வியின் மிகுதியும், அகத் தூய்மையும் விளங்குகின்றன

.‘எஞ்சிக் கூறேன்’ (பதிற்றுப்பத்து, 61)  எனச் செல்வக்கடுங்கோ வாழியாதனை நோக்கிக் கூறுதல் இவருடைய  வாய்மை  நலத்தைப்  புலப்படுத்தும்.

கபிலரால் பாடப்பட்டோர்

          அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன், நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோ, வேள்பாரி, வையாவிக் கோப்பெரும்பேகன், மலையன் முதலானோர்.

            இவர்களுள் பாரியின் பண்பைப்பற்றி இவர் பாடிய பாடல்களே அதிகம். பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடி, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பானிடம் நூறாயிரம் காணமும் (நூறாயிரம் பொற்காசும்), அவனது ‘நன்றா’என்னும் மலையின்மீதேறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாட்டையும் பரிசிலாகப் பெற்றார் என்று ஏழாம் பத்தின் பதிகம் மொழிகிறது.

பேகன் தன் மனைவியைப் பிரிந்து இன்னொருத்தியிடம் கூடிவாழ்ந்தபோது பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்கிழார்  போன்ற புலவர்களுடன் சென்று பேகனை நல்வழிப்படுத்த முயன்றார்  (புறநானூறு, 143-147).    இவரது பாட்டால், இருங்கோவேளின் முன்னோர்கள் நாற்பத்திஒன்பது தலைமுறையாக துவரை என்னும் நகரை ஆண்டு வந்தனர்(மேலது, 201)  என்ற  செய்தி  தெரியவருகிறது.

கபிலரால் பாடப்பெற்ற மலைகளும், நாடுகளும், ஊர்களும்

            அயிரைமலை, கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, பறம்புநாடு, கிடங்கில், கொடுமணம், பந்தர், மதுரை, முள்ளூர்க்கானம், வாரணவாசி என்பவை இவரால் பாராட்டப்பெற்றிருத்தலின் அவை இவர் காலத்தில் சிறப்புற்றிருந்தன என்றும், அவற்றுள் பல இவர் பழகிய இடங்கள் என்றும் தெரிகின்றன.

பாரியும் கபிலரும்

          கபிலர் வேள்மன்னன் பாரியினுடைய உயிர்நண்பரும், அவனுடைய அவைக்களப் புலவருமாக இருந்து அவனுடன் வாழ்ந்து அவன் பெயரை அழியாக் கவிதைகளில் அமரத்தன்மை பெறச்செய்தவர். ஔவையின் வரலாறு அதியனின் வரலாற்றோடு பின்னிக் கிடப்பதுபோல் கபிலரின் வரலாறும் பாரியின் வரலாற்றோடு பின்னிக் கிடக்கின்றது.

பாரியின் மகளிர் மணம் பெறும் பருவம் அடைந்த காலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர்களுள் ஒவ்வொருவரும் அம்மகளிரை மணஞ்செய்துகொள்ள விரும்பி வேள்பாரிக்கு அக்கருத்தை அறிவிக்க, அவன் பெண்கொடுக்க மறுத்தனன். மறுக்கவே மூவேந்தரும் அவனது பறம்புமலையைச் சூழ்ந்துகொண்டு போர்புரிந்தனர்.

அக்காலத்து, இவர் அவர்களை நோக்கி, “பாரியது பறம்புமலை இயற்கைவளம் உடைமையால் முற்றுகைக்குச் சளைக்காது. எனவே, மூவேந்தர்களாகிய நீங்கள் ஒருங்கு இணைந்து முற்றுகை இட்டாலும் பறம்புமலையைக் கைக்கொள்ளமுடியாது. வீரனாகையால் போரில் தோற்றுப் பறம்புமலையைத் தாரான். கலைஞராய் – இரவலராய் ஆடிப்பாடிவந்து நின்றால் பரிசிலாகப் பறம்புமலையையும் தருவான்; பறம்புநாட்டையும் தருவான்”  (மேலது, 109)  எனப் பாடினார். பாரியை மறுமையிலும் நண்பனாகப் பெற விழைந்து,

“இம்மை போலக் காட்டி, உம்மை

                    இடை இல் காட்சி நின்னோடு

                    உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே”   (மேலது, 236)

என ஊழை வேண்டுகிறார்.

