கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் –1


முனைவர் இரா. இராமகிருட்டிணன்

http://wp.me/p4Uvka-BB 

குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம்

நக்கீரர்

பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் சங்கப் பலகையில் வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்களாகிய நக்கீரர் முதலிய எண்மரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,  குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டாகும்.

          “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

                   பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய

                   கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

                   பாலை கடாத்தொடும் பத்து”

என்பதனால் இப்பெயர்களும் இவற்றின் முறையும் விளங்கும்.

இவை,“ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற்தெரிந்து, சான்றோர் உரைத்த தண்தமிழ்த் தெரியல், ஒருபது பாட்டும்” (நச்சினார்க்கினியர் உரைச்சிறப்புப் பாயிரம்) என்று பாராட்டப்பெற்றுள்ளன. இவை பாட்டு எனவும், பா எனவும் வழங்கும்.

இவற்றுள், அகத்திணைக்குரியன முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்பன. ஏனையவை புறத்திணைக்குரியன. பத்துப்பாட்டில் எட்டாவதாக வைத்து எண்ணப்படுவது குறிஞ்சிப்பாட்டு. இது பெருங்குறிஞ்சி எனவும் வழங்கும்.

கபிலர்

குறிஞ்சிப்பாட்டு 261 அடிகளை உடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகித் தலைவன் வரும் வழியிலுள்ள ஊறஞ்சும் காலத்துத் தலைவி பாங்கிக்கு அறத்தொடு நின்றாளாக, பாங்கி எளித்தல், ஏத்தல், வேட்கையுரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பும் கிளவியென்னும் ஆறும் கூறிச் செவிலிக்கு அறத்தொடு நின்றவழிக்  கூறும் கூற்றாக ஆரிய  அரசன்  பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற்  பொருட்டுக் கபிலர் பாடியது.

குறிஞ்சி  –  புணர்தலும், புணர்தல் நிமித்தமுமாகிய ஒழுக்கம். இதன்கண் இயற்கைப் புணர்ச்சியும், பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறப்படுதலால் இஃது  இப்பெயர் பெற்றது. இதில் பிற திணைக்குரிய முதலும், கருவும் மயங்கி வந்தனவேனும் உரிப்பொருள் சிறப்புப் பற்றி இது குறிஞ்சி என்னும் பெயர் பெற்றது.

இதனுள் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றற்குக் காரணமாகிய சிறைகாவல்‘காவலர் கடுகினும்’(வரி 240) என்பது முதலிய அடிகளாலும், தலைவனுக்கு வரும் ஊறஞ்சுதல்,‘அளைச்செறி உழுவையும்’ (வரி 252) என்பது முதலிய அடிகளாலும், தலைவி பாங்கிக்கு அறதொடு நின்றது,‘முத்தினும், மணியினும்’(வரி 13) என்பது முதலியவற்றாலும் விளங்கும்.

இப்பாட்டு, களவொழுக்கத்தைப் புலப்படுத்தி நிற்பது. களவுக் காலத்து நிகழ்வனவற்றில் பெரும்பான்மையான செய்திகள் இதில் முறையே கூறப்பட்டுள்ளன. இஃது இத்தன்மையாதலை, “தேற்ற, மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின், குறையாக் குறிஞ்சிக் குணம்” (குறிஞ்சிப்பாட்டு, இறுதி வெண்பா) என்னும் செய்யுள் புலப்படுத்தும். ஐந்தாமணம் – காந்தருவம்; அதனிற் குறையாது ஒப்பதாவது களவு.

இதனுள் தலைவிக்கு விரகத்தால் உண்டாகிய வேறுபாடுகளும், தலைவனுடைய தோற்றத்தின் இயலும், தலைவியின் மேற்சென்று அச்சுறுத்திய தனது நாயைத் தலைவன் காத்தவாறும், களிறுதரு புணர்ச்சி, புனல்தரு புணர்ச்சி முதலிய துறையமைதிகளும், மாலைக்காலத்தில் பறவைகளும், விலங்கினமும், மக்களும் செய்யும் செயல்களும் கூறப்பட்டுள்ளன.

          தலைவி தோழியுடன் நீராடிப் பல பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தாள் என்ற செய்தியைக் கூறுகையில் 99 மலர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன.261 அடிகளையே கொண்ட இச்சிறு காவியத்தில் 61 – ஆம் அடி தொடங்கி 98 – ஆம் அடி முடிய 37 அடிகளுக்குள் 99 மலர் வகைகளை கபிலர் அடுக்கித் தொடுத்துக் காட்டுகிறார். இப்பகுதி பாமாலை மட்டுமன்று; வாடாத பூமாலையும் ஆகும். உதகையிலோ, கோடைக்கானலிலோ ஒரு மலர்க் கண்காட்சி நடத்தினால், ஒரு வேளை இப்பாட்டின்கண் அடுக்கி வைக்கப் பட்டிருப்பது போன்ற 99 வகை மலர்களை நாம் காணக்கூடும்.

