கலித்தொகை கதைகள் – 1


முனைவர் ஜ.பிரேமலதா

http://wp.me/p4Uvka-wO

கலித்தொகை சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று. ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி‘, ‘பொங்கும் இன்ப கலி‘ என்று புலவர்களால் பாராட்டப்பட்ட பெருமையுடையது. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.

துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும்.

பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம்  .இதில் வரும் ஒவ்வொரு பாடலும் ஒரு சிறுகதையாகவோ, நாடகமாகவோ மாறி படிப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும் சிறப்புடையது.  

நான் கதையாக வடித்திருக்கிறேன்.  150 கலிப்பாக்களை கொண்டது.  ஒவ்வொரு திணையைப் பற்றியும் ஒரு புலவராக ஐந்து புலவர்களால் பாடப்பட்டது.  பாலை-பெருங்கடுங்கோ, குறிஞ்சி – கபிலர், மருதம் – மதுரை மருதனிளநாகனார், முல்லை – சோழன் நலுருத்திரன், நெய்தல் – நல்லத்துவனார்.   இந்நூலைத் தொகுத்தவர் நல்லத்துவனார்.

 கதைகளுக்கு வருவோமா…

 கலித்தொகை குறிஞ்சிக்கலி பாடல் – 1

ஆகாசப் பந்தலிலே பொன்னூசல் ஆடுதம்மா..

லைவியும் தோழியும் இணைபிரியாதவர்கள். ஒன்றாக உண்டு, உறங்கி விளையாடி மகிழ்பவர்கள். எங்கு சென்றாலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போலப் பிரியாமல் செல்வார்கள்.

ஆனால், உள்ளம் ஒன்றாக இருக்குமா? என்னதான் ஒன்றாகப் பிறந்து ஒரே சூழலில் ஒரே மாதிரியாக வளர்ந்தாலும் எண்ணங்கள் வேறு வேறாகத் தானே இருக்கும்?  இதோ இந்த தலைவிக்கும் தோழிக்கும் அதுதான் நிகழ்ந்தது.  இது பருவம் செய்கிற வேலை. எப்போதும் கலகலப்பாக ஓடி விளையாடும் தலைவி, சில நாட்களாகத் தனிமையை நாடிச் செல்கிறாள். சரியாக உறங்குவதில்லை. உண்பதில்லை. எதையோ பறிகொடுத்தவர் போல் மோட்டு வளையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். தினைப் புனக் காவலுக்குச் சென்றாலும் முன்புபோல் சுறுசுறுப்பாக கவண்கல் வீசி பறவைகளை விரட்டுவதில்லை. எதிலும் பற்றற்று இருக்கிறாள். இணையாக இருக்கும் விலங்குகளையும், பறவைகளையும் பார்த்து பெருமூச்சு விடுகிறாள்.

தலைவி வாய்திறந்து எதுவும் சொல்லாமலே தோழிக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. எனினும், தலைவி தன் வாயால் வெளிப்படையாக எதையும் சொல்வதாகத் தெரியவில்லை. அவள் உடல் மேலும், மேலும் மெலிந்து கொண்டே செல்கிறது. முகமோ வாடியே இருக்கிறது. உயிர்த் தோழியின் இந்நிலையை காணச்சகிக்க முடியாத தோழி ஒரு நாடகம் ஆடுகிறாள்.

என்ன நாடகம் தெரியுமா? தலைவியிடம், “நான் உன்னிடம் ஒரு நிகழ்ச்சியைக் கூறப் போகிறேன். நன்றாகக் கேள்!” என்று கூறத் தொடங்குகிறாள்.

தலைவி கூறுவதைப் போலவே பாவித்துக்கொண்டு, சொல்லத் தொடங்குகிறாள்.

