அங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் – 1

அங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் – 1

அன்னையிடம் விண்ணப்பம் – சரணாகதி

மீனாட்சி பாலகணேஷ்

http://wp.me/P4Uvka-8j 

cropped-cropped-meenakshi-temple-view.jpgMeenakshi-Appears-from-Sacrificial-Fire1

          மதுரை! உச்சரிக்கும்போதே நாவில் தேன் ஊறுகின்றதே! சிந்தையில் பக்தியையும், உள்ளத்தில் ஆனந்தத்தையும் கூட்டி வைக்கும் தெய்வத் திருநகர்! அம்மையும் அப்பனும் இணைந்து ஆட்சி செய்த அழகிய நான்மாடக் கூடல். பொருள் நிறைந்த பல திருவிளையாடல்களை ஈசன் நிகழ்த்திக் காட்டிய இடமல்லவா இது? மீனாட்சியம்மை மட்டும் என்ன அவனுக்குச் சளைத்தவளா? தன் அடியார் பொருட்டு காலம் தோறும் அவள் நிகழ்த்தியுள்ள திருவிளையாடல்களும் கணக்கிலடங்காதவை அன்றோ? இவற்றுள் ஒன்றே ஆனந்த சாகரஸ்தவம் என்ற நூல் எழுந்ததுமாகும்.

            அரசர் திருமலை நாயக்கர் விதி வசத்தால் தமது அமைச்சரான நீலகண்ட தீட்சிதரை  ஒருமுறை தவறாக மதிப்பிட்டு அவருடைய கண்களைப் பறிக்க எண்ணினார். இதை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட நீலகண்ட தீட்சிதர் தமது கண்களத் தாமே தீயால் பொசுக்கிப் பறித்துக் கொண்டு விடுகிறார். அந்தத் துயரிலும் வேதனையிலும் வாடும் தீட்சிதர், வாழ்வில் தமது ஒரே ஆதாரம் அன்னை மீனாட்சியே என்றுணர்ந்து அவள் தாளிணைகளைப் பற்றிக் கொண்டு தமது முறையீடுகளை அவள் முன்பு வைக்கிறார். தன்னைப் பெற்றெடுத்த அன்னையிடம் ஒரு மகன் பேசி, ஆறுதல் கோருவது போன்ற தொனியில் அமைந்துள்ள 108 ஸ்லோகங்களைக் கொண்டதே “ஆனந்த சாகர ஸ்தவம்” ஆகும். உள்ளத்தை உருக்கி நெகிழ வைக்கும் அற்புதமான ஸ்லோகங்கள்.

nayakar

            நீலகண்ட தீட்சிதரின் காலம் 16 அல்லது 17-ம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது திருமலை நாயக்கர் மதுரையை அரசாண்ட காலத்துடன் ஒத்துள்ளது.

            ஆனந்த சாகர ஸ்தவத்திற்கு உரை, ஸ்ரீ ய. மஹாலிங்க சாஸ்திரிகள் M. A., B. L.  என்பவரால் ஆங்கிலத்திலும் தமிழிலும் 1954-ல் எழுதப்பட்டு பதிப்பிடப் பட்டுள்ளது.

            கிட்டத் தட்ட இதே காலகட்டத்தில், சமஸ்கிருதத்திலும் தமிழிலும் உயரிய புலமையும், சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றும் கொண்டவருமான கோவை கவியரசு வித்துவான் திரு நடேச கவுண்டர் அவர்கள், ‘ஆனந்த சாகரஸ்தவம்’ நூலைத் தமிழில் திறம்பட செய்யுட்களாகவே மொழி பெயர்த்து ‘இன்பமாக்கடல்’ எனும் பெயரில் படைத்தருளினார். நீலகண்ட தீக்ஷிதரின் சமஸ்கிருத பாடல்களில் காணும் ஆழமும், அழகும், தெளிவும், புலமையும் தமிழ்ப் பாடல்களிலும் அவ்வாறே காணப்படுவது அருமையிலும் அருமை; விந்தையிலும் விந்தை. இது அன்னை மீனாட்சியின் திருவருளின் விளைவேயாகும் எனலாம்.