இயற்கை அழகைக் காணாதவர்கட்கு, இன்ப உணர்வை இழந்துவிட்டவர்கட்கு, இம்மலர்க் கூட்டம் மகிழ்ச்சிதராது; வெற்றடுக்காய்க் காட்சிநல்கும். இயற்கையுடன் இரண்டறக் கலக்கும் இன்ப உணர்வு உடையவர்கட்கோ, கபிலர் இவ்வளவு மலர்களையும் தேடித் தொகுத்தார் என்ற வியப்புணர்வு பிறக்கும். இவற்றைச் சேர்த்துக் கட்டித் தம் மெல்லிரும் முச்சியிலே (தலைமுடி) கவின்பெறக் கட்டிய கன்னியரை நினைக்குந்தோறும் அழகுணர்ச்சி பிறக்கும். இலக்கியம் நமக்குத் தரவேண்டிய இரண்டு; ஒன்று அழகுணர்ச்சி, மற்றது எப்போதும் மனத்தைப் புதிய மலராக இருக்கவைக்கும் இன்ப உணர்ச்சி. இவை இரணடையும் குறிஞ்சிப்பாட்டு நமக்குத் தருகிறது.

காந்தள் மலர்

குறிஞ்சிப்பூ

கபிலர் குறிஞ்சிப் பூக்களை, மும்மூன்று பூக்களாகக் கட்டுகிறார்.

‘ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்

                    தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

                    செங்கோடு வேரி, தேமா, மணிச்சிகை’                                     (62-64)

முதலில் ஒரு பெரும்பூவை எடுத்துக்கொண்டு இரு சிறுபூக்களுடன் அதைச் சேர்த்துப் பிணைத்துக் கட்டுவதுபோல, அடிதோறும் முதலில் வரும் பூக்களை அடைமொழியோடும் பிற இரண்டையும் அடைமொழி இன்றியும் அமைந்திருக்கும் நடைச்சிறப்பு அழகியதாகும். மேலும்,

‘வடவனம், வாகை, வான்பூங் குடசம்

                    எருவை, செருவிளை, மணிப்பூங் குவளை,

                    பயினி, வானி, பலிணர்க் குரவம்’                                                         (67-69)

தாமரை

என்று முன்னிரண்டு பூவை அடைமொழியின்றி அமைத்தும் இறுதிப் பூவை மட்டும் அடிதோறும் அடைமொழியுடன் அமைத்தும், நடையழகும் காட்டித் தொடையழகும் கூட்டுகின்றார் கபிலர் பெருமான்.

கீழ்வரும்கண்ணிகளின் அழகைச்சிலமுறை படித்தாலே சுவைபயக்கும்.

‘வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,

                    தாழை, தளவம், முள்தாள் தாமரை,

புன்னை மலர்

                    ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி’                           (79-81)

‘நந்தி, நறவம், நறும்புன் னாகம்,

                    பாரம், பீரம், பைங்குருக் கத்தி,

                    ஆரம், காழ்வை, கடியிரும் புன்னை’                                            (91-93)

இரண்டு பூக்களை மட்டும் உடைய மூன்று அடிகள் தனித்தனியே இவ்வரிசையில் உள்ளன.

காஞ்சிப் பூ

          ‘உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம்’               (65)

‘குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி’                                        (72)

          ‘காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்’                             (84)

எருக்கம்பூ

இவ்வாறு மூன்று பூக்களைக்கொண்ட அடிகள் முப்பதும், இரண்டு பூக்களைக் கொண்ட அடிகள் மூன்றும், இறுதியில் இரண்டு அடிகளில் மூன்று பூக்களுமாக 99 பூக்களும் அழகுறத் தொடுக்கப்பட்டுள்ளன. 64 பூக்கள் அடைமொழியின்றி எடுத்தாளப் பெற்றுள்ளன. 35 பூக்கள் அடைமொழியுடன் உள்ளன. இறுதியில் எருக்கம் பூவிற்குத்தான் அடைமொழி பெரிதாக உள்ளது. இயல்பிலேயே அழகிய பூக்கட்கு அடைமொழி தேவையில்லை அல்லவா?

             தலைவி நாய்க்கு அஞ்சுகையில் தலைவன் காத்த செய்தியைக் கூறுமிடத்து, “மாறு பொருது  ஓட்டிய  புகல்வின் வேறு  புலத்து  ஆகாண் விடையின்,  அணி  பெற  வந்து” எனத் தலைவனுக்கு விடையை  உவமையாகச்  சொல்லிய  ஆசிரியர்  அதற்கேற்ப, தலைவியை அவளது ஊரளவும் கொணர்ந்து விட்டதைக் கூறுகையில், “துணைபுணர் ஏற்றின், எம்மொடு வந்து”  என அவ்வுவமையையே  பின்னும்  சுவைபெறக்  கூறியிருத்தல் அறிந்து  இன்புறத்தக்கது. இதில், தலைவனது மலைவளம் கூறும் பகுதி உள்ளுறை உவமப்பொருள் அமைய அமைந்துள்ளது.

