கற்காலப் புதிர்நிலைகள் (Mazes/Labyrinths)

கற்காலப் புதிர்நிலைகள் (Mazes/Labyrinths)

சுகவன முருகன்

                புதிய கற்காலத்திலிருந்தே புதிர்நிலைகள் (Mazes/Labyrinths)  உலகெங்கும் இருந்துள்ளமையைத் தொல்லியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். வட்டப்புதிர்வழிகள் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையானவையாகும். உள்/வெளிச் செல்ல இயலாத பல்வேறு சுழல்நிலைப் பாதைகளுடன் மையத்தே விடையைக் கொண்டு விளங்குபவை புதிர்நிலைகள் எனப்படும். உதாரணமாக மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக் கொண்டு உயிரிழந்த சக்கரவியூகம் இவ்வாறான ஒரு புதிர்நிலையே ஆகும்.
            பல்லாயிரம் ஆண்டுகளாக அரிய ஒன்றை அடைய நினைக்கும் மனிதமனம் ஏற்படுத்திய சிக்கல் மற்றும் அதற்கான தீர்வை வைத்திருப்பவை இப்புதிர்நிலைகள் எனலாம்.
             கிரீட் தீவில் கிடைத்த ஃபைலோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்ட களிமண் தாயத்து கி.மு.1200 ஆண்டுகள் பழமையானது ஆகும். சார்டீனியத்தீவுப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லுசன்னா என்ற புதிர்நிலை கி.மு.200ம் ஆண்டைச் சேர்ந்தது எனக் காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது. சிரியாவில் புதிர்நிலைகள் வரையப்பட்ட பானைச்சில்லுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . அவை கி.மு.1000 ஆண்டுகள் பழமையானவையாகும். முக்கியமான வரலாற்று காலத்திற்கு முந்தைய புதிர்நிலைகள் கிரேக்க மற்றும் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்தவை மட்டுமல்ல அவை ஆய்வாளர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டுமுள்ளன.  உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிர்நிலைகள்  அதிகமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் காணப்படுகின்றன. அவை சுமார் 300-600 ஆண்டுகள் பழமையானவை …
இந்தியாவில் புதிர்நிலை பற்றிய முதல் பதிவாக நாம் அறிவது  யமனைச் சந்திக்க நசிகேதன் செல்வதைச் சொல்லலாம். இதிகாச காலத்தில் மகாபாரதத்தில் இவ்வாறான யுத்தப் புதிர்நிலை ஒன்றில் அபிமன்யூ சிக்கிக் கொள்கிறான் என்பதிலிருந்து புதிர்நிலைகள் பற்றி இந்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர் எனவும் சொல்ல இயலும்.
            வரலாற்று காலத்திற்கு முந்தையதான புதிர்நிலைகள் இந்தியாவில் வெகு அரிதாகவே உள்ளன. பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை ஒன்று தெற்கு கோவாவில் செங்கும் வட்டத்தில் ரிவோனா கிராமத்தினருகே உள்ள பன்சாய்மோல் என்றழைக்கப்படும் உஸ்கலிமோல் பகுதியில்  உள்ளது. ஏழு நிலைப்பாதைகளைக் கொண்டதாக பாறையில் கீறப்பட்டிருக்கும்  இப்புதிர்நிலை பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகும். தேசிய சொத்தான இப்பாறைப் புதிர்நிலை போன்றதே மகாபாரதத்தில் அபிமன்யுவின் சக்கரவியூகப் போர் யுக்தியும். மனித மனமே பெரும் புதிர்நிலை எனவும் அதிலிருந்து வெற்றிகரமாக மீள்வதற்கான பிரயத்தனங்களே புதிர்வழிப் பாதைகளாகவும் விடையைக் கண்டடைவதே இலக்காகவும் இருப்பதாக இப்புதிர்நிலைகளைப் பொதுமைப் படுத்தலாம்.
 l7
படம்கோவாவில் உள்ள பெருங்கற்கால வட்டப்புதிர்நிலை
                           இந்தியப் பெருங்கற்காலம் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் என ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று ஆகும். பெருங்கற்கால பண்பாடு பற்றிய ஆய்வுகள் சிந்துவெளி எழுத்துகளைப் படித்தறிவது போன்ற ஒரு புதிரவிழ்ப்பு முயற்சியாகவே இன்னும் இருக்கின்ற நிலையில் கிடைக்கும் ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை. இந்நிலையில் அகழாய்வு தவிர்த்த ஆய்வுகளில் நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாகத் தொல் மானுடவியல் உள்ளிட்ட பிற துறை ஆய்வுகளும் அவசியப்படுகின்றன.  இங்கு இது போன்ற புதிர்நிலைகளின் கண்டுபிடிப்புகள் இவற்றுக்கு விடைகாண உதவக் கூடும். பெருங்கற்காலத்தை அடுத்து கி.பி.ஆறாம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள உண்டவல்லி குகையில் கிடைத்த வட்டப் புதிர்நிலை குறிப்பிடத்தக்கதாகும்.
l6
படம்உண்டவல்லி வட்டப் புதிர்நிலை.
  ஒய்சாளர்கள் காலத்திலும் இவ்வாறான தொடர்பு  சிற்பங்களில் இடம் பெற்றிருந்ததை ஹளபேடு  ஒய்சாளஸ்வரர் கோவிலில் இருக்கும் அபிமன்யூவின் சக்கரவியூக வட்டப்புதிர்நிலையைக் காட்டலாம்.
l5
படம்ஹளபேடு வட்டப்புதிர்நிலைச் சிற்பம்.
             நமது வீடுகளில் தினந்தோறும் வரையப்படும் கோலங்களில்தான் புதிர்நிலைகளின் செல்வாக்கு இறுதியாக வந்து நிற்கிறது என்பது வெறும் சொல்லல்ல. ஆய்வுகள் தீவிரப்படுத்தலில் ஒரு பண்பாட்டின் அடியாழம் தொட முடியும் என்பதுதான் புதிர்நிலைகள் பற்றிய ஆய்வுகள் காட்டுகின்றன.
      குருசேத்திரத்தில் உள்ள காளி கோவிலில் வரைப்பட்டிருக்கும் சதுர புதிர்நிலை யானது மகாபாரதக் கதையொன்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. யுத்தத்திற்குச் செல்லும் முன் இதுபோன்ற புதிர்நிலைகளைப் பற்றி பாண்டவர்கள் அறிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அபிமன்யூ இவற்றை அறியாததாலேயே துரோணரின் சக்கரவியூகத்தில் சிக்கிக் கொண்டதாகவும் இத்தொன்மங்கள் காட்டுகின்றன.