            இவற்றில் சில பாடல்களை நோக்கி, அவற்றின் பொருளைக் கண்டு நாமும் ஆனந்த சாகரம் எனும் இன்ப மா கடலில் அமிழ்ந்து துளையலாமே!

            ஆனந்தசாகரஸ்தவத்தின் முதல் பாடல்:  பொசுங்கி அவிந்த கண்களின்  வேதனையால் துடிதுடித்து வருந்தும் போதிலும், தனது அகக் கண்ணால் அன்னையைக் கண்டு கொண்டு  ‘உன் கருணையை எப்போதும் எண்ணிப் பாடுவேன்,’ என்கிறார் தீட்சிதர்.

            தீட்சிதருக்கு அன்னையைப் பூசனை செய்யும் சந்தர்ப்பத்தில், செய்யும் பூசனையில், அன்னையின் திரு நாமங்களைக் கூறும் பொழுது, அவற்றின் இனிமையிலும், உட்பொருளிலும் ஆழ்ந்து விடுவதால், குறைகள் என்பனவற்றைத் தனியாகக் கூற வாய்ப்பே இல்லாமல் போகின்றது. சமயம் வாய்க்காமல் போய்விடுகிறது.

            “விண்ணப்பம் செய்து கொள்ளுவதற்கு ஏற்ற சமயம் கிடைக்காமையால், மனம் சோம்பிச் சோகமுற்று இருந்தேன். எண்ண அளவில்லாத புவனங்களை எல்லாம் ஈன்ற கருணைத் தாயாகிய மீனாட்சியம்மையின் கண்கள் ஆகிய கடலில் எழுந்த கருணையாகிய காற்றினாலே கிளம்பிய கடைக்கண் பார்வையாகிய அலையானது இழுத்துக் கொண்டு வந்து அவளது திருமுன் நிறுத்தி, என்னை அவளுக்குக் காட்டிற்று. அச்சோ! மனம் உருகி, அந்தக் கடைக் கண்ணில் எழுந்த கருணை ஒளியை எப்போதும் தியானிப்பேன்,” என உளம் நெகிழ்ந்து துதிக்கிறார்.

            அன்னையின் கடைக்கண் நோக்கு எனும் கருணை, கடல் அலைகளாகப் பெருகுவதை உருகி வர்ணித்துள்ளார். இன்பமாக்கடல் என்பது மீனாட்சித் தாயையும் அவளைப் புகழ்ந்து பாடும் தோத்திரங்களையும் குறிக்கும்.

விண்ணப்பம் செய்துகொளச் செவ்விபெறா

துளமடிந்து வேசற் றேனை

எண்ணற்ற புவனங்கள் ஈன்றதாய்

திருக்கருணை எனும்காற் றாலே

கண்ணுற்ற கடைப்பார்வை அலையீர்த்து

முன்நிறுத்திக் காட்டிற் றச்சோ.

உண்ணெக்கக் கடைக்கணெழும் ஒளியினையான்

எப்பொழுதும் உன்னு வேனே (1)

(செவ்வி– தமது குறைகளை பிறர் சொல்லிக் கொள்ள ஏற்றவாறு அன்னையானவள் அகமும் முகமும் மலர்ந்திருக்கும் சமயம்; அச்சோ– வியப்பு இடைச் சொல்)

            இறைவனை இன்பமாகடல் என்பர் பெரியோர்.  ‘மறவா நினையா அளவு இலா மாளா இன்பமா கடலே,’ எனவும்,

‘நீரின்ப வெள்ளத்துள் நீந்திக்

குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்

பாரின்ப வெள்ளம் கொளப்

பரிமேல் வந்த பாண்டியனார்

ஓரின்ப வெள்ளத்து உருக்கொண்டு

தொண்டரை உள்ளம் கொண்டார்

பேரின்ப வெள்ளத்துள் பெய்கழலே

சென்று பேணுமினே.’