“ஓர் இளைஞன். மிகுந்த அழகுடையவன்.  அழகான மாலைகளை, நன்றாகத் தொடுத்து, தன் மார்பில் அணிந்து கொண்டிருப்பவன். எப்போதும் அவன் கையில் வில்லும் அம்பும் இருக்கும். நாம் தினைப் புனக் காவல் செல்லும் போதெல்லாம், அந்தப் பக்கம் அடிக்கடி வந்து, இந்த வழியாக வந்த மானைப் பார்த்தீர்களா, அந்த வழியாக யானையைப் பார்த்தீர்களா என்று வினவுவான். வினவும்போது என்னை ஒருவிதமாக நோக்குவான். அப்போது மட்டும் நோயுற்றவன் போல் தென்படும் அவன் எதையும் வெளிப்படையாகக் கூறமாட்டான். நான் உணரவேண்டிய குறிப்பு ஒன்றை தன் கண்களில் தேக்கியபடியே அங்கிருந்து சென்று விடுவான். மீண்டும் வருவான். அவன் குறிப்பை நான் உணர வேண்டும் என, மீண்டும் என்னை நோக்குவான். இது ஒரு நாளல்ல, இரு நாளல்ல. பல நாட்கள் இது தொடர்ந்தபடியே இருந்தது.

“எவ்வகையிலும் உறவில்லாத அவனது துயர் கண்டு, நானும் துயரமடைந்தேன். அன்றிலிருந்து என்னை விட்டு தூக்கம் சென்றுவிட்டது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. அவனை நினைத்து ஏற்பட்ட வருத்த மிகுதியால் உண்ணவும் பிடிக்கவில்லை. முன்பின் தெரியாத அவனுக்காக நான் துன்பக்கடலில் விழுந்தேன். அவனோ வாய் திறந்து ஒன்றும் சொல்ல மறுக்கிறான். நானே அவனிடம் சென்று வெளிப்படையாகக் கேட்டு விடலாம் என்றாலோ? நாணம் தடுக்கின்றதே. அவன் குறை என்னவென்று எப்படிக் கேட்பது?

“இப்படிக் கேட்காமலே விட்டுவிட்டால், என் உள்ளம் அறியாமல் அவன் இறந்துவிட்டால்? அல்லது, வராமலே இருந்துவிட்டால் என்ன செய்வது? இந்நினைவுகளினால் நான் தடுமாறித் தவித்தேன். அவனை நினைக்க நினைக்க மேலும் துன்பம் தான் அதிகமாயிற்று. இதனால் என் தோள்கள் மெலிந்து போயின. இத்துன்பத்தைத் தீர்க்க ஒரு நாணமற்ற செயலைச் செய்யத் துணிந்தேன். அது என்ன தெரியுமா?

“நாம் தினைப் புனக் காவல் புரியும் இடத்திற்கு அருகில் ஒரு சோலை உள்ளதல்லவா? அந்த சோலைக்கு நீ அறியாமல் சென்றேன். அந்த இடத்தில் மரத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு ஊஞ்சலில் அமர்ந்து, அவன் வருகையை எதிர்பார்த்து ஆடிக்கொண்டிருந்தேன். நான் நினைத்தது போல அன்றும் கையில் வில்லோடு ஒரு மானைத் தேடியபடி அவன் வந்தான்.

“இந்தப்பக்கம் நான் துரத்தி வந்த மான் வந்ததா’ என்று என்னைக் கேட்டான். நானோ, ‘மானைத் தேடுவது இருக்கட்டும். இந்த ஊஞ்சலை சற்று ஆட்டிவிடக் கூடாதா’? என்று கேட்டேன். அவனும் ஒப்புக் கொண்டு ஊஞ்சலை ஆட்டிவிட்டான். அவ்விதம் அவன் ஆட்டியபோது, நான் ஊஞ்சலின் வேகத்தினால், தலைசுற்றுவதுபோல் நடித்து அவன் மார்பின்மேல் மயக்கமுற்று வீழ்ந்தேன். ஊஞ்சலைப் பிடித்திருந்த பிடியை விட்டு விட்டு அவன் தோள்களைத் தழுவியபடிக் கிடந்தேன். அவனும் நான் உண்மையாகவே மயங்கி விட்டதாகக் கருதி என்னை வாரி அணைத்துக் கொண்டான்.  நானும் மயக்கமடைந்தவள் போல் நடித்தேன்.  ஏன் தெரியுமா? நான் விழித்து எழுந்தால், உடனே அவன் என்ன செய்திருப்பான் தெரியுமா?  கேள்.  இதிலிருந்து அவன் எப்படிப்பட்டவன் என்பது தெரிந்து விடும். 

