ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

மேகலா ராமமூர்த்தி

சிவனுக்குரிய விசேட நாட்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளாகும். ‘ஆருத்ரா’ என்று வடமொழியில் அழைக்கப்படும் இத்திருவாதிரை நட்சத்திர நன்னாளில் சிவனைத் தரிசிப்பதே ’ஆருத்ரா தரிசனம்’ எனப்படும். சோதிடத்தில் நாள்மீன்கள் என்று அழைக்கப்படுகின்ற நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தேழாகும். இவற்றில் ’திரு’ என்ற அடைமொழியோடு அழைக்கப்படுபவை திருவாதிரை, திருவோணம் எனும் இரு நட்சத்திரங்களே. இவ்விரண்டில் ஆடல்வல்லானான சிவபெருமானுக்குகந்த நட்சத்திரம் திருவாதிரை; அமரரேறான திருமாலுக்குகந்த நட்சத்திரம் திருவோணம் என்பது அருளாளர்கள் கருத்து.
ஆதியும் அந்தமுமிலா அரும்பெரும்சோதியாயும், பிறவாயாக்கைப் பெரியோனாயும் திகழ்கின்றவன் சிவபெருமான். எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் (omnipresent) அவன். அப்படியிருக்க…’இருபத்தேழு நட்சத்திரங்களும் அவனுக்கு உரியவைதானே? ’திருவாதிரை’ எனும் ஒரேயொரு நட்சத்திரத்துக்கு மட்டும் அவனை உரியவனாக்குவானேன்?’ எனும் ஐயம் நமக்கு எழுவது இயல்பே. நமக்கு ஏற்பட்ட இதே ஐயம் முத்தொள்ளாயிரம் எனும் நூலின் ஆசிரியருக்கும் முன்பே எழுந்திருக்கின்றது. அதனை அவர் அந்நூலின் கடவுள்வாழ்த்துப் பாடலில் நயமுடன் பதிவுசெய்திருப்பதைப் பாருங்கள்!
மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம்
படைத்த முதல்வனைப் – பின்னரும்
ஆதிரையான்
ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர்திரை
நீர்வேலி உலகு”
(முத்தொள் – கடவுள் வாழ்த்து)
எல்லா நாள்மீன்களையும், மதி, கனலுமிழும் ஞாயிறு ஆகிய அனைத்தையும் ஆதியிலேயே படைத்த முதல்வன் நம் சிவபெருமான்; ஆனால் கடலால் சூழப்பட்ட இவ்வுலகோ “ஆதிரையான்! ஆதிரையான்!” என்றே அவனை அழைத்து மயங்குகின்றதே…இஃதென்ன விந்தை!” என்கிறார் அவர்.
உண்மைதான்! எல்லாவற்றையும் படைத்தவனை ஒன்றுக்கு மட்டும் உரிமையாக்குவது பொருந்துமா? என்றால் ”ஆம்! அஃது பொருத்தப்பாடுடைத்தே!” என்கின்றனர் சான்றோர்பெருமக்கள். அது எவ்வாறெனின், ஆதிரைமீனுக்கும் சிவனுக்கும் குணங்களின் அடிப்படையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றனவாம். ஆதிரைமீனும் ஆடல்வல்லானைப்போல எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றதாம் வான்வெளியில்; அத்தோடு அம்மீனும் நம் பெம்மானைப் போலவே சிவந்த நிறம் கொண்டதாய்ச் செந்நிறவொளி தருகின்றதாம்’; அனைத்திற்கும் மேலாகப் பிறைநிலாவின் இடையே தோன்றும்போது ஆதிரைமீனும் அரனைப்போலவே தோற்றம் காட்டுகின்றதாம். இத்தகைய இயல்புகளாலேயே ஆதிரைமீனும் இறைத்தன்மையுடையதாய்க் கருதப்பட்டு அரனுக்குரியதாய் ஆராதிக்கப்படுகின்றது என்பதை அறியும்போது நாம் அடையும் வியப்புக்கு அளவேது! நம் முன்னோர்களின் வானியலறிவு பிரமிக்கத்தக்கதே அல்லவா?
ஆதிரை ஒளியில் அரனை வழிபடும் வழக்கம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. பல நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்துவரும் வழக்கமே அது! ஆம்…நம் பண்டைத் தமிழரும் ஆதிரைநாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். அதற்கான சான்று எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலில் கிடைக்கப்பெறுகின்றது.
”பனி மிகுதலானே குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப் பருவத்தின்கண், சூரியனின் சுடுதலில்லாத குளிர்ந்தகடைமாரியையுடைய மார்கழித்திங்களில், மிகப் பெரிய சந்திரன் தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்துபௌர்ணமியாக நிறைந்த திருவாதிரை நாளின்கண், விரிந்த மெய்ந்நூல்களையுணர்ந்த அறவோர்,அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்க, முப்புரியாகியபூணூலையுடைய பார்ப்பனர் அவ்விழவின்கண் இறைவனுக்குப் பலிப்பொருள் நிரம்பிய பொற்கலங்களையும்பிறவற்றையும் ஏந்தி நின்றனர்” என்று ஆதிரை நாளை அற்புதமாய் விவரிக்கின்றது பரிபாடல்.
…கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு
பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கல
மேற்ப…
(பரிபாடல்:11:74-79)
’ஆதிரை முதல்வன்’ என்ற பெயராலும் சிவபெருமான் இதே பரிபாடலின் 8-ஆம் பாடலில் விளிக்கப்படுதல் காண்க.
Displaying
மற்றொரு சங்க இலக்கியமான கலித்தொகையில் இடம்பெற்றுள்ள,
…அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெருந்தண் சண்பகம்
போல…”(நெய்தற்கலி: 150: 20-21) எனும் இவ்வரிகள், (”பெறுதற்கரிய ஆதிரை நாளையுடையஇறைவனின் திருமேனி அழகைப்பெறும்படி மலர்ந்த பெரிய குளிர்ந்த இச்சண்பகம் போல” என்பது இதன் பொருள்) சிவபெருமான் ’ஆதிரையான்’ என்றே தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளமையை ஐயத்திற்கிடமின்றி நமக்கு அறியத்தருகின்றன.
சங்க இலக்கியங்களேயன்றித் திருமுறைப் பாடல்களிலும் ஆதிரைநாளின் சிறப்பு விதந்தோதப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில், குடத்தில் எலும்பாய்க் கிடந்த பூம்பாவையினைக் கண்ட ஞானசம்பந்தப் பெருமான் அவளை எழுப்புதற்காக, ”பெண்ணே! நீ கபாலீச்சரம் அமர்ந்தானின் ஆதிரை நாளைக் காணாமல் போகலாமா?” எனவினவுவதன் வாயிலாய் ஆதிரைத் திருநாளின் சிறப்பினை நமக்கு அருமையாய் உணர்த்துகின்றார்.manickavasagar2
…கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரை
நாள் காணாதே போதியோ
பூம்பாவாய்
(தேவாரம்)
அப்பர் தேவாரத்தில் திருவாதிரைத் திருப்பதிகம்’ என்று ஒரு பதிகமே இடம்பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. திருவாதிரையின் சிறப்பினைக் கூறும் இப்பதிகத்தின் ஒவ்வோரு பாடலின் இறுதி வரியும்ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்’என முடிகின்றது.