(பேரின்ப வெள்ளமான இறைவனையே சென்று நாடுங்கள்) எனவும் மணிவாசகப் பெருந்தகை திருவாசகத்தில் அறிவுறுத்துகிறார்.

            குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் அம்மையை “திருக்கடைக்கண் கொழித்த கருணைப் பெருவெள்ளம் குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே வருக!” எனப் பாடுவார். தேவியின் கடைக்கண் பார்வைக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு.  அதனால் தான் அடியவர்கள் அனைவரும் அதனை வேண்டித் தவமிருக்கிறார்கள். குமர குருபரரே பிறிதோரிடத்து (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- சப்பாணிப் பருவம்-5ம் பாடல்)

‘சேலாட்டு வாள்கண் கருங்கடல் கடைமடை

திறந்தமுத மூற்றுகருணைத்

தெண்திரை கொழித்தெறிய

என்பார். அன்னை மீனாட்சியின் அழகிய கண்கள் அமுதம் போன்ற அருளாகிய அலைகளை மோதி வீசுகின்றனவாம்.

            தீட்சிதர் மேலும் கூறுகிறார்: “உனக்குத் தெரியாத, நீ அறியாத ஒன்றையா நான் கூறுகிறேன்? எவரிடமாவது சொல்லிக் கொண்டால் என் மனத்துயரம் சிறிது ஆறும் அல்லவா? ஆகவே உள்ளமிரங்கி அடியேன் கூறும் முறையீடுகளை உன் திருச்செவியைச் சாய்த்துக் கேட்பாயாக,” என்று அன்னையிடம் விண்ணப்பிப்பதற்கு மன்னிப்புக் கோருகின்றார்.

திருவுள்ளம் தெரியாதது எதனையான்

தெரிவிப்பேன் தேவி மற்று

மருவுள்ளத் துயர்சொல்லிக் கொள்ளாவிட்

டால்சிறிதும் மாறாது அன்றோ

திருவுள்ளம் இரங்கிஅடி யேன்முறைக்குஉன்

திருச்செவியைச் சிறிது சாய்க்க

பெருவெள்ளப் பொருநைநதித் துறைவன்மல

யத்துவசன் பெற்ற செல்வீ (2)

            இறைவியானவள் நாம் சொல்லாமலேயே குறைகளை அறிபவளல்லவா? உலகில் மற்ற உயிர்களிடம் கருணை உடையவர்கள் மிகச் சிலரே. பிறரது கவலைகளைக் களையக் கூடியவர்கள் இன்னும் மிகச் சிலரே. ஆகவே, நமது குறைகளை உலகத்துக்கே அன்னையாகிய மீனாட்சியிடம் தான் நாம் கூற வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் தீட்சிதர்.

            குறை என்று எதனைக் கூறுகிறார் தீட்சிதர் என நோக்குவோ மேயாகில், தமது பிறப்பையல்ல; தாம் கண்ணிழந்து படும் துயரைப் பற்றியுமல்ல; “உயிர் பிரியும் காலத்தில், அப்போதைக்கு இப்போதே கூறி வைக்கிறேன்- உன் அருள் எனக்கு இடையறாது கிடைக்க வேண்டும்.

            “எத்தனை பெரிய வேதாந்தியாக இருந்தாலும், உடலை விட்டு உயிர் நீங்கும் காலத்தில், மனது பெரும் கலக்கம் கொள்ளும்; கண்கள் சுழலும். இந்திரியங்கள் என் வசத்திலிராது. அப்போது என் நிலைமையை உன்னிடம் எடுத்துக் கூற வல்லார் யார் உளர்?  சொல்லிக் கொள்ள இப்போது சந்தர்ப்பம் வாய்த்து உள்ளது. நானும் தெளிவாக உள்ளேன். ஆகவே இப்பொழுதே என் நிலைமையை உனது திருவடிக்கீழ் கூறி விண்ணப்பிக்கின்றேன். கேட்டருளி எந்தன் மனக்கவலையை மாற்றியருளுவாயாக,” என வேண்டிக் கொள்கிறார்.