“ஒருவேளை நான் விழித்து எழுந்திருந்தால், என்னை அவனுடைய அணைப்பிலிருந்து விலக்கி, ‘பெண்ணே, நீ உன் வீட்டிற்குச் செல்!’ என்று என்னை அனுப்பியிருப்பான். அத்தகைய உயர்ந்த பண்புடையவன். எனவேதான், மயக்கமுற்றவள் போல் நடித்து, அவன் அணைப்பிலேயே கட்டுண்டு கிடந்தேன். அன்று ஆடிய ஊஞ்சல் ஆட்டம் தான் இன்று என்னை இப்படி பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது.  என் மனம் அந்த ஊஞ்சல் நினைவுகளிலேயே ஆடிக் கொண்டிருப்பதால்தான், இன்று இப்படி மெலிந்து போய்க் கொண்டு இருக்கிறேன். அப்படித்தானே!” என்று ஒற்றைக் கண்ணால் பார்த்தபடி — தோழி தலைவியாக மாறி — தலைவி கூறுவதைப் போல, ஒரு நிகழ்ச்சியை விவரித்துத் தலைவியிடமே கூறுகிறாள்.

தலைவி தலை கவிழ்ந்து கொள்கிறாள், நாணத்தால்.

(தலைவி தன் நிலைக்கான காரணத்தைச் சொல்லாமல் போனாலும், அவளுடனே இருக்கும் தான் ஊகித்து அறிந்து கொண்டதை இவ்வாறு மறைமுகமாகத் தெரிவிக்கிறாள்.)

இதோ அப்பாடல்…

கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன்

வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட

கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,

முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற

நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்;

5
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்

சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்

கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;

பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; ‘இன்னதூஉம்

காணான் கழிதலும் உண்டு’ என்று, ஒரு நாள், என்

10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்

நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல்

இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,

ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,

‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற,

15
‘தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்

மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,

20
‘ஒண்குழாய்! செல்க’ எனக் கூறி விடும் பண்பின்

அங்கண் உடையன் அவன் 

கபிலர்

நூல் – கலித்தொகை 

பாடல் – குறிஞ்சிக்கலி – 1

பாடியவர் – கபிலர்

கூற்று -தோழி கூற்று 

இங்கு தோழி தலைவி இருவருக்குமுள்ள நெருக்கமும், ஒருவருக்கு நடப்பதை மற்றவர் எப்படியாவது அறிந்துகொள்ளும் சூழலும், ஒருவர் துயரை மற்றவர் எப்படியாவது களைய எடுத்துக்கொள்ளும் முயற்சியும், தலைவி தன் காதலைச் சொல்லாமல் போனாலும் தோழி இப்படித்தான் நடந்திருக்கும் என ஊகித்து எடுத்துரைக்கும் பாங்கும், நாடகத்திற்குள் ஒரு குட்டி நாடகம் நடத்திக் காட்டியிருக்கும் குறிஞ்சிக் கபிலரின் புலமையும் இப்பாடலைச் சுவை மிக்கதாகச் செய்துள்ளது. இப்படிப்பட்ட சிறு நிகழ்ச்சிகளை ஒரு கதை போலச் சொல்வது தான் கலித்தொகையின் சிறப்புகளாகும்.

http://wp.me/p4Uvka-xo   <<  இரண்டாம் கதை

***

Advertisements

4 thoughts on “கலித்தொகை கதைகள் – 1

 1. அவள் பெயர் காந்தள் …

  மாலைச் சூரியனின் மஞ்சள் நிறம் பழிக்கும் மேனியாள்
  பாலைச் சிரிப்பில் வெண் அன்றில் வியக்கும் கனியாள்
  காளை மார்பினில் முகம் புதைக்கும் இளங் கொடியாள்
  ஆளை இழுக்கும் அழகுத் தோட்டத்தில் தனி மலரவள்…

  அவன் பெயர் வளவன் …….

