வளவன் கனவு – 2


சு. கோதண்டராமன்

மறுபகிர்வு நன்றி: வல்லமை:                                  http://wp.me/p4Uvka-v5  

3  புதிய பாடல் புதிய தெய்வம்

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து

கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து பேசி

மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்

பிறவாமைக் காக்கும் பிரான்.

சோழ மன்னர் செந்தீவளவன் கொலு மண்டபத்தில் வந்து அமர்ந்தார். அவர் முகம் கவலைக் குறியைக் காட்டியது. தலைமை அமைச்சர் அச்சுதப் பிரமராயரை நோக்கி, “பிரமராயரே, நம் மனிதர்கள் நர்மதைக்கரைக்குப் போய் மூன்று மாதம் ஆகிறது. இன்னும் வரவில்லை, அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லையே!” என்றார்.

“வந்துவிடுவார்கள் மன்னா. கவலை வேண்டாம். எப்படியும் போக ஒரு மாதம், வர ஒரு மாதம் ஆகும். மேலும் ஆங்கிரஸ பிரமராயர் போன காரியத்தைச் செவ்வனே முடித்துக்கொண்டுதானே வரவேண்டும். நாடுவிட்டு நாடு குடியேறுவது என்பது எளிதான செயல் அல்லவே? அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் யோசனை செய்து சம்மதித்தபின் அவர்களை ஒன்று கூட்டிக் கொண்டு வரவேண்டும். இதற்கு நான்கு மாத காலம் ஆகும். நேற்று வந்த ஒற்றர் செய்தியின்படி, வர விரும்புபவர்கள் அனைவரும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அதாவது முந்தாநாள், கார்வான் நகரில் கூட வேண்டும் என்று ஆங்கிரஸர் அறிவித்து இருக்கிறார். நேற்று புறப்பட்டிருப்பார்கள். இன்று கடல் பயணத்தைத் தொடங்கியிருப்பார்கள்.”

“நம் அமைச்சர் ஆங்கிரஸரின் திறமையில் நமக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் நீண்ட கடற்பயணம் ஆயிற்றே, புயல் போன்ற இயற்கை உற்பாதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்பது தான் நம் கவலைக்குக் காரணம்.”

“நம் மாலுமிகள் திறமையானவர்கள். எந்தப் புயல் வெள்ளமானாலும் பாதுகாப்பாகப் படகைச் செலுத்துவதில் வல்லவர்கள். மேலும் இது புயல் வீசும் காலமும் அல்ல. கடுங்கோடை. இன்னும் ஒரு மாதம் போனால் மேற்குப் பகுதிகளில் பெரு மழை தொடங்கிவிடும். அதற்குள் அவர்கள் வந்து விடுவார்கள். லகுலீசர் காப்பார். கவலை வேண்டாம் மன்னா.”

லகுலீசர் பெயரைக் கேட்டவுடன் அரசரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு நாள். அரசர் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது ஒரு புலவர் வந்தார். வழக்கம்போல மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வதற்காக வருவோரில் ஒருவர் என்று  நினைத்த மன்னருக்கு அவர் பேசிய முதல் சொல்லே அதிர்ச்சியைத் தந்தது.

“மன்னா, இப்பொழுது நான் சொல்லப் போகும் பாடல் உங்களைப் புகழ்ந்து பாடப்பட்டதும் அல்ல, என்னால் இயற்றப்பட்டதும் அல்ல. மேலும் நான் பரிசு பெறவும் வரவில்லை. மன்னர் தயவால் என்னுடைய நிலம் எனக்குப் போதுமான வருவாய் தருகிறது.  பாடலைப் படிக்கவா?”

“படியும்.”

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல்சிவந்த வாறோகழலாடப்

பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

தீயாடு வாய்இதனைச் செப்பு.

சுடலையில் தீயின் நடுவே கையில் தீயேந்தி நடனமாடுபவனைப் பார்த்துப் புலவர் கேட்கிறார், உன் கையின் சிவப்பு நிறத்தால் தீ சிவந்ததா அல்லது அத்தீயினால் உன் கை சிவந்ததா ?

“அடடா, என்ன கற்பனை நயம்! மேலே படியும்.”

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

வேலையே போன்றிலங்கும் வெண்ணீறுமாலையின்

தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு

வீங்கிருளே போலும் மிடறு.

காலை நேரத்துச் சிவந்த வானம் அவனது திருமேனிக்கும், உச்சி வேளை வெண்ணிற வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறைகின்ற ஞாயிற்றின் கதிர்கள் அவனது விரிந்த சடைக்கும், கருத்த இரவு அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின.

“ஆஹா, என்ன சிறப்பான உவமை! மேலே படியும்.”

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ

மருளின் மணிநீலம் என்கோஅருளெமக்கு

நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்

ஒன்றுடையாய் கண்டத் தொளி.