கலமலக்கம் மனமுழந்து சொற்குழறிக்

கண்சுழலும் காலத்து எந்தன்

நிலைமையினை எடுத்துரைக்க வல்லார்யார்?

சிவையேநற் செவ்வி நேர்ந்த

அலைவருமிப் பொழுதேஎன் நிலைமையினை

அடிமலர்க்கீழ் அறையா நின்றேன்;

மலையரசன் தருகொடியே கேட்டருளி

என்கவலை மாற்று வாயே. (4)

            (கலமலக்கம்– மனக்குழப்பம்; சிவை– சிவனது துணைவி; அலைவு அரும் இப்பொழுதே– வருத்தம் ஒன்றும் இல்லாத இப்பொழுது.)

            இங்கு நாம் அறியத் தக்க செய்தி ஒன்றுள்ளது. இறைவன் பால் பெரும் பற்றுக் கொண்ட மெய்யடியார்கள், உயிர் பிரியும் காலத்தில் இறை நினைவு தமக்கு இருக்குமோ என ஐயப்படுவர். ஆகவே, ‘அத்தருணம் உன்னை மறவாதிருக்க வரம் தா,’ எனவோ, அல்லது, ‘அப்போதைக்கு இப்போதே வேண்டிக் கொள்கிறேன்,’ எனவோ கூறிடுவர். நீலகண்ட தீட்சிதரின் முன்னோரான அப்பைய தீட்சிதரவர்கள் காலன் தமை அணுகுங்காலத்தில், மதி மயங்கிய உன்மத்த நிலையில் இறை நினைவு தமக்கிருக்குமா எனப் பரிசோதித்துக் கொண்டதன் விளைவே ‘உன்மத்தப் பஞ்சாசத்’ என்ற ஐம்பது சுலோகங்கள். ( இது பற்றிய கட்டுரை ‘ஒரு சிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்’ என்ற தலைப்பில் முனைவர் திரு. கோ. ந. முத்துக் குமாரஸ்வாமி அவர்களால் எழுதப் பட்டுள்ளது).

‘புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி

அறிவழிந்திட்டு ஐம்மே லுந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான்

என்பார் சம்பந்தப் பெருமான்.

            ‘இறக்கும் தறுவாயில் உள்ளம் எதனை நினைக்கின்றதோ அதுவே அடுத்த பிறவியில் வாய்க்கும் என்பர். ஆயினும் மரண வேதனையில் உன்னை நினைக்க என்னால் முடியுமோ முடியாதோ. அதனால் அப்போதைக்கு வேண்டி இப்போதே சொல்லி வைத்தேன்,’ என்கின்றார் நீலகண்ட தீட்சிதர்.

            அப்பர் பெருமானும் இவ்வாறு முன்னமே சொல்லி வைத்துக் கொள்கிறார்.

“இருகாற் குரம்பை இது நானுடையது; இது பிரிந்தால்

தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே”

அபிராமி பட்டரும்,

“சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளி நிற்கவே,” என அன்னையிடம் இப்போதே சொல்லி வைக்கின்றார்.

            முன்னமே தமது இஷ்ட தெய்வத்திடம் சொல்லி வைப்பதென்பது  மெய்யடியார்களின் வழக்கம் போலும். சமீப காலத்தில் எழுதப்பட்ட திருப்போரூர் சந்நிதி முறை என்ற பாடல்,

‘நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல்

பாயிற் கிடவாமல் பாவியேன் காயத்தை

ஓர்நொடிக்குள் நீக்கி என்னை ஒண்போரூர் ஐயா

உன் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து,

என்ற வேண்டுதலை இறைவன் முன் வைக்கின்றது!

            மெய்ஞானப் பெரியோர்கள் வேண்டுவதெல்லாம் இறைவனை என்றும் நினைந்திருத்தல் வேண்டுமென்பதே.