thirunavukuarasar

அமுதச்சுவைதரு அப்பதிகத்திலிருந்து ஓர் அழகிய பாடல்…
துன்பம் நம்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
(தேவாரம்)
தியாகேசன் உறையும் ஆரூரிலே ஆதிரை நாள்விழா விமரிசையாய்க் கொண்டாடப் பெறுகின்றது.முத்துவிதானத்தோடும், பொற்காம்புடைய கவரி வீசப்பெற்றும் மிகச்சிறப்பாக அந்நன்னாளில் திருவீதியில்திருக்காட்சி நல்குகின்றான் தியாகேசப்பெருமான். இத்திருக்காட்சியைக் காணவந்த ஆடவரும், பெண்டிரும்,பிறரும், ”ஈசனே! உம்மை நாங்கள் தொழாத நாட்களெல்லாம் துன்பம் தரும் நாட்களே; உம்மை நாங்கள் ஏத்தும் நாட்களே இன்பமானவை; எனவே உம்முடைய திருத்தொண்டில் எப்போதும் எம்மை ஈடுபடுத்தவேண்டும்!” என்று உளம்நெகிழ விண்ணப்பிக்கின்றனர் என்கிறார் அப்பர்பெருமான். அடடா! ’வேண்டுதல் வேண்டாமை’ இலாத சிவபெருமானிடம் வைப்பதற்கு இதனினும் சிறந்த கோரிக்கை வேறென்ன இருக்கவியலும் மன்னுயிர்கட்கு?
…பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா
நாளேஎனும் அப்பரின் மற்றொரு தேவாரப் பாடல் இங்கு ஒப்புநோக்கி இன்புறத்தக்கது.
பிறவியைப் பிணியென்றும், மண்ணுலகில் மீண்டும் மீண்டும் பிறந்துழல்வதையே பாவமென்றும் எண்ணும் அரனடியார்கள்கூட ”ஆடல்வல்லானின் குனித்த புருவத்தையும், சொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், அதில் தவழும் குமிண் நகையையும்(புன்முறுவல்), குளிர்ந்த அவன் சடையழகையும், பவளம்போல் ஒளி(ர்)விடும் சிவந்தமேனியில் துலங்கும் பால்வெண்ணீற்றையும், தூக்கிய திருவடியுடன் அவன் ஆடுகின்ற அற்புதக்காட்சியையும் காணும்பேறு கிட்டுமானால் இம்மனிதப் பிறவியும் விரும்பத்தக்கதே” என்கின்றனர்.

Inline image 2Inline image 1

குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயில் குமிண்சிரிப்பும்
பனித்தசடையும்
பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம்உடைய  
எடுத்தபொற் பாதமும் காணப்  பெற்றால்
மனித்தப்
பிறவியும் வேண்டுவ தேஇந்த மா நிலத்தே!
(அப்பர் தேவாரம்)
ஆலவாயுடையார் புகழ் பாடப்பெறுவேமேல் வேண்டுவதிம் மனித யாக்கை” என்கிறார் திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும்!
எனவே, பழமையும் சிறப்பும் மிகுந்த இத்திருவாதிரைத் திருநாளில், கண்ணுக்கினியானாய்க் காட்சி நல்கும் கண்ணுதற்கடவுளின் கழலிணைகளைப் பற்றுவோம்! அவன் திருவைந்தெழுத்தைப் போற்றுவோம்! நாமெடுத்த இம்மனிதப் பிறவியைப் புனிதப் பிறவியாய் மாற்றுவோம்!
திருச்சிற்றம்பலம்
Advertisements

One thought on “ஆருத்ரா தரிசனம்

  1. இலக்கிய எடுத்துக்காட்டுகளுடன் திருவாதிரை நட்சத்திரம் பற்றிய நல்ல பதிவு இது. உபரி தகவல் இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும். இதன் நட்சத்திர அதிபதி ராகு பகவான். திருவாதிரை நட்சத்திரம் ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் மனித உடலில் தொண்டை, தோள், கைகள் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறார்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s