l4

படம்குருசேத்திரக் காளி கோவில் சதுரப்புதிர்நிலை
                      தென்னிந்தியாவில் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது ஓர் வட்டப்புதிர்நிலையே/ அவ்வட்டப்புதிர்நிலையும் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். பெருங்கற்கால வட்டப்புதைகுழிகள், ஈமச்சின்னங்கள் இடையில் நிலப்பகுதியில் கிடைத்துள்ள அப்புதிர்நிலை இதுவரை ஆராயப்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அவ்வட்டப்புதிர்நிலை பகுதி கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் கழித்து தற்போதைய கம்பையநல்லூர் புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர்கள் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன், பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தைச் சேர்ந்த சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆவர்.
    இச்சதுரப் புதிர்நிலை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும்.

l3

ஏறக்குறைய 80 * 80 அடி பரப்பில் உள்ளதாகும்.ஏழு பாதைகள் கொண்டது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. தொடர்ச்சியாக வாழ்விடப்பகுதியில் இருப்பதால் உலகின் பழமையான வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக இது இருக்கக்கூடும்.
         பெரும் பரப்பில் இருந்த  வட்டப்புதைகுழிகளுக்கிடையில் நடுவாந்திரமாக இக் கம்பயநல்லூர் புதிர்நிலை அமைந்திருப்பது வியப்பானது மட்டுமல்ல காலக்கணிப்பை எளிதாக்கியது அற்புதமாகும். கிரேக்கத்தில் பைலோஸ் என்னுமிடத்தில் கிடைத்த சுடுமண் தட்டு ஒன்றில் வரையப்பட்டுள்ள சதுரப் புதிர்நிலையின் அச்சு அசலாக கம்பையநல்லூர் சதுரப் புதிர்நிலை இருக்கிறது. பைலோஸ் புதிர்நிலை கி.மு. 1200 எனச் சொல்லப்படுகிறது.

pylos maze

படம் பைலோஸ் புதிர்நிலை
    கம்பைநல்லூர் நவலையில் கிடைத்த ரோமானிய மற்றும் அச்சுகுத்தப்பட்ட காசுகள் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் இவ்வூர் பண்டைய வணிக வழியில் இருப்பதும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததுமான இப்புதிர்நிலை சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும். மேலும் இப்புதிர்நிலை ஏழுகோட்டைப் பிள்ளையார் சாமி என்று ஏழுநிலை பட்டைப் பாதைகள் கொண்டுள்ளதை விளக்குகிறது.

l2

          இப்பகுதி மக்கள் இப்புதிர்நிலை பற்றிக் கூறும் தொன்மக் கதை – அரசனால் சிறைபடுத்தப்பட்ட தன் கணவனை வழியே சென்று உயிர்மீட்ட மனைவியின் கதையாகும். இங்கு மேற்கொள்ளப்படும் வழிபாடுகள் மூன்று நிலைகளில் உள்ளன. பிள்ளைப் பேறு வேண்டுதல், எண்ணிய யாவும் அடைய வேண்டுதல்,கால்நடைகள் நோய் தீர வேண்டுதல். இவை யாவும் தொன்றுதொட்டு விளங்கி வரும் வளமைச்சடங்கின் நீட்சியே! பொங்கல் பண்டிகையின் போது மைலார் நாளில் கால்நடைகள் இப்புதிர்நிலை முன் கொணரப்படுவதும் அன்று இப்பகுதிப் பெண்கள் ஒருபொழுது(விரதம்) இருந்து பொங்கலிட்டு படைப்பதும் இப்புதிர்நிலையின் விரிவாய்வை வேண்டி நிற்கின்றன.
l1
எல்லாவற்றுக்கும் மேலாக இப்புதிர்நிலையை வெற்றிகரமாக ஏழுபட்டை தளப்பாதையில் நடைபயின்று வெற்றி அடைபவர் மனதில் நினைத்தைப் பெறுவர் என்பதும் கற்களைத் தாண்டிச் செல்பவர் நற்பலன்களை இழப்பர் என்பதும் இவ்வூர் மக்களின் நம்பிக்கை. புதிர்நிலைகள் பற்றிய இதே நம்பிக்கைதான் உலகெங்கும் இருக்கிறது என்பது அதிசயம் ஆகும்.  நவீன இலக்கியவாதிகளின் நினைவுக்கு போர்ஹேவின் புதிர்நிலை வழிகள் நினைவிற்கு வரக்கூடும்.

5 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s