            “உன்னைப் பணிந்த பின் ஒருவர் பின்னும் நான் செல்லேன்; நீ எங்களை மனமிரங்கி ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் ‘உமையின் அடியவர் யாம்’ எனக் கூறிக் கொண்டு இவ்வுலகை வென்று மேன்மையடைவோம்,” என்கிறார். அன்னை மீது வைத்த நம்பிக்கையும் பக்தியும் பொய்க்காது என்பது மெய்யடியார்கள் கண்டுணர்ந்து அறிந்த உண்மை. அதையே இப்பாடலில் திரும்பக் கூறுகிறார். ‘பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே,‘ என்ற அபிராமி அந்தாதி வரிகள் இங்கு நினைவுறத் தக்கன.

            “எனக்கு வேதாந்த ஞானம் வேண்டாம்; அது கடினம்; இனிய சரணாகதியே நான் வேண்டும் நெறியாம். வேதங்கள் நான்கு; அவற்றிற்குப் பல கிளைகள்; அவற்றை விளக்கப் பல உபநிஷதங்கள். இவைகளின் பொருளை உணர்ந்து கொள்ளாது அத்யயனம் செய்வதற்கு மட்டுமே பல பிறவிகள் வேண்டுமே. ஆகவே வேதம் ஓதி முக்தி பெறல் அரிதன்றோ? வேதத்தின் கருத்தை அறிவது கடினமான காரியமாகும்.” தனக்கு வேதாந்த ஞானம் வேண்டாம்; சரணாகதியே வேண்டும் என்கின்றார் தீட்சிதர்.

ஒன்றனையொன் றொவ்வாத பேருரைகள்

ஆயிரமற் றுளவால் அம்மே

வன்திறல்சேர் நிகமம்எனும் கல்பிழிந்து

சாறெடுக்க வல்லோன் யாவன்? (9)

            (நிகமம்– வேதம்;)

            மீனாட்சி அன்னையே வேதத்தின் உட்பொருளாய் விளங்குபவள்; ஆதலால் அவளை, ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே,’ எனக் குமரகுருபரனாரும் போற்றுவார் . இங்கு கடவுள் பழம்பாடல் என்பது வேதத்தைக் குறிக்கும். வேதத்தின் பொருளை உணர்வது மிக அரிது. ஒரு சிலருக்கே அப்பேறு வாய்க்கும்.

‘இருக்காதி சதுர்வேதம் இசைப்பது நின் பலபேதம்

ஒருக்காலும் ஒன்றுரைத்தது ஒன்றிசைப்ப அறியாதே.’

(திருவருணைக் கலம்பகம்-1)

            ‘ரிக், யஜுர், சாம, அதர்வணம் எனும் நான்கு வேதங்களும் இயம்புவது உன்னுடைய (இறைவனுடைய) பல வடிவங்களே. ஆயினும் அவற்றுள் ஒன்று உரைத்த வடிவை மற்றொன்று உரைக்க அறியாது,’ என்கிறது அருணைக் கலம்பகம். ஆகவே தமக்கு வேத வேதாந்த ஞானம் வேண்டாம்; சரணாகதியே வேண்டும் என்கின்றார் நீலகண்ட தீட்சிதர்.

            ‘கற்றுணர்ந்தாலும் மற்றோர் கெடுப்பர்; சாத்திரப் பயிற்சி பரகதியை அளிக்காது என்றெல்லாம் கூறிவிட்டு, “உன் அருள் இருந்தால் ஞானியாவான்; ஞானியானால் உன் அருள் பெறலாம். இவ்விரண்டில் ஒன்றை முதலில் எவ்வாறு ஒருவன் பெறுவது? பர்வதகுமாரியே, நீயே சொல்,” என்கிறார்.