எனினும், பறம்புமலையைப் பகைவர்கள் கைக்கொண்டனர்; பாரியும் உயிர்நீத்தான். அப்பொழுது இவர், அவன் மகளிரைத் தக்காருக்கு மணம் புரிவிக்கவேண்டும் என்று எண்ணி உடன் அழைத்துச் சென்றார். பாரிமகளிரோடு, விச்சிக்கோ என்னும் குறுநிலமன்னன், இருங்கோவேள் ஆகிய மன்னர்களிடம் சென்று பாரிமகளிரைக் கொள்ளுமாறு வேண்டினார். அனைவரும் மறுக்கவே அம்மகளிரை அந்தணர்களிடத்தே அடைக்கலமாக விட்டுவிட்டு, பாரியைப் பிரிந்து வாழமுடியாத நிலையில் பெண்ணை ஆற்றங்கரையில் வடக்கிருந்து உயிர்நீத்ததாகவும், நெருப்பில்புகுந்து இறந்ததாகவும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் (திருக்கோவலூர்க் கல்வெட்டு, செந்தமிழ்த் தொகுதி 4, ப. 232).

அவ்விடத்தே ‘கபிலக்கல்’ என்று ஒரு கல் இருப்பதாகவும் அக்கல்வெட்டு கூறுகிறது.

கபிலர் குன்று

          திருக்கோவலூரின் தென்பெண்ணையாற்றில் அமைந்துள்ள கபிலர் குன்று (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். திருக்கோவலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் ‘கபிலர்குன்று’  உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் ‘கபிலக்கல்’ என்றே இந்த இடத்தைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

            இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது.

            திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச் சுவரில் உள்ள இராசராசன் காலத்துக் கல்வெட்டு கூறும் செய்தி:

“வன்கரை பொருது வருபுனல் பெண்ணை

தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது

மொய்வைத்து இயலும் முத்தமிழ் நான்மைத்

தெய்வக் கவிதை செஞ்சொற் கபிலன்

மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்

பெண்ணை மலையற்கு உதவி ….

மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்

கனல்புகும் கபிலக் கல்”

இக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன்மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறியமுடிகிறது. அதுபோல் கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.

பாரியின் கொடையைப் பாராட்டும் கபிலர், வஞ்சப் புகழ்ச்சியாகப் ‘பாரி ஒருவனும் அல்லன்;  மாரியும் உண்டு, ஈங்கு உலகு புரப்பதுவே’  (புறநானூறு, 107) என்பதிலுள்ள நயம் மனங்கொள்ளத்தக்கது. மடவரும், அறிவில் மெலிந்தோரும் செல்லினும், பாரி கொடுப்பான் என்று கூறும் கபிலர் புல்லிலை எருக்கம்பூவையும் ஏற்று அருள்செய்யும் கடவுளோடு அவனை ஒப்பிடுகிறார். ‘பாரியும், பரிசிலர் இரப்பின், ‘வாரேன்’ என்னான், அவர் வரையன்னே’  (மேலது, 108)  என்று தன்னையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் வள்ளலாகக் கூறுகின்றார். பாரியின் பறம்பினைப் பிரிய மனமின்றி,

“நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்

சேறும் – வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே! ”

 (மேலது, 113)

எனப் புலம்புகின்றார். பாரிக்காகவும், அவன் பெண்களுக்காகவும், அவன் நாட்டுக்காகவும், அவர் வருந்திப் பாடிய பாக்கள் நெஞ்சை நெகிழ்விக்கும் நீர்மையனவாகும்.

[தொடரும்]

Advertisements

2 thoughts on “கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 2

 1. மிக அருமையான ஆராய்ச்சித் தரம் மிகுந்த கட்டுரைத்தொடர். படிக்கவும் சுவையாக உள்ளது. எழுதிய, பதிப்பித்த ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  Like

 2. கண்களைக்கலங்கவைக்கும் கபிலரின் வரிகள்:

  இம்மை போலக் காட்டி, உம்மை

  இடை இல் காட்சி நின்னோடு

  உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே”

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s