  திரண்டுநிற்கும் செந்தோளன், விழுப்புண் ஏற்ற விரி மார்பன்
  மிரண்டுநிற்கும் ஏறுகள் இவன் உருண்டகழல்மேற்கை வரின்
  இரண்டு வெண்பரிஆற்றல்,அரண்ட அரிமா வளவன் அடிவரின்
  மருண்ட பகைவரும் மன்னவன் நட்புகூடும் நல்ஞானம் பெறின்

  மென்காந்தள் வளை கை தன்கை சேர, வேந்தன் வளவன் நறு
  செங்காந்தள் மலர் பரப்பும் வெண் மணல் குன்று தனில் நின்று
  சேயிழை இடை பற்றி,செந்தமிழர் நடை பற்றிச் செப்ப, காந்தக்
  கருவிழியாள், கணநேரம் கைபிடித்த காளையின் தோள்தொட்டு

  வெஞ்சினக் களிறே, வேந்தே, அகமும் புறமும் கொண்டு அதன்
  கொஞ்சுநெறி வாழ் தமிழ்ச்சுற்றம் என்னவாகும் இனி? என்னுள்
  அஞ்சுவது அஞ்சாமை என ஒலிக்க நஞ்சாம் பிறமொழி அதனுள்
  விஞ்சும் தமிழை விகாரமென கலப்படம் செய நாணவில்லையே.

  என ஏக்கத்தில் விம்மினாள் ….

  Like

 2. அறம் மரம் வளம்அறு தமிழகம் [edited]

  அல்லியும் ஆம்பலும் கூடிச்சுனைநீர் குளிர
  காந்தளும் மௌவலும் தூவிமணம் வெண்
  மணல் மேனி பரப்ப காட்டு மயிலும் வீட்டுச்
  சேவலும் மாறி மாறி மாரி நடம் பயிலக்கறை
  காணா நறுங்கொன்றையும் வேம்பும்
  குளிர்நிழல் பிடிக்க,ஆலும் புளியும் அடை
  காத்தது போல் அசுத்தம் இல்லா அகலப்பாதை ஓட,
  தமிழ்மாறன் அதிகாலைக்கதிர் நோக்கி மேல் கைகூப்ப
  வயல் எல்லாம் முதுநெற்கதிர் மண்நோக்கி தலைசாய
  பெரும்உழவர் ,நாடு உயர நல்லெருது தனைக் குளிப்பாட்ட,
  நறும் இசைபாடிக் கருவண்டுக் காளை அவன் மனம் குளிர
  திமிர் கொங்கை தீந்தமிழ் மகள் செவ்வாழைக் கால்எடுத்ததால்
  அவ்வாழை இலைமூடி அண்ணலுக்குக் கஞ்சிக்கலயம் சுமந்த
  கண்ணாளன் கண் பார்த்தும் , காளையவன் மெய் பார்த்ததும்
  சுனைநீரில் கால் இட்டவுடன், வணக்கம் செலுத்தவோ?
  வாசம் தேடி வாலை மீன்கள் வானுயரக் குதிக்க

  அன்னம் அவள் கால்பட்டதோ ? சூரியன் கதிர்பட்டதோ ?
  சுனைநீர் கொதிக்க,சுற்றிவரும் பந்துபோல் சில்மீன்கள்
  குதித்து குவளை இதழ்பட்டு மலர்அவை வாடியதோ ?
  விரிய மனம் இல்லாமல் மீண்டும் இதழ் மூடியதோ ?
  கரைஓரம் விடலைச் சிறார் கல்லனைய அசைபோடும்
  ஆமை மீதமர்ந்து அவ்விளையாட்டிலும் வீர்நெறிமுறை காக்க,
  மணல்மீதில் மாசுபடக் கற்றோர் கற்றவை மற்றவருக்கு
  புனல்விழு தேன்அருவி போல் துல்லியமாய் தெளிக்க
  வம்பிழுக்கா ஊர் மக்கள், வாசனைத் திரவிய மைஅழுக்கால்
  தெம்போடு பாயும்தெளிநீரில் சுத்தமாகத் துகிலொடு துவைக்க
  வன்புலி வரிக்குதிரை வரிமான் வஞ்சியர் அனைவரும் நீர்பருக,
  அகம் புறம் எனக்காட்டி அறம் மறம் திறம் எனக் கூட்டி
  அன்பை வளர்த்த கன்னித் தமிழ் நாட்டில் ஐந்தினையிலும்
  அறுபடா மரம், நறுபடா வளம், கண்படா பெருமை இருந்தது காண்.