இவ்வண்ணம் படிப்படியாய் அபரோட்ச

ஞானமதை எய்தி னோர்க்கே

உய்வண்ணம் நீ அருள்வை; உன் அருளில்

லார்ஞானம் உறுமாறில்லை;

மெய்வண்ணம் கருதில்இவை ஒன்றையொன்று

பற்றலென விளங்கு மானால்

எவ்வண்ணம் இரண்டினிலொன் றெய்துவது

முதன்முதலில் இமையச் செல்வீ (12)

            (அபரோட்ச ஞானம்= அனுபவ அறிவு; மெய்யறிவு. உய்வண்ணம்– கதி பெறும் வழி)

“உன் அருளோ ஞானமோ இரண்டில் ஒன்று முதலில் பெற வேண்டும். உன் அருளையே முதலில் அருளுக,” என்கிறார்.

            ‘முடிவற்ற பிறவிகளில் ஒருவன் சோம்பல் இன்றி வெகுவாக முயற்சி செய்தால், கடைசிப் பிறவியில் மோட்சம் அடைவான் என நூல்கள் கூறும்; இதை சுலபமாக மோட்சம் பெறுவார் ஒருவரும் இலர் என வெளிப்படையாகக் கூறாமல் மறைத்துக் கூறும் சொற்களே ஆகும் மலைமகளே!’ வேத நெறி முத்தி தராது என்பதல்ல; அது மிக அருமையானது (கடினமானது), எளிமையான சரணாகதியே சுலபமான வழி என்கிறார். ஞானநெறியில் நிற்றல் தனக்கு இயலாது எனக் கூறுகிறார் தீட்சிதர்.

            கன்ம நெறியுமே தமக்கு உதவாது என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: ‘வேதம் கூறும் கருமங்களைப் புரிந்து வாழ்ந்தாலும் அதனால் என்ன பெரும் பயன் கிட்டிவிடப் போகின்றது? இவ்வுலகில் கிடைக்கும் சிற்றின்பங்களைப் போல இன்னும் மிகுதியாக சுவர்க்கம் சென்று அனுபவிக்கப் போவதேயன்றி, வேறு என்ன பயன்?

அரிதின்முயன்று ஒருவன்மறை அறைகருமம்

பலபுரிந்தும் அதனால் என்ன

பெரியசுகம் தனைநிறையப் பெறவல்லான்?

பாரதபூ மியினில் பெற்றே

உரிமையுடன் நுகர்பவனே மறுமையினில்

உத்தரதிக் குற்று மீண்டும்

பெரியர்அவ மதித்தபல புன்புலஇன்

பத்தையன்றிப் பெறுவான் கொல்லோ? (17)

(புன்புல இன்பம்– இழிந்த ஐம்புல போகங்கள்)

            வீடுபேற்றை விரும்புவோர்க்கு சுவர்க்க இன்பம் ஒரு பொருட்டன்று என்பார் தீட்சிதர். சுவர்க்கத்தில் போய் நுகரும் இன்பங்களை இவ்வுலகத்தில் தானே எளிதில் நுகரலாம் அல்லவா என்பது பொருள்.

            அடுத்து எவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களைக் கூறி வேதம் தனக்குக் குழப்பத்தை விளைவிக்கிறது என்கிறார். ‘கர்மங்களைச் செய்யாவிடில் இழிபிறப்பும் துன்பம் நிறைந்த நரகமும் தான் கிட்டும்; அவற்றைச் செய்தாலோ துன்பமயமான பிறவிக்கடலில் விழுந்து கரை காண இயலாதாம். கன்மங்களை விடுக என்னும் வேதமே அவற்றைக் கருத்துடன் செய்க என்பதும் என்ன காரணத்தாலோ தாயே,’ என் வினவுகிறார்.

            ‘பற்றின்றிக் கர்மங்களைச் செய்தால் அவை நமக்குத் தளையாகாது (கர்மண்ய கர்ம விதி) என்பது ஆன்றோர் வாக்கு. இதனால் புதிய கருமங்கள் எனப்படும் ஆகாமிய கர்மங்கள் தோன்றாது. ஆயினும் பழவினையின் பயன் (பிராரப்தம், சஞ்சித கர்மம்) வந்தே தீரும் அல்லவோ?