தலைவன் தலைவியை வஞ்சினம் கூறித்  தேற்றியதாகக் காணப்படும் பகுதியால், வரைந்துகொண்டு விருந்து புறந்தந்து இல்லறம் நிகழ்த்தும் முறையும், தலைவன் மலைமிசைக்  கடவுளை வாழ்த்தி வஞ்சினம் கூறும் தன்மையும் நீர் குடித்தலாகிய சூளுறவும் அறியப்படுகின்றன.

இது குறிஞ்சிப்பாட்டாதலின், அத்திணைக்குரிய கடவுளாகிய முருகனைப் பற்றிய செய்திகளை, “சுடர்ப் பூண், சேஎய் ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்”, “நெடுவேள் அணங்கு உறு மகளிர்”, “பிறங்கு மலை  மீமிசைக் கடவுள் வாழ்த்தி” என்ற அடிகளில்  கூறப்பட்டுள்ளன.

சிறந்த உவமைகள்

          இப் பெருங் குறிஞ்சி ஆரிய அரசனுக்குத் தமிழின் சிறப்பை அறிவுறுத்த எழுதப்பெற்றது. இதில் வேந்தரைப்பற்றி மூன்று இடங்களில் வரும் உவமைகள் சிறப்புடையனவாகும். ஏனெனில், ஓர் அரசனுக்கு அவனுக்குத் தொடர்பான செய்திகளை உவமைகூறுவதால், பொருளைத் தெளிவுற விளக்கலாம் என்று கருதியிருக்கவேண்டும். அதனால்தான் மிக இன்றியமையா இடங்களில் இவ்வுவமைகள் எடுத்தாளப்பட்டுள்ளன.

தோழியின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பு போன்றது. ஒருபக்கம். தலைவியின் மெலிவு கண்டு  அஞ்சுகிறாள்; மறுபக்கம் தாயின் சினத்திற்கு அஞ்சுகிறாள். காதல் உண்மையைச் சொல்லாவிட்டால் தலைவி வருந்துவாள்; சொன்னாலோ தாய் வருந்துவாள். யாருக்கு அஞ்சி நடப்பது?

“இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர்

                   வினையிடை  நின்ற  சான்றோர் போல

                    இருபேர் அச்சமொடு யானும் ஆற்றலென்”      (27-29)

 

          மேலும்மேலும் பகைமையைப் பெருக்கும் இரண்டு பெரிய வேந்தர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த முயலும் சான்றோர்கள், இருவரும் தம்மைத் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாதே என்று அஞ்சி வருந்துவது போல, தோழி தானும் வருந்துவதாகக் கூறுகிறாள்.

அடுத்த உவமை வேந்தர்களைப் பற்றியதன்று. ஆயினும் அவனால் ஏவப்படும் படைவீரர்கள் பற்றியது. மூங்கில் முனைபோலும் ஒளிவீசும் பற்களை உடையவாய் வேட்டை நாய்கள் பாய்ந்து வருகின்றன. இது, எதிர் நாட்டைப் பாழாக்கும் நெருங்குதர்கரிய வலிமையுடைய பகைவர்களையும் புறமுதுகிட்டு ஓட்வைத்துத் துரத்துகின்ற பல வேற்படைகளை உடைய வீரர்களைப்போலக் காட்சியளிக்கிறது.      

                   “முனை பாழ் படுக்கும் துன்அருந் துப்பின்

                   பகை புறம் கண்ட பல்வேறு இளைஞரின்”  (128-129)

படையெடுத்துச் செல்லும் வேந்தன், எவ்வளவு விரைந்து சென்று பகைநாடு முழுதும் சூழ்ந்துகொள்வானோ அதுபோல இந்த மாலைப்பொழுதும் விரைந்து வந்து உலகை வளைத்துக்கொண்டுவிட்டதாம்.

                   “சினைஇய வேந்தன் செல்சமம் கடுப்பத்

                    துனைஇய மாலை”                                               (229-230)

இவ்வாறு காலத்தின்படையெடுப்புக்குக் காவலனின் படையெடுப்பை ஒப்பிடும் முறை சிறப்புடையதாகும்.    

இக்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள பல மலர்களைக் கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம் [தாரகை ஆசிரியர்]

https://www.google.com/search?hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=1366&bih=763&q=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D&oq=%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D&gs_l=img.12..0i19.5102.10963.0.13907.16.13.3.0.0.0.97.1021.12.12.0….0…1.1j4.64.img..1.15.1036.RvhIw7ZiQ4w#hl=en&tbm=isch&q=%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82&imgrc=icunlyW8g_aJFM%3A

[தொடரும்]

***

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s