  Like

 3. கவி மழை பெருக்கேடுத்தோடும் ஒரு பாடல் கண்டேன். மனம் மகிழ்ந்தேன். இனியதோர் கவித் தேர் கம்பீரமாக பவனி வருகிறது. அழகிய சொற்சிலம்பம் மின்னல் ஒளி வீசி நிற்கிறது. தங்கள் கவிதை கவிஞராக்கும் படிப்போரை…….வாழ்த்துக்கள். கலித்தொகை களிப்படையச் செய்து விட்டதோ தங்களை?

  Like

 4. கிராமக் கலித்தொகை
  ******************************
  ( திருப்பூர் மாவட்டம் – ஊத்துக்குளி கிராமம்)
  கழனி இல்லை; கரும்பில்லை ;
  கழனிவாழ் உழவருக்கு கஞ்சிஇல்லை
  கருஎருமை மேவும் கம்புத்தட்டு
  காலில் கிழிக்க கல்லெடுத்து
  கருவேல மரத்து ஓணான் மீது
  கனக்காய் எறிந்து கயிறுகட்டி
  கள்ளமிலா சிறார் ஆட
  காய்ந்து வரும் ஆதவன் கருணை
  மழை காட்டா ஊத்துக்குளியான் நான்.
  என்னைப் பெயர் சொல்ல, நறு
  வெண்ணெய் பேர் சொல்வார்.
  பண்ணை இல்லை.பனை உண்டு
  தென்னை உண்டு தோப்பில்லை
  காய்ந்துவரும் நொய்யலில்
  நோய்பெருக்கும் சாயக்கிருமி உண்டு
  அதனை உண்டு மண்வளம் போனதுண்டு
  நீரும் நிலனும் புணரக் கால்நடையாய்
  காததூரம் நடைகொண்டதுண்டு
  கருத்துக்கு ஆதாரம், அடிப்படைக் கல்வி;
  கல்விக்கு ஆதாரம், அடிப்படை வசதி;
  ஆரம்பப்பள்ளியில்,மேல்நிலைப் பள்ளிகளில்
  கல்விக்கும் கழிவுக்கும் வசதி செய்யாமல்
  கைலாசநாதனுக்கும், கதித்தமலை
  கார்த்திகேயனுக்கும் கவசம், கும்பம் செய்யும்
  கற்ற மேலோர் வான் பார்க்க , கீழோர் மண் பார்க்க
  எரியூட்ட மின்மயானம் வேண்டி, திரும்பா
  ஊருக்கு,திருப்பூரில் அனுதினம் எம் பிணவரிசை
  எண்ணெய் ஆலைகள் எண்ண ஆகாது;
  செவ்வரிசி ஆலைகள் எண்ணில் அடங்காது
  மூடை தூக்கவே,அரிசிச்சோறு காணா
  மெல் தொழிலாளிகள் , ஒட்டிய நெஞ்சுடன்,
  பற்றிய வயிற்றுடன் சுடுபாறைக்
  கல்லுடைப்போர் மந்தை மந்தையாய்.
  இவர் வலி மறக்க , வழி காட்டாமல்
  வாரம் ஓர்நாள் கூடக் குடிக்கப் புதன்சந்தை..
  சந்தை வந்தோர் முந்தை வாங்க வண்ண
  நெகிழி கலன், இரும்பான் கொள்கலம் விற்போர்
  சாலை ஆக்கிரமித்து சட்டம் பேசம் விந்தை


  நிறை ஊத்துக்குளி ஊரான் நானே.
  [edited by removing certain lines]

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s