            ‘என்றைக்கு வினைத்தொல்லை இல்லையென்றாகும்? முன்பு எடுத்த பல பிறவிகளில் ஒருவன் ஈட்டி வைத்துள்ள வினைகளுக்கு எல்லையே இல்லையாம்; அவற்றுள் இப்பிறப்பில் பயன்தரத் தொடங்கியவை (பிராரப்த கர்மம்)  எத்தனையோ? இன்னும் முளைக்க இருப்பவை (சஞ்சித கர்மம்) எத்தனையோ? இமைக்கும் நேரம் ஒரு ஊழி போன்றுள்ளதே! நெருப்பிடைப் பட்ட புழுவென யான் துடிக்கின்றேனே,’ எனப் புலம்புகின்றார்.

முன்னைஇயற் றியவினையின் மூடைகள்ஆ

யிரக்கணக்கின் மொய்த்த வாலோ!

அன்னவற்றுள் இப்பிறப்பில் பயன்தரவே

முளைத்தவற்றின் அளவை யாதோ?

இன்னுமுளைப் பதற்குளவும் எத்தனையோ?

யாரறிவார்? இமைக்கு நேரம்

பன்னரிய ஊழிஎனக் கினிநெடுநாள்

பொறுக்கிலேன் பதைக்கின் றேனே (20)

            தமது வினைப்பயன்கள் எல்லாம் கழிந்து இறைவியின் திருவடி சேர, யுக யுகாந்தரங்களாகக் காத்திருக்கத் தனக்கு அவகாசம் இல்லை; அனலிடைப் பட்ட புழுவென, உன்னடி அடையத் துடிக்கிறேன் எனத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். இங்கு தீட்சிதரின் நிலையை நாம் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். தமது ஆயுள் முழுவதும் அவளடிக்கே சேவை செய்தார். உலக வாழ்வில் கிட்டியதனைத்தையும் அவள் செயல் என ஏற்றும் கொள்கிறார். ஆயினும் ஒரு சில நொடிகளில் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி ‘போதும்; எத்தனை நாள் அவள் அடியிணை சேரக் காத்திருப்பது?’ என எழுந்த ஒரு தவிப்பில் இவ்வாறு தன் அன்னையான மீனாட்சியிடம் கேட்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது. வினைகளை ஒழித்து முத்தி பெறும் ஆவல் அவரிடம் மிகுவதை இப்பாடலில் உணரலாம்.

            தொடர்ந்தும் கூறுவார்: ‘என்னால் இனி அரைக்கணமும் பொறுக்கவியலாது. இவ்வாறு துயர்ப்படும் என்னை, ‘நீ இனி சாத்திர வழியில் நடப்பாயாக எனக் கட்டளையிடுதல் எவ்வாறு இருக்கிறது தெரியுமா? கொடிய வயிற்றுப் பசியால் வருந்தும் ஒருவனிடம் ‘நீ இந்தக் கங்கை மணல் துகள்களை எல்லாம் எண்ணிக் கணக்கிட்ட பின்பே உனக்கு உணவு கொடுப்போம்’ என இரக்கமேயில்லாமல் கூறுவது போல உள்ளது’ என்கிறார். அது போலப் பிறவித் துன்பம் பொறுக்காது வாடும் ஒருவனுக்குத் தனது திருவருளை வழங்கிப் பின் அவன் பணியை ஏற்றுக் கொள்வதே தேவிக்கு முறை எனும் பொருள் தொக்கி நிற்கிறது.

            அடுத்து ‘பக்தி என்பது என்ன’ என உரிமையுடன், மீனாட்சி அன்னையிடம் தர்க்கம் செய்யும் தோரணையில் வினவுகிறார் தீட்சிதர்.

            ‘பக்தி என்பது அன்பின் ஒருவகை தான்; அன்பு இல்லாமை என்ற நிலை யாரிடத்தும் இல்லை; ஆகவே பக்தி உடைமையால் தனிச் சிறப்பு இல்லை’ என்றார்! ‘மூன்று உலகத்திலும் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஆன்மாவாக விளங்கும் உன்பால் பக்தி இல்லாதவர்களும் உளரோ? தம் உயிர் மேல் அன்பு செய்யாதவர்களும் உண்டோ?’