இறைவா, உன் கண்டத்தில் உள்ள ஒளி பொருந்திய கருமைக்கு உவமையாக எதைக் கூறுவேன்? இருளையா, மாமேகத்தையா, நீல மணியையா ?

“என்கோ, என்கோ என்ற தொடர் என்னை எங்கோ உயர்த்திச் செல்கிறது. என்ன அழகான சொல் பிரயோகம்! இன்னும் இருக்கிறதா?”

“நிறைய உள்ளது மன்னா. சொற்சுவை மட்டுமல்ல. இறைவனிடத்து அவர் காட்டும் அன்புச் சுவையும் சிறப்புடைத்து. இதைக் கேளுங்கள்.”

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறிபணியா ரேனும்சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்

கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

என் துன்பத்தை அவர் தீர்க்காவிட்டாலும், என் மேல் இரக்கம் கொள்ளாவிட்டாலும், நான் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும் எலும்பு மாலை அணிந்து, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் கொண்ட அன்பு மாறாது.

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்பவர்ச்சடைமேல்

பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் அவ்வப் பிறவிகளிலும், தன் நீண்ட சடையில் பிளவுபட்ட திங்களைச் சூடிய பெம்மானுக்கே அடிமையராய் வாழ்வோம். அவரல்லாத பிறர்க்கு ஒரு போதும் ஆளாக மாட்டோம்.  

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்

காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்

வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது

கில்லேன மாஎன்றான் கீழ்.

வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானைச் சோதிப்பதற்கு மாலவனும் பன்றி உருவெடுத்து கீழே தோண்டிச் சென்று ‘என்னால் முடியவில்லை அம்மா’ என்றான்.

“புலவரே, இந்தப் பாடல்களில் போற்றப்பட்டுள்ள தெய்வம் யார் என்று தெரியவில்லையே. அவர் வேதத்துக்கு ஆதியன் என்று பேசப்பட்டாலும் அவர் வேத தெய்வமாகவும் தெரியவில்லை. கிராமியத் தெய்வமாகவும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் அந்தத் தெய்வத்தின் மேல் புலவர் செலுத்தும் அன்பு மிக ஆழ்ந்தது, உறுதியானது. இதை இயற்றியவர் யார்? இது போன்று இன்னும் எத்தனை பாடல்கள் உள்ளன?”

“மன்னா, இது என் தந்தையார் எழுதி வைத்த சுவடி. அவர் என் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார். இந்தச் சுவடி என் வீட்டுப் பரணில் இருந்தது. இது பேயார் என்ற ஒரு பெண்பால் புலவர் இயற்றியது என்று என் தாய் சொல்லி அறிந்தேன்.  படித்துப் பார்த்ததில் சிறப்பாக இருக்கவே, சிறப்புடைய பொருள்கள் அரசர்க்கே உரியன என்ற வழக்குப்படி சமூகத்தில் இதைத் தெரிவிக்க வந்தேன். மொத்தம் 143 பாடல்கள் உள்ளன. இது எந்தத் தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை நான் அறியவில்லை.”

“புலவரே, நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்கள். முழுவதையும் படித்துக் காட்டிவிட்டுப் போகலாம். அமைச்சரே, இந்தப் பாடலை நீர் கேட்டிருக்கிறீரா, இதை எழுதியது யார் தெரியுமா?”

“பேயார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரைக்காலைச் சேர்ந்தவர். அவர் ஏதோ பேய் பிடித்த பெண் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் இவ்வளவு அழகிய பாடல்களை இயற்றியிருப்பார் என்று நான் இதுவரையில் அறியவில்லை.”

“அமைச்சரே, அவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லும்.”

“உத்தரவு மன்னா.”

    புலவர் அமைச்சர் காட்டிய விடுதியில் தங்கினார். அரசருக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து பாடல்களைப் படித்துப் பொருள் கூறி வந்தார்.

***

4. காரைக்கால் அம்மையார்

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்- நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

                                —  காரைக்கால் அம்மையார்

ஏழு நாட்களில் அமைச்சர் தான் திரட்டிய தகவல்களுடன் அரசரைச் சந்தித்தார். “அந்தப் பாடல்களை இயற்றியவர் புனிதவதி என்ற பெயருடன் காரைக்காலில் தோன்றியவர். அவர் சிறுமியாக இருந்தபோது அவர் வீட்டு வாசலில் ஒரு அடியார் உணவு கேட்டு வந்தார். தாயிடமிருந்து அவருக்கு உணவு பெற்றளித்தாள் புனிதவதி. அதன் பின் அடியார் திண்ணையில் அமர்ந்து அங்குள்ள சிறுவர், சிறுமியரைக் கூட்டிக் கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை ஆலமர்செல்வன் என்னும் தெய்வத்தைப் பற்றியவை. அவை புனிதவதியின் மனதில் ஆழப் பதிந்தன.

அந்தக் கதைகளைக் கேட்ட பின் அவர் இறைவனைப் பற்றியே இரவும் பகலும் சிந்திக்கலானார்.