…………………………………

முத்திறலோ கத்துஉயிர்க்கு உயிராம்உன்

பால்பக்தி முளையார் உண்டோ?

தத்தம்உயிர்க்கு அன்புசெயார் ஒருவரேனும்

எங்குளர்இத் தரணி மேலே. (22)

            பக்தி என்பது எல்லா மக்களிடத்தும், உயிர்களிடத்தும் காணப்படுவது; ஆயினும் அவ்வுயிர்கள் அனைத்தும் மோட்சம் அடையாமல் உள்ளன; ஆகவே பக்தியுடைமை மட்டுமே மோட்சத்திற்கு வழியல்ல என்று நியாயம் கற்பிக்கின்றார். ஆகவே உயிர்கள் தம் மேல் வைத்திருக்கும் அன்பு பக்தி ஆகாது; பக்தி என்பது யாதெனின் உலகம் அனைத்திற்கும் உயிராக (ஆன்மாவாக) உள்ளவள் அன்னை மீனாட்சியே என்றுணர்ந்து அவள்பால் அன்பு பூணுவதே. ஆகவே என் கருத்தே வெற்றி பெற்றது என்கிறார். அது எவ்வாறு? மீனாட்சியே எங்கும் வியாபித்துள்ளவள் என எப்போது உணர்ந்து கொள்கிறோமோ அப்போது மெய்ஞ்ஞானம் வரப்பெறுகிறோம். ஞானம் அடைந்த ஒருவனுக்கு பக்தி என்ற சிறப்புப் பெயரால் என்ன பயன்? “உன்பால் உறவு பூணற்கு இலகிய பேர் பக்தி” என்பார்.

            நாமும் பரம்பொருளான இறையும் இருவேறு தனிப்பொருள்கள் என ஒரு சாரார் கருதுவது அஞ்ஞானம் எனக் கூறுகிறார். இதுவே இருவித (துவித) பக்தி எனப்படும். அதாவது ‘இறைவன் தன்னைக் காட்டிலும் உயர்ந்தவன்; நாம் தாழ்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டு, தாய் தந்தை, குரு இவர்களிடம் வைக்கும் அன்பைப் போல் இறைவனிடம் அன்பு செலுத்துவது பக்தி எனக் கருதினால் அது அறியாமையின் விளைவாகும். அதுவே பிறவித் தளைக்கும் காரணமாகும்,’ என்கிறார்.

தன்னிலும் வேறாவதுமெய்ப் பொருளென்று

தெளிந்து பரம்தான் நாம்கீழென்று

உன்னியுறு குரவரிடம் போல்மதித்தே

ஒழுகுவது பத்தி என்றால்

என்னறிவுக் கிதுவெறுத்து விடத்தக்க

முடிபாகும் துவிதம் என்னும்

துன்னுமயல் தன்னின்மிகு பவபந்த

மூலமெது சொல்லு தாயே. (24)

(மெய்ப்பொருள்= பிரம்மம், சிவம்; பரம்= உயர்வான பொருள்; நாம்= ஜீவாத்மா; மயல்= அஞ்ஞானம், அறியாமை)

            ‘உன்னை பூசை முதலியவற்றால் சேவை செய்வது என்பது உன்னை மகிழ்வித்து, அதனால் நான் விரும்புனவற்றை அடைவதற்காகச் செய்யும் செயல் தானே? அது கரும நெறியைச் சார்ந்தது; பக்தி அன்று. தியானமும் ஞான மார்க்கத்தைச் சேர்ந்த்தாகும்; பக்தி என்பது பொருந்தாது,’ எனக்கூறி, பக்தி என்பதற்கு உரிய பலவிதமான விளக்கங்களை மறுக்கின்றார்.

 ( வளரும்)

*****************************************************

Advertisements

4 thoughts on “அங்கயற்கண்ணி என்னும் அருட்பெருங்கடல் – 1

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s