வயது வந்ததும் நாகையைச் சேர்ந்த பரமதத்தன் என்ற வணிகனுடன் அவருக்குத் திருமணம் ஆயிற்று. காரைக்காலிலேயே ஒரு தனி வீட்டில் இருவரும் இல்லறம் நடத்தினர். ஒரு நாள் தன் கடைக்குச் சென்றிருந்த அவளது கணவன் இரண்டு மாங்கனிகள் வாங்கி வீட்டிற்கு அனுப்பினான்.

வீட்டு வாசலில் ஒரு அடியார் வந்து, ஈசனைப் போற்றிப் பாடி, உணவு யாசித்தார். புனிதவதி அவருக்குச் சோறு பரிமாறினார். கறியமுதம் எதுவும் சித்தம் ஆகாததால் அதற்கு மாற்றாக, கணவன் அனுப்பிய பழங்களில் ஒன்றை இட்டு அடியவரின் பசி மாற்றி மகிழ்ந்தார்.

வீட்டுக்கு வந்த பரமதத்தன், உணவுடன் கூட மாங்கனியைச் சுவைத்தான். உயர்வான சுவையுடன் கூடியதாக இருக்கவே, இன்னொன்றையும் போடுமாறு கேட்டான்.

ஈசனடியார்க்குக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால்,  தன் கணவன் கோபிப்பானோ என்று அஞ்சிய புனிதவதி இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இறைவனை வேண்டினார். இறை அருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குப் படைத்தார்.

அது மேலும் அதிகச் சுவையுள்ளதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கவே அது பற்றி அவன் வினவினான். இறைவன் கொடுத்தது என்னும் செய்தியை அவன் நம்பவில்லை. நிரூபணம் வேண்டினான்.

இறை அருளால் புனிதவதி மீண்டும் ஒரு பழம் வருவித்தார். அவன் அவளைப் தெய்வமகள் என்று கருதி அஞ்சி, அவளை விட்டு நீங்கிப் பாண்டிநாடு சென்றான். வருடங்கள் பல ஆகியும் அவன் திரும்பாத நிலையில், கணவனே தனக்குக் கதி என்று எண்ணிய அவர் கணவன் இருக்குமிடத்தைத் தேடி விசாரித்துக் கொண்டு சென்றார்.

அங்கு பரமதத்தன் வேறு பெண்ணை மணம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றிருந்தான். புனிதவதியார் அவனது வீட்டிற்கு வந்ததும், “அம்மையே,  உங்கள் அருளால் வாழ்வேன்! உங்கள் பெயரையே என் பெண் குழந்தைக்கும் இட்டிருக்கிறேன்!” என்று வேண்டி தன் மனைவியுடன் அவரது காலில் விழுந்தான்.

கணவனே தன்னைக் கண்டு அஞ்சித் தன் தாள் பணிந்ததால், இவ்வழகிய வடிவு தமக்குத் தேவை இல்லை என்று சிவபெருமானிடம் வேண்டி, பேய் உருவை வேண்டிப் பெற்றார் புனிதவதி அம்மையார்.  

இதைப் பார்த்த அவளது பெற்றோரும் உறவினர்களும் அவளைப் பேய் எனவே கருதிப் புறக்கணித்தனர்.

அதன் பின் அவர் தன்னைப் பேய் என்று கூறிக் கொள்வதில் இன்பம் அடைந்தார். இறைவனைக் குறித்துப் பாடல்கள் இயற்றிப் பாடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பலரும் அவரிடம் அஞ்சி ஓடினர். சிலர் மட்டும் அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் கூறும் பாடல்களை எல்லாம் ஏட்டில் எழுதி வந்தனர். இன்று நம்மிடம் வந்துள்ள கவிராயரின் தந்தை அத்தகையோரில் ஒருவர்” என்று சொல்லி முடித்தார் அமைச்சர்.

அரசர் வியப்படைந்தார். “இதுவரை அவருடைய பாடல்களைக் கேட்டு அளவிலா வியப்பும் மகிழ்வும் அடைந்தேன். இத்தகைய சிறந்த பாடல்களை இயற்றியவர் நிச்சயம் பேயாக இருக்க முடியாது. சேற்றில் பிறந்த செந்தாமரை போல் தோன்றிய இந்த அம்மையாரை அவரது இயற்பெயர் கொண்டு அழைப்பதும் மரியாதை ஆகாது. இனி அவரைக் காரைக்கால் அம்மையார் என்றே அழைப்போம். அமைச்சரே, காரைக்கால் அம்மையாரைப் போற்றிய மனிதர்கள் யார் யார், எங்குள்ளனர் என்று விசாரியுங்கள்” என்று கட்டளை இட்டார் அரசர்.

***

மூன்றாம் பகுதி:  http://wp.me/p4Uvka-vE   : —  முதல் பகுதி:  http://wp.me/p4Uvka-uB  

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s